Wednesday, May 28, 2008

குடைமிளகாய் பொரியல்குடைமிளகாயைப் பலவிதங்களில் சமையலில் பயன்படுத்துவோம். ஆனால் இந்த வகை பொரியல் மிக எளிதானதும், மிகச் சுவையானதும் கூட... சாம்பார், தயிர் சாதத்துக்கு அட்டகாசமா மேட்ச் ஆகும் பாருங்க...

தேவையான பொருட்கள்
-----------------------

பச்சை குடைமிளகாய் - 1/2 கிலோ
தேங்காய்த் துருவல் - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க
--------

எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு -1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை
------------

குடைமிளகாயைக் கழுவி, காம்பு மற்றும் விதைப்பகுதியை நீக்கிவிட்டு, மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

தேங்காயுடன், சீரகம் இஞ்சியைச் சேர்த்து, தண்ணீர்விடாமல் மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து,கறிவேப்பிலை இட்டுத் தாளித்து அதில் நறுக்கிய குடைமிளகாயைப் போட்டு உப்புச் சேர்த்து வதக்கவும். மூடிவைக்க வேண்டியதில்லை. மிக விரைவில் வதங்கிவிடும். வதங்கி வரும்போது, மஞ்சள் பொடி, வத்தல் பொடி சேர்த்துக் கிளறிவிடவும்.

இறுதியில், அரைத்த தேங்காய் கலவையைக் கொட்டி, மசாலா வாசனை போகும் வரை நன்றாக வதக்கி இறக்கிவிடவும்.

சூப்பரான குடைமிளகாய் பொரியல் ரெடி. இதை உதிர வடித்த சாதத்துடன் கலந்து
காப்ஸிகம் ரைஸ் என்று பிள்ளைகளுக்கு லஞ்ச்பாக்ஸிற்கும் தயார் செய்து அனுப்பலாம்.

Monday, May 26, 2008

கைமணம் -(1) ஜீரக சாதம்

தினமும் அதே சாதம்தானா என்று வீட்டில் சலிப்பாய்க் குரல் எழும்புகிறதா? ஒரு மாறுதலுக்காய் மிகச் சுலபமான ஜீரகசாதம் செய்து அசத்துங்க...

தேவையான பொருட்கள்
______________________

பாஸ்மதி அரிசி - 1 கப்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
தண்ணீர் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
__________

1. அரிசியைக் கழுவி, நீரை வடித்து வைக்கவும்.

2. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் ஜீரகத்தைப் போட்டு பொரியவிடவும். ஜீரகம் வெடித்ததும் அதில் அரிசியை இட்டு 2 நிமிடங்கள் வறுக்கவும். வறுத்த அரிசியில் தேவையான அளவு நீரைஊற்றி, அளவாக உப்புச்சேர்த்துக் கலந்துவிடவும்.

3. குக்கரை மூடி சிறுதீயில் வைத்து 3 விசில் விட்டதும் இறக்கிவிடலாம்.

மிக எளிதான இந்த ஜீரக சாதத்தை எந்தவகை காய்கறி குருமாவுடனோ அல்லது அசைவ உணவுவகைகளுடனோ சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள வடகமோ, அப்பளமோ இருந்தால் மிக நன்றாக இருக்கும்.

Thursday, May 22, 2008

காயம்

ஒரு நிமிஷத்தில் பதறித்தான் போனாள் புவனா...
மாடிப்படியிலிருந்து மூன்று வயது மகன் தினேஷ் விழுந்து, நெற்றியில் அடிபட்டு ரத்தம் வழிய ஆரம்பித்தது. கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.ஒருவழியாக சுதாரித்துக்கொண்டு தொலைபேசியில் கணவனின் எண்ணை அழுத்தினாள். எப்பொழுதும்போல எங்கேஜ்ட் டோன்...

"அவசர ஆத்திரத்துக்குக் கூட பேசமுடியாதபடி நாள் முழுக்க என்ன ஆஃபீஸ் வேலையோ..."என்று முணுமுணுத்தபடியே, கையில் செல்போனை எடுத்துக்கொண்டு,மகனைத் தூக்கிக்கொண்டு பக்கத்து மருத்துவமனைக்கு ஓடினாள் அவள்.

மதியம் மூன்று மணியாகியிருந்ததால் மருத்துவர் வீட்டுக்குப் போய்விட்டதாக நர்ஸ் சொல்ல, ஆட்டோ எடுத்துக்கொண்டு பக்கத்திலிருந்த இருபத்துநான்கு மணிநேர மருத்துவமனை ஒன்றுக்குப் போகச்சொன்னாள் புவனா.

செல்போனை உயிர்ப்பித்து கணவனின் எண்ணை மீண்டும் கூப்பிட்டுப்பார்த்தாள். போன் 'சுவிட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது. "ஏதாவது முக்கியமான அலுவலக மீட்டிங்கில் இருப்பாரோ..." என்று எண்ணிக்கொண்டிருக்கையில் மருத்துவமனை வந்துவிட ஆட்டோவை வெயிட்டிங்கில் விட்டுவிட்டு உள்ளே ஓடினாள்.

கனிவான முகத்துடன் அங்கிருந்த பெண் மருத்துவர் "பயப்படவேண்டாம்மா...காயம் சின்னதுதான்...நீங்க நர்ஸ் கூடப்போய் மருந்துமட்டும் போட்டுக்கோங்க" என்று சொல்லி அனுப்ப, மனதில் தைரியம்வந்தது புவனாவுக்கு.

உள்ளே, இன்னொரு பேஷண்டுக்கு மருந்திட்டுக்கொண்டிருக்கவே, வெளியிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் புவனா. மெதுவாக மகனிடம் "என்னப்பா, வலிக்குதா? என்றாள் புவனா. "இப்ப இல்லேம்மா" என்றவாறு அம்மாவின் மடியில் சாய்ந்துகொண்டான் தினேஷ்.

மகனின் நெற்றியில் தன் புடவை அழுத்திவிடாமல் பிடித்துக்கொண்டபடி நிமிர்ந்தாள் புவனா.
உள்ளேயிருந்தவர்கள் வெளியேவர, தான் எழ எத்தனித்தாள். உள்ளேயிருந்து வந்த ஆடவனின் முகத்தைப் பார்த்த அதிர்ச்சியில் எழமுடியாமல் மறுபடியும் இருக்கையில் அமர்ந்தாள் அவள்.

புவனாவின் கணவன், கையில் கட்டுப்போட்ட ஒரு பெண்ணை அணைத்தபடி வெளியே கூட்டிச்சென்றுகொண்டிருந்தான். வெளியிலிருந்த யாரையும் அவர்கள் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை.வேலைக்குச் சென்றிருந்த தன் கணவனை கொஞ்சமும் அந்தநிலையில் எதிர்பார்க்காத புவனா துடித்துப்போனாள்.

"நீங்க வாங்கம்மா" என்ற நர்ஸின் குரலில் கலைந்தவளாய், மகனுடன் எழுந்தாள் புவனா.தொண்டைக்குழிக்குள் உருண்ட பந்தினை மெதுவாக உள்ளுக்குள் தள்ளிவிட்டு, "சிஸ்டர், அந்தப் பொண்ணுக்கு என்ன காயம்?" என்று கேட்டாள் புவனா.

"பெருசா ஒண்ணும் இல்லம்மா... காய் நறுக்கையில் கத்தி கொஞ்சம் ஆழமா கீறிடுச்சாம்...அந்தப் பொண்ணு கூட தைரியமாதான் இருக்குது. ஆனா, புருஷனுக்குத்தான் கண்ணில் தண்ணியே வந்திடுச்சு" என்று சொல்லிக்கொண்டிருந்தவள், "ஐயோ, அவங்க மருந்துச்சீட்டை வச்சிட்டுப்போயிட்டாங்களே" என்று சொல்ல,"நீங்க கட்டுப்போடுங்க சிஸ்டர், நான் போய் கொடுத்துட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு, மகனிடம் "குடுத்துட்டு வரேம்ப்பா" என்று சொன்னபடி அந்தச்சீட்டை வங்கினாள் அவள்.

சீட்டில் ரோஷினி மனோகரன் என்று பெயர் இருந்தது.திருமணம் முடிந்த புதிதில் தன் பெயரை இதே பெயருடன் சேர்த்து "புவனா மனோகரன்" என்று ஸ்ரீராமஜெயம் மாதிரி எழுதி சந்தோஷப்பட்டது நினைவுக்குவர, விழிகளில் வழிந்த நீரைத் துடைத்தவளாய் விரைந்து நடந்தாள் புவனா.

மருத்துவமனை வரவேற்பில் அந்தப் பெண்ணை உட்காரவைத்துவிட்டு, அவள் கையைப்பிடித்தபடி தன் கணவன் நிற்பதைப்பார்த்தாள். எங்கிருந்தோ வந்த அசாத்திய துணிச்சலுடன், "மிஸ்டர் மனோகர்" என்று பின்னாலிருந்து குரல்கொடுக்க, பிடித்திருந்த கையை விடாமல் திரும்பிய அவன், தீயை மிதித்தவன்போல் சட்டென்று விலகிநின்றான்.

என்னாச்சுங்க என்றாள் அந்தப்பெண். சும்மாயிரு என்றபடி முகத்தைத் திருப்பிக்கொண்டு அவளைவிட்டுக் கொஞ்சம் விலகினான் அவன்.

"என்ன ரோஷினி, அடி பலமா?" என்று அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி கேட்டாள் புவனா.

"சின்னக் காயம் தான்...நீங்க யாருன்னு எனக்குத் தெரியலியே...ஏங்க, உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?" என்று அந்தப்பெண் புரியாமல் அவனிடம் கேட்டாள்.

"எனக்கு உங்க ரெண்டு பேரையுமே தெரியாது ரோஷினி...நீங்க விட்டுட்டு வந்த மருந்துச்சீட்டில் உங்க பெயர் இருந்தது. அதனால்தான் பெயர் சொல்லிக் கூப்பிட்டேன்" என்று சொல்லிவிட்டு " பத்திரமாப் பார்த்துக்கோங்க ரோஷினி...உங்க கையிலேருந்தும் பறந்து போயிடப்போகுது...நான் மருந்துச்சீட்டைச் சொன்னேன்" என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தாள் புவனா.

மின்சாரம் தாக்கிய பறவையைப்போல் இற்றுப்போனவனாய் இருக்கையில் விழுந்தான் மனோகர்.

Wednesday, May 21, 2008

சொல்லாத சமையல் ரகசியங்கள் (4) தண்ணி ரகசியங்கள்

தண்ணின்னதும் முண்டியடிச்சிட்டு வந்து எட்டிப்பார்த்தவங்க ஏமாந்து போயிட்டீங்களோ... :-) தண்ணின்னா அந்ந்தத் தண்ணி இல்லீங்க...

நீர்நிலைகளை உறிஞ்சி, மேகமாய் மாறி, மழையாய்ப் பொழிஞ்சு, அருவியாய், ஆறாய், குளமாய்,கிணறாய், அக்வாஃபினாவாய், பிஸ்லேரியாய் எங்கும் நிறைந்திருக்கும் நம்ம குடிதண்ணீர் தாங்க...

தண்ணீர் இல்லாம சமையலே இல்லையே...அளவா தண்ணீர் வச்சு, மல்லிகைப்பூவாய் சாதம் செய்து, திட்டமா தண்ணீர் விட்டு காய்களை வேகவிட்டு, அளவான நீரில் புளியைக் கரைத்து, தண்ணீர் வற்றி அடிபிடிக்காமல் கறி சமைத்துப் பரிமாறினால் அந்த உணவு நிச்சயம் சுவையாகத்தான் இருக்கும்.

பருப்பு வேகவைக்கும்போது கொஞ்சம் தண்ணீர் அதிகமா வச்சா, ரசத்துக்கு உதவும். ஆனா,கூட்டுக்குக் காய் வேகவைக்கும்போது அதிகமா தண்ணீர் வச்சிட்டா, தேவையில்லாத தண்ணீரை வடிக்கும்போது காயோட சத்தும் சுவையும் குறைஞ்சு போயிடும். எண்ணெயில் வதக்கும் பொரியல் வகைகளுக்கு(பீன்ஸ், கொத்தவரங்காய், அவரைக்காய்) காய்களை நறுக்கி சிறிது நீர் தெளித்து மைக்ரோவேவில் முக்கால்வாசி வேகவிட்டு எடுத்துட்டா கொஞ்சம் எண்ணெயிலேயே தாளிச்சு மசாலாப்பொடி, தேங்காய் சேர்த்து பிரட்டி எடுத்துடலாம்.புளியைக்கூட மூழ்குமளவுக்கு நீர்விட்டு மைக்ரோவேவில் முப்பதே செகண்ட் வச்சு எடுத்துட்டா பலமுறை நீர்விட்டுக் கரைக்கவேண்டிய அவசியமில்லாம சுலபமா கரைக்கவரும்.

குழம்புக்குக் காய்களை வேகவைக்க, காய்கள் மூழ்குமளவு நீர் சேர்த்து மூடியிட்டு, தீயையும் கொஞ்சம் குறைத்துவைத்து வேகவைத்தால் போதும். அதிகமா தண்ணீர்விட்டால் அதை வத்தவைக்கிறேன் பேர்வழி என்று ஏகப்பட்டநேரம் கேஸ் வீணாகத்தான்போகும்.

கோஸ், குடைமிளகாய், கத்தரிக்காய் போன்ற காய்களுக்குத் தண்ணீரே தேவையில்லை. சிறிதளவு எண்ணெயில் சிறுதீயில் உப்பு சேர்த்து வதக்கினாலே போதும்.

இன்னமும், தண்ணீர் சிக்கனமா செலவழிக்கணும்னா மைக்ரோவேவில் சமைப்பது ரொம்பவே சுலபம். ஒரே பாத்திரத்திலேயே தாளித்து,வதக்கி,சமைத்துப் பரிமாறியும் விடலாம். பாத்திரம் கழுவும் தண்ணீர் செலவும்கூட மிச்சமாகும்.

Tuesday, May 20, 2008

சொல்லாத சமையல் ரகசியங்கள் (3) ரசத்துக்கும் ரகசியம் உண்டு...


சாம்பார், அவியல் பொரியல்ன்னு வகைவகையா சாப்பிட்டாலும் கடைசியில கையளவு சாதமாவது ரசம் விட்டு சாப்பிட்டாதான் சாப்பாட்டுக்கே நிறைவு வரும். ஜீரணத்திற்கு ரசம் ரொம்ப நல்லதாச்சே...

ரசத்துக்குமா ரகசியம்ன்னு ஆச்சரியப்படாதீங்க...

ரசத்தில் சேர்க்கும் பொருட்களின் ரசம், ரசத்தில் முழுசுமாக இறங்கினால்தான் ரசத்துக்கு நல்ல சுவையே வரும்.அதனால கவனம் அவசியம். தக்காளி சேர்க்கும் ரசத்துக்கு, தக்காளியை நன்கு கைகளால் பிசைந்துவிட்டு, அதனுடன் நசுக்கிய அல்லது நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, மல்லி இலை இவைகளையும் சேர்த்து நன்றாகக் கைகளால் கரைத்துவிட்டு, அப்புறம் வழக்கம்போல் ரசப்பொடி, பெருங்காயம், புளிக்கரைசல் சேர்த்து ரசம் செய்யலாம்.

ரசப்பொடியை, எப்பொழுதும் கொரகொரப்பாகவே அரைத்துக்கொள்ளுங்கள்.நன்றாகப் பொடிசெய்துவிட்டீர்கள் என்றால் ரசம் குழம்பாகிவிடும்.

ரசப்பொடி சேர்த்துச்செய்யும் ரசத்தில் கடைசியாக, ஐந்தாறு கறிவேப்பிலை,ரெண்டு இணுக்கு கொத்துமல்லி, அரை டீஸ்பூன் மிளகு,ஒரேயொரு பூண்டுப்பல் சேர்த்து மிக்ஸியில் ஓடவிட்டு,கொரகொரப்பாக எடுத்துக் கலந்துவிட்டாலும் வாசனை ஊரைக்கூட்டும்.

எலுமிச்சை ரசம் செய்கையில் எலுமிச்சைச் சாறினை அடுப்பை அணைத்தபின் இறுதியில் தான் சேர்க்கவேண்டும்.எந்த ரசம் செய்தாலும் இறக்குமுன் 1/4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.

ரசப்பொடி இல்லாமல், 1/2 ஸ்பூன் மிளகு, 1/2 ஸ்பூன் சீரகம், சிறிய துண்டு தேங்காய், 4 பல் பூண்டு, தேவைப்பட்டால் சிவப்புமிளகாய் ஒன்றைச் சேர்த்து ஒன்றிரண்டாக நசுக்கி, புளிக்கரைசல், தக்காளி சேர்த்தும் ரசம் செய்யலாம். தாளிக்கும்போது, பெருங்காயம் சேர்க்க மறக்கவேண்டாம்.மறக்காமல் நுரைத்துவருகையில் அடுப்பை அணைச்சுடுங்க...இது ரொம்ப முக்கியம்.

Sunday, May 18, 2008

சொல்லாத சமையல் ரகசியங்கள் (2) அவியல் வச்சு அசத்துங்க...


மணக்க மணக்க சாம்பார் வச்சா மட்டும் போதுமா?
அட்டகாசமா அவியலும் வைக்கவேண்டாமோ...

அவியல் தமிழகம் மற்றும் கேரளாவில் மிகவும் பிரசித்தம். காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் சேர்ந்த ஒரு சுவையான பக்கஉணவு.நிறைய வகையான கிழங்குகள் சேரச்சேர அவியலின் சுவை அதிகரிக்கும். காய்கறிகளைக் குழையவிடாம வேகவைத்தல் மிக அவசியம்.இனிமேல் அவியலுக்கு மணமும் சுவையும் கூட்டும் ரகசியத்தைப் பார்ப்போமா...

காய்கறிகளைப் பக்குவமாக வேகவைத்துக்கொள்ளுங்க...அத்துடன், தேங்காய், சீரகம்,இரண்டு பச்சை மிளகாய்கள்,சிறிய துண்டு இஞ்சி, கறிவேப்பிலை,இரண்டு அல்லது மூன்று சாம்பார் வெங்காயம்,இரண்டு பல் பூண்டு(விருப்பமில்லாதவர்கள் தவிர்த்துவிடலாம்)இவற்றை ரொம்பவும் மசியாமல், கொரகொரப்பாக அரைத்து காய்கறிக்கலவையுடன் சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கிடுங்க. இறக்கியபின் சிறிதளவு தயிர் சேர்த்துக்கலந்துவிட்டு, மறக்காம தேங்காய் எண்ணெயில தாளிச்சிடுங்க...

இந்த அவியல் செய்யும்போது தேவையைவிட கொஞ்சம் அதிகமாகவே செஞ்சுடுங்க...ஏன்னா, உங்க வீட்டு அவியல் வாசனை அடுத்த வீட்டுக்காரங்களையும் இழுத்துட்டு வந்துடுமே...

பி.கு: அவியல் ரகசியத்தில சந்தேகம் இருந்தாலோ,நான் எழுதியிருப்பதில் தவறுகள் இருந்தாலோ தயங்காம கேளுங்க...
உங்கள் பின்னூட்டங்கள் என்னை உற்சாகப்படுத்தும் :-)

Saturday, May 17, 2008

ரெண்டெல்லாம் வேணாம்...ஒண்ணே போதும்...
ராஜுவின் பாட்டி கமலம்மா தன் துணிமணிகளை எடுத்து பையினுள் திணித்தபடி ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தாள். "பாட்டிம்மா, போகாத பாட்டிம்மா...நீயும் போயிட்டா எனக்கு ரொம்ப போரடிக்கும் பாட்டிம்மா" என்றபடி பாட்டியின் முகத்தைப் பார்த்தபடி கெஞ்சினான் ராஜு. "இல்லேடா கண்ணு...பாட்டி ஊருக்குப் போயிட்டு கொஞ்சநாளுக்கப்புறம் திரும்ப வரேன்" என்று கண்கலங்கச்சொன்னவாறு தொடர்ந்து தன் வேலையைச் செய்ய ஆரம்பிக்க, அறையைவிட்டு வெளியே வந்தான் ராஜு.

வெளியே வந்தவன் நேராக வாசலில் போய் அமர்ந்தான். நேற்று வாங்கிய புது சைக்கிள் வாசலில் குட்டிக்குதிரை மாதிரி அழகாக நின்றுகொண்டிருந்தது. கம்பிக்கதவின் வழியாக வெளியே எட்டிப்பார்த்தான் ராஜு.எதிர்வீட்டு வாசலில், அருண் அவன் தம்பி குமரனுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். நேற்று, அப்பாவுடன் புது சைக்கிள் வாங்கிவந்ததும் அருணும் குமரனும் ஆசையாய் வந்து பார்த்தபோது, குமரன் சைக்கிளின் பெல்லை அடிக்க, ராஜு அவன் கையை வேகமாகத் தட்டிவிடவே, ரெண்டுபேரும் ராஜுவோடு காய் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். காய் இன்னும் பழமாகாததால் ராஜுவும் அவர்களுடன் சென்று பேசவில்லை.

ராஜுவுக்கு எட்டு வயசு.அப்பா அம்மாவின் ஆசைக்கும் ஆஸ்திக்குமாய்ப் பிறந்த ஒரே செல்லமகன்.மகன் ஆசைப்பட்டு எதைப்பார்த்தாலும் வாங்கிக்கொடுத்துவிடும் பாசமான அப்பா அம்மா.ஒரே பிள்ளையாக இருந்தால்தான் வசதியாக தங்கள் விரும்பியபடி வளர்க்கமுடியும் என்று ஒரேமகனுடன் நிறுத்திக்கொண்டார்கள்.

"ராஜுக்குட்டி, என்னடா,வாசல்லவந்து உட்கார்ந்திட்டே" என்று கேட்டவாறு ராஜுவின் அம்மா உள்ளேயிருந்து வந்து பிரிக்காத பிஸ்கட் பாக்கெட் ஒன்றை அவன் கைகளில் கொடுத்துவிட்டு, "செல்லத்துக்கு பிஸ்கெட் சாப்பிட்டப்புறம் குடிக்கிறதுக்கு என்னவேணும்? பூஸ்டா, ஹார்லிக்ஸா? என்று கேட்க, "ஓண்ணும் வேணாம்" என்று முகத்தைத் திருப்பாமலே கோபமாக பதில் சொன்னான் ராஜு

அதற்குள்,எதிர்வீட்டில் அருணின் அம்மா உள்ளேயிருந்துவந்து ஒரு கிண்ணத்தில் எதையோ கொண்டுவந்து பிள்ளைகளிடம் சாப்பிடக் கொடுக்க, தம்பியும் அருணும் ஆளுக்குக் கொஞ்சமாகப் பங்கிட்டபடி சாப்பிடத் தொடங்கினார்கள். குமரன் தன் பங்கைச் சாப்பிட்டுவிட்டு அருணின் கையிலிருந்ததைப் பிடுங்க,அவனை விரட்டிக்கொண்டு ஓடினான் அருண். தானும் அவர்களுடன்போய் ஒருவாய் பிடுங்கிச் சாப்பிடவேண்டும்போலிருந்தது ராஜுவுக்கு. இருவரும் சாப்பிட்டு முடித்ததும் தம்பியின் வாயைத் தன் சட்டையால் துடைத்துவிட்டபடி ராஜுவைத் திரும்பிப்பார்த்தான் அருண்.

ராஜுவுக்கு ஆத்திரமும் அழுகையுமாக வந்தது. அதற்குள் அம்மா கையில் பூஸ்டுடன் வந்து, "ராஜுக்கண்ணா, இதைக் குடிச்சுடுங்க" என்று சொல்ல,அம்மாவின் கையைத் தட்டிவிட்டு,கையிலிருந்த பிரிக்காத பிஸ்கெட் பாக்கெட்டைத் தரையில் எறிந்துவிட்டு வீட்டுக்குள் ஓடினான் ராஜு.

மகனின் கோபத்திற்குக் காரணம் புரியாமல் திகைப்புடன் எதிர்வீட்டு வாசலை எட்டிப்பார்த்தாள் ராஜுவின் அம்மா. தன் தம்பியை உப்புமூட்டை சுமந்தபடி சிரித்து விளையாடிக்கொண்டிருந்தான் அருண். தரையில் கிடந்த பிரிக்காத பிஸ்கெட் பாக்கெட்டைக் கையில் எடுத்தபடி மகனின் கோபத்தால் மனம்வருந்தியவளாக வீட்டிற்குள் சென்றாள் ராஜுவின் அம்மா.

வீட்டிற்குள் சென்ற ராஜு அழுதபடி நேராகப் பாட்டியிடம் சென்றான். "பாரு பாட்டி, எதிர்வீட்டு அருணுக்கு விளையாட தம்பியிருக்கான். என் ஸ்கூல் ஃபிரண்ட் சோமு வீட்டில்கூட ஒரு பாப்பா இருக்குது. ஆனா, எனக்குத்தான் விளையாட யாருமில்லை, நீதானே இருக்கே...நீயும் போயிட்டா நான் என்ன பண்ணுவேன் பாட்டி?" என்று அழுதவாறு கேட்க, பேரனை இழுத்து மடியிலிருத்தி முத்தமிட்ட கமலம்மா "அழாதேப்பா...இப்பல்லாம் வீட்டுக்கு ஒரே பிள்ளை இருந்தாதான் நல்லதுப்பா...நானும் உங்கம்மா மாதிரி புத்திசாலித்தனமாயிருந்து மூணுபேருக்குப் பதிலா ஒரே பிள்ளையைப் பெத்திருந்தா,நாலு மாசத்துக்கொருதடவை ஒவ்வொரு மகனும் என்னைத் தூக்கியெறிய நானும் ஒவ்வொரு மகனோட வீட்டுக்குமாக நாயா அலைஞ்சிருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது" என்று சொல்லிக் கண்ணீர்விட்டாள். பாட்டியின் வார்த்தைகள் புரியாமல், அழுகையின் காரணம் அறியாதவனாய் பாட்டியின் கண்ணீரைத் தன் சிறுவிரல்களால் துடைத்தான் ராஜு.

சொல்லாத சமையல் ரகசியங்கள் (1)

வீட்டுக்குவீடு வித்தியாசப்படும் விஷயங்களில் சமையலும் ஒண்ணுங்க...
வீட்டுச் சாப்பாட்டுக்கு ஒரு ருசி ஹோட்டல் சாப்பாட்டுக்கு ஒரு ருசின்னு வித்தியாச வித்தியாசமா ருசியெல்லாம் பார்த்திருப்பீங்க. அந்த ருசிக்குள் அடங்கியிருக்கும் பலவிஷயங்கள் சொல்லப்படாத ரகசியங்களாகவே இருக்கும்.

ஆயிரம்தான் சொல்லு. எங்கம்மா கைப்பக்குவம் உனக்கு வரவேவராதுன்னு சொல்லி மனைவியின் காதில் புகைகிளப்பிவிடும் கணவர்களின் வார்த்தைகள் நம் வீடுகளில் அன்றாட நிகழ்வுகள்.
எல்லாரும் சமைப்பதுபோலவேதான் சமைக்கிறோம் ஆனா, இறுதியில் செய்யப்படும் சில சின்ன மாற்றங்கள் சமையலுக்கு ஒரு வித்தியாசமான சுவையைக் கொடுப்பது மறுக்கமுடியாத உண்மைங்க...

ஒரு உறவினர்வீட்டுக் கல்யாண நிச்சயதார்த்தத்துக்குப் போயிருந்தேன்...நாகரீகம் அத்தனை பரவாத ஊர். இரவு சமையலாக, சாதம், சாம்பார், ரசம் கூட்டு, பொரியல் அப்பளம் என்று சமைச்சிருந்தாங்க.சத்தியமா சொல்றேன் அன்னைக்கி நான் சாப்பிட்ட சாம்பார் மாதிரி இதுவரை சாப்பிட்டதில்லை. சாப்பிட்டுமுடித்தும் மனசில் நின்ற அந்த சாம்பாரை பாராட்டியே ஆகணும்ங்கிற எண்ணத்தில் சமையல் கட்டுக்குப் போனேன்.

சமைத்தவரிடம் பாராட்டியபோது அவர் சொன்னார்..."சாப்பிட்டோமா கையைக்கழுவினோமான்னு போகாம உங்கமாதிரி ஒவ்வொருத்தார் பாராட்டும்போது கிடைக்கும் சந்தோஷமே தனிம்மா" என்று சந்தோஷப்பட்டவராக,சாம்பாரில் இருந்த அந்த தனி மணத்துக்குக் காரணம் நான் தாளித்த பொருட்கள்தாம்மா என்று சொன்னார்.

அவர் சொன்ன ரகசியம் இதுதான்... உங்க முறைப்படி காயும் பருப்பும் சேர்த்து சாம்பார் வச்சுடுங்க... கடைசியா, வெந்தயம், சீரகம், கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம் இதையெல்லாம் வெடிக்கவிட்டு கடைசியில கைப்பிடி நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, மல்லியிலை போட்டுத் தாளிச்சு சாம்பாரில் சேர்த்துப்பாருங்க அப்புறம் உங்கவீட்டு சாம்பாரும் ஊருக்கே மணக்கும்னு சொன்னார்.இன்னைக்கு வரைக்கும் என் வீட்டிலும் அதேமணம்தான்.

Wednesday, May 14, 2008

பாலை மலைத்தொடரைப் பார்க்கலாம் வாங்க...ஆண்டுத்தேர்வு விடுமுறையின்போது, கண்ணுக்கெட்டிய தூரம் தென்படும் கான்கிரீட் காடுகளிலிருந்து விலகி மலைப்பகுதிக்குச் செல்லலாமென ஓர் எண்ணம்...மலையென்றதும் நம்ம ஊர் குற்றாலம், கொடைக்கானல் மாதிரி எதையாவது கற்பனை செய்தால் நிச்சயம் ஏமாந்துதான் போவீர்கள். ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்களே அதுபோல இயற்கையழகுக்கு ஏங்கும் விழிகளைக் கொஞ்சமேனும் திருப்தி செய்ய பாலையில் மலைப் பிரதேசம் தேடி ஒரு சிறு பயணம்...ஹத்தா(hatta) வை நோக்கிய பயணத்தை காலை 8.30 க்குத் தொடங்கினோம்.எங்களுக்கு முன்பாகவே கதிரவன் பிரகாசமாய்ப் புறப்பட்டிருந்தார்

துபாயிலிருந்து கிட்டத்தட்ட 110 கிலோமீட்டர்கள் தொலைவில், ஓமான் நாட்டு எல்லையில் ஹஜர் (hajjar ranges) மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. மக்கள் நெருக்கம் குறைந்த இயற்கை இன்னமும் அதிகம் சிதைக்கப் படாத பகுதி...

வழிநெடுகே விரியும் பாலை மணல்வெளி...மேயும் ஒட்டகங்கள்...கண்ணுக்கு எட்டிய தூரம்வரை விரியும் பாலை மணல் மேடுகள்...பாலைவன மணல் திட்டுகளில் காணப்பட்ட உற்சாகமான பொழுதுபோக்குகள் இதோ...
பாலைவன மணலில் 4 wheel drive வாகனங்களிலும், dune buggy எனும் பைக்கிலும்
ஏறி இறங்கி விளையாடுதல் இங்கு மிகவும் பிரசித்தம்


வழியில் ஆங்காங்கே இறங்கி இளைப்பாறிவிட்டு, ஹத்தாவை அடைகையில் சூரியன் உச்சிக்கு வந்திருந்தார். முதலில் சென்ற இடம் Hill park. பூக்கள் இல்லாத ஒரு பூங்கா. சிறு குன்றில் அமைக்கப்பட்ட அரேபிய அமைப்பு ஒற்றைக் கோபுரத்துடன் ஓர் இளைப்பாறும் இடம்.மலைப்பூங்காவின் உச்சியிலுள்ள கோபுரம்...மலைப்பூங்காவில் உணவருந்தி இளைப்பாறிவிட்டு, ஹத்தா அணைக்கட்டைப் (hatta dam)பார்க்கப் புறப்பட்டோம். ஆறில்லை அருவியில்லை... ஆனால் அணைக்கட்டு உண்டு. சுற்றிலும் மலைத்தொடர்கள். நடுவில் நீர்த்தேக்கம். பலமுறை இந்த இடத்திற்குச் சென்றிருந்தாலும் இந்தமுறைதான் அதிகமான நீருடன் பார்த்திருக்கிறோம். சென்றமுறை, அணைக்கட்டிற்குள் நாங்கள் பந்து விளையாடிய பிரதேசம் இந்தமுறை நீருக்குள்...

இந்த அணைக்கட்டுத்தவிர Wadi என்று சொல்லப்படும் நீரூற்றுக்களும் இங்கு உண்டு. மேடுபள்ளமான மலைப்பாதையைக் கடந்து சென்றபின் கால்களைத் தழுவும் நீரோடைகளையும் காணலாம். வழிதவறிச் சென்றால் வேறெங்காவது சென்று மாட்டிக்கொள்ளும் அபாயமும் உண்டு.
சாலைகளில்லாத காரணத்தால் பயணத்தில் எச்சரிக்கை மிக அவசியம்.

இதோ,அணைக்கட்டிற்கு ஏறிச் செல்லும் பாதை...அணைக்கட்டின் மேலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்...

நீர்த்தேக்கத்தின் பச்சைவண்ண நீரில் பொன்னிற மீன்கள்...
பொரியெல்லாம் கிடைக்காததால் பிரிட்டானியா பிஸ்கட் சாப்பிட்ட அழகு...


குளிரக்குளிர நீரில் விளையாடிவிட்டு அணைக்கட்டைவிட்டு வெளியேறினோம்.
அணியிலிருந்து இறங்குகையில்...அணைக்கட்டைவிட்டுப் புறப்பட்டு, செயற்கை கலக்காத இயற்கையின் இன்னும் சில பக்கங்களைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம்.

வழியிலுள்ள மலைத்தொடர்கள்...


வழியெங்கும் காணப்பட்ட இயற்கையை ரசித்தபடியே மீண்டும் வரும்நாளை எதிபார்த்தபடி வீட்டை நோக்கி விரைந்தது எங்கள் வாகனம்.

Tuesday, May 13, 2008

கோடை விடுமுறையில் குளிர்ச்சியான நினைவுகள்

போனவருஷம் கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போனபோது,விமானம் ஏறுவதற்கு முன்பே பதினைந்து நாளுக்கான பயணத்திட்டம் போட்டாகிவிட்டது. மாமியார், நாத்தனார்கள், கொழுந்தனார், என் பெற்றோர் என்று ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் ஒதுக்கிய நாட்கள் போக, மிச்சநாட்களை மலைக்கோட்டை விநாயகர், உறையூர் வெக்காளியம்மன், பழனி தண்டாயுதபாணி, திருச்செந்தூர் முருகன் என்று கடவுள்களுக்கு ஒதுக்கிவிட எல்லா நாளும் பரபரப்பான பயணங்களாகவே இருந்தது.

பழனி முருகனுக்கு ஒதுக்கப்பட்ட நாளுக்கு முன்தினம் பலவீட்டுச் சாப்பாடும் பலஊர்த் தண்ணீரும் சேராமல் மூத்தமகள் படுத்துக்கொள்ள, "பழனியாண்டவரை இங்கிருந்தே நினைச்சுக்கோ... அடுத்தவருஷம் வரும்போது கட்டாயம் போயிடலாம்" என்று அம்மா சொல்ல பழனித்திட்டம் கேன்சலானது.

பகல் பத்துமணியிருக்கும்... வாடகைக்கு எடுத்த வண்டி சும்மாதானே நிக்கிது, நாம பக்கத்து கிராமத்தில எங்க பெரியம்மா வீட்டுக்குப் போய்வரலாமே என்று என் கணவர் சொல்ல, மகளை அம்மாவிடம் விட்டுவிட்டு கிளம்ப ஆயத்தமானோம். "நல்லவேளை எனக்கு உடம்பு முடியல... நீங்க போற ஊருக்கு ரோடே கிடையாதுடா" என்று என் மகள் தன் தம்பியை வெறுப்பேத்த, அவனும், "அம்மா, நான் சுட்டி டிவி பாத்திட்டு இருக்கிறேன் நீங்க போயிட்டுவாங்க" என்று ஆரம்பிக்க, அவனை சமாதானப்படுத்தி அழைத்துக்கொண்டு புறப்பட்டோம்.

வண்டியிலேறியதும்தான் உரைத்தது, ஒரு ஃபோன் கூடப் பண்ணாமல் புறப்படுகிறோமே என்று...ஃபோன் பண்ணுவதற்கு அவர்கள் நம்பர் தெரியாது அதுவேறு விஷயம்...
என் கணவர், அதெல்லாம் நகரத்துப் பழக்கம் இங்கே அதெல்லாம் தேவையில்லை என்று சமாதானம் சொல்ல அரைமனசுடன் புறப்பட்டோம்.

முக்கிய சாலையைத் தாண்டி, மண்சாலையில் நுழைந்தது வாகனம். இருபுறமும் வயல்கள், எதிர்ப்பட்ட ஒரே ஒரு மினி பஸ், பாதையைக் கடந்து செல்லும் பசு மாடுகள், பறவைகள் தவிர ஆள் நடமாட்டமே இல்லை. இயற்கையை ரசித்துக்கொண்டே ஒருவழியாக ஊருக்குள் நுழைந்து வீட்டிற்குப்போனால் வீட்டில் யாருமில்லை. வாசலில் கோழிகள் மேய்ந்துகொண்டிருக்க, திண்ணையில் ஆடுகள் குதித்து விளையாடிக்கொண்டிருந்தன. "பாட்டி வயலுக்குப் போயிருக்காங்க, இப்ப வந்துருவாங்க..." என்று பக்கத்துவீட்டுச் சின்னப்பெண் தகவல் கொடுத்துவிட்டு, கையோடு போய் கூட்டிக்கொண்டும் வந்துவிட்டாள்.

எங்களைப் பார்த்ததுதான் தாமதம் அத்தைக்கு சந்தோஷம் தாங்கவில்லை. "ஐயா, என்னைப் பாக்கவா இவ்வளவு தூரம் வேகாத வெயில்ல வந்தீக" என்று சொல்லிச்சொல்லி மாய்ந்துபோய், நார்க்கட்டிலை எடுத்துப்போட்டு உட்காரச் சொல்லிவிட்டு, பக்கத்துவீட்டுப் பையனைக்கூப்பிட்டு பதநீரும் நுங்கும் வாங்கிவரச் சொன்னார்கள்.பதப்படுத்திய பாலையும், பலமாசம் ஷெல்பிலிருந்த ஜூஸையும் குடித்து மரத்துப்போயிருந்த ருசி நரம்புகள் விழித்துக்கொள்ள, நுங்கு கலந்த பதநீர் தேவாமிர்தமாய் தொண்டையில் இறங்கியது. அதற்குள் பாட்டியோட கொழுந்தனார் மகன் வெளிநாட்டிலேருந்து குடும்பத்தோடு வந்திருக்காங்க
என்ற செய்தி தெரிந்து, பத்துப்பதினைந்துபேர் வந்து எங்களை வித்தியாசமாய்ப் பார்த்துவிட்டு, ஏதாவது உதவி செய்யணுமா என்று அத்தையிடம் கேட்டுவிட்டுப் போனார்கள்.

அடுத்த அரைமணி நேரத்தில் வறுத்தமீனும், பொரித்த முட்டையுமாக ஒரு விருந்தே சமைத்து அத்தை அசத்திவிட, என் கணவர் என்னிடம் மெதுவாகக் கிசுகிசுத்தார்..."பார்த்தியா,போன் பண்ணாம போறோமேன்னு வருத்தப்பட்டியே, போன் பண்ணிட்டுப் போனாலே பிஸ்கட்டையும் காப்பியையும் கொண்டுவந்து வைத்துவிட்டு, மொபைல் போனில் பேசிக்கொண்டே நாங்க ரொம்ப பிசி என்று காட்டிக்கொள்(ல்லு)ளும் மனுஷங்க ஊர்ல வாழ்ந்து பழகிட்ட உனக்கு இதெல்லாம் ரொம்ப அதிசயமா இருக்குமே" என்று சிரிக்க, செயற்கையின் சாயம் கொஞ்சமும் கலக்காத அந்த பாசம் என்னை "ஆமா" என்று தலையசைக்க வைத்தது.

சாப்பிட்ட பின் சிறிது நேரம் பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெறும்போது, திண்ணையில் எங்களுக்காக ஒரு குட்டிச் சாக்குப்பை தயாராக இருந்தது. "என்ன பெரியம்மா?" என்று என் கணவர் கேட்க,ஒண்ணுமில்லைய்யா, நம்ம வயல்ல விளைஞ்ச கடலை, மரத்துல பறிச்ச ரெண்டுமூணு எழனி, கொஞ்சம் கொய்யாப்பழம் அவ்வளவுதான்...வீட்டிலபோயி என் பெரிய பேத்திக்கு ரெண்டு எழனிய வெட்டிக்குடு, சூடு தணிஞ்சி உடம்பு சரியாப்போயிடும் என்று சொல்ல,நெகிழ்ந்து போனவளாய் பையை எடுத்து வண்டியில் வைத்தேன். பை கனமாக இருந்தது. ஆனால், மனசு அந்த உபசரிப்பின் மகிழ்ச்சியில் லேசாகி மிதந்தது.

Monday, May 5, 2008

மழை மேகத்தின் முதல்துளி...


மேகங்களெல்லாம் மழையாகப் பொழிகிறதா என்ன...
சுழற்றிவீசும் சூறைக்காற்றில் கலைந்துபோகும் மேகங்கள் கணக்கிலடங்காதவை. கடலில் நீர்குடித்து மலையில் மழையாய்ப் பெய்து, சரிவில் அருவியாய் இறங்கி, சமவெளியில் ஆறாய்ப் பெருகிடும் மேகத்திற்குத்தான் எத்தனை வடிவங்கள்?

சின்ன வயதில் கால்களை மணலில் அளையவிட்டு, விழிகளால் வானத்தை அளந்த காலத்தில், சிங்கமாய் சிறுநரியாய்,ஒட்டகமாய் ஓடும் குதிரையாய், அம்மா பொரித்த கோணல் அப்பளமாய், அப்பா வாங்கிக்கொடுத்த பஞ்சுமிட்டாயாய் எத்தனை வேஷமிட்டு நம் கற்பனையோடு கதைபேசியிருக்கும்?

ஒளிகொடுக்கும் சூரியனுக்கு வழிகொடுக்காத நந்திபோல உருவம் மறைத்திடும் இந்த நீர்க்குவியல்தான் எத்தனை அழகு? மேகங்கள் இல்லாத வானத்தில் வலம்வரும் நிலவுகூட அழகில்லைதான்...சின்னதும் பெரியதுமாய் எண்ண இயலா மேகப்பொதிகள் சூரியனின் யானைப்படைகளாகவும், குதிரைக்கூட்டமாகவும் அணிவகுத்துச்செல்லும் அழகுக்கு ஈடென்ன சொல்ல இயலும்?

வானில் பறக்கையில் நம்மோடு கைகுலுக்கி, பூமிக்கும் வானுக்குமிடையில் போர்வையாய் விரிந்திருக்கும் மேகத்திரை மறைவில் நாம் தொலைந்துதான் போகிறோம். மேகத்தைப் பாடாத கவிஞன் கண்ணில்லாதவனென்றே சொல்லிவிடலாம்.

உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே...

என்றும்,

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

என்றும் இளையநிலாவைப் பொழியவிட்டு நம் இதயங்களில் நிறைந்த பாடலை யாரும் மறக்கவேமுடியாது.

மாயனாம் கண்ணனைக் குறிப்பிடுகையில் கார்மேக வண்ணனென்று கனிவோடு அழைப்பதும், சிலம்பின் நாடுகாண் காதையில்,

"மின்னுக்கோடி உடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்"

வேங்கடவனின் திருத்தோற்றம் கூறுகையில்,மின்னல் எனும் கோடி உடுத்து, வில்லினைப் பூண்டு, நல்ல நிறமுடைய மேகம் நிற்பதுபோல, சக்கரத்தையும் சங்கையும் தாமரைக் கைகளில் தாங்கி, மார்பில் ஆரம் அணிந்து, தங்க ஆடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் என்று சிறப்பித்துக் கூறுவதும் வான்மேகத்துக்குக் கிடைத்த விருதுகள் எனலாம்.

அழகான மேகங்கள் சில சமயங்களில் அமிலமேகமாக மாறி,காடுகள் கழனிகளை அழித்துச் சிதைப்பதுமுண்டு.வாகனங்கள் வெளியிடும் புகையின் மாசுகளும், தொழிற்சாலைப் புகைக்கழிவுகளும் அமிலமழைக்கு முக்கியக் காரணங்களாகும்.

மேகமின்றி மழையில்லை, மழையின்றிப் பயிரில்லை, பயிரின்றி உயிரில்லை...இப்படி எல்லாவற்றிற்கும் ஆதிமூலமான அழகு மேகங்கள் இந்த பூமிப்பந்தினுக்கு இன்னும் பொலிவூட்டட்டும்!

LinkWithin

Related Posts with Thumbnails