Monday, May 5, 2008

மழை மேகத்தின் முதல்துளி...


மேகங்களெல்லாம் மழையாகப் பொழிகிறதா என்ன...
சுழற்றிவீசும் சூறைக்காற்றில் கலைந்துபோகும் மேகங்கள் கணக்கிலடங்காதவை. கடலில் நீர்குடித்து மலையில் மழையாய்ப் பெய்து, சரிவில் அருவியாய் இறங்கி, சமவெளியில் ஆறாய்ப் பெருகிடும் மேகத்திற்குத்தான் எத்தனை வடிவங்கள்?

சின்ன வயதில் கால்களை மணலில் அளையவிட்டு, விழிகளால் வானத்தை அளந்த காலத்தில், சிங்கமாய் சிறுநரியாய்,ஒட்டகமாய் ஓடும் குதிரையாய், அம்மா பொரித்த கோணல் அப்பளமாய், அப்பா வாங்கிக்கொடுத்த பஞ்சுமிட்டாயாய் எத்தனை வேஷமிட்டு நம் கற்பனையோடு கதைபேசியிருக்கும்?

ஒளிகொடுக்கும் சூரியனுக்கு வழிகொடுக்காத நந்திபோல உருவம் மறைத்திடும் இந்த நீர்க்குவியல்தான் எத்தனை அழகு? மேகங்கள் இல்லாத வானத்தில் வலம்வரும் நிலவுகூட அழகில்லைதான்...சின்னதும் பெரியதுமாய் எண்ண இயலா மேகப்பொதிகள் சூரியனின் யானைப்படைகளாகவும், குதிரைக்கூட்டமாகவும் அணிவகுத்துச்செல்லும் அழகுக்கு ஈடென்ன சொல்ல இயலும்?

வானில் பறக்கையில் நம்மோடு கைகுலுக்கி, பூமிக்கும் வானுக்குமிடையில் போர்வையாய் விரிந்திருக்கும் மேகத்திரை மறைவில் நாம் தொலைந்துதான் போகிறோம். மேகத்தைப் பாடாத கவிஞன் கண்ணில்லாதவனென்றே சொல்லிவிடலாம்.

உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே...

என்றும்,

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

என்றும் இளையநிலாவைப் பொழியவிட்டு நம் இதயங்களில் நிறைந்த பாடலை யாரும் மறக்கவேமுடியாது.

மாயனாம் கண்ணனைக் குறிப்பிடுகையில் கார்மேக வண்ணனென்று கனிவோடு அழைப்பதும், சிலம்பின் நாடுகாண் காதையில்,

"மின்னுக்கோடி உடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்"

வேங்கடவனின் திருத்தோற்றம் கூறுகையில்,மின்னல் எனும் கோடி உடுத்து, வில்லினைப் பூண்டு, நல்ல நிறமுடைய மேகம் நிற்பதுபோல, சக்கரத்தையும் சங்கையும் தாமரைக் கைகளில் தாங்கி, மார்பில் ஆரம் அணிந்து, தங்க ஆடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் என்று சிறப்பித்துக் கூறுவதும் வான்மேகத்துக்குக் கிடைத்த விருதுகள் எனலாம்.

அழகான மேகங்கள் சில சமயங்களில் அமிலமேகமாக மாறி,காடுகள் கழனிகளை அழித்துச் சிதைப்பதுமுண்டு.வாகனங்கள் வெளியிடும் புகையின் மாசுகளும், தொழிற்சாலைப் புகைக்கழிவுகளும் அமிலமழைக்கு முக்கியக் காரணங்களாகும்.

மேகமின்றி மழையில்லை, மழையின்றிப் பயிரில்லை, பயிரின்றி உயிரில்லை...இப்படி எல்லாவற்றிற்கும் ஆதிமூலமான அழகு மேகங்கள் இந்த பூமிப்பந்தினுக்கு இன்னும் பொலிவூட்டட்டும்!

4 comments:

 1. மனதைத் தொடும் மேகம். மிக்க நன்றி சகோதரி.

  ReplyDelete
 2. மழைமேகத்தின் முதல் ரசிகருக்கு என் நன்றியும் வணக்கமும்...

  நன்றி ராதாகிருஷ்ணன்.

  ReplyDelete
 3. "சின்ன வயதில் கால்களை மணலில் அளையவிட்டு, விழிகளால் வானத்தை அளந்த காலத்தில், சிங்கமாய் சிறுநரியாய்,ஒட்டகமாய் ஓடும் குதிரையாய், அம்மா பொரித்த கோணல் அப்பளமாய், அப்பா வாங்கிக்கொடுத்த பஞ்சுமிட்டாயாய் எத்தனை வேஷமிட்டு நம் கற்பனையோடு கதைபேசியிருக்கும்?
  "

  மனதில் நிற்கும் வரிகள்...

  ReplyDelete
 4. முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி இன்ஷ்ட்ரு கிங்...

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails