Saturday, May 17, 2008

ரெண்டெல்லாம் வேணாம்...ஒண்ணே போதும்...
ராஜுவின் பாட்டி கமலம்மா தன் துணிமணிகளை எடுத்து பையினுள் திணித்தபடி ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தாள். "பாட்டிம்மா, போகாத பாட்டிம்மா...நீயும் போயிட்டா எனக்கு ரொம்ப போரடிக்கும் பாட்டிம்மா" என்றபடி பாட்டியின் முகத்தைப் பார்த்தபடி கெஞ்சினான் ராஜு. "இல்லேடா கண்ணு...பாட்டி ஊருக்குப் போயிட்டு கொஞ்சநாளுக்கப்புறம் திரும்ப வரேன்" என்று கண்கலங்கச்சொன்னவாறு தொடர்ந்து தன் வேலையைச் செய்ய ஆரம்பிக்க, அறையைவிட்டு வெளியே வந்தான் ராஜு.

வெளியே வந்தவன் நேராக வாசலில் போய் அமர்ந்தான். நேற்று வாங்கிய புது சைக்கிள் வாசலில் குட்டிக்குதிரை மாதிரி அழகாக நின்றுகொண்டிருந்தது. கம்பிக்கதவின் வழியாக வெளியே எட்டிப்பார்த்தான் ராஜு.எதிர்வீட்டு வாசலில், அருண் அவன் தம்பி குமரனுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். நேற்று, அப்பாவுடன் புது சைக்கிள் வாங்கிவந்ததும் அருணும் குமரனும் ஆசையாய் வந்து பார்த்தபோது, குமரன் சைக்கிளின் பெல்லை அடிக்க, ராஜு அவன் கையை வேகமாகத் தட்டிவிடவே, ரெண்டுபேரும் ராஜுவோடு காய் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். காய் இன்னும் பழமாகாததால் ராஜுவும் அவர்களுடன் சென்று பேசவில்லை.

ராஜுவுக்கு எட்டு வயசு.அப்பா அம்மாவின் ஆசைக்கும் ஆஸ்திக்குமாய்ப் பிறந்த ஒரே செல்லமகன்.மகன் ஆசைப்பட்டு எதைப்பார்த்தாலும் வாங்கிக்கொடுத்துவிடும் பாசமான அப்பா அம்மா.ஒரே பிள்ளையாக இருந்தால்தான் வசதியாக தங்கள் விரும்பியபடி வளர்க்கமுடியும் என்று ஒரேமகனுடன் நிறுத்திக்கொண்டார்கள்.

"ராஜுக்குட்டி, என்னடா,வாசல்லவந்து உட்கார்ந்திட்டே" என்று கேட்டவாறு ராஜுவின் அம்மா உள்ளேயிருந்து வந்து பிரிக்காத பிஸ்கட் பாக்கெட் ஒன்றை அவன் கைகளில் கொடுத்துவிட்டு, "செல்லத்துக்கு பிஸ்கெட் சாப்பிட்டப்புறம் குடிக்கிறதுக்கு என்னவேணும்? பூஸ்டா, ஹார்லிக்ஸா? என்று கேட்க, "ஓண்ணும் வேணாம்" என்று முகத்தைத் திருப்பாமலே கோபமாக பதில் சொன்னான் ராஜு

அதற்குள்,எதிர்வீட்டில் அருணின் அம்மா உள்ளேயிருந்துவந்து ஒரு கிண்ணத்தில் எதையோ கொண்டுவந்து பிள்ளைகளிடம் சாப்பிடக் கொடுக்க, தம்பியும் அருணும் ஆளுக்குக் கொஞ்சமாகப் பங்கிட்டபடி சாப்பிடத் தொடங்கினார்கள். குமரன் தன் பங்கைச் சாப்பிட்டுவிட்டு அருணின் கையிலிருந்ததைப் பிடுங்க,அவனை விரட்டிக்கொண்டு ஓடினான் அருண். தானும் அவர்களுடன்போய் ஒருவாய் பிடுங்கிச் சாப்பிடவேண்டும்போலிருந்தது ராஜுவுக்கு. இருவரும் சாப்பிட்டு முடித்ததும் தம்பியின் வாயைத் தன் சட்டையால் துடைத்துவிட்டபடி ராஜுவைத் திரும்பிப்பார்த்தான் அருண்.

ராஜுவுக்கு ஆத்திரமும் அழுகையுமாக வந்தது. அதற்குள் அம்மா கையில் பூஸ்டுடன் வந்து, "ராஜுக்கண்ணா, இதைக் குடிச்சுடுங்க" என்று சொல்ல,அம்மாவின் கையைத் தட்டிவிட்டு,கையிலிருந்த பிரிக்காத பிஸ்கெட் பாக்கெட்டைத் தரையில் எறிந்துவிட்டு வீட்டுக்குள் ஓடினான் ராஜு.

மகனின் கோபத்திற்குக் காரணம் புரியாமல் திகைப்புடன் எதிர்வீட்டு வாசலை எட்டிப்பார்த்தாள் ராஜுவின் அம்மா. தன் தம்பியை உப்புமூட்டை சுமந்தபடி சிரித்து விளையாடிக்கொண்டிருந்தான் அருண். தரையில் கிடந்த பிரிக்காத பிஸ்கெட் பாக்கெட்டைக் கையில் எடுத்தபடி மகனின் கோபத்தால் மனம்வருந்தியவளாக வீட்டிற்குள் சென்றாள் ராஜுவின் அம்மா.

வீட்டிற்குள் சென்ற ராஜு அழுதபடி நேராகப் பாட்டியிடம் சென்றான். "பாரு பாட்டி, எதிர்வீட்டு அருணுக்கு விளையாட தம்பியிருக்கான். என் ஸ்கூல் ஃபிரண்ட் சோமு வீட்டில்கூட ஒரு பாப்பா இருக்குது. ஆனா, எனக்குத்தான் விளையாட யாருமில்லை, நீதானே இருக்கே...நீயும் போயிட்டா நான் என்ன பண்ணுவேன் பாட்டி?" என்று அழுதவாறு கேட்க, பேரனை இழுத்து மடியிலிருத்தி முத்தமிட்ட கமலம்மா "அழாதேப்பா...இப்பல்லாம் வீட்டுக்கு ஒரே பிள்ளை இருந்தாதான் நல்லதுப்பா...நானும் உங்கம்மா மாதிரி புத்திசாலித்தனமாயிருந்து மூணுபேருக்குப் பதிலா ஒரே பிள்ளையைப் பெத்திருந்தா,நாலு மாசத்துக்கொருதடவை ஒவ்வொரு மகனும் என்னைத் தூக்கியெறிய நானும் ஒவ்வொரு மகனோட வீட்டுக்குமாக நாயா அலைஞ்சிருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது" என்று சொல்லிக் கண்ணீர்விட்டாள். பாட்டியின் வார்த்தைகள் புரியாமல், அழுகையின் காரணம் அறியாதவனாய் பாட்டியின் கண்ணீரைத் தன் சிறுவிரல்களால் துடைத்தான் ராஜு.

1 comment:

  1. Very nice. Most of the parents face the same problem. I think next generation bring Biggest change.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails