Thursday, May 22, 2008

காயம்

ஒரு நிமிஷத்தில் பதறித்தான் போனாள் புவனா...
மாடிப்படியிலிருந்து மூன்று வயது மகன் தினேஷ் விழுந்து, நெற்றியில் அடிபட்டு ரத்தம் வழிய ஆரம்பித்தது. கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.ஒருவழியாக சுதாரித்துக்கொண்டு தொலைபேசியில் கணவனின் எண்ணை அழுத்தினாள். எப்பொழுதும்போல எங்கேஜ்ட் டோன்...

"அவசர ஆத்திரத்துக்குக் கூட பேசமுடியாதபடி நாள் முழுக்க என்ன ஆஃபீஸ் வேலையோ..."என்று முணுமுணுத்தபடியே, கையில் செல்போனை எடுத்துக்கொண்டு,மகனைத் தூக்கிக்கொண்டு பக்கத்து மருத்துவமனைக்கு ஓடினாள் அவள்.

மதியம் மூன்று மணியாகியிருந்ததால் மருத்துவர் வீட்டுக்குப் போய்விட்டதாக நர்ஸ் சொல்ல, ஆட்டோ எடுத்துக்கொண்டு பக்கத்திலிருந்த இருபத்துநான்கு மணிநேர மருத்துவமனை ஒன்றுக்குப் போகச்சொன்னாள் புவனா.

செல்போனை உயிர்ப்பித்து கணவனின் எண்ணை மீண்டும் கூப்பிட்டுப்பார்த்தாள். போன் 'சுவிட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது. "ஏதாவது முக்கியமான அலுவலக மீட்டிங்கில் இருப்பாரோ..." என்று எண்ணிக்கொண்டிருக்கையில் மருத்துவமனை வந்துவிட ஆட்டோவை வெயிட்டிங்கில் விட்டுவிட்டு உள்ளே ஓடினாள்.

கனிவான முகத்துடன் அங்கிருந்த பெண் மருத்துவர் "பயப்படவேண்டாம்மா...காயம் சின்னதுதான்...நீங்க நர்ஸ் கூடப்போய் மருந்துமட்டும் போட்டுக்கோங்க" என்று சொல்லி அனுப்ப, மனதில் தைரியம்வந்தது புவனாவுக்கு.

உள்ளே, இன்னொரு பேஷண்டுக்கு மருந்திட்டுக்கொண்டிருக்கவே, வெளியிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் புவனா. மெதுவாக மகனிடம் "என்னப்பா, வலிக்குதா? என்றாள் புவனா. "இப்ப இல்லேம்மா" என்றவாறு அம்மாவின் மடியில் சாய்ந்துகொண்டான் தினேஷ்.

மகனின் நெற்றியில் தன் புடவை அழுத்திவிடாமல் பிடித்துக்கொண்டபடி நிமிர்ந்தாள் புவனா.
உள்ளேயிருந்தவர்கள் வெளியேவர, தான் எழ எத்தனித்தாள். உள்ளேயிருந்து வந்த ஆடவனின் முகத்தைப் பார்த்த அதிர்ச்சியில் எழமுடியாமல் மறுபடியும் இருக்கையில் அமர்ந்தாள் அவள்.

புவனாவின் கணவன், கையில் கட்டுப்போட்ட ஒரு பெண்ணை அணைத்தபடி வெளியே கூட்டிச்சென்றுகொண்டிருந்தான். வெளியிலிருந்த யாரையும் அவர்கள் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை.வேலைக்குச் சென்றிருந்த தன் கணவனை கொஞ்சமும் அந்தநிலையில் எதிர்பார்க்காத புவனா துடித்துப்போனாள்.

"நீங்க வாங்கம்மா" என்ற நர்ஸின் குரலில் கலைந்தவளாய், மகனுடன் எழுந்தாள் புவனா.தொண்டைக்குழிக்குள் உருண்ட பந்தினை மெதுவாக உள்ளுக்குள் தள்ளிவிட்டு, "சிஸ்டர், அந்தப் பொண்ணுக்கு என்ன காயம்?" என்று கேட்டாள் புவனா.

"பெருசா ஒண்ணும் இல்லம்மா... காய் நறுக்கையில் கத்தி கொஞ்சம் ஆழமா கீறிடுச்சாம்...அந்தப் பொண்ணு கூட தைரியமாதான் இருக்குது. ஆனா, புருஷனுக்குத்தான் கண்ணில் தண்ணியே வந்திடுச்சு" என்று சொல்லிக்கொண்டிருந்தவள், "ஐயோ, அவங்க மருந்துச்சீட்டை வச்சிட்டுப்போயிட்டாங்களே" என்று சொல்ல,"நீங்க கட்டுப்போடுங்க சிஸ்டர், நான் போய் கொடுத்துட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு, மகனிடம் "குடுத்துட்டு வரேம்ப்பா" என்று சொன்னபடி அந்தச்சீட்டை வங்கினாள் அவள்.

சீட்டில் ரோஷினி மனோகரன் என்று பெயர் இருந்தது.திருமணம் முடிந்த புதிதில் தன் பெயரை இதே பெயருடன் சேர்த்து "புவனா மனோகரன்" என்று ஸ்ரீராமஜெயம் மாதிரி எழுதி சந்தோஷப்பட்டது நினைவுக்குவர, விழிகளில் வழிந்த நீரைத் துடைத்தவளாய் விரைந்து நடந்தாள் புவனா.

மருத்துவமனை வரவேற்பில் அந்தப் பெண்ணை உட்காரவைத்துவிட்டு, அவள் கையைப்பிடித்தபடி தன் கணவன் நிற்பதைப்பார்த்தாள். எங்கிருந்தோ வந்த அசாத்திய துணிச்சலுடன், "மிஸ்டர் மனோகர்" என்று பின்னாலிருந்து குரல்கொடுக்க, பிடித்திருந்த கையை விடாமல் திரும்பிய அவன், தீயை மிதித்தவன்போல் சட்டென்று விலகிநின்றான்.

என்னாச்சுங்க என்றாள் அந்தப்பெண். சும்மாயிரு என்றபடி முகத்தைத் திருப்பிக்கொண்டு அவளைவிட்டுக் கொஞ்சம் விலகினான் அவன்.

"என்ன ரோஷினி, அடி பலமா?" என்று அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி கேட்டாள் புவனா.

"சின்னக் காயம் தான்...நீங்க யாருன்னு எனக்குத் தெரியலியே...ஏங்க, உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?" என்று அந்தப்பெண் புரியாமல் அவனிடம் கேட்டாள்.

"எனக்கு உங்க ரெண்டு பேரையுமே தெரியாது ரோஷினி...நீங்க விட்டுட்டு வந்த மருந்துச்சீட்டில் உங்க பெயர் இருந்தது. அதனால்தான் பெயர் சொல்லிக் கூப்பிட்டேன்" என்று சொல்லிவிட்டு " பத்திரமாப் பார்த்துக்கோங்க ரோஷினி...உங்க கையிலேருந்தும் பறந்து போயிடப்போகுது...நான் மருந்துச்சீட்டைச் சொன்னேன்" என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தாள் புவனா.

மின்சாரம் தாக்கிய பறவையைப்போல் இற்றுப்போனவனாய் இருக்கையில் விழுந்தான் மனோகர்.

2 comments:

  1. நன்றி ராமலஷ்மி அக்கா.

    சின்னதாய்ச் செய்த முயற்சி இது.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails