Wednesday, May 14, 2008

பாலை மலைத்தொடரைப் பார்க்கலாம் வாங்க...ஆண்டுத்தேர்வு விடுமுறையின்போது, கண்ணுக்கெட்டிய தூரம் தென்படும் கான்கிரீட் காடுகளிலிருந்து விலகி மலைப்பகுதிக்குச் செல்லலாமென ஓர் எண்ணம்...மலையென்றதும் நம்ம ஊர் குற்றாலம், கொடைக்கானல் மாதிரி எதையாவது கற்பனை செய்தால் நிச்சயம் ஏமாந்துதான் போவீர்கள். ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்களே அதுபோல இயற்கையழகுக்கு ஏங்கும் விழிகளைக் கொஞ்சமேனும் திருப்தி செய்ய பாலையில் மலைப் பிரதேசம் தேடி ஒரு சிறு பயணம்...ஹத்தா(hatta) வை நோக்கிய பயணத்தை காலை 8.30 க்குத் தொடங்கினோம்.எங்களுக்கு முன்பாகவே கதிரவன் பிரகாசமாய்ப் புறப்பட்டிருந்தார்

துபாயிலிருந்து கிட்டத்தட்ட 110 கிலோமீட்டர்கள் தொலைவில், ஓமான் நாட்டு எல்லையில் ஹஜர் (hajjar ranges) மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. மக்கள் நெருக்கம் குறைந்த இயற்கை இன்னமும் அதிகம் சிதைக்கப் படாத பகுதி...

வழிநெடுகே விரியும் பாலை மணல்வெளி...மேயும் ஒட்டகங்கள்...கண்ணுக்கு எட்டிய தூரம்வரை விரியும் பாலை மணல் மேடுகள்...பாலைவன மணல் திட்டுகளில் காணப்பட்ட உற்சாகமான பொழுதுபோக்குகள் இதோ...
பாலைவன மணலில் 4 wheel drive வாகனங்களிலும், dune buggy எனும் பைக்கிலும்
ஏறி இறங்கி விளையாடுதல் இங்கு மிகவும் பிரசித்தம்


வழியில் ஆங்காங்கே இறங்கி இளைப்பாறிவிட்டு, ஹத்தாவை அடைகையில் சூரியன் உச்சிக்கு வந்திருந்தார். முதலில் சென்ற இடம் Hill park. பூக்கள் இல்லாத ஒரு பூங்கா. சிறு குன்றில் அமைக்கப்பட்ட அரேபிய அமைப்பு ஒற்றைக் கோபுரத்துடன் ஓர் இளைப்பாறும் இடம்.மலைப்பூங்காவின் உச்சியிலுள்ள கோபுரம்...மலைப்பூங்காவில் உணவருந்தி இளைப்பாறிவிட்டு, ஹத்தா அணைக்கட்டைப் (hatta dam)பார்க்கப் புறப்பட்டோம். ஆறில்லை அருவியில்லை... ஆனால் அணைக்கட்டு உண்டு. சுற்றிலும் மலைத்தொடர்கள். நடுவில் நீர்த்தேக்கம். பலமுறை இந்த இடத்திற்குச் சென்றிருந்தாலும் இந்தமுறைதான் அதிகமான நீருடன் பார்த்திருக்கிறோம். சென்றமுறை, அணைக்கட்டிற்குள் நாங்கள் பந்து விளையாடிய பிரதேசம் இந்தமுறை நீருக்குள்...

இந்த அணைக்கட்டுத்தவிர Wadi என்று சொல்லப்படும் நீரூற்றுக்களும் இங்கு உண்டு. மேடுபள்ளமான மலைப்பாதையைக் கடந்து சென்றபின் கால்களைத் தழுவும் நீரோடைகளையும் காணலாம். வழிதவறிச் சென்றால் வேறெங்காவது சென்று மாட்டிக்கொள்ளும் அபாயமும் உண்டு.
சாலைகளில்லாத காரணத்தால் பயணத்தில் எச்சரிக்கை மிக அவசியம்.

இதோ,அணைக்கட்டிற்கு ஏறிச் செல்லும் பாதை...அணைக்கட்டின் மேலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்...

நீர்த்தேக்கத்தின் பச்சைவண்ண நீரில் பொன்னிற மீன்கள்...
பொரியெல்லாம் கிடைக்காததால் பிரிட்டானியா பிஸ்கட் சாப்பிட்ட அழகு...


குளிரக்குளிர நீரில் விளையாடிவிட்டு அணைக்கட்டைவிட்டு வெளியேறினோம்.
அணியிலிருந்து இறங்குகையில்...அணைக்கட்டைவிட்டுப் புறப்பட்டு, செயற்கை கலக்காத இயற்கையின் இன்னும் சில பக்கங்களைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம்.

வழியிலுள்ள மலைத்தொடர்கள்...


வழியெங்கும் காணப்பட்ட இயற்கையை ரசித்தபடியே மீண்டும் வரும்நாளை எதிபார்த்தபடி வீட்டை நோக்கி விரைந்தது எங்கள் வாகனம்.

4 comments:

 1. இதத்தான் பாலைவனச் சோலைன்னுவாய்ங்களோ?

  என்ன வெப்பநிலை இருக்கும் அங்க?

  ReplyDelete
 2. இது பாலைவனச் சோலையில்லை,சோலையென்றால் அங்கே நிறைய ஈச்சமரங்கள் நெருக்கமாய் வளர்ந்து கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கும்.

  இது ஒரு மலைப்பகுதி.இங்கே வெப்பநிலை அதிகமாய்த்தான் இருக்கும்...இப்ப 39 டிகிரி கிட்ட இருக்குது...ஆகஸ்ட் மாதத்திற்குமேல் 45 டிகிரியைத் தாண்டும்.

  ReplyDelete
 3. குளித்தேன் என்று எழுதி இருக்கேறீர்கள் பெண்கள் குளிக்க வசதி உள்ளதா ?

  ReplyDelete
 4. //குளிரக்குளிர நீரில் விளையாடிவிட்டு அணைக்கட்டைவிட்டு வெளியேறினோம்.//

  குளிக்கும் வசதிகள் இல்லை மலர். குளிர்ச்சியான அந்த நீரை அள்ளியிறைத்து விளையாடினோம். அவ்வளவுதான்.

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails