Monday, November 17, 2008

ஐயோ...அப்பா...ஐயப்பா!
வரமளிப்பதில் வள்ளலான ஈசனுக்கு அன்றைக்கும் ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டது. பஸ்மாசுரனின் தவத்தில் மகிழ்ந்து, அதை மெச்சிய சிவபெருமான், அவன் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகி விடுவார்கள் என்று வரமளித்த கையோடு, வரத்தைச் சோதிக்க வரமளித்த சிவனையே முதலாவதாகத் தேர்ந்தெடுத்தான் பஸ்மாசுரன்.

ஆலகாலமுண்ட சிவனுக்கே அவன் செயலைக் கண்டு அச்சம் வர, அரவணைப் பெருமானைத் துணைக்கழைத்தார் சிவபெருமான். செய்வது என்னவென்றறியாது சினம் கொண்டு சிவனைத் தேடிய பஸ்மாசுரன் முன் அழகேயுருவான மோகினியாய்த் தோன்றினார் மேகவண்ணன்.

மின்னலிடை மோகினியின், கண்ணசைவில் மயங்கினான் அசுரன்.
தங்க நிற மங்கையவள் தன் தளிருடல் அசைத்து ஆடத்தொடங்க, மோகத்தில் அசுரனும் மகுடிக்கு மயங்கிய அரவம்போல ஆட ஆரம்பித்தான். ஆடலின் நடுவில் தலைமேல் கைவைத்து அபிநயித்த மோகினியைக் கண்டு, தானும் அதுபோல அபிநயிக்க, பேராசையால் பெற்ற வரத்தினால் தானே புகைந்து சாம்பலானான் பஸ்மாசுரன்.

அசுரனை மயக்கி அழிக்க, அச்சுதன் கொண்ட மோகினியின் உருவத்தில் அரவம் அணிந்த ஈசனும் மயங்கி அவள் கரமலர் பிடிக்க, அங்கே உருவானார் அரிகரபுத்திரனான ஐயப்பன்.

அழகே உருவான அக்குழந்தையைக் கண்டத்தில்(கழுத்தில்) ஒரு மணிமாலையுடன், காட்டில் ஒரு மரத்தடியில் வைத்து, அங்கே வேட்டையாடவந்த பந்தளமன்னனின் காதில் குழந்தையின் அழுகுரல் கேட்கச்செய்தனர் கடவுளர் இருவரும்.
அதுவரை பிள்ளைப்பேறில்லாதிருந்த பந்தள மன்னனும், பசித்திருந்தவன் முன் அமுதமே கிடைத்தாற்போல, பெறற்கரிய அப்பிள்ளையை எடுத்துக்கொண்டு அரண்மனை சென்றான். மணிகண்டன் எனப் பெயரிட்டு மகிமையோடு அப்பிள்ளையை வளர்த்துவந்தான் மன்னன் ராஜசேகரன்.

அப்போது, மன்னனின் மனைவியும் கருவுற்று மகனொருவனை ஈன்றெடுக்க, சொந்த மகனின் அரியணையை வந்த மகன் பறித்துவிடுவானோ என்ற அச்சம் எழுந்தது மன்னனின் மனைவிக்கு. அரண்மனை வைத்தியனின் உதவியுடன், ஆறாத வயிற்றுவலி வந்ததாய் நடித்த மன்னனின் மனைவி, வலிக்கு மருந்தாகப் புலிப்பால் கொண்டுவரும்படி அரிகர புத்திரனை ஆரண்யம் அனுப்பினாள்.

தாயின் நோய் தீர்க்க, தந்தை தடுத்தும் கேளாமல் கானகம் சென்ற ஐயப்பன், காட்டில் மகிஷி எனும் அரக்கியை வதம் செய்துவிட்டு, தேவர்களின் தலைவனான இந்திரனே புலியாகவும், தேவர்களே புலிக்கூட்டமாகவும் மாற, புலியின்மேல் அமர்ந்தபடி அரண்மனைக்கு வந்தாராம் மணிகண்டன்.

புலியின்மேல் அமர்ந்துவந்த தன் புத்திரனை நோக்கி வியப்புக்கொண்ட பந்தளமன்னன்,
"என் மகனாய் வளர்ந்து என்னை மகிமை செய்த நீ யார்?"

என்று வினவினாராம்.

அதற்கு மணிகண்டன்,

"தந்தையே, தேவர்களை வதைத்துவந்த மகிஷி எனும் அரக்கி, சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறக்கும் மகனால்மட்டுமே தனக்கு அழிவு நேரிடவேண்டும் என்று படைப்புக்கடவுளாகிய பிரம்மாவிடம் பெருவரம் பெற்றிருந்தாள். வரம் பெற்ற கர்வத்தினால், அவள் செய்த இம்சை தாளாமல் தேவர்கள் சிவனிடமும், விஷ்ணுவிடமும் முறையிட, அவ்விருவர் அருளால் படைக்கப்பட்டவன் நான்"

என்னும் உண்மையை மன்னனுக்குச் சொன்னாராம்.

ஐயனின் பிறவிப்பெருமையை உணர்ந்த மன்னனும் மக்களும், பந்தளநாட்டின் அரியணையேற்கத் திருவுளம் கொள்ளுமாறு வேண்ட, பந்தள மன்னனிடம் தன் பிறவியின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவும்,தான் கானகம் சென்று தவம் செய்யப்போவதாகவும் சொன்னாராம் மணிகண்டன்.

பிள்ளைப்பாசத்தினால் வருந்திய பந்தளமன்னன்,

"அன்போடு வளர்த்த நான் இனி எவ்வாறு உன்னைவந்து காண்பது?"

என்று ஐயனாகிய மகனை வினவினாராம்.

"கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து, நாற்பத்தொரு நாட்கள் நேர்த்தியாய் விரதமிருந்து என்னைக்காணவேண்டும் என்ற ஒருமித்த எண்ணத்துடன் வரும் யாரும், காடுமலை தாண்டிவந்து என்னைத் தரிசிக்கலாம்"

என்று மன்னனாகிய தந்தையிடம் சொன்னாராம் மணிகண்டன்.

பந்தள மன்னனும், ஆண்டுக்கொருமுறை மகனைக் காண, அவருக்குப் பிடித்தமானவற்றையெல்லாம் மூட்டையாகக் கட்டி, தலைச்சுமையாகச் சுமந்து, கல்லும் முள்ளும் காலிலே தைக்க, "ஐயோ, அப்பா" எனப் புலம்பியபடியே கானகம் தாண்டி, கடும்மலையேறிச் செல்வாராம். அதனாலேயே சபரிமலை வாசனுக்கு ஐயப்பன் என்று பெயர் வந்தது என்றும் செவிவழிக் கதையாகக் கூறுவர் மக்கள்.

நெய்த் தேங்காய் சுமந்து, ஐயனைக் காண, ஆண்டுதோறும் மக்கள் மாலையிடும் இப்புனிதமான கார்த்திகை மாதத்தில், அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகளைப் பொறுத்து, எங்களைக் காத்து ரட்சிக்க வேணுமென்று நாமும் அரிகரசுதனாகிய ஐயன் ஐயப்பனை வேண்டி வணங்குவோமாக.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails