Thursday, June 4, 2009

கோதுமை குழிப்பணியாரம்

இது மிகவும் எளிதான ஒரு சிற்றுண்டியாகும்.

கோதுமை மாவை பணியாரம் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்றுமணிநேரம் முன்பாகவே கரைத்துவைத்துவிடவேண்டியதுதான் மிகவும் முக்கியம்.கரைத்து ஊறவிட்ட மாவில் இனிப்பு, காரம் இரண்டு வகைப் பணியாரமும் செய்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

கோதுமை மாவு - 2 கப்

நறுக்கிய பெரிய வெங்காயம்- 1

பச்சை மிளகாய் - 3

தேங்காய்த்துருவல் - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

கோதுமை மாவை மூன்றுமணிநேரத்துக்கு முன்பாகவே கெட்டியாக கரைத்துவைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை இட்டுத் தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாயைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் அடுப்பை அணைத்துவிடவும்.

வதக்கிய வெங்காயக்கலவையை கரைத்துவைத்த மாவில் சேர்த்து திட்டமாக உப்புப் போட்டுக்கொள்ளவும். அடுப்பில் குழிப்பணியாரச் சட்டியை வைத்து குழிகளில் சிறிது எண்ணெய் விட்டு, சூடானதும், சிறுகரண்டியால் மாவை அளவாக ஊற்றி, முள்கரண்டியால் திருப்பி இருபுறமும் நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

தேங்காய் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட இந்தப் பணியாரம் மிகச் சுவையாக இருக்கும்.

இனிப்புப் பணியாரம் செய்ய...

கரைத்துவைத்த மாவில் தேவையான அளவு வெல்லம், துருவிய தேங்காய், ஏலப்பொடி, பொடித்த முந்திரிப்பருப்பு சேர்த்து மேலே கூறியதுபோலவே பணியாரம் செய்யலாம்.

3 comments:

  1. நல்லாருக்கு. இதில் ரவையையும் சேர்த்து ஊற வைத்து செய்தால் இன்னும் சுவையாய் இருக்கும்.

    'மழை மேகம்' பேரும் நல்லாருக்கு. ஆனால் மேகமாகவே இருக்க வேண்டாம். மண்ணில் மழையாய் பொழிக.

    ReplyDelete
  2. //நல்லாருக்கு. இதில் ரவையையும் சேர்த்து ஊற வைத்து செய்தால் இன்னும் சுவையாய் இருக்கும்.//

    இனிமே, கட்டாயம் இதுமாதிரி செய்துபார்க்கிறேன் நானானி அம்மா.

    //'மழை மேகம்' பேரும் நல்லாருக்கு. ஆனால் மேகமாகவே இருக்க வேண்டாம். மண்ணில் மழையாய் பொழிக.//

    இதை உங்களோட ஆசியாகவும் அறிவுரையாகவும் ஏற்றுக்கொள்கிறேன்.
    நன்றி நானானி அம்மா!

    ReplyDelete
  3. நாளைக்கொரு பதிவா. சுந்தரா !!! நல்லா இருக்குப்பா.
    நானானி சொல்லி இருப்பது போல செய்தால் மொழுக்னு இல்லாம நல்லா இருக்கும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails