Sunday, June 7, 2009

அந்தரத்தில் ஒருநாள்...ஆபத்தின் பிடியில்!!!

"அப்பல்லாம் பிரசவம்ங்கிறது மறுபிறப்பு மாதிரி...ஒவ்வொருதடவை பிரசவத்துக்குப்போகையிலும், பால்காரர், பக்கத்துவீட்டுக்காரர்ன்னு அத்தனைபேர் கடனையும் பைசா பாக்கியில்லாம தீர்த்துட்டுப்போவேன், ஏன்னா, பிரசவத்துக்குக்கப்புறம் உசிரோட இருப்பமோ இருக்கமாட்டமோன்னு ஒரு பயம்"...அப்ப,செல்லம்மா பாட்டி பிரசவத்தைப்பத்தி சொன்ன விஷயம் இப்ப விமானப்பயணத்துக்கும் பொருந்திவரும்னு தோணுது.

காணாமல்போன விமானம், மிதக்கும் பிணங்கள்னு ஏர் ஃபிரான்ஸ் விமானச் செய்திகளைப்பற்றிப் படிக்கப்படிக்க பயம்தான் மிஞ்சுது.
வருஷத்துக்கொருதடவை விமானம் ஏறணுமான்னு மனசில் கேள்வியும் எழும்பத்தான் செய்யுது.

ரெண்டு வருஷத்துக்குமுன்னால் ஒரு அனுபவம். விடுமுறைக்காலமென்பதால்,அந்த ஏர்பஸ் அநியாயத்துக்கு நம்ம ஊர் டவுண்பஸ்மாதிரியே நிறைந்திருந்தது. ஸ்டாண்டிங் மட்டும்தான் இல்லை. நிறைந்த இருக்கைகளுடன்,மலையாளமும் தமிழுமாய் மணக்க மணக்கப் பறந்துகொண்டிருந்தது திருவனந்தபுரத்தை நோக்கி...

சாப்பாட்டுக்கடை முடிய, நித்திரையைநோக்கிப் பலரும், முன்னும் பின்னுமிருந்த கழிவறைப்பக்கம் சிலருமாகப் பயணித்துக்கொண்டிருக்க, திடீரென்று விமானம் கொஞ்சமாய் ஆட்டம் கண்டது. பக்கத்திலிருந்த என் மகன் புத்திசாலியாய், " எதிர்க்கே மேகம் வந்தா பைலட் இப்படித்தான் ப்ளேனைத் திருப்பி ஓட்டுவார்னு அக்காவிடம் கதைவிட்டுக்கொண்டிருக்க, கேட்டுச் சிரித்துக்கொண்டிருக்கையில், விமானம் மேலும் தடுமாற, திடீரென்று செங்குத்தாய் விழுவதுபோல சட்டென்று இறங்கியது. இருக்கையிலிருந்து தூக்கியெறியப்பட்டு விழுந்தோம்.

கர்த்தாவே, கடவுளே, அல்லாவே,ஜீசஸ், முருகான்னு விமானத்திற்குள் அலறல் சத்தம். சீட் பெல்ட் போடச்சொன்ன சிக்னலை சட்டை செய்யாமல் கைகள் குழந்தைகளின் கைகளைப் பயத்துடன் பற்றிக்கொள்ள, பக்கத்திலிருந்த என் மகள், "அம்மா, நாம அப்பாவையும், ஆச்சி தாத்தாவையும் திரும்பப் பார்ப்போமாம்மா என்று அழுகையுடன் கேட்க, தொண்டைக்குள் பந்தும், கண்ணில் கண்ணீரும் திரண்டாலும், மறைத்தவாறே ஒண்ணும் ஆகாது எல்லாம் சரியாயிடும்னு சொன்னாலும் என் இதயம் துடிப்பது எனக்கே கேட்டதை இல்லைன்னுசொல்லமுடியாது.

கிட்டத்தட்ட இரண்டுநிமிடங்கள் நீடித்த இந்தநிலை ஒருவழியாகச் சீரானது. விமானம் இயல்பாகப் பறக்க ஆரம்பித்தது. கண்ணீரைத்துடைத்தபடி ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம். திடீரென்று ஏற்பட்ட "டர்புலன்ஸ்" (Turbulence)காரணமாக இப்படி ஏற்பட்டதென்று விமானப்பணிப்பெண் சிரித்தபடியே வந்து சொன்னார்.

டர்புலன்ஸ் பத்தித் தெரிஞ்சிக்க இங்கே பாருங்க...

யார் செய்த புண்ணியமோ இன்னிக்கி பிழைச்சுக்கிட்டோம். இல்லேன்னா, அடர்த்தியான இருட்டுவேளையில் அரபிக்கடலில் சங்கமமாகியிருப்போம்னு மனசுக்குள் அச்சம் தோன்றியது.

எப்பவும்போலவே அன்றும் விமானத்தைவிட்டு இறங்குகையில், விமானப்பணிப்பெண்கள் சிரிப்புமாறா முகத்துடன் விடைகொடுத்தார்கள். எப்போதும்போலில்லாமல் அந்தமுறை எனக்கென்னவோ, அந்த விமானத்தை ஓட்டிய விமானியைப் பார்த்து நன்றி சொல்லவேண்டும்போல் தோன்றியது...

8 comments:

 1. அனுபவத்தை இயல்பாக சொல்லிய விதம், என்னையும் இட்டு சென்றது

  ReplyDelete
 2. டர்புலன்சின் போது அடிவயிற்றில் ஏற்படும் அந்த பயம்.... கொழும்பு - சிங்கை பயணத்தின் போது ஏற்பட்டது. பின் ட்ராப் சைலன்ஸ் தரையில் இருங்கும் போது தான் பெருமூச்சு வந்தது.

  ஒவ்வொரு முறை விமானப் பயணமும் அறைகூவல் நிறைந்தது தான்.

  ReplyDelete
 3. உண்மை தான்
  இப்பொழுது எல்லாம் விமானம் பயணம்
  பயத்தை உண்டு செய்கிறது

  ReplyDelete
 4. //அனுபவத்தை இயல்பாக சொல்லிய விதம், என்னையும் இட்டு சென்றது//

  நன்றி ஞானசேகரன்!

  அடிக்கடி வாங்க, மறக்காம கருத்துச் சொல்லுங்க.

  ReplyDelete
 5. //ஒவ்வொரு முறை விமானப் பயணமும் அறைகூவல் நிறைந்தது தான்.//

  நிஜம்தான் கோவி.கண்ணன். இதுவரை இருந்ததைக்காட்டிலும் இப்போ ரொம்ப பயமாத்தெரியுது.

  நன்றிகள் வருகைக்கு.

  ReplyDelete
 6. //உண்மை தான்
  இப்பொழுது எல்லாம் விமானம் பயணம்
  பயத்தை உண்டு செய்கிறது//

  ரொம்பவே அதிகமாக...

  நன்றி திகழ்மிளிர்!

  ReplyDelete
 7. இந்த ரூட்டே இப்படித்தானோ. இல்லை எமிரட்ஸ் பயணத்தின் போது இப்படியோ தெரியவில்லை. நீங்கள் சொல்வது ஓல விழவில்லை
  ஆனால் ஏர் ட்ராப்.ஏர் பாக்கெட் என்று சொல்லும்போது வயிறு சுருட்டிக்கொ=ள்ளும். சரியாகச் சொன்னீர்கள் சுந்தரா.

  ReplyDelete
 8. //வல்லிசிம்ஹன் said...
  இந்த ரூட்டே இப்படித்தானோ. இல்லை எமிரட்ஸ் பயணத்தின் போது இப்படியோ தெரியவில்லை.//

  பத்து வருஷத்தில் எனக்கு ஒருமுறைதான் இந்த அனுபவம் ஏற்பட்டது வல்லிம்மா. ஆனால் அந்த ஒரு அனுபவத்திலுமே ஒரேயடியாய் பயந்துபோனதுதான் உண்மை.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails