Monday, June 8, 2009

மிரள வைத்த புரளிகள்...(அட, அதுகூட சுவாரஸ்யம்தான்...)

புரளி, இந்த வார்த்தைக்கு இருக்கும் மவுசு மிகமிக அதிகம்ங்க...காத்தைக்காட்டிலும் வேகமா பரவுவது இதோட முக்கியமான ஸ்பெஷாலிடி...மறக்கமுடியாத அந்த சுனாமிக்கப்புறம், எங்கே பூகம்பம் வந்தாலும் கூடவே சுனாமி புரளி...அடிக்கடி ரயிலிலும், விமானத்திலும் வெடிகுண்டு புரளி. இருப்பவரை இறந்துட்டார்ன்னும், இறந்தவரை இருக்கிறார்ன்னும் சொல்லும் இதுமாதிரி ஏகப்பட்ட புரளிகளை இன்றைக்கும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.

சின்ன வயசில் கேட்டு, அச்சத்தோடு அம்மா முந்தானையைப் பிடித்துக்கொண்டு தூங்கவைத்த இதுமாதிரி விஷயங்களின் எண்ணிக்கை நிஜமாகவே அதிகம்ங்க. அப்போ, செல்லம்மா பாட்டி சொல்லக்கேட்டிருக்கிறேன், ஆடிமாச சீசன்ல,நெசவாளிங்க, சிவப்புப்புடவையில சாயம் சரியா ஏறலேன்னா, ஏதாவது புரளியைக் கிளப்பிவிடுவாங்கன்னு....இது என்ன டெக்னிக்கோ என்னவோ, அப்ப விபரம் புரியாம கேட்டுக்கிட்டிருந்தாச்சு. இப்ப விபரம் கேட்க பாட்டிவேற உசுரோட இல்ல...

ஆலங்குளத்துல தலையில்லாத முண்டமொண்ணு அலையுதாம்ன்னு சொல்லி, அறுவது கிலோமீட்டர்க்கு அப்பால கிலியைக் கிளப்பின அந்த நினைவுகளை இன்னும் மறக்கமுடியல. வீட்டு வாசல்ல, வேப்பிலையைச் சொருகி வச்சிட்டு,பாத்ரூமுக்குப் போகையில், படு சத்தமாகப் பாடுப்பாடிய அந்தநாள் நினைவுகளை இப்ப நினைச்சா சிரிப்புத்தான் வருது( சத்தமா பாட்டுப் பாடினா பக்கத்துல ஏதும் வராதுன்னு ஒரு அசட்டு தைரியம்...அதிலயும் நல்ல சாமிப் பாட்டா தேர்ந்தெடுத்துப் பாடுவோம்ல...)

அதுமாதிரி இன்னோண்ணு...இருக்கன்குடி மாரியம்மனுக்கு, இருக்கிற இடத்தில் ஒழுங்காக மரியாதை செய்யப்படலியாம். அதனால ஆத்தா கோவிச்சுக்கிட்டு, சின்னக்குழந்தையா உருவமெடுத்து, அழகா பட்டுப்பாவாடையெல்லாம் கட்டி,அந்த ஊர் டவுண் பஸ்ஸில ஏறி டிக்கெட் எடுக்காம, அடுத்த ஊர்ல போயி அலுங்காம இறங்கிடுச்சாம். ஒத்தையா இறங்கின சின்னப்பொண்ணைப்பார்த்து, எங்கேதான் போகுதுன்னு பார்க்க பஸ் கண்டக்டர் பின்னாடியே போனாராம். சட்டுன்னு பார்த்தா அந்த குட்டிப்பொண்ணு கல்லு சிலையா மாறிப்போக, பஸ் டிக்கட்டுக்கான காசு சிலையோட காலடியில் சில்லறையா இருந்துச்சாம்.

இந்தக்கதையைக் கேட்டுட்டு, அப்ப ஏராளம்பேர், செவப்புச்சேலை கட்டிக்கிட்டு இருக்கன்குடி பக்கம் போனாக. போய்ட்டு வந்து அவுக சொன்ன கதைகள் அதைவிட இன்னும் ஏராளம் ஏராளம்.

இந்தியாவில ஏதோ ஒரு மூலையில பரப்பப்படும் ஒரு புரளி, எந்தச் செலவுமில்லாம கடல் கடந்துவந்து, இங்கேயும் பரவுவது இன்னும் அதிசயம்தான். ரெண்டு வருஷமிருக்கும்... திருப்பதியில அம்மா அலர்மேல் மங்கையோட கழுத்தில இருந்த தாலிச்சரடு கழண்டு விழுந்திடுச்சாம்னு சொல்லி, அவங்கவங்க ஆத்துக்காரருக்கு ஆயுசு கெட்டியா இருக்கணும்னா,எல்லாரும் கழுத்தில மஞ்சள் கயிறு கட்டிக்கோங்கன்னு ஊர்லேருந்து உத்தரவுவர, அக்கம்பக்கமிருந்தவங்கல்லாம் அலைஞ்சு திரிஞ்சு கயிறு வாங்கிக்கட்டிக்கொண்டது தனிக்கதை.

ஆக, வெருள வைக்கும் புரளிகள் அப்பப்போ வந்து கிலியைக் கிளப்பினாலும் அப்புறம் கேட்க, எல்லாமே சுவாரஸ்யம்தான்...

5 comments:

 1. புரளி எனக்கு அரளி!
  உங்கள் பக்கமும் நல்லா இருக்கு!

  ReplyDelete
 2. Famous purali when i was in +1 that vinayagar drinks milk and i ran into a nearest temple to see what's happening. usuall a antha temple lla oru kakka kuchu kooda irukkathu. but annaiku oru 100 per erunthirupanga. antha temple lla light um kidaiyathu, nanum kitta tatta nambina purali.

  ReplyDelete
 3. //புரளி எனக்கு அரளி!
  உங்கள் பக்கமும் நல்லா இருக்கு!//

  நன்றி கலையரசன்,முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்.

  ReplyDelete
 4. //Famous purali when i was in +1 that vinayagar drinks milk and i ran into a nearest temple to see what's happening. usuall a antha temple lla oru kakka kuchu kooda irukkathu. but annaiku oru 100 per erunthirupanga. antha temple lla light um kidaiyathu, nanum kitta tatta nambina purali.//

  அட, ஆமால்ல...நான் இதை மறந்துட்டேனே.... இது நாட்டையே புரட்டிய புரளியாச்சே.

  ReplyDelete
 5. நல்ல புரளி. விநாயகர் புரளியை நம்பி நாங்க கூடப் பால் குடுத்தோம் பிள்ளையாருக்கு.
  தலையில்லாத முண்டமா:))))))))))))))))))))0

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails