Wednesday, June 10, 2009

அலைக்கரையில் அழகனின் வீடு

அறுபடைவீடெனும் அழகன் முருகனின் ஆலயங்கள் ஆறினைத் தன்னகத்தேகொண்ட பெருமையுடையது அன்னைத் தமிழ்நாடு. அவற்றுள் இரண்டாவது இடமாகச் சிறப்புபெற்றிருப்பது செந்திலம்பதியென்றும் திருச்சீரலைவாயென்றும் அழைக்கப்படும் திருச்செந்தூர்.

கிட்டத்தட்ட 2000 ஆண்டுக்காலப் பழமையான வரலாறுடைய இந்தக் கோயில், குன்றுதோறாடிய குமரனுக்காக,அலைக்கரையில் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்பாகக் கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் இக்கோயிலைப்பற்றிய குறிப்புக் காணப்பட்டுள்ளதாகக் கூறுவதன்மூலம் இக்கோயிலின் தொன்மையையும் பெருமையையும் நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.

இது, கடற்கரையிலிருந்து தெரியும் கந்தனின் ஆலயத்தோற்றம்...கோயில் வாயிலில் கொள்ளை அழகாய் குட்டி யானை...சேயோன் முருகன் சூரனை வதைத்து தேவர்களைக் காத்த நிகழ்வு இங்கே சூரசம்காரமாக ஆண்டுதோறும் அலைக்கரையில் நிகழ்த்தப்படுவது இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பாகும்.
கந்த சஷ்டியில் ஆறுநாளும் விரதமிருந்து அழகனை வேண்டினால், குழந்தையில்லாதவர்களுக்கும் குழந்தைப்பேறு நிச்சயம் என்பது இங்குள்ள மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இதனைச் சுருக்கமாக, "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்று கூறுவார்கள். அதாவது சஷ்டியாகிய கந்தனுக்குகந்த நாட்களில் விரதமிருந்தால் அகப் பையாகிய கருப்பையில் குழந்தைச் செல்வம் உருவாகிவரும் என்பது இதன் பொருளாகும்.

கந்தசஷ்டிக்கவசம் பாடிய தேவராயமுனிவர், தீராத வயிற்றுவலியினால் அவதிப்பட்டு, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் திருச்செந்தூர் கடற்கரைக்கு வந்தாராம். அச்சமயம் அங்கே நடந்துகொண்டிருந்த சஷ்டி விழாவினைக்கண்டு பக்தியுடன் பாலன் முருகனை வேண்டிக்கொள்ள, அவருடைய குறைதீர்ந்ததாகவும், அதனால் மனமகிழ்ந்த அவர் முருகப்பெருமான்மேல் கந்த சஷ்டிக்கவசம் இயற்றி, பாடிப் பரவினாரென்றும் பக்தர்கள் கூறுவர்.

கடற்கரையில் கந்தசஷ்டியின்போது சூரனை வதைத்தபின் சுப்பிரமணியக்கடவுள் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் மண்டபம் தூரத்தெரிகிறது. சூரசம்காரத்தன்று அலைக்கரையெங்கும் மக்களின் தலைகளாகக் காட்சியளிக்குமென்பார்கள்.ஆலயத்தின் ராஜகோபுரம் பராமரிப்புப்பணிகளுக்காகக் கூரையின் மறைவில்...கோபுரவாயில்...குளிர்நிழலில் உறங்கும் மக்கள்...கருவறைக்கோபுரம்...கற்சுவர் இடைவெளியில்...கடற்கரையை அடுத்து வள்ளி ஒளிந்ததாகக் கூறப்படும் வள்ளிகுகை உள்ளது இதன் உள்ளே பக்தர்கள் சென்று தரிசிக்க ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது இதுதான் வள்ளிகுகையின் நுழைவாயில்...உள்ளே தெரிகிறது வள்ளிகுகை...அலைகடலிலிருந்து சில அடிகள் தொலைவிலேயே நாழிக்கிணறு எனும் நன்னீர் ஊற்று உண்டு. கடலில் நீராடியபின் ஸ்கந்ததீர்த்தமெனும் இந்த நாழிக்கிணற்றிலும் நீராடினால் தீராத நோயும் தீருமென்பது ஐதீகம். சூரபதுமனை வென்ற தன் படையினரின் தாகம்தீர்க்க கந்தனே இக்கிணற்றை உண்டாக்கியதாகக் கூறுவார்கள்.

நாழிக்கிணற்றருகே நெடிதுயர்ந்த பனைமரங்கள்...ஓயாமல் அழகன் முருகனின் புகழ்பாடும் ஓங்கார அலைகள்...செந்திலதிபனின் ஆலயத்தில் பன்னீர் இலையில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் பிரசித்தமானது. சுப்பிரமணியக்கடவுளிடம் இந்த இலைவிபூதியை வாங்கியணிந்த விஸ்வாமித்திரமுனிவர், தன் காசநோயிலிருந்து விடுபட்டதாகவும் புராணங்கள் கூறுவதாகச் சொல்வார்கள். முருகனின் பன்னிரு கரங்கள்போல் இப்பன்னீர் இலையில் பன்னிரு நரம்புகள் ஓடுமென்றும் சொல்வார்கள்.

நவக்கிரகத்தலங்களில் இது குருவுக்கு உகந்த தலமாகும். பாஞ்சால மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் சுரங்கவழியாக தினமும் வந்து சுப்பிரமணியப்பெருமானைத் தரிசித்ததாகவும் கூறுவர். இன்றும் அன்றாடம் திருவிழாப்போல ஆயிரமாயிரம் மக்கள் இக்கோயிலுக்கு வந்து குமரனருள் பெற்றுச்செல்வதைக் காணமுடிகிறது.

ஆயிரம் பெருமைகளுடைய அழகன் முருகனின் ஆலயத்தை அனைவரும் தரிசித்து அவனருள் பெற்று அல்லலில்லாப் பெருவாழ்வினை அடைந்திட வேண்டுகிறேன்.

3 comments:

LinkWithin

Related Posts with Thumbnails