Wednesday, July 1, 2009

ஆதோனி நகரமும் ஆந்திரச் சுற்றுலாவும் (1)

வருஷா வருஷம் விடுமுறை வந்தாலும், பார்த்த இடங்களையே பார்த்துவிட்டுச் செல்வது அலுப்பாய்த் தோன்ற, சட்டென்று முடிவெடுத்து, ஆந்திர மாநிலத்துப்பக்கம் பார்த்துவரலாமென்று முடிவெடுத்தோம். ஆந்திராவில் திருப்பதியைத் தாண்டியறியாத எனக்கு இந்த ஆந்திரப்பயணம் மிகவும் ஆர்வமான விஷயமாகவே இருந்தது.

சென்னையிலிருந்து 494 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஆதோனி நகரத்தை நோக்கி, சென்னையிலிருந்து இரவு புறப்படும் மும்பை ரயிலில் புறப்பட்டோம். சுந்தரத் தெலுங்கின் வாசனையும், சுவையில் காரமே மிஞ்சிய ரயில்பயண உணவுகளையும் ரசித்தபடி பயணித்தோம். வழியெங்கும் தென்பட்ட இயற்கை விழிகளைக் குளிர்வித்தது.வழியில் வேடிக்கை காட்டிய இவரையும் பாருங்க...காலை பத்துமணியளவில் ஆதோனியை அடைந்தோம். இளந்தூறலுடன் இனிதாக வரவேற்றது
ஆதோனி நகரம்.ஆதோனியில் வரவேற்ற இயற்கையின் நுழைவாயில்...இரண்டே நாட்களில் புறப்படவேண்டுமே என்று போன உடனே வருத்தம்தான் வந்தது. எங்கே பார்த்தாலும் அழகு. கொடிகள் பறக்கும் அழகிய சிறு ஆலயங்கள். நிறுத்திவைத்தாற்போல பாறைகள் நிற்கும் சிறு சிறு குன்றுகள். படர்ந்திருக்கும் பசுமையென்று மனசு அழகில் லயித்துத்தான் போனது. அமைதி குடிகொண்டிருந்த மந்திராலய மஹானின் ஆலயத்தையும் ஆங்காங்கே நீர் தெரிந்த துங்கபத்ரா நதியையும் கூட இந்தப்பயணத்தில் பார்த்தோம்.

இனி,ஆதோனி நகரத்தின் வரலாறு கொஞ்சம்...

பதினாறாம் நூற்றாண்டுவரை யாதவகிரியாக இருந்த ஆதோனி நகரம் முகலாயர்களின் பிடியிலிருந்தபோது ஆதவனியாகி தற்போது ஆதோனி என்றழைக்கப்படுகிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் சிறப்பான இடத்தைப் பிடித்திருந்த இந்த நகரம், ஆங்கிலேய ஆட்சியில் சென்னை மாகாணத்தின் பெல்லாரி மாவட்டத்திற்கு உட்பட்டதாயிருந்தது. தென்னகத்தின் தானியச் சந்தையாகவும் விளங்கியிருக்கிறது.

மலைகள் சூழ அழகுடன் விளங்கும் இன்றைய ஆதோனி நகரம், ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட பருத்தி ஆலைகள் மற்றும் எண்ணெய் ஆலைகளுடன் இரண்டாவது மும்பை என மக்களால் அழைக்கப்படுகிறது. மலையில் அமைந்திருக்கும் ஹனுமான் கோயில் இங்கே மிக விசேஷமானது. மலைகளுக்கிடையில் அமைந்திருக்கும் 'ராம் ஜல்' என அழைக்கப்படும் இயற்கை நீர்த்தேக்கமே இங்குள்ள மக்களின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. துங்கபத்ரா நதியிலிருந்துவரும் நீரே இதற்கு ஆதாரமாகும்.

இங்குள்ள மக்களின் வழிபாட்டில் ராமபிரானும், ஆஞ்சனேயரும் முக்கிய இடம்பிடிக்கிறார்கள்.எங்குபார்த்தாலும் ராமபக்த ஹனுமான் கண்ணில்படுகிறார். முகம்மதியர்களும் இங்கே அதிக அளவில் வசிக்கிறார்கள். 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாஹி ஜாமியா மசூதி மற்றும் பல மசூதிகளும் இங்கே உள்ளது.

பசுமையின் போர்வையில் மசூதி ஒன்று...இதோ, மலையிலிருக்கும் ஹனுமான் ஆலயம்.
மலைக்குச் சென்று பார்க்க நேரமில்லாததால் பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருந்த மலைக்கோயிலை புகைப்படக்கருவிமூலம்தான் பார்க்க நேர்ந்தது...அருகிலிருந்த அழகிய ஆஞ்சனேயர் ஆலயம் ஒன்று...குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமென்று நம் தமிழ்நாட்டில் நாம் சொல்லுவோம்.
ஆந்திரமாநிலத்தில் மலையெல்லாம் கடவுளென்று மக்களெல்லாம் சொன்னார்கள்.மலையெல்லாம் மகேசனாக, இயற்கையாய் அமைந்த அழகு நந்தி...நந்தியின் வடிவம் கொஞ்சம் தொலைவிலிருந்து...இந்தப் பாறையிலும் இறைவடிவம் உண்டென்று சொன்னார்கள்.எனக்குத் தெரிந்தது. உங்களுக்கும் தெரியுதான்னு பாருங்க...முகலாய மன்னர்களின் ஆட்சிக்கு சான்றாக அவர்கள் காலத்துக் கல்கோட்டையின் மிச்சம் இன்னும் அங்குள்ள மலைமீது காணப்படுகிறது.அழகு நிறைந்த ஆதோனி மற்றும் ஆந்திரச் சுற்றுலாவின் தொடர்ச்சி இனி அடுத்த பகுதியில்...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails