Sunday, July 5, 2009

கல்யாணத்தில் தொலைந்தவர்கள்...


கல்யாணவீட்டில பொருட்கள் தொலைஞ்சுபோறது சகஜம்தான்.சேலை துணிமணியிலிருந்து சேகரித்த மொய்ப்பணம்வரைக்கும் காணாமல்போனதாகக் கதைகதையாய்ச் சொல்லுவாங்க.

எனக்குத் தெரிஞ்ச இடத்துக் கல்யாணத்திலகூட, பொண்ணோட கல்லூரித்தோழிகளோடவே நின்னு, அவங்களைப்போலவே நடிச்ச ஒரு இளம்வயசுப்பொண்ணு, வசூலான மொய்ப்பணம் முழுவதையும் அப்படியே அள்ளிக்கொண்டுபோன சம்பவம் நடந்து, பின்னர் வீடியோ பதிவின்மூலம் அது வெளிச்சத்துக்கு வந்ததும் நடந்தது.

ஆனா, சில கல்யாணங்களால வாழ்க்கையின் நிம்மதி,சந்தோஷம்,நெடுநாள் உறவுகள் அத்தனையும் தொலைந்துபோவதைக்கேட்கையில் மனசு காயப்பட்டுத்தான் போகிறது.கண்ணகி காலம்தொட்டு நம் பெண்களில் சிலருக்கு அது சாபமாய்த்தான்போகிறது.

" என் மகனைவிட ரெண்டு வயசுதான் பெரியவ, அவளைக் கட்டிக்கிட்டு அத்தனையையும் உதறிட்டுப்போயிட்டாரு. வெளியில தலைகாட்ட முடியல. வயசுப்பையங்க ரெண்டுபேரும் வெளியே போக வெட்கப்பட்டு வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்காங்க"

அந்தப்பெண் சொல்லியழுததைக் கேட்கையில் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இதுமாதிரி ஒண்ணு ரெண்டில்ல, ஊருக்குள் நிறைய நடக்கத்தான் செய்யுது.

"வெளிநாட்டுக்குப்போன எங்கப்பா ஓண்ணுரெண்டு வருஷம் ஒழுங்கா பணம் அனுப்பிக்கிட்டு, போனும் பேசிக்கிட்டிருந்தார். இப்ப நாலைஞ்சு வருஷமாச்சு. அதே நம்பருக்குத் திரும்பத்திரும்பப் போன் போட்டாலும் யாரோ ஒரு பொண்ணோ அல்லது சின்னப்புள்ளைங்களோதான் பேசுறாங்க. எங்கப்பா பேரைச்சொல்லிக்கேட்டா அவர் வீட்ல இல்லேன்னு சொல்லிட்டு உடனே ஃபோனை வச்சிடுறாங்க"

"ஒருநாள் கூட எங்கப்பா பேசமாட்டேங்கிறார். எங்கப்பா அங்கேயே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டதா அவர்கூட அங்கே இருந்தவங்க சொல்றாங்க. இதையெல்லாம் கேட்டு, இங்கே எங்கம்மாவுக்கும் உடம்புக்கு முடியல. படிப்பை விட்டுட்டு நான்தான் வீட்டுக்கஷ்டத்துக்காக
எஸ் டி டி பூத்ல வேலைக்குப்போயிட்டிருக்கேன்"

முந்திவந்த கண்ணீரை மறைக்கமுடியாம முகம்திருப்பிக்கொண்டது அந்தச் சின்னப்பிள்ளை.
புதுசாய் ஒரு கல்யாணத்தால் இங்கேயொரு அப்பா தொலைந்துபோனார். படித்து முன்னேறவேண்டிய ஒரு பிள்ளையின் படிப்பு தொலைந்துபோனது. மொத்தத்தில்,அருமையான ஒரு குடும்பத்தின் எதிர்காலம் தொலைந்துபோனது.

இங்கே யாரைக் குறைசொல்லமுடியும்?? கல்யாணமாகாத எத்தனையோ ஆண்கள் இருக்கும்போது கல்யாணமான குடும்பத்தலைவர்களுக்குக் குறிவைக்கும் பெண்களைச் சொல்வதா? உறவுகள் எல்லாவற்றையும் கைகழுவிவிட்டு தங்கள் சந்தோஷம் ஒன்றையே லட்சியமாகக் கொள்ளும் அந்த அப்பாக்களான ஆண்களைச் சொல்வதா?

மொத்தத்தில், இப்பல்லாம் சில கல்யாணங்களில் சின்னச்சின்னத் திருட்டுகள் மட்டுமில்ல, பெரியபெரிய சூறையாடல்களே நடக்குது...

2 comments:

 1. சுந்தரா, அதிர்ச்சி என்று சொல்ல மாட்டேன்.

  அவ்வப்போது காதில் விழும் கதையே.
  துபாயில் எங்க வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்க்குத் தினமும்
  நாலைந்து பெண்களாவது மொபைலில் கூப்ப்பிடுவார்கள்.

  அது கேட்கச் சகிக்காமலேயே நிறுத்தி விட்டோம்.
  இத்தனைக்கும் அவருக்கு ஊரில் பெண்டாட்டியும் வளர்ந்த குழந்தைகளும் உண்டு.:(

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails