Tuesday, October 27, 2009

சூடு

பொறுத்துப்பொறுத்துப்பார்த்தாள் செண்பகம். வாசலில் குடித்துவிட்டுக் கொச்சையாகப் பேசிக்கொண்டிருந்த அவள் நாத்தனாரின் கணவனின் குரல் ஓய்வதாகத் தெரியவில்லை.

'பணத்தை வாங்கித்தின்னவுக பகுமானமா உள்ள உக்காந்திருப்பீக...நாங்க இங்கிட்டு வெளியே நின்னு கத்தணுமோ? தில்லிருந்தா வெளியே வந்து பேசலாம்ல" வேண்டுமென்றே வம்புக்கிழுப்பது போலிருந்தது அவன் குரல். வெளியே வந்தாள் செண்பகம்.

"பணத்தைப்பத்தி அதைக் குடுத்தவங்ககிட்ட, அவங்க வீட்டில் இருக்கும்போது வந்து கேளுங்க. சும்மா வாசல்ல நின்னு அசிங்கமா பேசிக்கிட்டிருந்தா பிரச்சனையாயிடும்" என்று எச்சரித்துவிட்டு உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள் அவள்.

அதற்குள் அடுத்த வீட்டு ஆயா வந்து, ஏம்ப்பா, அந்தப்பொண்ணு கல்யாணமாகிவந்து நாலே நாள்தான் ஆகுது. அது புருஷன் எப்பவோ வாங்கின பணத்துக்கு இப்பவந்து அந்தப்புள்ளைய வைதா அது என்ன பண்ணும்? நீ ஒழுங்கா உன் மச்சினன் வந்ததும் வந்து பேசு. இல்லேன்னா நல்லாயிருக்காதுன்னு எச்சரிக்கவும் சத்தம் தேய இடத்தைக் காலிசெய்தான் சுடலைமுத்து.

நடேசன் வந்ததும் விஷயத்தைச் சொன்னாள் செண்பகம். ரெண்டுபேரும் சேர்ந்து தொழில் செய்திருக்கீங்க. நஷ்டமாப்போயிடுச்சு. அதுக்காக இங்கவந்து என்னைத் தரக்குறைவா பேசிட்டு, தாலியை அவுத்துக்குடுன்னு கேட்டா என்ன அர்த்தம்? என்று கண்ணீர் மல்கக் கேட்டாள் செண்பகம்.

தன்னைத் தரக்குறைவாகப் பேசியதற்காகத் தங்கைவீட்டுக்குச் சென்று, கணவன் சண்டைபோடுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க, "என்னன்னாலும் நீ அவரை இப்படிப் பேசியிருக்கக்கூடாது. நீ நேத்து வந்தவ. எங்க வீட்டு விஷயத்தில் நீ தலையிடுறதே தப்பு.நாங்க காசு குடுப்போம் வாங்குவோம் அது எங்க விஷயம். நீ உன்னோட வேலையை மட்டும் பாரு" என்று சத்தம்போட்டுவிட்டு சட்டையைப்போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினான் நடேசன்.
சட்டென்று வெறுத்துப்போனது செண்பகத்துக்கு.

மாமனார் வீட்டில்,தலைதீபாவளிக் கொண்டாட்டத்தில் விருந்து சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்திருந்தான் நடேசன். கல்யாணத்துக்கு வாங்கிய கடனைக் கேட்டுவந்திருந்தார் வட்டிக்கடைக்காரர்.

ரெண்டேமாசத்தில் கொடுத்துவிடுகிறதாகச் சொல்லிக் கெஞ்சினார் செண்பகத்தின் அப்பா. உரக்கக் கத்திவிட்டு ஒரே வாரத்தில் பணம் வரணும் என்று மிரட்டிவிட்டுப்போனார் வட்டிக்கடை ஆசாமி.

எதையுமே கண்டுகொள்ளாதவன்போல, கையில் பத்திரிகையும்,அவள் அப்பா போட்ட புதுமோதிரமுமாக உட்கார்ந்திருந்த கணவனைப்பார்க்க எரிச்சலாக இருந்தது செண்பகத்துக்கு.
தன்னால்தானே தந்தைக்கு இத்தனை வருத்தமென்று எண்ணி வேதனைப்பட்டாள் அவள்.

"அவங்க வீட்டுப்பிரச்சனையை அவங்க தீர்த்துக்குவாங்க. நீ இங்கேயிருந்து கண்ணைக் கசக்கிட்டிருக்காம சீக்கிரம் புறப்படு"ன்னு சொல்லி,அவளைக் கூட்டிக்கொண்டு தன் வீட்டுக்குத் திரும்பினான் நடேசன்.

அன்றைக்கு, வேலைக்குப்போய்விட்டு வந்து உடைமாற்றிக்கொண்டிருந்தான் நடேசன். சூடாகக் காப்பியுடன் வந்தாள் செண்பகம். "ஆமா,உன் தம்பிக்கு பொம்பளைங்க சகவாசம் நிறைய உண்டோ? என்றான் அவன்.

சட்டென்று வந்த கேள்வியும் அதன் கேலியான தொனியும் திகைப்பை உண்டுபண்ணினாலும் 'நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப்புரியலையே' என்றாள் அவள்.

இன்னிக்கி உன்னோட தம்பி, யாரோ ஒரு பொண்ணோட பைக்கில் போனதாக என் ஃபிரண்ட் பார்த்துட்டுவந்து சொன்னான் என்று இளக்காரமாகச் சொன்னான் அவன்.

ஓ, இதுக்குத்தான் கேட்டீங்களா? அது, அவனோட படிச்சவங்களாவோ, அல்லது கூட வேலை பார்க்கிறவங்களாவோகூட இருக்கலாம். சரி, அது எதுக்கு நமக்கு? விடுங்க...நமக்கெதுக்குங்க அவங்க வீட்டு விஷயம்லாம்...எப்ப கல்யாணமாகிவந்துட்டேனோ அப்பவே அது என்வீடு இல்லே,அங்க உள்ள பிரச்சனையையெல்லாம் மனசுல வச்சிட்டு இங்க, முகத்த உம்முன்னு வச்சுக்கக்கூடாதுன்னு நீங்களே சொல்லியிருக்கீங்க. அப்புறம், யார் வீட்ல என்ன நடந்தா நமக்கென்னங்க...நம்ம வீட்லயே ஏகப்பட்ட பிரச்சனையிருக்குது.நாம அதைப் பாப்போம்.அவங்களாச்சு,அவங்க பிரச்சனையாச்சு"ன்னு சொல்லிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள் செண்பகம்.

சட்டென்று புரையேறியது அவனுக்கு. "பாத்துங்க...பாத்து, பதுக்கக் குடிங்க... காப்பி சுட்டுறப்போவுது" என்று அடுக்களையிலிருந்து எட்டிப்பார்த்துச் சொன்னாள் செண்பகம்.காப்பி டம்ளரை 'ணங்'என்ற சத்தத்துடன் கீழே வைத்துவிட்டு அவளை எரிச்சலுடன் பார்த்தான் நடேசன்.

Saturday, October 24, 2009

பேர் படும் பாடு!!!

அங்கிரு...அங்கிரு...குரல் கேட்டுத் திரும்பினேன்.(சட்டுன்னு சாலமன் பாப்பையா மனசுக்குள் வந்துபோனார்)யாரை,யாரு,எங்கேயிருக்கச் சொல்றாங்கன்னு ஏதும்புரியாமல் குரல்வந்த திக்கை எட்டிப்பார்த்தேன்.

விடுவிடுன்னு ஓடிவந்திச்சு அந்தப்பொண்ணு.என்ன பாட்டிம்மா கூப்டியான்னு கேட்டுச்சு.ஆச்சர்யம் எனக்கு. அங்கிருன்னு ஒரு பேரான்னு அதிசயித்து, ஆமா, ஒம்பேரு என்னம்மான்னேன். அதுவா, எம்பேரு அங்கயற்கண்ணி...அதைத்தான் எங்க வீட்ல இப்புடிக் கூப்பிடுவாங்கன்னு சொல்லிச் சிரிச்சது. அம் கயல் கண்ணி,(அழகிய கயல் போன்ற கண்களை உடையவள்)எத்தனை அழகான செந்தமிழ்ப்பெயர்...அதுக்கு இந்தக் கதியான்னு திகைச்சுப்போனேன்.

இதுமாதிரி, நான் ஆறாப்புப் படிச்சப்ப எனக்கு ஒரு டீச்சர் இருந்தாங்க. பள்ளிக்கூடத்துப் பிள்ளைங்கல்லாம் அவங்களை வளவளத்தா டீச்சர்ன்னு சொல்லுவாங்க. புதுசா சேர்ந்த எனக்கு இது ஏன்னு புரியல. அப்புறம்தான் தெரிஞ்சது, அறம்வளர்த்தாள் ங்கிற அவங்க பேரை வசதிக்கேத்தமாதிரி வளவளத்தான்னு மாத்தி வச்சிருக்காங்கன்னு.

இதுமாதிரி, எங்க குடும்பத்தில எனக்கு நாட்னம்,செவனி ன்னு ஒரு சித்தியும் பெரியம்மாவும் இருக்காங்க. விவரம் தெரியிறவரைக்கும் நானும் அப்படியேதான் சொல்லியிருக்கேன். அப்புறமா ஆர்வக்கோளாறுல விசாரிச்சப்பதான் தெரிஞ்சிது சிவகனி, செவனியாவும், நாகரத்தினம் நாட்னமாகவும் ஆனது.

அதுமாதிரி, உம்மாச்சின்னு சாமியைச் சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா சும்மாச்சி தெரியுமா? என்னோட படிச்ச ஒரு இஸ்லாமியப் பெண்ணோட பேர் இது.என்னடி பேர் இதுன்னு எதேச்சையா விசாரிச்சா, சுலைமான் நாச்சி ங்கிற பேர்தான் சும்மாச்சியா ஆயிருச்சுன்னு குரல் கம்மச் சொல்லிச்சு அந்தப்பொண்ணு.

நம்மளோட பேர் தான் இப்படிப் பாடாப்படுதுன்னா, உறவுப்பெயர்கள் சிலது படும்பாடு இன்னும் சுவாரஸ்யம். என்னோட மாமா பையன் பிறந்து,பேச ஆரம்பிச்ச காலத்தில். சொல்லிக் குடுத்த ஒரு உறவுப்பெயரை அவன்பாணியில் புரிஞ்சுகிட்டு,மீமி ன்னு கூப்பிட ஆரம்பிச்சான். அவனுக்கப்புறம் அந்தக் குடும்பத்தில் பிறந்த நாலு பிள்ளைகளும் அவனை மாதிரியே அவங்களை மீமின்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. இன்னும் கூப்பிட்டுக்கிட்டிருக்காங்க.முதல்முதலா கூப்பிட ஆரம்பிச்சு இன்னிக்கிவரைக்கும் தொடர்ந்துகிட்டிருக்கிற என் மாமா பையனுக்கு இப்ப வயசு முப்பது. எல்லாம் சரி, ஆனா மீமின்னா என்னன்னு சொல்லவேண்டாமா? மீமின்னு அவன் கூப்பிட்டது அவனோட பெரியம்மாவை :)

இதுமட்டுமில்ல, ஊர்ப்பெயர் சிலதுக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்குது. என் சினேகிதி ஒருத்தி (அவளுக்கு,நாசரேத் பக்கத்து ஊர்) அடிக்கடி சவைச்சாங்குடியிருப்புன்னு சொல்லிட்டிருப்பா. அதென்ன சவைச்சாங்குடியிருப்பு? யாரை யார் சவைச்சான்னு கிண்டலாக்கேட்டேன் நான். அப்புறம்தான் தெரிஞ்சிது...சவரித்த நாடார் குடியிருப்பு ங்கிற பெயர்தான் சவைச்சாங்குடியிருப்பு ஆச்சுதுன்னு.

அதுமாதிரி, குற்றாலம் பக்கத்தில பம்புளி ன்னு ஒரு ஊர் பேர் சொல்லுவாங்க. விசாரிச்சப்பதான் தெரிஞ்சது அந்த ஊரோட பேர் பைம்பொழில்(பசுமையான சோலை)ன்னு. எத்தனை அழகான பேரை இப்படி சிதைச்சிட்டாங்களேன்னு எரிச்சல்தான் வந்தது.

இதைப் படிக்கிறவங்களுக்கு ஒரு வேண்டுகோள்... இதுமாதிரி நிறைய பெயர்த் திரிபுகளை நீங்களும் கேட்டிருப்பீங்க. கேட்ட விஷயங்களை நீங்களும் இங்கே பகிர்ந்துக்கிட்டா அதை மத்தவங்களும் தெரிஞ்சுக்குவாங்கல்ல. நன்றி :)

Friday, October 23, 2009

வாசல்படி வாஸ்துவும், விளையாடும் கிரகங்களும்



"எம் புள்ளைக்குப் பொறுப்பில்லையா? என்ன பேச்சுப் பேசுற நீ?"

நீ நேத்து வந்தவ...அவனை வளர்த்து, ஆளாக்கி,படிக்க வச்சு,கல்யாணமும் கட்டிவச்ச
எங்களுக்குத்தெரியாதா அவனைப்பத்தி?

ஏதோ அவனைப் புடிச்ச கெட்ட நேரம்...ஏழரைச் சனி அவனை இப்படி ஆட்டிவைக்குது...அதோட நீ வந்து சேர்ந்த நேரம் வேற...தனக்குன்னு புள்ள குட்டின்னு வந்தா எல்லாம் தானா திருந்திடுவான். நீ அதுக்கான வழியைப்பாரு"

என்று ஆக்ரோஷமாகத் தன் மருமகளை அடக்கினாள் மாமியார் கமலம்மாள்.மனைவியின் கத்தலுக்கு மறுமொழி பேசாமல் மருமகளைப் பரிதாபமாகப் பார்த்தார் சண்முகம், கமலத்தின் கணவர்.

தெளிவாகப் புரிந்தது பூரணிக்கு... தன் கணவனின் செயல்களையெல்லாம் தன் மாமியார் நியாயப்படுத்துவதால்தான், அவன் தான் செய்வதைத் தவறென்று உணராமலே இருக்கிறான் என்று புரிந்ததால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வேலையைக் கவனிக்கலானாள் அவள்.


அன்றைக்கு, காலையில் அவள் எழுந்து அறையைவிட்டு வெளியில்வந்தபோது, முன்வாசலில் மேஸ்திரியுடன் பேசிக்கொண்டிருந்தாள் அவள் மாமியார்.

"என்னாச்சு மாமா?" என்று மாமனாரிடம் மெதுவாகக் கேட்டாள் பூரணி.

அவர், வாசல்ப் பக்கம் எட்டிப்பார்த்துவிட்டு, மகனுக்காக ஏதோ வாஸ்து ஜோசியர்கிட்ட போனாளாம் உங்க அத்தை. அவர்,வாஸ்துப்படி,தலைவாசலுக்கு எதிரா பின்பக்கம் கதவு,ஜன்னல் இருந்தா அந்த வீட்ல காசு விரயமாகும்னு சொன்னாராம்.சும்மாவே ஆடுவா உங்க அத்தை... இதுபோதாதா அவளுக்கு, ஆளைக் கூப்பிட்டு வாசலையும் சன்னலையும் அடைக்கச்சொல்லிட்டிருக்கா...என்று மெதுவாகச் சொன்னார் அவர்.

ஆனா, இனிமே வீட்டுக் குப்பையை வெளியில்போடக்கூட வீட்டைச் சுத்திச்சுத்தி வெளியே போகணுமே...அதுவுமில்லாம வீட்டுக்குள்ள வெளிச்சமும் இருக்காது,காற்றோட்டமும் இருக்காதே என்றாள் பூரணி.

சரிதாம்மா...ஆனா, வாசலையும் ஜன்னலையும் அடைச்சிட்டா ஊதாரி மகன் உருப்பட்டுடுவான்னு நம்பிக்கை அவளுக்கு...இதில,நாம எது சொன்னாலும் எடுபடாது இப்போ என்று சொல்லிவிட்டு அகன்றார் அவர்.

கையில் காப்பியுடன் கிணற்றுத்தொட்டியில் உட்கார்ந்து பறவைகளின் குரலைக்கேட்கும் சுகம் இனிக் கிடைக்காது என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டாள் பூரணி.அவளுக்கு மிகவும் பிடித்தமான,பின்வாசல் முல்லைக்கொடியும்,கிணற்றுத்தொட்டியும் அவளைப் பரிதாபமாய்ப் பார்ப்பதுபோலிருந்தது அவளுக்கு .

இடத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த வாரத்தில் வந்து வேலையை ஆரம்பிப்பதாகச் சொல்லிவிட்டுப்போனார் மேஸ்திரி.

ஏதேதோ யோசித்தவாறே தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றாள் பூரணி.

அன்று, காலையில் எழுந்து, தனக்கும் கணவனுக்குமாகக் காப்பியைக் கலந்தவள்,கணவனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் குடிக்காமல் சென்று படுக்கையில் சரிந்தாள்.

என்னாச்சு பூரணி? ஏன் திரும்பவும் வந்து படுத்துட்டே? என்றான் மகேஷ்.

"தலை சுத்துதுங்க" என்று சொல்லிவிட்டு சுவர்ப்பக்கம் திரும்பிப்படுத்தாள் அவள்.

மகன் விஷயத்தைச் சொல்ல, மருமகளை வந்து எட்டிப்பார்த்தாள் கமலம்மாள்.

" எதுக்கும் டாக்டரைப் பார்த்துட்டு வந்துடுவோம் என்று அம்மா சொல்ல, நீ மெதுவா குளிச்சுட்டு ரெடியாகு பூரணி...நான் ஆட்டோவுக்குச் சொல்லிட்டு வரேன் என்று புறப்பட்டான் மகேஷ்.

"நாள் அதிகமா ஆகலேங்கிறதால,இப்ப எதுவும் தெளிவாசொல்லமுடியல கமலாம்மா... இன்னும் ஒருவாரம் போகட்டும்.டெஸ்ட் பண்ணிப் பார்த்துடலாம். அதுவரைக்கும் இந்த மாத்திரையை வாங்கிக்குடுங்க" என்று சொல்லிச் சீட்டை நீட்டினாள் குடும்ப டாக்டர்.

"பாத்து வீட்டுக்குக் கூட்டிப்போம்மா" எனக்கு வேலையிருக்கு என்றுசொல்லிவிட்டு ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்த நண்பனுடன் பைக்கில் புறப்பட்டான் மகேஷ். அங்கேயிங்கேன்னு சுத்திட்டு அர்த்தராத்திரியில வராம, நேரத்தோட வீட்டுக்கு வாப்பா என்றாள் கமலம்.தலையசைத்துவிட்டுச் சென்றான் மகேஷ்.

வீட்டுக்கு வந்தபோது, வாசலில் மேஸ்திரி கடப்பாறை மண்வெட்டியுடன் ஆட்கள் சகிதமாக வேலைக்கு வந்திருந்தார்.

வீட்டுக்குள் நுழைந்த ரெண்டே நிமிஷத்தில் வயிற்றைப்பிடித்துக்கொண்டு துடிக்க ஆரம்பித்தாள் பூரணி. பதறிப்போனாள் கமலம். ஓடிச்சென்று அளுடைய சிநேகிதியான அடுத்தவீட்டு மாமியை அழைத்து வந்தாள்.

வீட்டுக்குள் ஏதோ பதட்டம் என்றவுடன் வேலையைத் தொடங்காமல் தயங்கி நின்றார்கள் பணியாட்கள்.

என்னாச்சு கமலா? ஏன் இவால்லாம் வாசல்ல எமகிங்கராள் மாதிரி கடப்பாறையும் கம்புமா நிக்கறா என்று கேட்டவாறு வீட்டுக்குள் நுழைந்தாள் மாமி.

வயிற்றைப் பிடித்துக்கொண்டு துடித்தவளைப் பார்த்ததும் புரிந்துகொண்டவளாய், குமட்டறதுன்னு காலையில ஏதும் சாப்பிட்டிருக்க மாட்டாய். உடம்பு சூட்டோட வாயுவும் சேர்ந்து வயத்தை வலிக்கிறதுன்னு நினைக்கிறேன் என்று சொன்னவளாய்,

கமலா நீபோய் இவளுக்கு சூடா குடிக்க ஏதாவது கொண்டா என்றுவிட்டு, பூரணியின் மாமனாரிடம் கேட்டு வேலையாட்கள் வந்த காரணத்தையும் தெரிந்துகொண்டாள்.

பாலைக் குடிச்சிட்டு, அடிவயித்தில விளக்கெண்ணெய் தடவிக்கிட்டு கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு பூரணி.அப்புறமும் வலியிருந்தா ஆஸ்பத்திரிக்குப்போய்ப் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு, கமலாவை அழைத்துத் தன் அருகில் உட்காரச் சொன்னாள் ஜானகி மாமி.

கமலா,எங்காத்து மாமாவைப்பத்தி நீ என்ன நினைக்கிறாய் என்றாள்.

திடீரென்று வந்த கேள்வியால் திகைத்த கமலம்," அவருக்கென்ன ஜானகி, அவருண்டு அவரோட வேலையுண்டுன்னு இருக்கார். உன்னையும் பிளைங்களையும் நல்லா வச்சிருக்கார்.ரொம்ப சிக்கனம்னு நீதான் குறைபட்டுக்குவே" என்றாள் கமலம்.

நம்ப ரெண்டுபேரோட வீடும் அடுத்தடுத்து ஒரேமாதிரி கட்டியதுதானே...வாஸ்து அமைப்பெல்லாம் ஒண்ணுபோலத்தானே இருக்குது. அப்ப எங்காத்துக்காரர் கஞ்சனாகவும், உன் பிள்ளை செலவாளியாவும் இருக்காங்கன்னா அதுக்கு வாஸ்து எப்படிப் பொறுப்பாகும்?

கிழக்குத்திசை வாசலும், மேற்குத்திசையில் பின்வாசலும் ஏகப்பட்ட ஜன்னல்களுமாய் எத்தனை அம்சமா கட்டியிருக்காங்க, அதைப்போய் மூடணும்ன்னு ஆளைக் கூட்டிவந்திருக்கியே என்றாள் மாமி.

படிக்கிற காலத்திலேயிருந்து மகன் கேட்கிறப்பல்லாம் காசைக்கொடுத்து நீ அவனை செலவாளியா வளத்துட்டே. சொந்தமா பிசினஸ் வச்சிக்கொடுத்து,போதாக்குறைக்கு சொந்தத்திலேயே ஒரு பொண்ணையும் கொண்டுவந்து கட்டி வச்சிட்டே. அவனுக்கு கஷ்டம்னா என்னன்னே தெரியாமப் போயிடுத்து. இனிமே, கொடுக்கிற கையைக் கொஞ்சம் சுருக்கிப்பார்...அவன் தன்னால சரியாயிடுவான். சம்பாதிச்சுட்டு வர்றதைவச்சு அவங்களோட செலவுகளைச் செய்யச்சொல். அவன் கஷ்டப்பட்டு உழைக்க ஆரம்பிச்சுட்டான்னா, எந்தக் கிரகமும் எதிர்க்க நிக்காது என்று சொல்லிச் சிரித்தாள் மாமி.

கமலம், மாமியின் வார்த்தைகளை ஆமோதித்ததுதான் தாமதம், வாசலில் சென்று வந்தவர்களுக்கு அன்றைய கூலியைக் கொடுத்துவிட்டு வேலைசெய்யவேண்டாமென்று அனுப்பிவைத்தார் சண்முகம். எங்கே புழக்கடை வாசலில், பூவாசக் காற்றோடு புத்தகம் படிக்கும் சந்தோஷம் கெட்டுப்போய்விடுமோ என்ற கவலை அவருக்கு.

வயிற்றுவலி கொஞ்சம் தணிந்தாற்போலிருந்தது பூரணிக்கு.எழுந்து அமர்ந்தவள் ஜன்னல் வழியாகப் பின்பக்கம் பார்த்தாள்.மரக்கிளையில்,கூட்டுக்குள்ளிருந்த குஞ்சுக்குக் கொஞ்சிக்கொஞ்சி இரைகொடுத்துக்கொண்டிருந்தது குருவியொன்று.

உட்புறம் திரும்பினாள்... அங்கே,உரக்கப்பேசிக்கொண்டிருந்த மாமி அவள் கண்களுக்கு சாமியாகத் தெரிந்தாள்.

Wednesday, October 14, 2009

மார்ச்சுவரி மீன்!


"அம்மா,கிளம்பும்மா"

என் காதில் கிசுகிசுத்தான் என் மகன்.

"இருடா,அப்பா பேசிட்டிருக்காங்கல்ல" என்றேன் நான்.

"அப்பா சும்மாவா பேசிட்டிருக்காங்க? வம்பை விலைக்கு வாங்கிட்டிருக்காங்க.அப்பாகிட்ட மெதுவா சொல்லும்மா" என்றான்.

நாங்க ரெண்டுபேரும் பேசிக்கொண்டிருக்கும்விதத்தைவைத்தே விஷயத்தைப் புரிஞ்சுகிட்ட என் கணவர், "இன்னொருநாள் வந்து கட்டாயம் சாப்பிடுறோம். மகனுக்கு ஏதோ படிக்கவேண்டியிருக்குதுன்னு சொல்றான். நாங்க கிளம்பறோம்னு சொல்ல, தேநீரும் பிஸ்கெட்டும் சாப்பிட்டுவிட்டு நன்றிசொல்லிக் கிளம்பினோம்.

நண்பரின் வீட்டைவிட்டு வெளியில்வந்து, லிஃப்டில் நுழைந்ததுதான் தாமதம், "யப்பா,நல்லவேளை, அந்த மார்ச்சுவரி மீன்கிட்டேருந்து தப்பிச்சு வந்துட்டோம்" என்று என் மகன் சொல்ல,லிஃப்ட் நின்றதுகூடத்தெரியாம சிரிச்சுக்கிட்டிருந்தோம் நாங்க.

....................................................

அது என் கணவருடன் முன்பு பணியாற்றிய வேற்றுமொழி பேசும் நண்பரின் வீடு.தற்செயலாக சூப்பர் மார்க்கெட்டில் சந்தித்த அவர், பக்கத்தில்தான் என் வீடு என்றுசொல்லிப் பிடிவாதமாக அழைக்க, மறுக்கமுடியாமல் அவருடன் அவர் வீட்டுக்குச் சென்றோம்.

வீட்டு வாசலில் அழைப்புமணியை அழுத்தும்போதே மீனைப் பொரிக்கும் வாசனை அழைக்காமலே வெளியே வந்தது.உள்ளே நுழைந்ததும் சொல்லவே வேண்டாம், அத்தனை மீன் வாடை. பொதுவாகவே இங்கேயிருக்கும் ஃப்ளாட்களில் உள்ள பிரச்சனை, சரியான வென்டிலேஷன் இருக்காது. என்னதான் அதற்கான மின்விசிறிகள்(exhaust fans)மூலம் காற்றை வெளித்தள்ளினாலும் வீட்டுக்குள் ஏ.சி ஓடினாலோ, ஃபேன் ஓடினாலோ வாசனை உள்ளேயேதான் சுற்றிவரும்.

அங்கும் அதே நிலைதான். சும்மாவே என் மகனுக்கு மீனென்றால் அலர்ஜி. தவித்துப்போனான். அதற்குள் அந்த நண்பர், "சுடச்சுட மீன் தயாராயிட்டிருக்குது.ஆளுக்கொரு குப்பூஸும்(arabic bread)பொரிச்ச மீனும் சாப்பிடுங்க" என்று சொல்ல, "இல்லையில்லை வேண்டாம்" என்று அவசரமாக மறுத்தேன் நான்.

அதற்கு அவர், போனவாரமே வாங்கி, பதப்படுத்தி உப்பு,காரமிட்டு ஃபிரீசரில் வைத்த மீன் இது. நல்ல ஸ்பைசியா(spicy) இருக்கும். சாப்பிட்டுப்பாருங்கன்னு சொல்ல,நம்ம ஊரில் ஒருநாள் தள்ளி அடுத்தநாள் விற்ற மீனை வாங்கிவிட்டாலே ஐஸுல வச்ச மீன்போலிருக்குது, அதான் ருசியே இல்லன்னு சொல்லிக்குவோமே, இங்கே என்னன்னா,மீனை வாங்கி ஒருவாரம் ரெண்டுவாரமெல்லாம் வச்சுவச்சு சாப்பிடுறாங்களேன்னு ஆச்சரியத்தில் நான் என் கணவரைப் பார்க்க,பார்வையின் அர்த்தம் புரிந்துவிட அவரும் "வீட்ல, குழந்தைகளுக்குப் பிடிக்கலங்கிறதால,நாங்களும் இப்பல்லாம் நான் வெஜ்(non-veg) சாப்பிடுறதைக் குறைச்சாச்சு.என்று சொல்லி சமாளிக்க, சரியென்று அரைமனதாக ஒத்துக்கொண்ட அந்த நண்பர் டீயும் பிஸ்கெட்டுகளும் கொடுத்து உபசரித்தார்.

விடைபெற்று வெளியே வந்தபின் நடந்ததுதான் மேலே இருப்பதெல்லாம்...

வீட்டுக்கு வந்ததும், அங்கே,லிஃப்டில் வைத்து அவன் சொன்னது நினைவில்வர "ஆமா, அதென்னடா தம்பி, இனிமே இந்த ஊர்ல மீனே சாப்பிடமுடியாதமாதிரி இப்படியொரு வார்த்தைய சொல்லிட்டே?" என்றேன் நான்.

பின்னே, மனுஷ உடம்பைக் கெடாம வைச்சா அது மார்ச்சுவரி. இங்கயும் ஃப்ரிட்ஜ், ஃபிரீசர்ல அந்தத் தொழிலைத்தானே செய்யிறீங்க. ஆடு, கோழி, மீனுன்னு அத்தனையையும் வாங்கி உள்ளே வச்சு வச்சு சாப்பிட்டுட்டு, பின்னாடி, உடம்புக்கு அந்தப் பிரச்சனை இந்தப் பிரச்சனைன்னு ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டியது. ஒழுங்கா, புதுசா கிடைக்கிறதை அல்லது காய்கறிகளை மட்டும் சாப்பிட்டா ஃபுட் பாய்சனிங் (food poisoning)எல்லாம் ஏன் வருது? என்றான் அவன்.

சொல்லிக்கொண்டிருந்தது சின்னப்பிள்ளையென்றாலும் அவன் வார்த்தைகளை அத்தனை எளிதாகத் தள்ளிவிடத் தோன்றவில்லை எனக்கு.

Sunday, October 11, 2009

மீசை வச்ச ஆண்களுக்கு ஒரு நற்செய்தி!!!


உங்கள் பதவிக்கேற்ற சம்பளம், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கலியா?
மீசை வச்சுக்கிட்டா உடனே உங்களுக்கு யோகம் அடிக்கலாம்!!!
இதை நான் சொல்லலீங்க... அமெரிக்காவில் மீசையைப் பற்றிய ஆய்வு நடத்திய குயிக்கென்(Quicken)நிறுவனமும்,அமெரிக்க மீசைக் கழகமும்தான் இப்படிச் சொல்லியிருக்காங்க.

அந்த ஆய்வு முடிவின்படி, மீசை வச்ச ஆண்கள், தாடி வைத்துக்கொண்ட ஆண்களைவிட 8.2% அதிகமாகவும்,சுத்தமாக ஷேவ் செய்துகொண்டவர்களைவிட 4.3% அதிகமாகவும் சம்பளம் வாங்குகிறார்களாம்.அதனால சம்பளம் அதிகமான வேலை கிடைக்கணும்னா சங்கடம் பார்க்காம சின்னதாவோ பெரிசாவோ மீசை வச்சுக்கிறது நல்லதுன்னு அமெரிக்காவில் பேசிக்கிறாங்களாம் :)

ஆனா, மீசைவச்சவங்களோட ஒரு மைனஸ் பாயிண்டையும் இந்த ஆய்வை நடத்தினவங்க வெளியிட்டிருக்காங்க. அது என்னன்னா,இவங்க சம்பாதிக்கிறதில் மட்டுமில்ல செலவழிக்கிறதிலயும் முதலில்தான் இருப்பாங்களாம். மத்தவங்களைவிட 11% அதிகமா செலவழிப்பதால, சேமிக்கிறதில மீசை வச்ச ஆண்கள் மத்தவங்களைவிட 3% பின்னாடி தான் இருக்காங்களாம்.இது எப்படியிருக்குது!

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுறதுன்னு எங்க ஊர்ப்பக்கம் முதுமொழி ஒண்ணு சொல்லுவாங்க. இந்தச் செய்தியைப் படிச்சப்போ எனக்கு அந்தப் பழமொழிதான் ஞாபகம் வந்தது :)

Saturday, October 10, 2009

அச்சு முறுக்கு (தீபாவளி ஸ்பெஷல்)

தேவையான பொருட்கள்:-

மைதா மாவு - 2 கப்

சர்க்கரை - 1 கப்

முட்டை - 1

எள் - 2 தேக்கரண்டி

ஏலக்காய் (பொடித்தது)-2

உப்பு - ஒரு சிட்டிகை

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :-

மைதாமாவில், எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ( முட்டையைத் தனியாக நன்றாக அடித்துவிட்டு கலக்கணும்)தோசை மாவுப்பதத்தில் கலந்துகொள்ளவும்.

தட்டையான,அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு, அச்சு முறுக்குக் கரண்டி முக்கால் பாகம் எண்ணெயில் மூழ்குமாறு சூடாக்கவும்.

கரண்டி நன்கு சூடானதும் அதனை முக்கால் பாகம் மாவில் முக்கியெடுத்து எண்ணையில் அமிழ்த்தவும்.

கரண்டியில் ஒட்டிய மாவு வெந்து தானாகக் கழன்றுவிடும். அதனைத் திருப்பிப்போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான, இனிப்பு அச்சுமுறுக்கு தயார்.

ரவா லட்டு (தீபாவளி ஸ்பெஷல்)

இது மிக எளிதான இனிப்புப் பலகாரம்.

தேவையான பொருட்கள் :-

ரவை - 1 கப்

சர்க்கரை - 1 1/4 கப்

நெய் - 150 கிராம்

முந்திரி - 15 (உடைத்தது)

செய்முறை :-

ரவையை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்துக்கணும்.

வறுத்து ஆறியபின்,ரவையையும் சர்க்கரையையும் கலந்து மெஷினில் கொடுத்து அரைச்சுவச்சுக்கணும்.

முந்திரிப்பருப்பை சிறிசிறு துண்டுகளாக உடைத்து சிறிது நெய்யில் வறுத்துக்கொள்ளணும்.

ரவை, சர்க்கரைக்கலவையில் முந்திரிப்பருப்பைக் கலந்து வைக்கணும்.

நெய்யைச் சூடாக்கி, இந்தக் கலவையில் கலந்து,சூடு ஆறுவதற்குமுன் உருண்டைகளாகப் பிடிக்கணும்.

எளிதான, ரவா லட்டு தயார்.

Wednesday, October 7, 2009

குறுக்குத்துறையும் குருவித்துறையும்

என்னைக் கவர்ந்த ரெண்டு துறைகள் எதுன்னா, கட்டாயம் சொல்லுவேன் ஒண்ணு குறுக்குத்துறை இன்னொண்ணு குருவித்துறைன்னு( அறிவியல், தொழில்நுட்பம்னு ஏதாவது சொல்லுவேன்னு எதிர்பார்த்திருந்தா ஏமாற்றம்தான் :))காரணம் என்னன்னா,சொல்லப்போற ரெண்டுமே ஆற்றங்கரையில் அமைந்த ரெண்டு ஊர்களைப் பற்றிய விஷயங்கள்...

சொந்த மண்ணுன்னு சொல்லுவாங்களே அப்படி ஒரு பாசம் குறுக்குத்துறையில. சிலநூறு அடிகளுக்கு அப்பாலிருக்கும் சிக்கநரசய்யன் கிராமம் எந்தையின் சொந்த ஊர். வீட்டில பல்விளக்க ஆரம்பிச்சு, குறுக்குத்துறை தாமிரபரணியில் வந்து வாய்கொப்பளிச்சு, கல்மண்டபத்திலிருந்து குதித்து நீச்சலடித்து,ஆழத்திலிருக்கும் அல்லியைக் பறித்துவந்து,ஈரம் காயாம முருகனைக் கும்பிட்ட கதையையெல்லாம் அத்தனை சுவாரசியமாய்ச் சொல்லுவாங்க என் அப்பா.

இதோ, ஆற்றங்கரையில் அழகிய கோயில்...(கட்டத்துக்குள் இருக்கும் கட்டிடம்தான்)



கோயிலின் பின்னாலிருந்து எடுக்கப்பட்ட கோபுரத்தோற்றம்...



அருகில், அரசமரத்தடிப் பிள்ளையார் கோயில்...




தன்னுடைய சிறுவயதில், ஆற்றங்கரைப் பாறைக்கருகில் தான் காசு சேர்த்துப் புதைத்துவைத்த கதையை என் அப்பா சொல்ல, ஆசையாய் என் பிள்ளைகள் அங்கே தோண்டிப்பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள்.

காசுதோண்டிவைத்த பாறையும், தூரத்தெரியும் ரயில் பாலமும்...(படத்தை சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்த்தால்தான் ரயில் பாலமெல்லாம் தெரியும்)



நெல்லை நகரத்தின் சிறப்புகளில் இந்தக் குறுக்குத்துறை முருகனுக்கு ஒரு தனியிடம் உண்டு. காலருகில் ஓடும் தாமிரபரணியின் சலசலப்பில் வள்ளி தெய்வானையுடன் சுகமாக வீற்றிருக்கும் முருகப்பெருமான், செந்தூர்க் கோயிலுக்காகச் செய்யப்பட்ட சிலாரூபமென்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.அதனால், திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டிக்கொண்டவர்கள் இங்கே அந்த வேண்டுதலை நிறைவேற்றுவார்களாம்.

கோயிலின் முகப்பிலிருந்து...



மாலை மயங்கிய பொழுதும், ஓடும் நீரின் மெல்லிய இசையும், கோயிலில் இருந்து எழுந்த தெள்ளிய மணியோசையும் மனதில் மிகவும் ரம்யமான உணர்வை ஏற்படுத்தியது.படித்துறையில் உட்கார்ந்து கால்களைக் கொஞ்சும் மீன்களோடு விளையாடிக்கொண்டிருந்தால் வீட்டுக்குக்கிளம்ப மனசே வராது.

அடுத்தபடியாக, எனக்கு மிகவும் பிடித்த கிராமம்,மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகிலிருக்கும் குருவித்துறை. பசுமைக்குள் புதைந்திருக்கும் சின்னஞ்சிறு கிராமம்.சின்னச்சின்ன வீடுகள், கோயில்கள், தென்னைமரச் சோலைகளென்று வைகைக்கரையில் அமைந்திருக்கும் அழகிய கிராமம் அது.

வைகையாற்றின் கரையில் வல்லவப் பெருமாளாக அருள்பாலிக்கிறார் வெங்கடேசப் பெருமான்.குரு பகவான் தன் மகன் கசனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால், இந்த இடம் குருவின் துறையெனப் பெயர்பெற்று, பின் மருவி குருவித்துறையாகி, அயன் குருவித்துறையென்று என்று தற்போது அழைக்கப்படுகிறது.

குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் அவருக்குக் காட்சி தந்து, அவருடைய மகன் கசனை மீட்டு தந்தாராம். இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லபப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இந்த ஆலயம் புகழ்பெற்ற குருஸ்தலமாகத் திகழ்கிறது.இந்த ஆலயம் ஊர்க்கோடியில் அமைந்திருந்தாலும் தேடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

இதோ, வல்லபப் பெருமாள் ஆலயம்...(படம் தினமலர்.காமில் வெளியானது)


இக்கோயில் பற்றிய மேலும் விபரங்களுக்கு இங்கே பாருங்க.

நன்றி: தினமலர்.

மதுரையிலிருந்து அரசுப் பேருந்துகள் அடிக்கடி குருவித்துறைக்கு வந்து செல்கின்றன. கிராமத்திற்குள் போகும்போது கனகம்பீரமாகக் காட்சியளித்தது பெத்தண்ண சாமி கோயில். கிராமத்து மக்களின் காவல் தெய்வம் அவர். ஊர் மத்தியில் மையமாக அமைந்திருக்கிறது,
பத்திரகாளியம்மன் கோயில். சித்திரை மாதத்தில் இந்த அம்மனுக்கு சிறப்பாய்த் திருவிழா நடக்கிறது.

பத்திரகாளியம்மன் கோயிலின் வாயில்...



விவசாயம், பால் உற்பத்தி, மற்றும் தென்னை சார்ந்த தொழில்களும் இங்கு முக்கியமான தொழில்களாகத் தெரிகிறது.

இதோ, பத்திரகாளியம்மன் ஆலயத்திற்குள் உள்ளே நுழைந்ததும் செல்லப் பிள்ளையார்...



சிவனின் ஓவியம் வரைந்திருப்பது ஆலயச்சுவரில் தான். மறுபுறத்து ஓவியத்தில் மகிஷனை வதைத்த மாகாளி...



இதோ,பெத்தண்ண சாமி கோயில்...





கம்பீரமாகக் குதிரையில்...



குருவித்துறையை விட்டுப் புறப்படுகையில் இருட்டிவிட்டது. தூரத்து மலையில் நெருப்பு ஓவியமாகப் புகையுடன் தெரிந்தது காட்டுத்தீ. வழியில் கண்ட,கண்ணுக்கழகான காட்சிகள் மனதை நிறைத்திருந்தது.




LinkWithin

Related Posts with Thumbnails