Wednesday, October 14, 2009

மார்ச்சுவரி மீன்!


"அம்மா,கிளம்பும்மா"

என் காதில் கிசுகிசுத்தான் என் மகன்.

"இருடா,அப்பா பேசிட்டிருக்காங்கல்ல" என்றேன் நான்.

"அப்பா சும்மாவா பேசிட்டிருக்காங்க? வம்பை விலைக்கு வாங்கிட்டிருக்காங்க.அப்பாகிட்ட மெதுவா சொல்லும்மா" என்றான்.

நாங்க ரெண்டுபேரும் பேசிக்கொண்டிருக்கும்விதத்தைவைத்தே விஷயத்தைப் புரிஞ்சுகிட்ட என் கணவர், "இன்னொருநாள் வந்து கட்டாயம் சாப்பிடுறோம். மகனுக்கு ஏதோ படிக்கவேண்டியிருக்குதுன்னு சொல்றான். நாங்க கிளம்பறோம்னு சொல்ல, தேநீரும் பிஸ்கெட்டும் சாப்பிட்டுவிட்டு நன்றிசொல்லிக் கிளம்பினோம்.

நண்பரின் வீட்டைவிட்டு வெளியில்வந்து, லிஃப்டில் நுழைந்ததுதான் தாமதம், "யப்பா,நல்லவேளை, அந்த மார்ச்சுவரி மீன்கிட்டேருந்து தப்பிச்சு வந்துட்டோம்" என்று என் மகன் சொல்ல,லிஃப்ட் நின்றதுகூடத்தெரியாம சிரிச்சுக்கிட்டிருந்தோம் நாங்க.

....................................................

அது என் கணவருடன் முன்பு பணியாற்றிய வேற்றுமொழி பேசும் நண்பரின் வீடு.தற்செயலாக சூப்பர் மார்க்கெட்டில் சந்தித்த அவர், பக்கத்தில்தான் என் வீடு என்றுசொல்லிப் பிடிவாதமாக அழைக்க, மறுக்கமுடியாமல் அவருடன் அவர் வீட்டுக்குச் சென்றோம்.

வீட்டு வாசலில் அழைப்புமணியை அழுத்தும்போதே மீனைப் பொரிக்கும் வாசனை அழைக்காமலே வெளியே வந்தது.உள்ளே நுழைந்ததும் சொல்லவே வேண்டாம், அத்தனை மீன் வாடை. பொதுவாகவே இங்கேயிருக்கும் ஃப்ளாட்களில் உள்ள பிரச்சனை, சரியான வென்டிலேஷன் இருக்காது. என்னதான் அதற்கான மின்விசிறிகள்(exhaust fans)மூலம் காற்றை வெளித்தள்ளினாலும் வீட்டுக்குள் ஏ.சி ஓடினாலோ, ஃபேன் ஓடினாலோ வாசனை உள்ளேயேதான் சுற்றிவரும்.

அங்கும் அதே நிலைதான். சும்மாவே என் மகனுக்கு மீனென்றால் அலர்ஜி. தவித்துப்போனான். அதற்குள் அந்த நண்பர், "சுடச்சுட மீன் தயாராயிட்டிருக்குது.ஆளுக்கொரு குப்பூஸும்(arabic bread)பொரிச்ச மீனும் சாப்பிடுங்க" என்று சொல்ல, "இல்லையில்லை வேண்டாம்" என்று அவசரமாக மறுத்தேன் நான்.

அதற்கு அவர், போனவாரமே வாங்கி, பதப்படுத்தி உப்பு,காரமிட்டு ஃபிரீசரில் வைத்த மீன் இது. நல்ல ஸ்பைசியா(spicy) இருக்கும். சாப்பிட்டுப்பாருங்கன்னு சொல்ல,நம்ம ஊரில் ஒருநாள் தள்ளி அடுத்தநாள் விற்ற மீனை வாங்கிவிட்டாலே ஐஸுல வச்ச மீன்போலிருக்குது, அதான் ருசியே இல்லன்னு சொல்லிக்குவோமே, இங்கே என்னன்னா,மீனை வாங்கி ஒருவாரம் ரெண்டுவாரமெல்லாம் வச்சுவச்சு சாப்பிடுறாங்களேன்னு ஆச்சரியத்தில் நான் என் கணவரைப் பார்க்க,பார்வையின் அர்த்தம் புரிந்துவிட அவரும் "வீட்ல, குழந்தைகளுக்குப் பிடிக்கலங்கிறதால,நாங்களும் இப்பல்லாம் நான் வெஜ்(non-veg) சாப்பிடுறதைக் குறைச்சாச்சு.என்று சொல்லி சமாளிக்க, சரியென்று அரைமனதாக ஒத்துக்கொண்ட அந்த நண்பர் டீயும் பிஸ்கெட்டுகளும் கொடுத்து உபசரித்தார்.

விடைபெற்று வெளியே வந்தபின் நடந்ததுதான் மேலே இருப்பதெல்லாம்...

வீட்டுக்கு வந்ததும், அங்கே,லிஃப்டில் வைத்து அவன் சொன்னது நினைவில்வர "ஆமா, அதென்னடா தம்பி, இனிமே இந்த ஊர்ல மீனே சாப்பிடமுடியாதமாதிரி இப்படியொரு வார்த்தைய சொல்லிட்டே?" என்றேன் நான்.

பின்னே, மனுஷ உடம்பைக் கெடாம வைச்சா அது மார்ச்சுவரி. இங்கயும் ஃப்ரிட்ஜ், ஃபிரீசர்ல அந்தத் தொழிலைத்தானே செய்யிறீங்க. ஆடு, கோழி, மீனுன்னு அத்தனையையும் வாங்கி உள்ளே வச்சு வச்சு சாப்பிட்டுட்டு, பின்னாடி, உடம்புக்கு அந்தப் பிரச்சனை இந்தப் பிரச்சனைன்னு ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டியது. ஒழுங்கா, புதுசா கிடைக்கிறதை அல்லது காய்கறிகளை மட்டும் சாப்பிட்டா ஃபுட் பாய்சனிங் (food poisoning)எல்லாம் ஏன் வருது? என்றான் அவன்.

சொல்லிக்கொண்டிருந்தது சின்னப்பிள்ளையென்றாலும் அவன் வார்த்தைகளை அத்தனை எளிதாகத் தள்ளிவிடத் தோன்றவில்லை எனக்கு.

7 comments:

 1. //அதற்கு அவர், போனவாரமே வாங்கி, பதப்படுத்தி உப்பு,காரமிட்டு ஃபிரீசரில் வைத்த மீன் இது//

  ஃப்ரீசர்ல வைக்காம அப்படியே வெயில்ல காய வச்சிருந்தா கருவாடுன்னு தைரியமா சொல்லி இருக்கலாம்..

  துபாய்ல பொதுவா மீன்கள் மாத்திரம் தினம் தினம் பிடிக்கப்பட்டு புதிதாக கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. உங்க நண்பர் எப்படி அதை சொல்கிறாரோ தெரியவில்லை.

  ReplyDelete
 2. //துபாய்ல பொதுவா மீன்கள் மாத்திரம் தினம் தினம் பிடிக்கப்பட்டு புதிதாக கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. உங்க நண்பர் எப்படி அதை சொல்கிறாரோ தெரியவில்லை.//

  நிஜம்தான் சென்ஷி அவர்களே. நானும் புதிதாக வாங்குவதுண்டு. ஆனால் நண்பரின் (இராக் நாட்டவர்)வீட்டில் வாரத்துக்கொருமுறை மீன்பிடிப்பவர்களிடம்போய் நேரடியாக வாங்கி, அல்லது, அவர்களே போய் மீன்பிடித்துவந்து அதை வாரம் முழுதுக்கும் பக்குவம் பண்ணிவைக்கிறார்கள்.அதனால்தான் அப்படிச்சொன்னார்.

  ReplyDelete
 3. ///ஃப்ரீசர்ல வைக்காம அப்படியே வெயில்ல காய வச்சிருந்தா கருவாடுன்னு தைரியமா சொல்லி இருக்கலாம்..?//

  :))

  ReplyDelete
 4. முதல் வருகைக்கு நன்றி சென்ஷி அவர்களே!

  ReplyDelete
 5. யப்பா! சொன்ன மாதிரி ஒரு நாள் முந்தியுள்ள மீனே நம்மால திங்க இயலாது. இதுல ஒரு வாரம் பிரிட்ஜ்ல வெச்சத திங்குறது உடல்நலத்துக்கு நல்லதும் இல்லை... ஹா ஹா.. மார்ச்சுவரி மீன்கள் சரியான பேரு தான்!

  ReplyDelete
 6. "மார்ச்சுவரி மீன்கள்" .. நல்ல பேரு :-))

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails