Tuesday, October 27, 2009

சூடு

பொறுத்துப்பொறுத்துப்பார்த்தாள் செண்பகம். வாசலில் குடித்துவிட்டுக் கொச்சையாகப் பேசிக்கொண்டிருந்த அவள் நாத்தனாரின் கணவனின் குரல் ஓய்வதாகத் தெரியவில்லை.

'பணத்தை வாங்கித்தின்னவுக பகுமானமா உள்ள உக்காந்திருப்பீக...நாங்க இங்கிட்டு வெளியே நின்னு கத்தணுமோ? தில்லிருந்தா வெளியே வந்து பேசலாம்ல" வேண்டுமென்றே வம்புக்கிழுப்பது போலிருந்தது அவன் குரல். வெளியே வந்தாள் செண்பகம்.

"பணத்தைப்பத்தி அதைக் குடுத்தவங்ககிட்ட, அவங்க வீட்டில் இருக்கும்போது வந்து கேளுங்க. சும்மா வாசல்ல நின்னு அசிங்கமா பேசிக்கிட்டிருந்தா பிரச்சனையாயிடும்" என்று எச்சரித்துவிட்டு உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள் அவள்.

அதற்குள் அடுத்த வீட்டு ஆயா வந்து, ஏம்ப்பா, அந்தப்பொண்ணு கல்யாணமாகிவந்து நாலே நாள்தான் ஆகுது. அது புருஷன் எப்பவோ வாங்கின பணத்துக்கு இப்பவந்து அந்தப்புள்ளைய வைதா அது என்ன பண்ணும்? நீ ஒழுங்கா உன் மச்சினன் வந்ததும் வந்து பேசு. இல்லேன்னா நல்லாயிருக்காதுன்னு எச்சரிக்கவும் சத்தம் தேய இடத்தைக் காலிசெய்தான் சுடலைமுத்து.

நடேசன் வந்ததும் விஷயத்தைச் சொன்னாள் செண்பகம். ரெண்டுபேரும் சேர்ந்து தொழில் செய்திருக்கீங்க. நஷ்டமாப்போயிடுச்சு. அதுக்காக இங்கவந்து என்னைத் தரக்குறைவா பேசிட்டு, தாலியை அவுத்துக்குடுன்னு கேட்டா என்ன அர்த்தம்? என்று கண்ணீர் மல்கக் கேட்டாள் செண்பகம்.

தன்னைத் தரக்குறைவாகப் பேசியதற்காகத் தங்கைவீட்டுக்குச் சென்று, கணவன் சண்டைபோடுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க, "என்னன்னாலும் நீ அவரை இப்படிப் பேசியிருக்கக்கூடாது. நீ நேத்து வந்தவ. எங்க வீட்டு விஷயத்தில் நீ தலையிடுறதே தப்பு.நாங்க காசு குடுப்போம் வாங்குவோம் அது எங்க விஷயம். நீ உன்னோட வேலையை மட்டும் பாரு" என்று சத்தம்போட்டுவிட்டு சட்டையைப்போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினான் நடேசன்.
சட்டென்று வெறுத்துப்போனது செண்பகத்துக்கு.

மாமனார் வீட்டில்,தலைதீபாவளிக் கொண்டாட்டத்தில் விருந்து சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்திருந்தான் நடேசன். கல்யாணத்துக்கு வாங்கிய கடனைக் கேட்டுவந்திருந்தார் வட்டிக்கடைக்காரர்.

ரெண்டேமாசத்தில் கொடுத்துவிடுகிறதாகச் சொல்லிக் கெஞ்சினார் செண்பகத்தின் அப்பா. உரக்கக் கத்திவிட்டு ஒரே வாரத்தில் பணம் வரணும் என்று மிரட்டிவிட்டுப்போனார் வட்டிக்கடை ஆசாமி.

எதையுமே கண்டுகொள்ளாதவன்போல, கையில் பத்திரிகையும்,அவள் அப்பா போட்ட புதுமோதிரமுமாக உட்கார்ந்திருந்த கணவனைப்பார்க்க எரிச்சலாக இருந்தது செண்பகத்துக்கு.
தன்னால்தானே தந்தைக்கு இத்தனை வருத்தமென்று எண்ணி வேதனைப்பட்டாள் அவள்.

"அவங்க வீட்டுப்பிரச்சனையை அவங்க தீர்த்துக்குவாங்க. நீ இங்கேயிருந்து கண்ணைக் கசக்கிட்டிருக்காம சீக்கிரம் புறப்படு"ன்னு சொல்லி,அவளைக் கூட்டிக்கொண்டு தன் வீட்டுக்குத் திரும்பினான் நடேசன்.

அன்றைக்கு, வேலைக்குப்போய்விட்டு வந்து உடைமாற்றிக்கொண்டிருந்தான் நடேசன். சூடாகக் காப்பியுடன் வந்தாள் செண்பகம். "ஆமா,உன் தம்பிக்கு பொம்பளைங்க சகவாசம் நிறைய உண்டோ? என்றான் அவன்.

சட்டென்று வந்த கேள்வியும் அதன் கேலியான தொனியும் திகைப்பை உண்டுபண்ணினாலும் 'நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப்புரியலையே' என்றாள் அவள்.

இன்னிக்கி உன்னோட தம்பி, யாரோ ஒரு பொண்ணோட பைக்கில் போனதாக என் ஃபிரண்ட் பார்த்துட்டுவந்து சொன்னான் என்று இளக்காரமாகச் சொன்னான் அவன்.

ஓ, இதுக்குத்தான் கேட்டீங்களா? அது, அவனோட படிச்சவங்களாவோ, அல்லது கூட வேலை பார்க்கிறவங்களாவோகூட இருக்கலாம். சரி, அது எதுக்கு நமக்கு? விடுங்க...நமக்கெதுக்குங்க அவங்க வீட்டு விஷயம்லாம்...எப்ப கல்யாணமாகிவந்துட்டேனோ அப்பவே அது என்வீடு இல்லே,அங்க உள்ள பிரச்சனையையெல்லாம் மனசுல வச்சிட்டு இங்க, முகத்த உம்முன்னு வச்சுக்கக்கூடாதுன்னு நீங்களே சொல்லியிருக்கீங்க. அப்புறம், யார் வீட்ல என்ன நடந்தா நமக்கென்னங்க...நம்ம வீட்லயே ஏகப்பட்ட பிரச்சனையிருக்குது.நாம அதைப் பாப்போம்.அவங்களாச்சு,அவங்க பிரச்சனையாச்சு"ன்னு சொல்லிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள் செண்பகம்.

சட்டென்று புரையேறியது அவனுக்கு. "பாத்துங்க...பாத்து, பதுக்கக் குடிங்க... காப்பி சுட்டுறப்போவுது" என்று அடுக்களையிலிருந்து எட்டிப்பார்த்துச் சொன்னாள் செண்பகம்.காப்பி டம்ளரை 'ணங்'என்ற சத்தத்துடன் கீழே வைத்துவிட்டு அவளை எரிச்சலுடன் பார்த்தான் நடேசன்.

11 comments:

 1. ம்... நல்ல சூடுங்க... ரொம்ப நல்லாருக்கு. இப்போதுதான் தொடர்கிறேன்...

  பிரபாகர்.

  ReplyDelete
 2. முதல் வருகைக்கும் தொடர்தலுக்கும் நன்றி பிரபாகர்!

  ReplyDelete
 3. நானும் தொடர்கிறேன்!

  ReplyDelete
 4. நானும் நன்றி

  சொல்லிக்கொள்கிறேன் :)

  ReplyDelete
 5. ///


  இன்னிக்கி உன்னோட தம்பி, யாரோ ஒரு பொண்ணோட பைக்கில் போனதாக என் ஃபிரண்ட் பார்த்துட்டுவந்து சொன்னான் என்று இளக்காரமாகச் சொன்னான் அவன்.
  ///


  நல்லாயிருக்குங்க
  கதை நகர்வு அருமையோ அருமை

  ReplyDelete
 6. நன்றாக வைத்தீர்கள் சூடு. அருமை சுந்தரா!

  ReplyDelete
 7. //நல்லாயிருக்குங்க
  கதை நகர்வு அருமையோ அருமை//

  தியாவின் பேனாவுக்கு நன்றி!

  ReplyDelete
 8. //ஜெயந்தி said...
  நல்ல கதை.//

  நன்றி ஜெயந்தி!

  //வல்லிசிம்ஹன் said...

  summaa nach'nu irukkunu sollalaama:)//

  :) நன்றி வல்லிம்மா!

  ReplyDelete
 9. //ராமலக்ஷ்மி said...
  நன்றாக வைத்தீர்கள் சூடு. அருமை சுந்தரா!//

  நன்றி ராமலஷ்மி அக்கா.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails