Sunday, November 29, 2009

சம்பளம்!

"கொஞ்சமாச்சும் என்ன நிம்மதியா இருக்கவிடுங்களேன்..." எரிச்சலுடன் சொல்லிவிட்டு எச்சில் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அடுப்படிக்குப் போனாள் செல்வி.

"அடேங்கப்பா, ராசாமவளுக்கு எவ்ளோ கோவம் வருது... புருஷங்காரன் கஷ்டம்னுசொல்லி காசுகேட்டா பொண்டாட்டிக்காரி தலைய அடகுவச்சாவது குடுக்கத்தெரியணும்டி...அத விட்டுட்டு அம்மாளுக்கு சந்தோஷம் போச்சாம்...நிம்மதிபோச்சாம்.... என்னத்தக் கொண்டுவாறாள்களோ இல்லையோ அப்பன் வீட்லருந்து இந்த அழுகைய மட்டும் மறக்காம கொண்டுவந்திர்றாளுக.."

உள்ளே போன போதை உசுப்பேத்திவிட்டிருக்க, உரக்கக் கத்திக்கொண்டிருந்தான் கதிரேசன்.

பதில்சொல்லத்தோன்றாமல் பாத்திரங்களை விளக்கிக்கொண்டிருந்தாள் செல்வி.

திடீரென்று, "டேய் மவனே, அந்த சிலேட்டைக் கொண்டாடா..."

என்று குரல்கொடுத்தான் கதிரேசன்.

அம்மாவோட அழுகையையும் அப்பனோட கத்தலையும் மௌனமாக உள்வாங்கியபடி, எழுதுவதுமாதிரி உட்கார்ந்திருந்த மகன் செந்தில், எழுந்துவந்து சிலேட்டை அப்பாவிடம் கொடுத்தான்.

கொடுத்த சிலேட்டில் "நிம்மதி, சந்தோஷம்" என்று தன் போதையில் நடுங்கும் விரல்களால் கோழிகிறுக்கியதுமாதிரி எழுதிவிட்டு,

"இந்தாடி, நீ கேட்ட நிம்மதியும் சந்தோஷமும்...தலைக்குமாட்டுல வச்சுட்டுத் தூங்கு"

என்றுசொல்லி, ஏளனமாய்ச் சிரித்தபடி சிலேட்டை அவளிடம் விட்டெறிந்தான் அவன். கோபம் பெருகினாலும் அதைச் செலவழிக்க இது தகுந்த சமயம் இல்லையென நினைத்தவளாக அதை மனதில் அழுத்தினாள் செல்வி.  அழுத்தப்பட்ட ஆத்திரம் கண்ணீராக வெளிப்பட்டது.

சேலைத்தலைப்பால் கண்ணீரைத்துடைத்தவள், அதே ஈரத்தில் சிலேட்டையும் சுத்தமாகத் துடைத்து மகனின் பைக்கட்டில் வைத்துவிட்டு மகனைக்கூட்டிக்கொண்டுபோய் பாயில் படுக்கவைத்துவிட்டுத் தானும் படுத்த்டுக்கொண்டாள்.

.............................................

மாலை பள்ளிக்கூடத்தைவிட்டு செல்வி மகனுடன் வெளியே வந்தபோது வாசலிலேயே நின்றான் கதிரேசன்.

" சம்பளம் வாங்கியிருப்பேல்ல, பணத்தைக்குடு...அடிக்குரலில் அதட்டினான் அவன்.

பதில் பேசாமல் பையிலிருந்த கவரை எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு, மகனைக் கையில் பிடித்தபடி வேகமாக நடந்தாள் அவள்.

என்னடி, கவர் மெலிஞ்சுபோயிருக்கு என்று குரல்கொடுத்தபடி, கவரைப்பிரித்தான் கதிரேசன். கேள்வி எட்டாத தூரத்துக்குச் சென்றிருந்தாள் அவள்.

கவருக்குள் எட்டாக மடித்த காகிதம் இருந்தது. "காசை எதுக்கு காகிதத்தில் மடிச்சுவச்சிருக்கா,கழுத..." என்று நினைத்தபடி காகிதத்தைப் பிரித்தான் அவன்....

உள்ளே "சம்பளம்" என்ற வார்த்தை தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தது. திகைத்தவனாக,பேப்பரைத் திருப்பிப் பின்னால் பார்த்தான். அங்கேயும் அதே வார்த்தை அவனைப்பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது.

Thursday, November 26, 2009

வயல்காட்டு போதை!!!




போச்சு...போச்சு...பார்த்துப்பார்த்து பயிர்செஞ்சு, இப்ப விளைஞ்ச பயிரெல்லாம் வீணாப் போச்சு!

ஐயோ...அப்படியா? நானும் இன்னும் ரெண்டுநாள்ல அறுவடை பண்ணனும்... இல்லேன்னா என்னோட பயிரும் பாழாப்போயிடும்.

ம்ம்...என்னோட வயல்ல இந்தத்தடவை பூச்செடிகள் நட்டிருக்கேன்.வருமானம் அதிகமாவரும்ன்னு நினைக்கிறேன். கிடைக்கிற காசில எப்படியும் ஒரு டிராக்டர் வாங்கி நிப்பாட்டிரணும்.

சீக்கிரமா விளையணும், அதேசமயம் வருமானமும் நிறைய கிடைக்கணும். அப்படி ஏதும் பயிரிருந்தா சொல்லேன். நானும் போட்டுப்பார்க்கிறேன்.

ஆமா, உன்னோட வயல்ல கொஞ்ச செடிங்க மட்டும் ரொம்ப அதிகமா வளர்ந்திருக்கே எப்பிடி?

பக்கத்து வயல்காரப்பய வந்து எனக்குத்தெரியாம ஏதோ உரத்தைக் கொட்டிட்டுப் போயிட்டான். அதான்...

வயலுக்கு ஓரத்தில பழமரங்களை நட்டாலும் நிறைய காசு கிடைக்கும். செஞ்சு பாரேன்...

நேத்து எங்கம்மா எனக்கு ஒரு பசுமாடு அனுப்பிவச்சாங்க. அதோட இன்னும் ரெண்டுமூணு மாடு வாங்கிவிட்டா அதுவும் வருமானம்தான்...

அஞ்சாறு விவசாயிங்க பேசிக்கிட்டிருந்தப்ப ஒட்டுக்கேட்டதில்லைங்க இது...அறைக்குள்ள உக்கார்ந்து எங்க வீட்டுச் சின்னதுங்க பேசிக்கிட்டதுதான்... என்ன, அவுங்க இங்கிலீஷில பேசினாங்க, நான் மொழிமாத்தி எழுதியிருக்கேன் அவ்வளவுதான்...

பள்ளிவிட்டு வந்தா, சாப்பாட்டுக்கு முன்னாடி வயலைப்போய் பார்க்கிறதும், உன்னோடதைவிட என்னோட வயல் பெருசுன்னு போட்டிபோட்டுக்கிறதும், அவங்கவங்க அனுபவத்தை அள்ளிவிடுறதும், அவங்க போதாதுன்னு என்னோட பேர்லயும் அவங்களே ஒரு கணக்கு ஆரம்பிச்சு, அங்கேயிருந்து ஆளாளுக்கு ஆடு, மாடு, கோழி, குதிரைன்னு பரிசுகள் கொடுத்துக்கிறதும்கூட நடக்குதுன்னா பாருங்களேன்.

பேசிக்கொண்டிருந்த விஷயம், facebook ல் இருக்கும் farmville விளையாட்டைப்பற்றி

என்னடா தம்பி இது... படிக்கிறநேரத்தில் லேப்டாப்பை வச்சுட்டு விளையாடிட்டிருக்கேன்னு கேட்டா, இதை விளையாடினா, டென்ஷனெல்லாம் தீர்ந்து,மனசு ரிலாக்ஸ் ஆகுதாம். என்ன டென்ஷனோ, என்ன ரிலாக்சேஷனோ இந்த வயசில...

பம்பரம், குச்சிக்கம்பு,கோலின்னு பசங்களும், பல்லாங்குழி, தாயம், பாண்டின்னு பொண்ணுங்களும் நம்ம ஊர்ல கூடிச்சேர்ந்து விளையாடின காலமெல்லாம்போய், கணினிக்கு முன்னாலும் தொலைக்காட்சிக்கு முன்னாலும் கண்ணைக் கெடுத்துக்கிட்டு மணிக்கணக்கில் உட்கார்ந்து வீடியோ கேமும், கணினி விளையாட்டுக்களும் விளையாடுறாங்க பிள்ளைங்க.

பிள்ளைகள் மட்டுமில்ல, அம்மா அப்பாக்கள் நிறையப்பேரும் இந்த விளையாட்டுக்கு அடிமையாயிருக்காங்களாம்...சொல்லிக்கிறாங்க.

உங்களுக்கும் ரொம்ப டென்ஷனா?

பணம்செலவில்லாம பயிர் பண்ணனும்னு ஆசையா?

நீங்களும் விளையாடிப்பாருங்க.

ஆனா, ஒரு விஷயம்...ஒரேயடியா விளையாடி, வீட்ல ஏதும் விவகாரமானா அதுக்கு நான் பொறுப்பில்லை...சொல்லிட்டேன் :)

Tuesday, November 24, 2009

ஃபேஷியல் பண்ணிக்கலாம் வாங்க!

நினைச்சாலே என்னவோபோல இருக்குது போங்க...

ஆனா, இந்த மேற்கத்திய மக்கள்  கொஞ்சமும் விவஸ்தையில்லாம நல்லதுன்னு தெரிஞ்சா எதையும் உபயோகிக்கத் தயாராயிடுவாங்கன்னு படிச்ச விஷயங்கள் சில சொல்லுது.

நஞ்சுக்கொடி, (Placenta)இந்த வார்த்தையை அநேகமா எல்லாரும் கேள்விப்பட்டிருப்போம். கருவிலிருக்கும் குழந்தையைத் தாயுடன் தொப்புள்கொடிமூலம் இணைத்து அதற்குரிய உணவையும்  ஆக்சிஜனையும் உள்ளே அனுப்பி, கருவின் கழிவுகளை வெளித்தள்ளி, இறுதியில் குழந்தையுடன் வெளிவந்து நம் மக்களால் மண்ணில் புதைக்கப்படும் உடம்பின் ஒரு தற்காலிகப் பகுதி.

படம் பார்க்கணும்னா இங்கே...(நன்றி : upload.wikimedia.org) க்ளிக்குங்க...

சில விலங்குகள் குட்டிபோட்டதும் இந்த நஞ்சுக்கொடியை விழுங்கிவிடுமென்று சொல்லுவார்கள். காரணம், இந்த நஞ்சுக்கொடியில் கருவுக்கான ஊட்டச்சத்துக்கள் சேகரித்துவைக்கப்பட்டிருப்பதால் இது மிகவும் சத்துள்ள பகுதியாகச் சொல்லப்படுகிறது.

மேற்கத்திய நாடுகள் சிலவற்றில் குழந்தை பெற்ற தாய்மார்கள் இந்த நஞ்சுக்கொடியையும் உண்ணுமாறு பரிந்துரைக்கிறார்களாம் மருத்துவர்கள். என்ன கொடுமை பாருங்க...

இந்தக் கொடுமையை இன்னும் கொஞ்சம்  ஆராய்ச்சி செய்து "குழந்தைபோல மென்மையான முகம் வேண்டுமா? நஞ்சுக்கொடி ஃபேஷியல் செஞ்சுக்கோங்க"ன்னு விளம்பரம்கூட செய்ய ஆரம்பிச்சிருக்காங்க சிலர்.

வயதாவதால் ஏற்படும் முகத்தொய்வுக்கு மருந்தாக நஞ்சுக்கொடியிலிருந்து எடுக்கப்பட்ட ஊட்டச்சத்துக்களைக்கொண்டு முகப்பூச்சு ஒன்றைத் தயார்செய்திருக்கிறதாம் ரஷ்ய நிறுவனமொன்று. குழந்தை பெற்ற ரஷ்ய அம்மாக்கள் இந்தத் தயாரிப்புக்காக  நஞ்சுக்கொடியைத் தானமாக வழங்குகிறார்களாம்.

நஞ்சுக்கொடியில் காணப்படும் ஹார்மோன்கள் முகத்தைக் குழந்தைபோல மென்மையாகவும் பொலிவாகவும் மாற்றுமென்று  இங்குள்ள அழகுக்கலை நிபுணர் ஒருவரும் பரிந்துரைக்கிறார்.

இந்த நஞ்சுக்கொடி ஃபேஷியலை துபாயில் புதுசா ஒரு அழகுக்கலை நிலையத்தினர் அறிமுகப்படுத்தியிருக்காங்க. பண்ணிக்க விருப்பமுள்ளவங்க அதிகம் ஒண்ணுமில்ல, ரூபாய் 25,000 மட்டும் (2000 திர்ஹாம்) கொடுத்து இந்த ஃபேஷியலை செஞ்சுக்கலாம்.

இதுக்கு நான் ரெடியில்ல...நீங்க ரெடியா?????

Sunday, November 22, 2009

புதிர் எண் : 2

மறைந்திருந்து பார்க்கும் இவர் யார்?



Saturday, November 21, 2009

சுலபமான தக்காளிக் குழம்பு

கடைக்குப்போய் காய்கறி வாங்க நேரமில்லையா? வீட்ல தக்காளி, வெங்காயம் மட்டும்தான் இருக்கா? இருக்கிறதை வச்சு எளிதாகச் செய்யக்கூடிய குழம்பு இதோ...

தேவையான பொருட்கள்
************************
தக்காளி -கால் கிலோ
மிளகாய்த்தூள் -1தேக்கரண்டி
மல்லித்தூள் -2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் -1/4 தேக்கரண்டி
சாம்பார்ப் பொடி -1 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காயளவு
உப்பு - தேவையான அளவு

அரைக்க
*********
பெரிய வெங்காயம் (நறுக்கியது) -1
தேங்காய்துருவல் -1 கப்
சீரகம் -1 தேக்கரண்டி

தாளிக்க
*********
எண்ணெய் -1 குழி கரண்டி
நறுக்கிய வெங்காயம்- 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை
******************
*தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

*வெங்காயத்தை உரித்து நறுக்கி தேங்காய், சீரகத்துடன் அரைத்துக்கொள்ளவும்.

*புளியைக் கரைத்து வடிகட்டவும்.

*வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயத்தை இட்டு சிவந்தவுடன் கடுகு சேர்த்து வெடிக்கவிட்டு கறிவேப்பிலையும் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

*தக்காளி வதங்கியதும் அதனுடன் புளிக்கரைசல், அரைத்த கலவை மற்றும் பொடிகள் அனைத்தையும் சேர்த்து 5 நிமிடங்கள் மூடியிட்டுக் கொதிக்கவிடவும்.

*பின் மூடியை நீக்கி உப்பு சரிபார்த்துவிட்டு,மேலும் இரண்டு நிமிடங்கள் சிறு தீயில் வைத்து எண்ணெய் மிதந்ததும் இறக்கவும்.

சுலப தக்காளிக் குழம்பு தயார்.

இதனை தாளித்த துவரம்பருப்புக் கூட்டுடனோ,முட்டை பொரியலுடனோ, இல்லை அப்பளத்துடனோ சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Thursday, November 19, 2009

புதிர் எண் :1

புதிர் பக்கங்கள்...

புதுசா ஒரு விளையாட்டுப் பக்கம்...

இங்கே,மறைஞ்சிருக்கிறவங்க யாருன்னு கண்டுபிடிக்கணும்...

ஆர்வமுள்ளவங்க அடுத்த நிமிஷமே துப்பறியும் பணியைத் தொடங்கலாம்.

பதில்களை மறக்காம பின்னூட்டப்பெட்டியில் போடுங்க.

சரியான பதிலைச் சொல்றவங்கதான் அன்றைய *துப்பறியும் சிங்கம்*

என்ன, பதில் சொல்ல நீங்க ரெடியா?

இங்கே, இன்னொரு மோனலிசா? இவர் யார்?



Wednesday, November 11, 2009

காரைக்குடி சந்திப்பும், கால் நூற்றாண்டு நினைவுகளும்

அன்றைக்கு சுதந்திர தினம்...

அதிகாலையில்,திருச்சியிலிருந்து காரைக்குடி புறப்பட்டபோது செல்லும் வழியெங்கும் பள்ளிக்குழந்தைகள் சீருடையுடன் அவரவர் பள்ளிக்குக் கொடியேற்றச் செல்வதைக் காணமுடிந்தது. கொடியேற்றுவதன் காரணம் புரிந்தோ புரியாமலோ பிள்ளைகள் முகமெங்கும் மலர்ச்சியை அணிந்திருந்தனர்.



அந்த மலர்ச்சிக்குக் கொஞ்சமும் குறைவில்லாத மலர்ச்சியைக் காரைக்குடியிலும் கண்டபோது நிஜமாகவே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. கால்நூற்றாண்டு காலத்துக்குப்பின் ஒரு கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அக்கல்லூரி வளாகத்தில் சந்தித்துக்கொண்ட கலகலப்பான, அதே சமயம் நெகிழ்ச்சியான நாளும் அது.

கல்லூரிக்குள் நுழைந்ததுமுதல் கடந்த காலத்து நினைவுகளுடன் ஒன்றிப்போய், காலஓட்டத்தால் தோற்றம் மாறிப்போயிருந்த தங்கள் நண்பர்களைப் பார்த்து ஒருவருக்கொருவர், "டேய், அவனாடா நீ?" என்பது போன்ற ஆச்சர்யக் குரல்களையும், தோளைத்தழுவிக்கொண்ட தோழமையையும் பரிமாறிக்கொண்டபோது நிஜமாகவே அன்றையநாள் மிகவும் அற்புதமான நாளாக மனசுக்குப்பட்டது.  

இந்தச் சந்திப்பால் இதுவரை தெரிந்துகொள்ளாத வள்ளல் ஒருவரைப்பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்புக்கிட்டியது. தான் வாழ்ந்த பிரதேசத்தைக் கல்விப்பூங்காவாகச் சமைத்திருக்கும் அவர், வள்ளல் அழகப்பர். இந்தச் சந்திப்பு நடந்த இடம், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி.













காலைமுதல் அங்கு கூடிய முன்னாள் மாணவர்கள், திவான் பகதூர் முருகப்பா ஹாலில் தங்களுடைய பசுமையான நினைவுகளையும்,பழகிப்பிரிந்த இந்தப் பல வருடங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் கலந்துபேசிக்கொண்டனர்.குடும்பத்தோடு வந்தவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் அறிமுகம்செய்துகொண்டனர்



வள்ளல் அழகப்பரின் பெருமைகளைப் பற்றி எல்லோரும் பேசினர். விழாவில் வள்ளல் அழகப்பரைப்பற்றிக் கேள்விப்பட்ட விஷயமொன்று...கல்விக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த வள்ளல் அழகப்பர், தன்னுடைய ஊரில் ஒரு விமானநிலையம் அமைக்கவேண்டுமென்று ஆசைப்பட்டாராம். தன்னுடைய விருப்பத்தை அப்போதைய பிரதமராயிருந்த தன் நெருங்கிய நண்பர் நேருவிடம் சொன்னாராம். நேருவோ, நீ இதை டாட்டாவிடம் சொல் என்றாராம். டாட்டா(TATA) நிறுவனத்துடன் பேசியபோது, மஞ்சள்பையைத் தூக்கிக்கொண்டு திரியும் உங்கள் ஊரில், யார் வந்து விமானமேறப்போகிறார்கள் என்று கேட்டுக் கேலிசெய்தார்களாம்.

எப்படியும் தான் பிறந்த ஊருக்கு விமானத்தைக் கொண்டுவரவேண்டும் எனும் உறுதியுடன் இருந்த வள்ளல் அழகப்பர், ஜெர்மனி சென்று அங்கிருந்து விமானம் ஒன்றை வாங்கி, கானாடுகாத்தானில் அமைக்கப்பட்ட தனது சொந்த விமான நிலையத்தில் வந்திறங்கினாராம்.

கல்லூரி வளாகத்தைச் சுற்றிப்பார்த்தபோது நமக்கே பிரமிப்பாக இருந்தது. ஒரு ஊரையே வளைத்துக் கட்டியதுபோல அவ்வளவு பெரிய பரப்பு. பச்சைப்பசேலென மரக்கூட்டம். அங்கே அலைந்து திரியும் பறவைக்கூட்டம். அங்கே மரங்களில் மயில்கள்கூடக் காணப்பட்டன.
படமெடுக்கிறோமென்றதும் வெட்கப்பட்டுப் பறந்தது மயில்!


அருமையான கட்டிட அமைப்பும்,ஏகப்பட்ட இடவசதியுமாக இருக்கும் கல்லூரி, இன்று அரசின் பராமரிப்பில் களையிழந்துபோயிருப்பது மறுக்கமுடியாத உண்மை.

கல்லூரிக்குள் பட்டொளி வீசிப் பறந்த சுதந்திரக் கொடி...





 

நம் முன்னாள் பிரதமர் நேரு அவர்களால் நடப்பட்டு இன்று கிளைவிரித்து நிற்கும் அரசமரம்...



வள்ளல் கட்டிய கல்லூரி இன்று அரசின் வசப்பட்டாலும், அங்குள்ள மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவேண்டுமென்று முடிவெடுத்து, நீரைச் சுத்திகரிக்கும் (RO Water Purification Plant) அமைப்பைக் கல்லூரிக்கு வழங்கினர் அன்று வந்திருந்த மாணவர்கள். கால்நூற்றாண்டு கழிந்தாலும் கல்லூரியின்மேல் கொண்டிருக்கும் பாசத்தின் வெளிப்பாடு அது.

செட்டிநாட்டு விருந்தும், சிறப்பான கலைநிகழ்ச்சிகளுமாகக் கழிந்தது அன்றைய தினம். புறப்படுகையில் மீண்டும்,எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ என்ற பாடல் வரிகள் நிச்சயமாக ஒவ்வொருவர் மனதிலும் ஓடியிருக்கும்.

கல்லூரி வளாகத்தைவிட்டுப் புறப்பட்டோம்.

புறப்படுகையில் கண்ணில்பட்டது கல்லூரி மாணவர்கள் கரும்பலகையில் எழுதியிருந்த வாசகம்...அந்த உறுதிமொழியை உள்ளத்திலிருத்திக்கொண்டு "அப்படியே ஆகட்டும்" என்று ஆசைப்பட்டபடி வள்ளலின் மண்ணைவிட்டுப் புறப்பட்டோம்.


Sunday, November 8, 2009

'ஏழரை' துபாய்!!!

என்னடா இது, சும்மாவே ரிஸெஷன் வந்து அலைக்கழிச்சதில துபாய் ஆடிப்போய்க்கிடக்குது...இன்னும் என்ன ஏழரையோன்னு நினைச்சிக்கிட்டே வந்திருந்தீங்கன்னா...ரிலாக்ஸ் ப்ளீஸ் :)


சொல்லவந்தது ரொம்ப அழகான விஷயம்...

இன்னிக்கி காலை ஏழரை மணிக்கு துபாய் எப்படியிருந்ததுன்னு நீங்களும் தெரிஞ்சுக்கணும்ல்ல...அதுக்காகத்தான் இந்தப் பதிவு.

சிலுசிலுன்னு பனிமூட்டம்...எதிர்த்த வீடுகூட சரியாத்தெரியாத அளவுக்கு.

புகைப்படங்களைப் பாருங்க...



















சும்மா சொல்லக்கூடாது, என்னதான் கோடையில் வெயில் சுட்டெரிச்சாலும் குளிர் காலத்தில் துபாய் அழகுதான்.

Wednesday, November 4, 2009

நாசமத்துப்போற மக்கா....நல்ல தமிழ் மறக்காதீங்க...

அம்மா, இன்னிக்கு என்ன டே?

வியாழக்கிழமை...

அப்டின்னா?

வெள்ளிக்கிழமைக்கு முன்னாடி வருமே அது...

time-table எடுத்துவைக்கணும்...சரியாச் சொல்லும்மா...

வெள்ளிக்கிழமைன்னா friday..அப்ப, இன்னிக்கு thursday,வியாழக்கிழமை...

thursday ன்னு முதல்லயே தெளிவாச் சொல்லவேண்டியதுதானே?

முகத்தைக் கோணலாக்கிச் சொல்கிறது வாண்டு...

இப்படியே இங்கேயிருந்துகிட்டு, வீட்டில தமிழ்லதான் பேசணும்னு எங்ககிட்ட சொல்றமாதிரி, தமிழ்நாட்டுல போய் சொல்லிப்பாருங்க...அப்புறம் என்னதான் பாஸ்போர்ட்டைக் காட்டினாக்கூட நீங்க துபாய்லதான் இருக்கிறீங்கன்னு நம்பமாட்டாங்க யாரும். பிள்ளை சிரித்துக்கொண்டே சொன்னாலும் நிஜம் சுடத்தான் செய்தது.

"வங்கிக்குப் போகணும், தானி ஒண்ணு கூட்டிக்கொண்டுவா" ன்னு சொன்னா, தமிழ்நாட்டுக்காரங்களே ஏதோ கீழ்ப்பாக்கத்து உருப்படியோன்னு சந்தேகமாத்தான் பார்ப்பாங்க.

அடுக்குப்பானையும் குதிருமா அழகா செம்மண் காவிபூசி, திண்ணையும் தூணுமா இருந்த கிராமத்துவீடுகளும், மாமம்மா பேசிய அழகு தமிழும்கூட இன்று மாறித்தான் போய்விட்டது.டவுண்பஸ்,லேட்டு,லெட்டர்,ஸ்டேஷன்,ஸ்பீக்கர்செட்டுன்னு அடுக்கடுக்கா ஆங்கிலத்தில் பேச ஆரம்பிச்சுட்டாங்க நம்மாளுங்க.

குதிருன்னு சொன்னதும் நம்ம ஊர்ப் பழமொழி ஒண்ணு நினைவுக்கு வந்திருக்குமே... இடம் பொருள் அறியாமல் ஏதாவது உளறிக்கொட்டும்போது, "எங்கப்பன் குதிருக்குள்ள இல்லே"ங்கிற மாதிரி இப்படியா பேசுறதுன்னு கடிஞ்சுக்குவாங்க பெரியவங்க.

குதிர், நெல்லைச் சேமித்துவைக்க அந்நாளைய வீடுகளில் ஆளுயரத்துக்கு அமைக்கப்பட்டிருக்கும் மண்பாண்டங்களின் பெயராகும். இதைக் குலுக்கை என்றும்கூடச் சொல்லுவாங்க.

குதிரிலில் சேமித்த நெல்லை எடுத்து,பெரிய பெரிய குத்துப்போணிகளில்,புழுங்க வச்சு, தட்டடியில கொட்டி, வரிவரியா கிண்டிக் காயவச்சு, பறவைகள் கொத்தாமலிருக்க பிள்ளைகளைக் காவல் வைக்க,

அக்கம்பக்கத்துப் பிள்ளைகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு,

மழ வருது மழ வருது நெல்லள்ளுங்க
முக்காப்படி அரிசிபோட்டு முறுக்கு சுடுங்க
தஞ்சாவூரு மாமனுக்குக் கொஞ்சம் குடுங்க
சும்மா வார மாமனுக்குச் சூடுபோடுங்க

என்று கூடிப்பாடிக் குதூகலித்ததாக மாமம்மா கதை சொல்ல,விழிகள் விரியக் கேட்டுக்கொண்டிருந்ததுண்டு.மாமனின் அம்மா மாமம்மா, அம்மாவுடன் பிறந்த சகோதரன் அம்மாமன். எத்தனை அருமையான உறவுப்பெயர்களை மறந்துவிட்டோம்?...

வெள்ளென எழுந்திருச்சி, செம்பு நெறைய நீத்துப்பாவத்தைக் குடிச்சிட்டு,வயலுக்குப்போயி வேர்க்க விறுவிறுக்க கமலையில தண்ணியெறச்சு வயலுக்குப் பாய்ச்சிட்டு,வீட்டுக்குவந்து, கும்பா நிறைய பழைய சோறும் கருவாட்டுக்குழம்பும் சாப்பிட்ட அந்தக்கால மக்களின் உடலுரம் எங்கே,நாமெல்லாம் எங்கே!

வெள்ளென என்ற வார்த்தையை, விடியலில், அதிகாலையில் என்ற பொருளில் இன்னும் உபயோகிப்பார்கள்.நீராகாரத்தை நீத்துப்பாவம் என்று சொல்லுவதைச் நெல்லை மாவட்ட முதியவர்களிடம் இன்னும் கேட்கலாம்.கமலை என்பது மாடுகளை வைத்துக் கிணறுகளில் நீரிறைக்கும் முறை.

கும்பா, வட்டில் இரண்டும் அந்தக்காலத்து உணவு உண்ணும் பாத்திரங்களின் பெயர்களாம். கும்பா என்பது கிட்டத்தட்ட நம் சந்தனக் கிண்ணம் போலப் பெரியதாக இருக்குமாம்.நீருடன் உண்ணும் பழையசாதம் போன்றவற்றை உண்ண ஏற்றதாக இருக்குமாம். வட்டில் என்பது, தட்டுப்போல இன்னும் கொஞ்சம் உயரமான விளிம்புடன் வேலைப்பாடுகளுடன் கூடியதாய் இருக்குமென்று கூறக்கேட்டிருக்கிறேன்.

வைக்கப்படப்புல வாழக்கா பழுக்கவச்சு, கொச்சக்கயித்தில மட்டைவச்சு ஊஞ்சல்கட்டி, கருக்கலானதுகூடத் தெரியாம கூட்டாளிகளோட விளையாடிட்டு வீட்டுக்குவந்தா, அம்மா சட்டகப்பையை அடுப்பில வச்சு, சூடுவைப்பேனென்று சுத்திவர, ஆச்சியோட மடியில் அடைக்கலம் புகுந்து...நம் தமிழ்க் குடும்பங்களில்தான் நினைத்து ரசிக்க எத்தனை எத்தனை விஷயங்கள்...

வைக்கப்படப்பு- வைக்கோல் சேமித்து வைக்கும் இடம்

கொச்சக்கயிறு _ தென்னை நாரினால் பின்னிய கயிறு

சட்டகப்பை - தோசை திருப்பும் கரண்டி

கருக்கல் - மாலை மயங்கிய வேளை

ஆச்சி - அப்பாவின் அம்மா.

இப்படி, மறந்தும் மறைந்தும்போன வார்த்தைகளும், வாழ்க்கைமுறைகளும் எத்தனை எத்தனையோ...

கடைசியா, தலைப்புக்கு வருவோம்...

அன்றைய நெல்லை மாவட்டப் பகுதிகளில், வசவுச்சொற்கள் பல வழக்கில் இருந்தாலும் ரொம்பவும் வித்தியாசமாக, நாசமத்துப் போறவனே/வளே என்ற வார்த்தை என்னை மிகவும் கவந்ததுண்டு. நாசமாய்ப்போ என்று சபிப்பதை விடுத்து, நாசம் + அற்றுப் போ, அதாவது "அழிவில்லாமல் இரு" என்று சபிப்பதுபோல வாழ்த்துவது இந்த வார்த்தை. எத்தனை அருமையான நாகரிகம் பாருங்கள்...

ஆக, நாசமத்துப்போற மக்கா, மறந்துபோன நல்லதெல்லாம் மறுபடியும் நினைவில்கொண்டு நல்லதமிழை எல்லாரும் பேசிடுவோம்.

(இது ஒரு மீள் மீள்பதிவு...)

குறுக்குத்துறையும் குருவித்துறையும்

என்னைக் கவர்ந்த ரெண்டு துறைகள் எதுன்னா, கட்டாயம் சொல்லுவேன் ஒண்ணு குறுக்குத்துறை இன்னொண்ணு குருவித்துறைன்னு( அறிவியல், தொழில்நுட்பம்னு ஏதாவது சொல்லுவேன்னு எதிர்பார்த்திருந்தா ஏமாற்றம்தான் :))காரணம் என்னன்னா,சொல்லப்போற ரெண்டுமே ஆற்றங்கரையில் அமைந்த ரெண்டு ஊர்களைப் பற்றிய விஷயங்கள்...

சொந்த மண்ணுன்னு சொல்லுவாங்களே அப்படி ஒரு பாசம் குறுக்குத்துறையில. சிலநூறு அடிகளுக்கு அப்பாலிருக்கும் சிக்கநரசய்யன் கிராமம் எந்தையின் சொந்த ஊர். வீட்டில பல்விளக்க ஆரம்பிச்சு, குறுக்குத்துறை தாமிரபரணியில் வந்து வாய்கொப்பளிச்சு, கல்மண்டபத்திலிருந்து குதித்து நீச்சலடித்து,ஆழத்திலிருக்கும் அல்லியைக் பறித்துவந்து,ஈரம் காயாம முருகனைக் கும்பிட்ட கதையையெல்லாம் அத்தனை சுவாரசியமாய்ச் சொல்லுவாங்க என் அப்பா.

இதோ, ஆற்றங்கரையில் அழகிய கோயில்...



கோயிலின் பின்னாலிருந்து எடுக்கப்பட்ட கோபுரத்தோற்றம்...



அருகில், அரசமரத்தடிப் பிள்ளையார் கோயில்...




தன்னுடைய சிறுவயதில், ஆற்றங்கரைப் பாறைக்கருகில் தான் காசு சேர்த்துப் புதைத்துவைத்த கதையை என் அப்பா சொல்ல, ஆசையாய் என் பிள்ளைகள் அங்கே தோண்டிப்பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள்.

காசுதோண்டிவைத்த பாறையும், தூரத்தெரியும் ரயில் பாலமும்...(படத்தை சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்த்தால்தான் ரயில் பாலமெல்லாம் தெரியும்)



நெல்லை நகரத்தின் சிறப்புகளில் இந்தக் குறுக்குத்துறை முருகனுக்கு ஒரு தனியிடம் உண்டு. காலருகில் ஓடும் தாமிரபரணியின் சலசலப்பில் வள்ளி தெய்வானையுடன் சுகமாக வீற்றிருக்கும் முருகப்பெருமான், செந்தூர்க் கோயிலுக்காகச் செய்யப்பட்ட சிலாரூபமென்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.அதனால், திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டிக்கொண்டவர்கள் இங்கே அந்த வேண்டுதலை நிறைவேற்றுவார்களாம்.

கோயிலின் முகப்பிலிருந்து...



மாலை மயங்கிய பொழுதும், ஓடும் நீரின் மெல்லிய இசையும், கோயிலில் இருந்து எழுந்த தெள்ளிய மணியோசையும் மனதில் மிகவும் ரம்யமான உணர்வை ஏற்படுத்தியது.படித்துறையில் உட்கார்ந்து கால்களைக் கொஞ்சும் மீன்களோடு விளையாடிக்கொண்டிருந்தால் வீட்டுக்குக்கிளம்ப மனசே வராது.

அடுத்தபடியாக, எனக்கு மிகவும் பிடித்த கிராமம்,மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகிலிருக்கும் குருவித்துறை. பசுமைக்குள் புதைந்திருக்கும் சின்னஞ்சிறு கிராமம்.சின்னச்சின்ன வீடுகள், கோயில்கள், தென்னைமரச் சோலைகளென்று வைகைக்கரையில் அமைந்திருக்கும் அழகிய கிராமம் அது.

வைகையாற்றின் கரையில் வல்லவப் பெருமாளாக அருள்பாலிக்கிறார் வெங்கடேசப் பெருமான்.குரு பகவான் தன் மகன் கசனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால், இந்த இடம் குருவின் துறையெனப் பெயர்பெற்று, பின் மருவி குருவித்துறையாகி, அயன் குருவித்துறையென்று என்று தற்போது அழைக்கப்படுகிறது.

குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் அவருக்குக் காட்சி தந்து, அவருடைய மகன் கசனை மீட்டு தந்தாராம். இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லபப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இந்த ஆலயம் புகழ்பெற்ற குருஸ்தலமாகத் திகழ்கிறது.இந்த ஆலயம் ஊர்க்கோடியில் அமைந்திருந்தாலும் தேடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.

இதோ, வல்லபப் பெருமாள் ஆலயம்...(படம் தினமலர்.காமில் வெளியானது)


இக்கோயில் பற்றிய மேலும் விபரங்களுக்கு இங்கே பாருங்க.

நன்றி: தினமலர்.

மதுரையிலிருந்து அரசுப் பேருந்துகள் அடிக்கடி குருவித்துறைக்கு வந்து செல்கின்றன. கிராமத்திற்குள் போகும்போது கனகம்பீரமாகக் காட்சியளித்தது பெத்தண்ண சாமி கோயில். கிராமத்து மக்களின் காவல் தெய்வம் அவர். ஊர் மத்தியில் மையமாக அமைந்திருக்கிறது,
பத்திரகாளியம்மன் கோயில். சித்திரை மாதத்தில் இந்த அம்மனுக்கு சிறப்பாய்த் திருவிழா நடக்கிறது.

விவசாயம், பால் உற்பத்தி, மற்றும் தென்னை சார்ந்த தொழில்களும் இங்கு முக்கியமான தொழில்களாகத் தெரிகிறது.

இதோ, பத்திரகாளியம்மன் ஆலயத்திற்குள் உள்ளே நுழைந்ததும் செல்லப் பிள்ளையார்...



சிவனின் ஓவியம் வரைந்திருப்பது ஆலயச்சுவரில் தான். மறுபுறத்து ஓவியத்தில் மகிஷனை வதைத்த மாகாளி...



இதோ,பெத்தண்ண சாமி கோயில்...



கம்பீரமாகக் குதிரையில்...



குருவித்துறையை விட்டுப் புறப்படுகையில் இருட்டிவிட்டது. தூரத்து மலையில் நெருப்பு ஓவியமாகப் புகையுடன் தெரிந்தது காட்டுத்தீ. வழியில் கண்ட,கண்ணுக்கழகான காட்சிகள் மனதை நிறைத்திருந்தது.

LinkWithin

Related Posts with Thumbnails