Wednesday, November 11, 2009

காரைக்குடி சந்திப்பும், கால் நூற்றாண்டு நினைவுகளும்

அன்றைக்கு சுதந்திர தினம்...

அதிகாலையில்,திருச்சியிலிருந்து காரைக்குடி புறப்பட்டபோது செல்லும் வழியெங்கும் பள்ளிக்குழந்தைகள் சீருடையுடன் அவரவர் பள்ளிக்குக் கொடியேற்றச் செல்வதைக் காணமுடிந்தது. கொடியேற்றுவதன் காரணம் புரிந்தோ புரியாமலோ பிள்ளைகள் முகமெங்கும் மலர்ச்சியை அணிந்திருந்தனர்.அந்த மலர்ச்சிக்குக் கொஞ்சமும் குறைவில்லாத மலர்ச்சியைக் காரைக்குடியிலும் கண்டபோது நிஜமாகவே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. கால்நூற்றாண்டு காலத்துக்குப்பின் ஒரு கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அக்கல்லூரி வளாகத்தில் சந்தித்துக்கொண்ட கலகலப்பான, அதே சமயம் நெகிழ்ச்சியான நாளும் அது.

கல்லூரிக்குள் நுழைந்ததுமுதல் கடந்த காலத்து நினைவுகளுடன் ஒன்றிப்போய், காலஓட்டத்தால் தோற்றம் மாறிப்போயிருந்த தங்கள் நண்பர்களைப் பார்த்து ஒருவருக்கொருவர், "டேய், அவனாடா நீ?" என்பது போன்ற ஆச்சர்யக் குரல்களையும், தோளைத்தழுவிக்கொண்ட தோழமையையும் பரிமாறிக்கொண்டபோது நிஜமாகவே அன்றையநாள் மிகவும் அற்புதமான நாளாக மனசுக்குப்பட்டது.  

இந்தச் சந்திப்பால் இதுவரை தெரிந்துகொள்ளாத வள்ளல் ஒருவரைப்பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்புக்கிட்டியது. தான் வாழ்ந்த பிரதேசத்தைக் கல்விப்பூங்காவாகச் சமைத்திருக்கும் அவர், வள்ளல் அழகப்பர். இந்தச் சந்திப்பு நடந்த இடம், காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி.

காலைமுதல் அங்கு கூடிய முன்னாள் மாணவர்கள், திவான் பகதூர் முருகப்பா ஹாலில் தங்களுடைய பசுமையான நினைவுகளையும்,பழகிப்பிரிந்த இந்தப் பல வருடங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் கலந்துபேசிக்கொண்டனர்.குடும்பத்தோடு வந்தவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் அறிமுகம்செய்துகொண்டனர்வள்ளல் அழகப்பரின் பெருமைகளைப் பற்றி எல்லோரும் பேசினர். விழாவில் வள்ளல் அழகப்பரைப்பற்றிக் கேள்விப்பட்ட விஷயமொன்று...கல்விக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த வள்ளல் அழகப்பர், தன்னுடைய ஊரில் ஒரு விமானநிலையம் அமைக்கவேண்டுமென்று ஆசைப்பட்டாராம். தன்னுடைய விருப்பத்தை அப்போதைய பிரதமராயிருந்த தன் நெருங்கிய நண்பர் நேருவிடம் சொன்னாராம். நேருவோ, நீ இதை டாட்டாவிடம் சொல் என்றாராம். டாட்டா(TATA) நிறுவனத்துடன் பேசியபோது, மஞ்சள்பையைத் தூக்கிக்கொண்டு திரியும் உங்கள் ஊரில், யார் வந்து விமானமேறப்போகிறார்கள் என்று கேட்டுக் கேலிசெய்தார்களாம்.

எப்படியும் தான் பிறந்த ஊருக்கு விமானத்தைக் கொண்டுவரவேண்டும் எனும் உறுதியுடன் இருந்த வள்ளல் அழகப்பர், ஜெர்மனி சென்று அங்கிருந்து விமானம் ஒன்றை வாங்கி, கானாடுகாத்தானில் அமைக்கப்பட்ட தனது சொந்த விமான நிலையத்தில் வந்திறங்கினாராம்.

கல்லூரி வளாகத்தைச் சுற்றிப்பார்த்தபோது நமக்கே பிரமிப்பாக இருந்தது. ஒரு ஊரையே வளைத்துக் கட்டியதுபோல அவ்வளவு பெரிய பரப்பு. பச்சைப்பசேலென மரக்கூட்டம். அங்கே அலைந்து திரியும் பறவைக்கூட்டம். அங்கே மரங்களில் மயில்கள்கூடக் காணப்பட்டன.
படமெடுக்கிறோமென்றதும் வெட்கப்பட்டுப் பறந்தது மயில்!


அருமையான கட்டிட அமைப்பும்,ஏகப்பட்ட இடவசதியுமாக இருக்கும் கல்லூரி, இன்று அரசின் பராமரிப்பில் களையிழந்துபோயிருப்பது மறுக்கமுடியாத உண்மை.

கல்லூரிக்குள் பட்டொளி வீசிப் பறந்த சுதந்திரக் கொடி...

 

நம் முன்னாள் பிரதமர் நேரு அவர்களால் நடப்பட்டு இன்று கிளைவிரித்து நிற்கும் அரசமரம்...வள்ளல் கட்டிய கல்லூரி இன்று அரசின் வசப்பட்டாலும், அங்குள்ள மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவேண்டுமென்று முடிவெடுத்து, நீரைச் சுத்திகரிக்கும் (RO Water Purification Plant) அமைப்பைக் கல்லூரிக்கு வழங்கினர் அன்று வந்திருந்த மாணவர்கள். கால்நூற்றாண்டு கழிந்தாலும் கல்லூரியின்மேல் கொண்டிருக்கும் பாசத்தின் வெளிப்பாடு அது.

செட்டிநாட்டு விருந்தும், சிறப்பான கலைநிகழ்ச்சிகளுமாகக் கழிந்தது அன்றைய தினம். புறப்படுகையில் மீண்டும்,எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ என்ற பாடல் வரிகள் நிச்சயமாக ஒவ்வொருவர் மனதிலும் ஓடியிருக்கும்.

கல்லூரி வளாகத்தைவிட்டுப் புறப்பட்டோம்.

புறப்படுகையில் கண்ணில்பட்டது கல்லூரி மாணவர்கள் கரும்பலகையில் எழுதியிருந்த வாசகம்...அந்த உறுதிமொழியை உள்ளத்திலிருத்திக்கொண்டு "அப்படியே ஆகட்டும்" என்று ஆசைப்பட்டபடி வள்ளலின் மண்ணைவிட்டுப் புறப்பட்டோம்.


9 comments:

 1. nice post!!!

  beautiful pics!

  thanx for sharing yr experience!

  ReplyDelete
 2. நன்றி அனானி அவர்களே!

  (நல்லாத்தானே சொல்லியிருக்கீங்க...அப்புறம் எதுக்கு கண்ணாமூச்சி?)

  ReplyDelete
 3. முதன் முதலாக வலைதளத்தில் நான் பார்த்த படித்த இந்த காரைக்குடி என்ற வார்த்தை உள்ளே வரவழைத்ததால் படித்து முடித்ததும் இன்ப அதிர்ச்சி.

  மிக சிறப்பாக படைத்து உள்ளீர்கள்.

  கலைக்கல்லூரியில் பயின்றவன்.

  மனதில் நீண்ட நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக தள்ளிப்போய்க்கொண்டு இருக்கிறது.

  20 வருடங்கள் கடந்து விட்டது.

  சிக்ரி என்ற நிறுவனம் காரைக்குடி வந்தமைக்கும், இது போன்ற ஒரு காரணம் உண்டு தெரியுமா?

  வாழ்த்துக்கள்.

  (நல்லாத்தானே சொல்லியிருக்கீங்க...அப்புறம் எதுக்கு கண்ணாமூச்சி?) இது மிகவும் ரசித்தது.

  ReplyDelete
 4. முதல் வருகைக்கு முதலாவதாக நன்றி ஜோதிஜி அவர்களே!

  சிக்ரி யைக் காரைக்குடியில் அமைப்பதற்காக அழகப்பச் செட்டியார் முந்நூறு ஏக்கர் நிலத்தைக் கொடுத்ததோடு பதினைந்து லட்ச ரூபாயும் நன்கொடையளித்தாராம்.

  இதுவும் நான் அங்கு தெரிந்துகொண்ட செய்திதான்.

  //நல்லாத்தானே சொல்லியிருக்கீங்க...அப்புறம் எதுக்கு கண்ணாமூச்சி?)

  இது மிகவும் ரசித்தது.//

  பின்னே, சொல்றதைச் சொல்லிட்டு யார்ன்னு சொல்லாம போகும்போது எரிச்சல் வருதுல்ல :)

  ReplyDelete
 5. வள்ளல் அழகப்பா கல்லூர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
  அழகான படங்களுடன் விரிவான உங்கள் பதிவு மூலம் மேலும் அறிய முடிந்தது. மகிழ்ச்சி

  ReplyDelete
 6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர்!

  ReplyDelete
 7. அழகிய புகைப்படங்களுடன் நல்ல இடுகை..

  [பின்னே, சொல்றதைச் சொல்லிட்டு யார்ன்னு சொல்லாம போகும்போது எரிச்சல் வருதுல்ல[

  நான் யாருன்னு சொல்லிட்டேன் மேடம், நான்தான் மலிக்கா

  ReplyDelete
 8. நீங்கதான் உங்க பேரையும் அன்பையும் சேர்த்தே சொல்லிட்டீங்களே...

  அப்புறம் எந்தப் பிரச்சனையும் இல்லை மலிக்கா :)

  ReplyDelete
 9. அன்பு சுந்தரா, நீங்கள் காரைக்குடி சென்றீர்களா.
  அங்கெ அழகப்பா நகர் தபால் ஆபீசில் அப்பா தலைமை அதிகாரியாக இருந்தார். கலைகல்லூரியின் ,ஹாஸ்டலுக்கு எதிராப்போல் இருக்கும். 1968லிருந்து 73 வரை அங்கெ தம்பியும் கல்லூரிப் படிப்பை முடித்தான். இனிமையான் நினைவுகளை அளித்திருக்கிறீர்கள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails