Tuesday, December 21, 2010

செஞ்சுபாருங்க....சூப்பர் பிரெயின் யோகா!!!


சாதாரணமாகச் செயல்படுகிற மூளையைச் சூப்பர் பவர் மூளையாக வேலைசெய்யவைக்கணுமா? மனதை ஒருமுகப்படுத்தி, படிப்பில் நல்லமதிப்பெண்கள் வாங்கணுமா? வலதுபக்க மூளை இடதுபக்க மூளை இரண்டையும் செயல்படவைக்கணுமா?

ஞாபகசக்தியை அதிகப்படுத்தணுமா? மன அழுத்தத்தைக் குறைத்து, மூளைத்திறனை வெளிப்படுத்தி, வெற்றிகளை அடையணுமா? Autism, Alzheimer போன்ற நோய்களிலிருந்து எளிதில் விடுபடணுமா?

ரொம்ப சிம்பிள்...எளிதான இந்த சூப்பர் பிரெயின் யோகாவைச் செய்தால் மேலேசொன்னதெல்லாம் எல்லாம்  எளிதில் நடக்கும்.

இங்க பாருங்க...Super brain yoga வை இவங்க எப்படிச்செய்றாங்கன்னு :)இதையே, சட்டுன்னு காதைப்பிடிச்சுப் பட்டுன்னு பத்து தோப்புக்கரணம் போடுன்னு வீட்ல யாராவதுசொன்னா, நாம போடவாபோறோம்? ஆனா, அதையே சூப்பர் பிரெயின் யோகான்னு சொல்லி, அடுத்த நாட்டுக்காரன் சொல்லிக்கொடுத்தாதான் , ஆஹா நம்ம வித்தையே நமக்கே கத்துக்குடுக்கிறாங்களேன்னு ஆச்சரியப்படுவதோடு மட்டுமில்லாம, நாமளும் செஞ்சுபார்ப்போமேன்னு ஒரு நினைப்பும் மனசுல வருது...இல்லே?

இந்த யோகாவை, அதாங்க தோப்புக்கரணத்தை, பிள்ளையாரை நினைச்சுக்கிட்டும் போடலாம், பள்ளிக்கூட நாட்களை நினைச்சுக்கிட்டும் போடலாம். எப்படிப்போட்டாலும் இது நிச்சயம் பலன்கொடுக்கும். ஆக, மூளையின் சிறப்பான செயல்பாடு மூணே நிமிஷங்களில் கிடைக்குதுன்னா, இதை வேணாம்னு சொல்லமுடியுமா என்ன?  :)Tuesday, December 14, 2010

நீயா கொண்டுபோனாய் நிமோனியா??!2009 ம் வருஷம்...விடுமுறைக்கு இந்தியாவந்தபோது, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் முதல் ஃபோன்கால்... என் தங்கையிடமிருந்து... அதாவது என் சித்தி மகளிடமிருந்து. "அக்கா, வந்துட்டீங்களா? ஒருவருஷம் ஆச்சு உங்க எல்லாரையும் பார்த்து. எப்ப சென்னை வருவீங்க? இப்பவேயிருந்து நான் உங்களுக்காக வெய்ட்டிங்" என்று அப்பழுக்கில்லாத அவள் பாசத்தால் என்னையும் என் பிள்ளைகளையும் நனைத்தாள்.

அவளுக்கு அப்போது வயது 21. திருமணம் முடிந்து நாலைந்து மாதங்களே ஆகியிருந்தது. முந்திய விடுமுறைக்குப் போனபோது, என்னையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்னையைச் சுற்றிவந்தவள், அந்தமுறை நான் சென்னைக்குப் போனபோது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அது தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவிக்கொண்டிருந்தநேரம். நுரையீரல் முழுக்கச் சளி படர்ந்திருக்கிறதென்றும் காய்ச்சல் அதிகமாக இருக்கிறதென்றும் சொல்லி அதற்கான ட்ரீட்மென்ட் நடந்துகொண்டிருந்தது. ஆஸ்பத்திரியில் சென்றுபார்க்கவும் அனுமதிக்கவில்லை. அவளைப் பார்க்கவென்றே சென்னையில் அவள் வீட்டுக்குச் சென்றுவிட்டு, அவளைப் பார்க்கமுடியாமல் திரும்பிவந்தது மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.

நெல்லை எக்ஸ்பிரசில் ஊருக்கு வந்துசேர்ந்து, உட்காரக்கூட இல்லை... சென்னையிலிருந்து ஃபோன். மருத்துவமனையிலிருந்த என் தங்கை இறந்துவிட்டாளென்று. நம்பவேமுடியாவிட்டாலும் அன்றைக்கு நடந்தது நிஜம். அவள் கணவனும் குடும்பமும் துடித்த துடிப்பு இன்னமும் தீரவில்லை. இன்றைக்கும் அவள் பெயரைச்சொன்னாலே மனசு பதறத்தான்செய்கிறது, அன்பான உரிமையான ஒரு உறவை இழந்துவிட்டோமென்று.

அந்தச் சம்பவத்துக்கு நிகரான இன்னொரு சம்பவம், நாலைந்துநாள் முன்பு என் மகளின் பள்ளியில் நடந்தது. பத்தாவது படித்துக்கொண்டிருந்த பெண். அதே நுரையீரல் இன்ஃபெக்ஷன், அதிகப்படியான காய்ச்சல் காரணமாக இறந்துபோனாள். ஃபேஸ்புக்கில் அந்தப் பெண்ணுக்கான அஞ்சலிகள் குவிந்திருக்க, அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்தபோது எனக்கே மனசெல்லாம் நடுநடுங்கிப்போனது. இப்படியொரு மகளை இழந்து அந்தப் பெற்றோர் எத்தனை கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கநினைக்க இப்போதும் நெஞ்சு பதறுகிறது.

இங்கே சம்பந்தப்பட்ட இரண்டுபேரின் இறப்புக்கும் காரணம், நிமோனியா என்கிறார்கள். நுரையீரலில் பாக்டீரியா, வைரஸ்,ஃபங்கஸ் அல்லது பூஞ்சைத் தொற்றினால் ஏற்படக்கூடிய வியாதி இது. சாதாரண சளித்தொந்தரவுபோல, காய்ச்சல், இருமல்,நெஞ்சுவலி, மூச்சுவிடுவதில் சிரமமென்று ஆரம்பித்து கிருமிகளின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல்போனால், கடைசியில் உயிரிழப்பும் ஏற்பட்டுவிடுகிறது.

உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் பத்துலட்சம்பேர் நிமோனியாவால் உயிரிழக்கிறார்களாம். அதில் 25% பேர் இந்தியர்கள். இந்தியாவில் ஒருமணி நேரத்துக்கு 45 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழக்கிறார்கள் என்று தெரிந்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இதில் அநேகக் குழந்தைகள் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள்.

கிருமித்தொற்றைத் தவிர்த்து, ஊட்டச்சத்துக் குறைவு, நோய் எதிர்ப்பு சக்தியின்மை, மாசுபட்ட காற்றைச் சுவாசித்தல் இவையெல்லாம் நிமோனியாவை உண்டுபண்ணும் முக்கியமான காரணிகள். நுரையீரல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், இரத்தப் பரிசோதனையின் மூலமும், எக்ஸ்ரே மூலமும் இந்த நோயை அறிந்துகொள்ளமுடியும்.

ஆரம்பக்கட்டத்தில் கண்டறியப்பட்டால் நிமோனியா நோயை எளிதில் குணப்படுத்திவிடலாம் என்கிறார்கள். சாதாரண காய்ச்சலும் சளியும்தானே, என்று அலட்சியமாக எடுத்துக்கொண்டு சுயமருத்துவம் செய்வதை விட்டுவிட்டு, சளித்தொந்தரவு அதிகமாயிருக்கும்பட்சத்தில் உடனே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

ஆகமொத்தம், எல்லா நோய்களுக்கும் காரணம் நோய் எதிர்ப்புசக்திக் குறைவுதான். அது நல்லா இருந்தா எல்லா நோயையும் இல்லாமப் பண்ணிடலாம். ஆனா, அது இல்லாம இருந்தாலோ, உள்ள நோயெல்லாம் உடம்புக்குள்ள குடியேறிடும்.

அதனால, எந்த நோயும் வந்தபின் வருத்தப்படுவதைவிட, வருமுன் காத்தல் மிகவும் சிறந்தது. அதனால் சுகாதாரமான வாழ்க்கைமுறையையும், சத்துள்ள உணவுப்பழக்கத்தையும் கடைப்பிடித்தல் மிகமிக அவசியம்.

நிமோனியாவைப்பற்றி இன்னும் அதிகம் அறிந்துகொள்ள இங்கே பாருங்க...

படம் : இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.


Monday, December 13, 2010

அறை எண் ஐம்பத்தாறும் அக்காவின் பாசமும்!


 குழந்தைக்குத் திருச்செந்தூரில் முடியெடுத்துக் காதுகுத்தப்போறதா கதிரேசன் நாலுநாள் முன்னாடியே வந்து அழைச்சிட்டுப் போயிருந்தான். செல்வியும் அவள் கணவன் சண்முகமும் காலையிலேயே திருச்செந்தூருக்கு வந்துட்டாங்க.  மொட்டையடிச்சிட்டு வந்து, காதுகுத்தப் போகும்போது, தன் மகளுக்கு, அக்கா செல்வி வாங்கிட்டு வந்த கம்மலை  வச்சுத்தான் காதுகுத்தணும் என்று சொன்னான் கதிரேசன். செல்விக்கும் சண்முகத்துக்கும் மெத்தச் சந்தோஷமாயிருந்தது.

மதியம் மணி ஐயரில் சாப்பிட்ட கையோடு,  வந்திருந்த உறவுக்காரங்கல்லாம் ஆளாளுக்குக் கிளம்ப ஆரம்பிச்சாங்க. ஆளுக்கொரு ஸ்வீட் பாக்கெட் வாங்கிக்கொடுத்து, வழியனுப்பிவைத்தான் கதிரேசன். "அக்கா, நீயும் அத்தானும் வீட்டுக்கு வந்துட்டுத்தான் போகணும்" என்றான் செல்வியிடம்.

"இல்ல, கதிரேசா... நானும் அத்தானும் இங்கேருந்து அப்டியே பழனிக்குப் புறப்படுறோம். பழனிலேர்ந்து வந்ததும் பஞ்சாமிர்தத்தோட வீட்டுக்கு வாரேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாங்க செல்வியும் சண்முகமும்.

"செல்வி, பழனிக்கு விடிகாலை மூணு மணிக்கு ஒரு பஸ் இருக்கு. அதுல புறப்பட்டா வசதியா இருக்கும்.  அதனால, இங்கயே ஒரு ஹோட்டல்ல தங்கி ரெஸ்ட் எடுத்துட்டுக் கிளம்பலாம்" என்றார் சண்முகம். சரியென்றாள் செல்வி.

கோவிலுக்குப் பக்கத்திலேயே அறைகள் இருந்தது. ஆனா, ஒண்ணொண்ணும் ரொம்ப வித்தியாசமாத் தெரிஞ்சுது. முதலில் இருந்த விடுதிக்குள் நுழைஞ்சாங்க ரெண்டுபேரும்.  ரிசப்ஷனில் இருந்தவனின் தோற்றம், ஏதோ திரைப்படத்தில் பார்த்த ஆதிகால மனிதனை நினைவுபடுத்தியது செல்விக்கு.

பேர் விலாசம் எழுதிக்கொண்டபின், சாவியைக் கையில் கொடுத்து உதவியாளரையும் கூட அனுப்பிவிட, உதவியாள் கதவைத் திறந்து லைட்டைப் போட்டான். அறையின் ஓரத்தில் கட்டிலும், அருகில் ஒரு மேஜை நாற்காலியும் இருந்தது. அறையின் சுவர்களில் ஒன்றிரண்டு ஓவியங்கள். ஒவ்வொன்றும் தன்னையே உறுத்துப் பார்க்கிறமாதிரி இருக்க, முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள் அவள். செல்வியின் கண்கள் அறையின் மிச்சப்பகுதியைச் சுற்றிவந்தபோது, கட்டிலுக்குப் பக்கத்தில் பளபளப்பாய் ஏதோ தெரிந்தது. ஒரு அடி முன்னே சென்று பார்த்தவள், "ஐயோ பாம்புங்க..." என்று அலறினாள் அவள்.

சுவரோரமாய்ச் சுருண்டிருந்தது அந்தப் பாம்பு. குறைஞ்சது ஆறடியாவது இருக்கும். விடுதி உதவியாளர் குரல்கொடுக்க, ஒன்றிரண்டுபேர் ஓடிவந்து பாம்பை அடித்தார்கள். " வேணாங்க...நமக்கு இந்த ரூம் வேணாங்க..." என்று கணவனின் காதில் பயத்துடன் முணுமுணுத்தாள் செல்வி. "இன்னும் ஆறேழு மணிநேரம் இங்க இருக்கப்போறோம். அதுக்காக இன்னொரு இடம் தேடணுமா? இதெல்லாம் சின்ன  விஷயம்...மறந்துரு" என்றார் சண்முகம்.

அதற்குள் ரிஷப்ஷனில் இருந்தவர் அவர்களை அழைத்து, மன்னிப்புக் கேட்டுவிட்டு, வேறொரு அறையின் சாவியைக் கொடுக்க, அந்த அறையில் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டபின் உள்ளே நுழைந்தாள் செல்வி. அதற்குள் வீட்டிலிருந்து மகள் மஹாலட்சுமி செல்ஃபோனில் அழைக்க, நடந்ததை மகள்கிட்ட சொன்னாள் செல்வி. அறைக்குள் சிக்னல் சரியாகக் கிடைக்காமல் தொலைபேசி இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

செல்வியின் கணவருக்கு ஏற்கெனவே பிளட் பிரஷர் உண்டு. அவர், செல்வி, நான் வெளிய போயி மஹா கிட்ட பேசிட்டு, அப்டியே எனக்கு பிரஷர் மாத்திரையும் வாங்கிட்டு வந்திர்றேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். கதவைச் சாத்திவிட்டுப் படுக்கையில் படுத்தாள் செல்வி.

அறையின் மேற்பரப்பு வித்தியாசமாக இருந்தது ஒரு மரம் விரிந்து நிழலாயிருப்பதுபோல இருந்தது. வரைந்திருக்கிறார்களோ என்று உற்றுப்பார்த்தாள் செல்வி. மரம் அசைகையில் இடைவெளியில் வானம்கூடத் தெரிந்தது. அப்போதுதான் தெரிந்தது அவளுக்கு. அறையின் விதானம் முழுவதும்,அடர்த்தியான கண்ணாடியென்று. அட, இப்படிக்கூட இருக்குமா? என்று வியப்புடன் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

பத்து நிமிஷத்தில் வருகிறேனென்ற சண்முகத்தைக் காணவில்லை. அறைக்கு வெளியே போய்ப்பார்க்கலாம் என்று, வெளியேவந்து கொஞ்சநேரம் நின்றாள் அவள். சண்முகம் வரவில்லை. கதவைப்பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று பார்க்கலாமென்று புறப்பட்டாள். அறை வாசலிலிருந்து மூன்றுபக்கமும் பாதை இருந்தது.  வரும்போது, எந்தப் பாதையில் வந்தோமென்று அவளுக்கு நினைவில்லை. ஏதாவது ஒரு பாதையில் போவோமென்று எதிரில் இருந்த பாதையில் போனாள் செல்வி.

வளைவில் மாடிப்படிகள் தெரிந்தது. ஆனால், கைப்பிடிச்சுவர் இல்லை.
அட, இதுகூட புதுமாடலா இருக்குதே என்று வியந்தபடி, இறங்கத்தொடங்கினாள். பிடித்துக்கொள்ள மேலே வலைப்பின்னல்போன்ற அமைப்பு இருந்தது. அதைப் பிடித்துக்கொண்டு இறங்கியவளின் பிடி சட்டென்று நழுவியது. படிக்கட்டில் அலறியபடியே வேகமாக உருண்டாள் அவள். பத்துப்பதினைந்துபேர் ஓடிவந்தார்கள். அவர்களில் சண்முகமும் இருந்தார்.

"கொஞ்சநேரம் அறைக்குள்ள இருக்கமுடியலியா உனக்கு..." என்றபடி அவளை எழுப்பிவிட்டார் சண்முகம். படபடப்பில் கண்கள் இருண்டது செல்விக்கு. "சரிசரி, உடம்பெல்லாம் வேர்த்துப்போயிருக்கு இப்படி உக்காரு..." என்றபடி, அருகிலிருந்த  இருக்கையில் உட்காரவைத்தார். அதிலிருந்தும் நழுவி விழப்போனவள் "ஐயோ..." என்றபடி எழுந்து, கணவனின் கையைப் பிடித்தாள்.

என்ன ஆச்சு செல்வி...என்னாச்சு?  என்றபடி அவளின் தோளைத்தொட்டு உலுக்கினார் சண்முகம். "ஒண்ணுமில்லீங்க..." என்றபடி முகத்தைத் துடைத்துவிட்டுச், சுற்றும்முற்றும் பார்த்தாள் செல்வி. தன் வீட்டுக் கட்டிலில்தான் இருக்கிறோம் என்று தெளிவானது அவளுக்கு. "எப்பவும்போல ஏதாவது கனவா?" என்று சலிப்புடன் கேட்டுவிட்டுத், திரும்பிப்படுத்தார் சண்முகம்.

தான் கண்டது கனவுன்னு நம்பவே முடியவில்லை செல்விக்கு.  தம்பி கதிரேசனைப் பார்த்தேனே கனவில்... என்னைக்கூட வீட்டுக்குக் கூப்பிட்டானே அவன்...ஏன் திடீர்ன்னு இப்படியொரு கனவு? அவனை நினைக்கக்கூட இல்லியே...

கதிரேசனுக்கும்  சண்முகத்துக்கும் மனசு கசந்துபோய் ஆறேழு வருஷமாச்சு. திடீர்ன்னு அவன் ஏன் கனவில் வந்தான்? அவனுக்கு ஏதாச்சும் கஷ்டமாயிருக்குமோ?  அம்மாவைக் கூப்பிட்டு விசாரிப்போமா என்று நினனத்தாள் அவள்.  ஆனால், மணி இரவு மூன்று. அம்மாவைக் கூப்பிட்டா நிச்சயம் பயந்து போவாங்க. தன்னுடைய தவிப்பைச் சண்முகத்திடம் கேட்கவும் பயமாயிருந்தது அவளுக்கு. ஆனாலும் முடியவில்லை...

மெல்ல அவரின் தோளைத் தொட்டுத் திருப்பியவள் கேட்டாள், "ஏங்க, கனவுல பாம்பு வந்தா கெட்டது நடக்கும்னு சொல்லுவாங்களே...அது நிஜமா? என்றாள் தயக்கமாய். "அம்மா தாயே, இப்பிடி, என்னைத் தூங்கவிடாம உயிரை எடுத்தேன்னா, நிச்சயம் கெட்டது நடக்கும். மனுஷனை ராத்திரிக்கூடத் தூங்கவிடாம தொணதொணன்னு கேள்வி கேட்டுக்கிட்டு...சத்தமில்லாம படுப்பியா..." என்றபடி, திரும்பிப் படுத்துக்கொண்டார் சண்முகம். 

"இது என்ன கனவு? நல்லதா, கெட்டதா? கெட்டதாயிருந்தா கனவுக்கு ஏதும் பின்விளைவு இருக்குமோ? கடவுளே, கதிரேசனுக்கு எந்தக் குறையும் வரக்கூடாது" என்று அவளையுமறியாமல் வேண்டிக்கொண்டது மனசு. சுவர்க்கடிகாரம் மணி நான்கு என்று காட்டியது. கண்களை இறுகமூடினாலும் அந்தக் கனவும் கதிரேசனுமே வந்துவந்துபோக, விட்டத்தைப் பார்த்தபடி கொட்டக்கொட்ட விழித்திருந்தாள் செல்வி.

Sunday, December 12, 2010

காப்பி பேஸ்ட் களவாணிகள்!


கம்ப்யூட்டர் விண்டோவைப் பார்த்துப்பார்த்து கண்ணும் பூத்துப்போச்சு...கழுத்துவலி முதுகுவலின்னு கஷ்டமும் கூடிப்போச்சு. ஆனா, என்னதான் வருத்தம்வந்தாலும், தன்னுடைய பதிவுகளைப் படித்து ரசித்து நாலுபேர் பின்னூட்டமிடும்போது, தன்னோட எல்லாவலியும் தீர்ந்துப்போனதுபோல் உணர்வதாகத்தான் சொல்கிறார்கள் அநேகப் பதிவர்கள்.

ஆனா, இப்படி மண்டையைக் குடைந்து மூளையைக் கசக்கி,உணர்வுகளை உருக்கி எழுதப்படுகிற விஷயங்களை உறுத்தலின்றிக் களவாடிப் பேர்வாங்க நினைக்கிறாங்க கள்வர்கள் சிலர். சட்டுன்னு காப்பியெடுத்து பட்டுன்னு பேஸ்ட்பண்ணி பெருமையடையணும்னு அவ்வளவு ஆசை.

எனக்குத்தெரிந்து, முதலில்,சமையல் அட்டகாசங்கள் ஜலீலாவின் பதிவுகள் பிரபல பத்திரிகையொன்றில் அப்படியே திருடி வெளியிடப்பட்டிருப்பதாகச் சொல்லியிருந்தாங்க.அது அநேகருக்குத் தெரிந்திருக்கும். அதேபோல, இன்றைக்கு பதிவுலகில் பாபு என்பவருடைய பதிவைத்திருடி இன்னொரு பிரபல பத்திரிகை வெளியிட்டிருக்கிறதாகப் படிக்கநேர்ந்தது.

சொந்தப்படைப்புகளின்றி, அடுத்தவர்களின் படைப்புகளை இதுமாதிரி எடுத்து வெளியிடும்போது இது இன்னாருடைய படைப்பு என்ற சின்ன ஒரு குறிப்போட வெளியிடலாமே... இதனால் எழுதியவருக்கும் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.

ஊரான்வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு எங்க ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க. அலுங்காம அடுத்தவன்பொருளை அபகரிப்பதைக்குறிக்கவே இப்படிச்சொல்லுவாங்க. ஜலீலாவோட சமையல் குறிப்பைத் திருடி, தன்னோட சமையல் வலைப்பக்கத்தில் வெளியிருட்டிருந்த ஒருத்தர், தன் தளத்தில் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார், தான் தூத்துக்குடி மண்ணின் மைந்தன் என்று. அவர், பிறந்த மண்ணுக்குப் பெருமைசேர்க்கிற லட்சணம் அப்படி.

போன வாரத்தில் பதிவுலக சகோதரரொருவரின் கவிதைகள் அப்படியே களவாடப்பட்டு வெளியிட்டிருப்பதாகப் படித்துவிட்டு, அந்தத் தளத்துக்குப்போனால், அந்தம்மா அதைவிட அதிபுத்திசாலியாகி, திருட்டு வெளியானதும், தன்னோட வலைப்பக்கத்தை அழைக்கப்பட்டவங்கமட்டும் பார்க்கிறமாதிரி மாற்று ஏற்பாடுசெய்திருந்தாங்க. இன்னார் பெரிய எழுத்தாளர் என்று தன்னோட ஜால்ராக்களை நம்பவைக்க மக்கள் எப்படியெல்லாம் மெனக்கெடுறாங்கபாருங்க.


ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக்காட்சி ஒன்றில் தான் வாங்கிய குளிர்பானத்தைப் பாதி குடித்துவிட்டு வடிவேலு வைக்க, அது குப்பைத்தொட்டியில் தவறி விழுந்துவிடும். அது தெரியாத வடிவேலு, பக்கத்தில் அதே குளிர்பானத்தைக் குடிச்சிக்கிட்டிருந்த சிங்கமுத்துவைப்பார்த்து கன்னாபின்னான்னு திட்டிருவார். அதுக்கு கடைசியில் சிங்கமுத்து சொல்லுவார், இனிமே காசுகுடுத்து எப்ப குளிர்பானம் வாங்கினாலும்கூட, நீ திட்டினதுதானேய்யா நினைவுவரும்ன்னு அவரோட சண்டை போடுவார்.

அங்கே, அது தன்னோடதாயிருக்குமோ என்ற சந்தேகத்திலேயே அந்தத் திட்டுத் திட்டுவார் வடிவேலு. ஆனா, இங்கே தன்னோடதையே திருடியிருக்காங்கன்னு தெரிஞ்சாலும் என்னசெய்வதென்று திகைத்து நிற்கிறது பதிவுலகம். இதுக்குக் கட்டாயம் ஒரு முடிவு வேணும். இனிமே திருடக்கூடாதுன்னு அவங்க நினைக்கிறமாதிரி தீர்வு ஒண்ணு வேணும்.

இப்படிப்பட்ட திருட்டுகளைத் தடுக்கவும், திறமையுள்ளவர்களின் படைப்புகளுக்கு அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவும் போராடவேண்டியது பதிவர்களாகிய நம் அனைவரின் கடமையுமாகும்.


Thursday, December 9, 2010

"ஆ" வெஜ் கட்டிங்!!!

சின்னதிலிருந்து எப்பவுமே இந்த கட்டிங், வெட்டிங்ன்னாலே எனக்கு பயம்தான்.
வளைவா அருவாமணையை வச்சுக்கிட்டு விறுவிறுன்னு காய் நறுக்குற சித்தியையும் பெரியம்மாவையும் அப்போ வச்சகண்ணு வாங்காம பாத்திட்டிருப்பேன்.

எனக்கென்னவோ அந்த ஆயுதத்தைப்பார்த்தா, ஏதோ கொலைகாரப்பறவை ஒண்ணு குத்தவச்சு உக்கார்ந்திருக்கிறமாதிரியே தோணும். அந்த ஆயுதத்தைவச்சு அத்தனை காய்களையும் வெட்டித் த்வம்சம் பண்ற அத்தனைபேரும் என்னைப்பொருத்தவரை வீரிகள்தான் ((வீரனுக்குப் பெண்பால் ;) )இன்னமும்கூட என்வீட்டில் அருவாமணை இல்லாததுக்கும் என்னோட இந்த  பயம்தான் காரணம்.ஏதோ கத்தியும், வெஜிடபிள் சாப்பருமா (chopper) காலத்த ஓட்டிக்கிட்டிருக்கேன்.

என் கல்யாணத்துக்குக் கொஞ்சநாள் முன்னாடி, பத்திரிகை கொண்டுவந்தாங்க என் மாமியார் மாமனாரும், மற்றும் சில உறவுக்காரங்களும். எங்கவீட்டு உறவுக்காரங்களும் வீட்டில் இருந்தாங்க. முட்டைக்கோஸ் பொரியலுக்கு முழுசுமுழுசா மூணு கோஸ்கள் உட்கார்ந்திருக்க, என் பெரியம்மா பொண்ணு, என் தங்கச்சி, முட்டைக்கோஸை நான் நறுக்குறேன்னு சொன்னா.

அதுக்கு நான், ராஜி, நீ ஏதாவது கத்தரிக்காய், உருளைக்கிழங்கு இருந்தா நறுக்கு... முட்டைக்கோஸெல்லாம் உனக்கு ஒத்துவராதுன்னு சொல்ல, ஆஹா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்காக இப்பவே அக்கறையான்னு என்னைக் கலாய்ச்ச அவ, அருவாமணையும் சொளவுமா(முறத்தை எங்க ஊர்ல சொளவுன்னுதான் சொல்லுவோம்) என்கிட்டவந்து உட்கார்ந்தா.

பத்துப்பதினைஞ்சு நிமிஷம்தான் இருக்கும் மொத்த முட்டைக்கோஸையும் சீவித்தள்ளிட்டா. அப்படியே முல்லைப்பூவைக் காம்பிலிருந்து உதிர்த்தமாதிரி எல்லாமே ஒரேமாதிரி சிறுசிறுதுண்டுகளா இருந்தது. அது எப்படின்னு கேட்கிறீங்களா? முட்டைக்கோஸை முழுசா கழுவி எடுத்துக்கிட்டு அருவாமணையால அதை மாறிமாறிக் கொத்திவிட்டுட்டு, அப்புறம் அதே அருவாமணையால அதைச் கொஞ்சம்கொஞ்சமா சீவிவிட்டா, பொடிப்பொடியா உதிருது முட்டைக்கோஸ். இப்படி பக்கம்பக்கமா சீவி பத்துப்பதினைஞ்சு நிமிஷத்துல முடிச்சிட்டா. அன்றைக்கு முட்டைக்கோஸ் பொரியல் சாப்பிட்ட எல்லாரும் நிஜமாவே ஆச்சர்யப்பட்டாங்க.( ஒருவேளை மருமகப்பொண்ணுதான் நறுக்கியிருக்கும்னு மனசுக்குள்ள நினைச்சாங்களோ என்னவோ :))

என்னைப்பயமுறுத்தின அந்த ஆயுதம், என்னமா உட்கார்ந்திருக்குது பாருங்க....

 

இது அதோட புது வெர்ஷன்...


ஆனா, கல்யாணமாகிப்போன ஒரே வாரத்தில், மாமியாரின் கிராமத்தில், எனக்கும் ஒரு கட்டிங் சோதனை வந்திச்சு. அருவாமணையாவது பரவாயில்லை. அங்கே, வளைவா ஒரு அருவா (பாளையருவான்னு சொல்லுவாங்களோ?) மட்டும் குடுத்து, பத்து இருபதுபேர் சமையலுக்கு, வெங்காயம் நறுக்கச்சொன்னாங்க.(என்னை சோதிச்சுப்பாத்தாங்களோ என்னவோ...)

நல்லநாள்லயே நமக்கு இதெல்லாம் ஆகாதே, என்னே எனக்குவந்த சோதனைன்னு நொந்துகிட்டே, என் நாத்தனாரைக்கூப்பிட்டு,வீட்ல கத்தி இருக்கான்னு கேட்டேன். இருக்குது அண்ணின்னு, எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தா அவ. பார்க்கக் கூர்மையா இருந்திச்சு, ஆனா,வெட்டிப்பாத்தா மொட்டையோ மொட்டை.

வீட்ல, கத்தியும் கட்டிங் போர்டுமாக கொஞ்சம்கொஞ்சம் பழகியதுகூட எனக்கு அப்ப மறந்துபோனதுபோல ஆயிருச்சு. மொத்த வெங்காயத்தையும் கஷ்டப்பட்டு, உரிச்சுமட்டும் வச்சேன். என்னைப்பாக்க எனக்கே பாவமா இருந்துச்சு. அதுக்குள்ள ஆபத்பாந்தவியா அங்கவந்த என் அண்ணி, ஏம்மா அவகிட்டபோய் காய் நறுக்கச்சொல்லியிருக்கே...கொஞ்சநாள் அவ எல்லாத்தையும் வேடிக்கைபாக்கட்டும்ன்னுசொல்லி, அதை அவங்க வாங்கி, கடகடன்னு நறுக்கி, என் கண்ணுல கண்ணீர் வரவச்சுட்டாங்க.

அது வெறும் வெங்காயக்கண்ணீர்மட்டும் இல்லைங்க...ஆனந்தம், நன்றி எல்லாம் சேர்ந்த நெகிழ்ச்சிக் கண்ணீரும்தான்.

இப்படியே கடந்துவந்த கட்டிங் சரித்திரத்தில, முழு வாழைக்காயை வெட்டி, மூணு பஜ்ஜிபோட்ட கதையையும், வெள்ளை முள்ளங்கியை வெட்டுறேன்னு கிளம்பி, சிவப்பு முள்ளங்கியாக்கிய சோகக்கதையையும் சொன்னா...வேணாம் உங்க மனசு தாங்காது. அதனால, எல்லாத்தையும் இத்தோட நிறுத்திக்கிறேன் :)

பி.கு :- கொடுமையான ஆயுதங்களைப்பற்றிய இந்தப்பதிவை, முந்திய பதிவில், "அடுத்த சண்டை எப்போ?"ன்னு ஆசையாய்க் கேட்ட பாரத் பாரதிக்கு டெடிகேட் பண்றேன் :) என்னைமாதிரியில்லாம, நீங்கல்லாம் இப்பவே உங்க கட்டிங் 'திறமை'யைக் குறையில்லாம வளர்த்துக்கோங்க மக்கா :) :)

**************
Tuesday, December 7, 2010

உள்வீட்டுச் சண்டை!


ஏண்டா, வாணி வீட்டுக்குப் போனியா? வாசல்பக்கத்திலிருந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பா, பார்வையை உயர்த்திக்கேட்டார்.

ஆஹா, மாட்டிக்கிட்டமோன்னு, மனசு படபடத்தது அகிலுக்கு.

இல்லப்பா...வந்துப்பா...விளையாடும்போது, பந்துபோயி அவங்க பால்கனியில விழுந்துருச்சு. அதான், கொண்டுவந்து குடுங்கன்னு கேக்கப்போனேன்.

அப்போ, பந்தை வாங்கிட்டுப் பேசாம வந்துட்டே...அப்டித்தானே? சந்தேகக் கண்களோடு கொக்கிபோட்டான் சண்முகம், அகிலின் அப்பா.

நானாப் பேசலப்பா...வாணியக்காதான் வந்து பேசிச்சு. அரைப்பரிச்சை எப்படான்னு அவங்கம்மாவுக்குக் கேக்காம மெதுவாக் கேட்டுச்சு...நான் அடுத்த வாரம்னேன். அதுக்கு, பரிட்சைக்குப் படிக்காம பந்து விளையாடுறியாடா நீன்னு கேட்டுட்டு, காதைப் பிடிச்சுத் திருகிட்டே சிரிச்சுச்சு. அதுக்குக்கூட நான் பதிலே சொல்லலப்பா...அப்பாவியாய்ச் சொன்னான் அகில்.

அப்புறம், இந்தப் பச்ச மாங்காகூட, நானாக் கேக்கல. அக்காவாத்தான் ரெண்டு துண்டு குடுத்துச்சு. உச்சுக் கொட்டிக்கொண்டே சொன்னான் அகில்.

அதற்குள், காப்பியுடன் அங்கே வந்தாள் அகிலின் அம்மா.

புள்ளைகிட்ட என்ன புலன் விசாரணை நடக்குது? என்று சந்தேகமாய்ப் பார்க்க, ஒண்ணுமில்ல புனிதா, அரைப் பரிச்சை லீவுக்கு அம்மாச்சி வீட்டுக்குப் போகலாமான்னு கேட்டான்...அப்பாவுக்கு, ஆஃபீஸ்ல வேலையிருக்கு. நீயும் அம்மாவும் போயிட்டுவாங்கன்னு சொன்னேன்...என்று சண்முகம் சொல்ல, காப்பாற்றிய அப்பா முகத்தையும், காப்பி ஆற்றிக்கொண்டிருந்த அம்மாவின் முகத்தையும் மாறிமாறிப்பார்த்தபடி, அங்கிருந்து மெதுவாய் நகர ஆரம்பித்தான் அகில். மகனின் கைகளைப் பிடித்து இழுத்துத் தன் மடியில் உட்காரவைத்துக்கொண்டான் சண்முகம்.

எப்பத்தான் உங்களுக்கு வேலையில்லாம இருந்திச்சு? என்னவோ பண்ணுங்க" என்று சலித்தபடி, உள்ளே போனாள் புனிதா. கேட்காத தூரத்துக்கு அவள் போய்விட்டதை உறுதிசெய்துகொண்டவனாய், மகனிடம் விட்டதைத் தொடர்ந்தான் சண்முகம்.   அக்காவைத் தவிர,வேற யாரையும் பாக்கலயாடா நீ? மகனின் கண்களை ஊடுருவினான் அவன்.

அப்பா, அதுவந்து...அதுவந்து...ஆச்சியையும் பாத்தேம்ப்பா...

ஆச்சியைப் பாத்தியா? என்னடா சொன்னாங்க ஆச்சி? உள்பக்கம் பார்த்துவிட்டு, மெதுவாகக் கேட்டான் சண்முகம்.

என் கன்னத்தைத் தொட்டு முத்தம் கொடுத்துட்டு, கண்ணத் தொடைச்சிக்கிட்டாங்கப்பா. அப்புறம், உங்க அப்பன் எப்பிடியிருக்கான்னு எங்கிட்ட மெள்ளமா கேட்டாங்கப்பா... என்றான் அகில்.

கண்கள் நிறைந்தது சண்முகத்துக்கு. வேறெங்கோ பார்த்தபடி சில நிமிஷங்கள் சண்முகம் பேசாமல் உட்கார்ந்திருக்கவே, அப்பா நான் போகவாப்பா? என்றான் அகில்.

இருப்பா, என்று மகனை இருத்திய சண்முகம், "தம்பி, இன்னும் ஒருதடவை அங்க பந்துபோய் விழுந்திச்சுன்னா, எங்க அப்பாவுக்கு, எப்பவும் அவங்க அம்மா நெனைப்பாவே இருக்காம்னு ஆச்சிகிட்ட சொல்லுப்பா... என்றபடி, வந்த கண்ணீரை மகனிடமிருந்து மறைக்க முயற்சித்தான் அவன்.

அப்பாவின் கவலைக்கு முழுசாக அர்த்தம் புரியலேன்னாலும், ஆச்சியைப் பார்த்தால் அது தீருமென்று விளங்கியது அகிலுக்கு. தன் கையிலிருந்த பந்தை அங்கிருந்தபடியே ஓங்கிஅடித்தான் அவன். தடுப்புச்சுவரைத் தாண்டிப்போய், அடுத்த வீட்டுத் தாழ்வாரத்தில் விழுந்தது அது.

யார்டா அது? வீட்டுக்குள்ள பந்தடிக்கிறது? வெளியே வந்து  குரல் கொடுத்தாங்க ஆச்சி.

அப்பாவைத் தூக்கிவிடச்சொல்லி, அந்தப்பக்கம் எட்டிப்பார்த்தபடி, 'நாந்தான் ஆச்சி' என்றான் அகில். அந்தப் பக்கமிருந்து பந்தும் பார்வையும் இந்தப்பக்கம் வந்துவிழ, பாசத்தைப் பரிமாறிக்கொண்டன பார்வைகள்.
 
அப்பாவின் முகத்தைத் திரும்பிப்பார்த்துச் சிரித்தான் அகில். பரிசாக, மகனின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான் சண்முகம்.


Sunday, December 5, 2010

இது, ரகசியமாய்ச் செய்யவேண்டிய விஷயம்!

இதை யாரும் செய்யலாம்...எப்பவும் செய்யலாம். ஆனா, சுத்திலும் யாரும் இல்லைன்னு உறுதிபண்ணிக்கிட்டுச் செய்யணும். ஏன்னா, உங்களப் பாத்த அதிர்ச்சியில, யாராச்சும்,பயத்தில நடுங்கிப்போகவோ,இல்லைன்னா, உங்களுக்கு புத்தி தடுமாறிப்போச்சுன்னு நினைக்கவோ சான்ஸ் இருக்குது.

முப்பது வயசுக்குமேல ஆயிட்டாலே முகத்தசைகள்ல சுருக்கம், தொய்வு ஏற்பட ஆரம்பிச்சிடும்னு சொல்லுவாங்க. நல்ல ரத்த ஓட்டம் கிடைச்சா இதெல்லாம் கொஞ்சம் தள்ளிப்போடமுடியும்னும் சொல்றாங்க. குறிப்பா, கணினியில் நீண்டநேரம் உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு, கழுத்துக்குமேல போதுமான ரத்தஓட்டம் இல்லாம, கண்களில் சோர்வும், கழுத்தில் வலியும் ஏற்படும். தலைப்பகுதிக்கு ரத்தஓட்டத்தை ஏற்படுத்தும் இந்தப் பயிற்சி, அதற்கெல்லாம் நல்ல தீர்வாக இருக்கும்.

இதை சிங்காசனம்ன்னு சொல்லுவாங்க. அதாவது கண்ணை உருட்டி, நாக்கை வெளியே நீட்டிக்கிட்டு செய்யும்போது சிங்கம் மாதிரி இருக்குமாம். இந்தப் பயிற்சியைச்  செய்யும்போது, நீங்களே கண்ணாடியைப் பார்த்துக்கிட்டு, சிங்கமாத் தெரியுதா, அசிங்கமாத் தெரியுதான்னு முடிவு பண்ணிக்கிடுங்க :)

இப்ப சிங்காசனத்துக்கு வருவோம்...

வஜ்ராசனத்தில், அதாங்க முட்டிக்கால்போட்டு, மடக்கிய கால்களின்மேல் உட்கார்ந்துக்கோங்க.

கைகளைக் கால்முட்டியின்மேல் வைத்து, நிமிர்ந்து உட்காருங்க.

கண்களை நல்ல அகலமாத் திறங்க.

முடிஞ்ச அளவுக்கு, காற்றை நாசியில் உள்ளிழுத்துக்கோங்க.

சில வினாடிகளுக்கப்புறம், வாயைத் திறந்து, நாக்கை முடிஞ்ச அளவுக்கு வெளியே நீட்டியபடியே வேகமா,காற்றை வெளியே விடுங்க.

உங்களால முடிஞ்சவரைக்கும் அப்படியே இருங்க...விட்டுவிட்டு மூணு தடவை செய்யுங்க.
படத்திலிருப்பதுதான் சிங்கமுத்ரா...கண்களை அகல விரித்து, நாக்கை நீட்டி, முகத்தசைகளுக்குக் கொடுக்கும் பயிற்சி


இந்தப் பயிற்சியில் முகத்தசைகள் அத்தனையும் வேலை செய்வதால் நல்ல ரத்தஓட்டம் ஏற்படுவதோடு, தொண்டைப்பகுதிக்கும்,கண்களுக்கும் கூட ரொம்ப நல்லது.

அடிக்கடி செய்து, உங்களை நீங்களே பயமுறுத்திக்கணும்னு அவசியம் இல்லை. ஒருநாளைக்கு ரெண்டு தடவை போதும்.

இது, முகத்திலிருக்கிற  90 தசைகள் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால இதன் அவசியம் உணர்ந்தவங்க கட்டாயம் செய்யுங்க. செய்யுமிடத்தில், எதிரே கண்ணாடி இருந்தா ரொம்ப நல்லது.(கண்ணாடிக்கெல்லாம் சேதாரம் வராது ...நம்புங்க )

இந்த சிங்காசனத்தை, ஒரு விளையாட்டுப்பிள்ளை நின்னுக்கிட்டு செய்ய  ட்ரை பண்ற குட்டி வீடியோ இது. பார்த்து ரசிச்சுக்கோங்க :)
                                                              *****************

Friday, December 3, 2010

மக்கு மண்டூகம்!

'உக்கார்டா, மக்கு மண்டூகமே...'ன்னு, தப்பா பதில் சொல்றவங்களைத் தலையில் தட்டி உக்காரவைக்கிறதும், தப்பு பெருசாயிருந்தா வயிற்றுத் தோலைப் பிடிச்சு, சவ்வுமிட்டாய் மாதிரி இழுத்து, பசங்களை வலியில அழவைக்கிறதும் வெயிலுமுத்து வாத்தியாருக்கு( கணக்கு வாத்தியார்) ரொம்பவும் விருப்பமான விஷயங்கள்.

 அது அந்தக் கிராமத்துப் பள்ளிக்கூடத்தின் அஞ்சாங் கிளாஸ் வகுப்பறை.  கதிரேசன் கணக்கு வாத்தியார் பையன். ஆனா, வீட்டுப்பாடமெல்லாம் அவனுக்கு விஷம் மாதிரி. ஆகவே ஆகாது. ஏதாவதொரு சாக்குச்சொல்லித் தப்பிச்சிருவான். அப்பிடியே கோவம்வந்து, வாத்தியார் வெளியே அனுப்பிட்டார்னாகூட, வேலிப்பக்கம்போயி தட்டான் பிடிக்க ஆரம்பிச்சிருவான்.

ஆனா, அன்னிக்கு ஒருநாள்,கதிரேசனுக்குக் கிடைத்த தண்டனைக்கும், அவனோட அப்பா,கணக்கு வாத்தியாரோட அறிவுரைக்கும்பிறகு, வாத்தியார் வகுப்புன்னாலே வீட்டுப்பாடத்தை முடிச்சிட்டு, வாய்மேல விரலை வச்சுக்கிட்டு நல்ல பிள்ளைகளா உக்காந்திருப்பாங்க எல்லாரும்.

அன்னிக்கு, வகுப்புக்கு வந்ததும் வீட்டுப்பாட நோட்டை கொண்டுவந்து அடுக்கச்சொன்னார் செல்லத்துரை வாத்தியார். எல்லாரும் அடுக்கினாங்க, கதிரேசனைத் தவிர. அடுக்கின நோட்டுகளை ஆறுமுகத்தை எண்ணச்சொன்ன வாத்தியார், தான் பிள்ளைகளின் தலைகளை எண்ண ஆரம்பிச்சார்.

வழக்கம்போலவே ஒண்ணு குறைச்சல். வேற யாரையும் கூப்பிடல அவர். நேரா, கதிரேசனைக் கூப்பிட்டாரு. அசால்ட்டா எழுந்திரிச்சான் கதிரேசன். வழக்கம்போல அர்ச்சனையும், ஆரத்தியும் முடிஞ்சப்புறம், வகுப்பறைக்கு வெளியே அவனை முழங்கால்போட்டு நிக்கவச்சார் அவர். அப்பத்தானா அந்த வழியே வரணும் அவனோட அப்பா? வந்தார்...நின்னார்...வகுப்புஆசிரியர்ட்ட என்னன்னு கேட்டார். அவரும் சொன்னார்.

நாங்கல்லாம், ஒரு கணக்கு வாத்தியார் தமிழ் சொல்லிக்கொடுத்துக் கேட்டது அன்னிக்கித்தான். வகுப்புக்குள்ளிருந்து செந்தூர்ப்பாண்டியைக் கூப்பிட்டார் அவர். செந்தூரோட அப்பா, ரைஸ்மில்லுல கூலிவேலை பார்க்கிறார். அம்மாவுக்கும் படிப்புத்தெரியாது. ஆனா, செந்தூர்ப்பாண்டி, தினமும் எங்க வீட்டுக்குவந்து, எங்கிட்ட சந்தேகத்தையெல்லாம் கேட்டு நிவர்த்திபண்ணிக்கிட்டு, வீட்டுப்பாடமும் எழுதிட்டுதான் வீட்டுக்குப்போவான்.

ஆனா, இவனோட அப்பா நானும் வாத்தியார், இவங்கம்மாவும் டீச்சர்தான். ஆனா, இவன், ஒருநாள்கூட பாடத்துல சந்தேகம்னோ, படிச்சுத்தந்தது புரியலேன்னோ ஒருதடவைகூட எங்கிட்டயோ அவங்கம்மாகிட்டயோ சந்தேகம் கேட்டதில்ல. இந்த விவேகசிந்தாமணிப் பாடலைப் புரிஞ்சுகிட்டீங்கன்னா, யாரும் இவனைமாதிரி இருக்கமாட்டீங்க.

தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்திடையிருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே.

 தாமரைப்பூவோடு கூடவே குளத்தில் பிறந்து வளருகிற தவளைக்கு,
( அதாங்க...மண்டூகம்) அந்தத் தாமரையிலிருக்கிற தேனைக் குடிக்கணும்னு தெரியாது. ஆனா, எங்கோ காட்டிலிருந்து வருகிற வண்டு, அதைக் குடிச்சிட்டுப்போகும்.

அதே மாதிரிதான், நல்லவர்களோட பலகாலமாய்ப் பழகினாலும் அவர்களைப்பற்றியும் அவங்களோட பெருமைகளைப்பற்றியும்  முழுசா தெரிஞ்சுக்கமாட்டாங்க சில முட்டாள்கள். ஆனா, கற்றவர்கள் அவர்களை எளிதில் இனங்கண்டுகொண்டு, அவங்களோடு பழகிப் பெருமைகளை உணர்ந்து சந்தோஷப்படுவாங்க.

அதேமாதிரிதான் இவனும் என்று சொல்லிட்டு, வகுப்பறை வாசலில், முழங்காலில் நின்ன மகனைப் பாத்தார். அவன் எட்டத்தெரிகிற வயலையும், வாய்க்காலில் நீந்துகிற வாத்துகளையும் வேடிக்கைபார்த்துக்கிட்டிருந்தான்.
 
அதுவரைக்கும், மக்கு மண்டூகம்னா என்னன்னு விளங்காம இருந்த எங்களுக்கு, வாத்தியார் எவ்வளவு விவரமா திட்டியிருக்கார்ன்னு விளங்கிச்சு. ஆனா, கதிரேசனால கடைசிவரைக்கும் அதை விளங்கிக்கவே முடியல.

                                                                          *********


Wednesday, December 1, 2010

கணவன் மனைவிக்குள்ள இதெல்லாம் சகஜம்ப்பா...


எப்பவும் நியூஸ் பேப்பர் படிச்சிட்டிருக்கிற கணவனிடம் மனைவி : நான் பொண்ணாப் பொறந்ததுக்கு ஒரு நியூஸ்பேப்பரா பொறந்திருக்கலாம். எப்பவும் உங்க கையிலயாவது இருந்திருப்பேன்.

கணவன் :நானும் அப்படித்தான் நினைக்கிறேன். தினமும் ஒண்ணு புதுசாக் கிடைக்குமுல்ல....

                                                                                *****

 மனைவி :- ஏங்க, நம்ம கல்யாண சர்டிஃபிகேட்டையே ரொம்ப நேரமா பாத்துட்டு உக்கார்ந்திருக்கீங்களே, ஏன்?

கணவன் : ஒண்ணுமில்லை...ச்சும்மா...

மனைவி : சும்மா சொல்லுங்க, அந்தநாள் ஞாபகந்தானே?

கணவன் :இல்லே...இதில, எங்கியாவது expiry date போட்டிருக்குதான்னு பாக்குறேன்...

மனைவி : ???????????

                                                                           *****

மருத்துவர் : உங்க கணவருக்கு, இப்ப பூரணமான ஓய்வு தேவை. அதுக்காக தூக்க மாத்திரை எழுதியிருக்கேன்.

மனைவி : இதை அவருக்கு எப்பக் கொடுக்கணும் டாக்டர்?

மருத்துவர் : அவருக்கா, இல்லீங்க...தூக்கமாத்திரை உங்களுக்கு.

மனைவி :?????

                                                                           *****

மனைவி : ஏங்க, உங்களோட கண்ணாடியை மட்டும் கழட்டிட்டீங்கன்னா, நீங்க இருவது வருஷத்துக்கு முன்னால இருந்தமாதிரியேதான் இருக்கீங்க...

கணவன் : ஓ அப்படியா, நான் கண்ணாடியைக் கழட்டினாதான்
நீயும் அப்ப பாத்தமாதிரியே தெரியிற.

                                                                            *****

இறந்ததும் நரகத்துக்குப்போன கணவன், அங்கிருந்த ஒரு காவல் பூதத்திடம் கேட்டானாம் : நான் என் மனைவிக்கு ஒரு ஃபோன் போடணும். அதுக்கு உங்களுக்கு எவ்வளவு காசு கொடுக்கணும்?

பூதம் : இங்க வந்த பிறகுமா அந்த ஆசை உனக்கு? நரகத்தில இருந்து நரகத்துக்கு ஃப்ரீ தான்...நீ எவ்வளவு வேணும்னாலும் பேசிக்கோ.

                                                                             *****

அப்பா : கல்யாணத்துக்குப்பிறகு வாழ்க்கை தலைகீழா மாறிடுச்சு...அப்பல்லாம், நான் பெரிய பணக்காரனா இருந்தேன்...

மகள் : இப்பமட்டும் என்ன ஆச்சு? நாம நல்லாத்தானே இருக்கோம்?

அப்பா : இப்ப உங்கம்மா பணக்காரியா இருக்கா...நான் அவளுக்குப் பாதுகாவலாத்தானே இருக்கேன் :(

                                                                           *****

மனைவி : ஏங்க, என் மனைவியும் உங்க குழந்தை மாதிரியேதான்னு உங்க நண்பர்கிட்ட சொன்னீங்களாமே? உங்களுக்கு எம்மேல அவ்வளவு பிரியமா?

கணவன் : அந்தக் குழந்தைமாதிரியே, நீயும் கையில கிடைச்சதைவச்சு அடிப்பேன்னு அப்படியேவா அவங்ககிட்ட சொல்லமுடியும்?


பி.கு : இது ஒரு மின்னஞ்சல் பகிர்வு.

Monday, November 29, 2010

அவங்களுக்கு.....தலைக்கு "மேல" வேலையிருக்குதாம்!!!என் தோழியோட அப்பா அம்மாவுக்கு எழுவது வயசுக்குமேல் இருக்கும். அவங்களுக்குக் கல்யாணமான புதுசில் அவங்களோட ஓய்வு நேரத்தை எப்படிக் கழிச்சாங்கன்னு அவங்க சொல்ல அத்தனைபேரும் விழுந்துவிழுந்து சிரிச்சோம்...

கல்யாணமான புதுசுல, அதை வாங்கித்தாங்க இதை வாங்கித்தாங்கன்னு அவுகள ஒருநாளும் பிடுங்கி எடுத்ததில்ல...ஆனா,அவுக தலையிலிருக்கிற வெள்ளை முடிகளை ஒண்ணொண்ணாத் தேடித்தேடிப் பிடுங்கியெடுப்பேன்" என்று சொல்லி வெள்ளையாச் சிரிச்சாங்க என் தோழியின் அம்மா.

அப்பா,உங்களுக்கு சின்ன வயசிலயே அவ்வளவு வெள்ளை முடியா இருக்கும் என்று நான் கேட்க, "அதிகமா இருந்தாத்தான் அப்புடியே விட்டிருப்பேனே...ஆனா அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருக்கிறதைத் தேடிப் பிடுங்குறேன்னு சொல்லி, ஆறேழு வருஷத்துல தேடினாக்கூட கறுப்பு முடி கிடைக்காதுங்கிற அளவுக்கு ஆக்கிட்டா உங்கம்மா என்று சொல்லி, குறும்பாகச் சிரிச்சாங்க தோழியின் அப்பா.

இருக்கிறதைப் பிடுங்கியெடுத்தா, இன்னும் அதிகமாகும்னு அப்ப தெரியல...இப்பத்தான் தெரியுதுன்னு சொல்லி தன் கணவரைப்பார்த்துச் சிரிச்சாங்க தோழியின் அம்மா.

பத்துவருஷத்துக்குமேலிருக்கும்...அப்போ,நான் துபாய்க்கு வந்த புதுசு. தோழிகூட வெளியே போனபோது, கண்ணில் பட்ட அந்தக் காட்சியில் அதிர்ந்துபோய்விட்டேன். "அச்சச்சோ, அங்க பாருங்களேன்...அந்தப்பொண்ணுக்கு தலையில ஏதோ பெரிய அடி பட்டிருக்குன்னு நினைக்கிறேன். சுத்திக் கட்டுபோட்டிருக்கு பாருங்க..." என்று நான் பதறிப்போய்ச்சொல்ல, பக்கத்திலிருந்த என் தோழி பதற்றமே இல்லாம சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

என்னடா இது, கொஞ்சங்கூட வருத்தப்படாம சிரிக்கிறாங்களேன்னு பார்த்தா, "ஐயோ, இது அடியுமில்லை, காயமுமில்லை...அவங்க, பார்லர்ல போயி,தலைக்கு ஹென்னா போட்டிருக்காங்க. அதனால தலையைச் சுத்தி அது வழியாம 'பேக்' பண்ணியிருக்காங்க என்று சொல்ல, மறுபடியும் அந்த வித்தையைத் திரும்பிநின்று பார்த்தேன்.

வெள்ளை முடியை மறைக்க வகை வகையா ஹேர்டை உபயோகிச்சு இப்ப டை அடிக்கிற அளவுக்குக்கூட முடியில்லாமப்போச்சு என்று வருத்தப்படுறவங்க அநேகம்பேரை இப்ப பார்க்கமுடிகிறது.ரஜினி கூட ஒரு நிகழ்ச்சியில சொன்னார், ஒவ்வொரு ஹேர் டையா மாத்திமாத்தி அடிச்சுப்பார்த்து, கடைசியில நமக்கு ஹேர் டை ஒத்துக்கலேன்னு தெரிஞ்சப்ப, தலைமுடியில பாதி போயிருச்சுன்னு.


என் பெரியம்மாவோட கதையும் அதுமாதிரிதான்...லேசா நரை தெரியிறப்போ, கண்மையைத் தடவி காப்பாத்திக்கிட்டிருந்தேன். அப்புறம் மருதாணியைத் தடவுன்னு சொன்னாங்க. மருதாணி தடவிக்கிட்டா மறுநாளே ஜலதோஷம் பிடிச்சுக்கிட, வைத்தியம் பாத்துக்கிட்டு வருத்தத்தோட இருந்தப்ப,செயற்கையாக் கிடைக்கிற கலர் பத்திச் சொன்னாங்க. அடுத்ததா அதை அடிச்சுக்க ஆரம்பிச்சேன். விட்டேனாபார்ன்னு வந்துசேர்ந்திச்சு அலர்ஜி.அத்தோட முடியும் குறைய ஆரம்பிச்சிருச்சு.

அத்தோட விட்டேன் அத்தனை முயற்சியையும். இப்பப்பாரு, மாசத்துக்கொருதடவை கலர் பண்ணிக்கிட்டு உங்க பெரியப்பா சின்னப்பையன் மாதிரி இருக்கார் நான் அவருக்கு அக்கா மாதிரி இருக்கேன் என்று ஆதங்கத்தோட அலுத்துக்குவாங்க அவங்க.

அலுத்துக்காதீங்க பெரியம்மா... முதுமையும் நரையும்கூட அழகுதான். அது உங்க அனுபவத்தோட வெளிப்பாடு. அன்னை தெரசாவும் அழகுதான், அப்துல்கலாமும் அழகுதான். ஆனா, அவங்கல்லாம் டை அடிச்சோ மேக்கப் போட்டோ அவங்க அழகை வெளிப்படுத்திக்கல. அவங்களோட அன்பாலயும் அறிவாலயும்தான் அழகாத் தெரியிறாங்க.
அதுமாதிரி, நம்ம அன்பு,பண்பு, அறிவு இதைவச்சு நம்ம அழகை வெளிப்படுத்திக்கிட்டாப்போதும்னு அவங்ககிட்ட ஆறுதலாச் சொல்லிட்டுவந்தேன்.

ஆனாலும், முன்னால தெரியிற ஒண்ணுரெண்டு நரைமுடியை என்னசெய்யலாம்னு கண்ணாடி என்னைக் கேட்டுக்கிட்டே இருக்குது. என்ன சொல்லட்டும்???

Thursday, November 25, 2010

ஐயோ...என்னதிது??!

புளிப்பு சாப்பிடும் பூக்கள்...

எத்தனையோ தடவை டேஸ்ட் பண்ணியிருந்தாலும் எலுமிச்சம்பழத்தை,ஒவ்வொருதடவை வாயில் வைக்கும்போதும் உச்சிமுதல் உள்ளங்கால்வரை ஒரு சிலிர்ப்பு ஓடும்.

முதல்முதலா சில குழந்தைகள் எலுமிச்சம்பழத்தை டேஸ்ட் பண்ற வீடியோ இது...அநேகர் பார்த்திருப்பீங்க. பார்க்காதவங்களுக்காக...
Tuesday, November 23, 2010

ஹெச் ஐ வி பாசிட்டிவ்...மற்றதெல்லாம் நெகட்டிவ்...

'தாயற்றபோதே சீரற்றுப்போகும்' என்று சொல்வழக்கு ஒண்ணு உண்டு நம்ம ஊரில்.  அது அந்த ஆப்பிரிக்கப் பெண்ணுக்கும் அப்படியே பொருந்தித்தான் போனது....

அவளுக்கு வயது பதினெட்டு. அவளோடு சேர்த்து வீட்டில் ஆறு பிள்ளைகள். அத்தனையையும் விட்டுவிட்டு செத்துப்போனாள் அவளுடைய தாய்.  கட்டிய மனைவி காலமானதும், பிள்ளைகள் ஆறுபேரையும் விட்டுவிட்டு, எங்கேயோ போய்விட்டார் அவர்களுடைய தந்தை.

ஆளுக்கொரு திசையாய்ப்போனார்கள் பிள்ளைகள் ஆறுபேரும். ஒற்றையாகிப்போனாள் பதினெட்டு வயசு ரெபேக்கா. காய்கிற வயிற்றுக்கு உணவும், காப்பாற்றிக் கைகொடுக்கக் கொஞ்சம் அன்பும் கிடைக்காதா என்ற ஏக்கத்திலிருந்த அவளுக்கு, அந்த ஆண்மகனின் அருகாமை ஆறுதலாயிருந்தது. அவனே எல்லாமென்று நம்பிய அவளுக்கு அவனிடமிருந்து பரிசாகக் கிடைத்ததோ இரண்டு. ஒன்று, வயிற்றில் உருவான குழந்தை, இன்னொன்று பால்வினை நோய்.

இரண்டாவதின் காரணம் அறியமுற்பட்டபோதுதான் உணர்ந்தாள், அவளுடைய கணவன் அவளுக்கு உண்மையானவனாக இருக்கவில்லை, பல பெண்களுடன் பழக்கம் வைத்திருக்கிறான்  என்பதை.  விளைவு விவாகரத்தில் முடிந்தது வாழ்க்கை. இடையில்விட்ட உயர்நிலைப் படிப்பைத் தொடரலாம் என நினைத்தாள் அவள். ஆனால், கல்வியில் கவனத்தை ஒருமுகப்படுத்தமுடியாமல், எல்லாத்தேர்வுகளிலும் தோல்வியுற்றாள் அவள். வெறுமையாய்ப்போன வாழ்வில், வேதனைகளைக் கிறுக்கிச்சென்றது விதியின் கைகள்.

மனதில் நிறைந்த வெறுமையையும் வேதனையையும் துடைக்க, இன்னுமொரு  இதமான துணை கிடைக்காதா என்று ஏங்கினாள் அவள். இருபத்துமூன்று வயதில் இன்னொரு திருமணமும் செய்துகொண்டாள்.

வாழ்ந்து ஜெயிக்கவேண்டுமென்ற உத்வேகத்தில்,  வேலைதேடி மும்முரமாய் இறங்கினாள் அவள். அவளுக்கும் அவள் கணவனுக்கும் உள்ளூரிலுள்ள ஒரு சுகாதார நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையின் ஒளியை உணரத்தொடங்கினாள் அவள்.

முந்தைய திருமணத்தின் வலியும், ஏற்கெனவே இருக்கிற ஒரு குழந்தையை வளர்த்தால்போதும் என்ற நினைப்பும், மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தைத் துரத்தியது அவளிடமிருந்து. ஆனாலும், இரண்டு வருடங்களுக்குப்பிறகு, இரண்டாவது கணவனின் ஆசைக்கு ஒத்துக்கொண்டு, ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள் அவள்.

ஒரே வயதுதான் ஆகியிருந்தது அவள் மகனுக்கு. அதற்குள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள் அவள். உடம்பில் என்னவென்றே தெரியாமல், திடீர்திடீரென்று தோன்றுகிற தடிப்புகளும், அடிக்கடி வருகிற காய்ச்சலுமாக அவதிப்பட்டாள் அவள். காரணம் என்னவென்று சோதித்தபோது, எல்லாமே காலங்கடந்துபோயிருந்தது. ஹெச் ஐ வி நோய்க்கிருமிகள் உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை பரவிப்போயிருந்தன அவளுக்கு.

அவள் மட்டுமின்றி, பிறந்த ஆண்குழந்தையும் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தாள். இரண்டாவது திருமணவாழ்க்கை கொடுத்த வெகுமதி அது என்று உணர அதிகநேரமாகவில்லை அவளுக்கு. அவள் கணவனோ, மனைவியின் சுகவீனம் பற்றி எதுவுமே அறியாதவனாக, இரவு விடுதிகளிலும், மதுக்கடைகளிலும் விழுந்துகிடந்தான்.

அடுத்ததாக வந்தது, அவளுக்கு எலும்புருக்கி நோய். உடம்பின் எதிர்ப்புசக்தி மிகக்குறைவாக இருந்த காரணத்தால், உட்கொண்ட மருந்துகள்கூட உதவாமல் போயின. அரசின் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்கள் அவளும் அவளது இரண்டு வயது மகனும். எயிட்ஸ் நோய்க்கான பதினைந்துநாளுக்கான ஆரம்ப சிகிச்சைக்கு ஆயத்தமானார்கள்.

 சின்ன உடம்பில் செலுத்தப்பட்ட வீரியமான மருந்துகள், அவற்றின் உக்கிரம் தாங்கமுடியாமல் ஏழாம் நாளே இறந்துபோனான் அவளது மகன். இழப்பின் துயரம், எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் வீரியம் இரண்டுமாகச் சேர்ந்து, விதவிதமான வலிகளை உண்டாக்கியது அவள் உடம்பில். மூத்த மகளையும் பராமரிக்கமுடியாதவளாக, அவளைத் தன் சகோதரியின் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள் ரெபேக்கா.

பட்ட காலிலே படும் என்பதுபோல, விட்டுச்செல்லமாட்டேனென்று மறுபடியும் வந்தது எலும்புருக்கிநோய், கொஞ்சங்கொஞ்சமாக அவள் உடல், அசையக்கூடமுடியாமல் ஆகிப்போனது. அப்புறம் எடுத்த சிகிச்சைகளாலும் பயிற்சிகளாலும் உட்காரக்கூடிய அளவுக்கு ஓரளவுக்குத் தேறியிருக்கிறாள்.

ஆனால், இத்தனைக்கும் காரணமான அவள் கணவன், உடம்பில், ஏகப்பட்ட சுகவீனங்கள் இருந்தாலும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படாமல் தன் மைனர் வாழ்க்கையைத் தொடர்ந்தபடியிருக்க, இறப்புக்கும் பிழைப்புக்கும் இடையில் இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிறாள் அவள்.

இது, உலகின் எங்கோ ஒரு மூலையில், மலாவி என்ற ஆப்பிரிக்கநாட்டில் வசிக்கிற பெண்ணொருத்தியின் கதைதான் என்றாலும், இந்தியாவில் தென்பாதி மாநிலங்களிலும், வடகிழக்கில் மணிப்பூர், நாகாலாந்திலும்தான்  எயிட்ஸ் மிக அதிகமாகப் பரவியிருக்கிறது என்பது அதிர்ச்சியான விஷயம்.

2007 ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.31 மில்லியன் மக்கள், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதில் 3.5 சதவீதம்பேர் குழந்தைகள் என்றும் தெரிகிறது. புள்ளிராஜாக்கள்முதல் பள்ளிக்கூடக்குழந்தைகள் வரை எல்லோரிடமும் பரவியிருக்கும் இந்த உயிர்க்கொல்லி நோயை இல்லாமல் செய்ய எல்லா மக்களுக்கும் விழிப்புணர்வு மிக அவசியம்.அதைவிட முக்கியமாக, தனிமனித ஒழுக்கம் மிகமிக அவசியம்.

இதில், கொஞ்சம் ஆறுதலான விஷயம் என்னன்னா, இந்த ஒன்றிரண்டு வருடங்களில் எயிட்ஸ் நோய் பரவுவது கொஞ்சம் குறைந்திருக்கிறதாம்.

பி.கு: மேலேயிருக்கிற படத்தைப்பார்த்ததும், மனசில் சட்டென்று தாக்கியது ரெண்டு விஷயம்...ஒண்ணு, நம்ம இந்திய நாட்டின் மொட்டையான உருவ அமைப்பு, இன்னொண்ணு, அதிகம் பாதிக்கப்பட்ட தென் மாநிலங்களில், கேரளா இல்லாமலிருப்பதும்,அதற்குக் காரணமான அடிப்படைக் கல்வியும், விழிப்புணர்வும் மற்ற மாநிலங்களில் போதுமான அளவு இல்லாமலிருப்பதும்தான். ஆக, கேரளாவைப் பார்த்து, நாம படிக்கவும் கத்துக்கணும், பாதுகாப்பா இருக்கவும் கத்துக்கணும்.

Monday, November 22, 2010

நமக்கிருக்கிற மரியாதையைப் பாருங்க...

இந்தப் பிறவியில் புண்ணியம் செய்யுங்கள்...அப்பொழுதுதான், அடுத்த பிறவியிலாவது இந்தியனாகப் பிறக்கலாம் என்று சீனாவிலுள்ள ஒரு பள்ளிக்கூடச் சுவற்றில் எழுதப்பட்டிருந்ததாக முன்னர் எங்கோ படித்த ஞாபகம்..

இதுமாதிரியே நம்ம சந்த்ரயான் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டபோது, கத்தார் நாட்டுப் பத்திரிக்கையொன்று, இந்தியத் தொழிலாளர்களை இளக்காரமாக நினைக்காதீர்கள். அவர்களுக்குச் சந்திரனுக்கே ராக்கெட் விடுமளவுக்கு அறிவுத்திறமை உண்டென்று எழுதியதாகவும் படித்ததுண்டு. இன்றைக்கு, இங்கே துபாயிலுள்ள பத்திரிக்கையொன்றில் படித்ததும் அதுமாதிரி ஒரு விஷயம்தான்...

துபாய் மெட்ரோ ரயிலின், கோல்ட் க்ளாஸில்( அதுதாங்க ஃபர்ஸ்ட் க்ளாஸ்) பயணிக்கச் சீட்டுவாங்கிய ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்ணை, அந்தப் பெட்டியில் கண்காணிப்புப் பணியிலிருந்த இன்னொரு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண், இது முதல் வகுப்புப்பயணிகள் ஏறக்கூடிய பெட்டி, நீங்கள் ஏறக்கூடாது என்று உரத்த குரலில் அதட்டியிருக்கிறாள். அதற்கு, ஏறிய அந்தப்பெண்,  என்னிடமும் கோல்ட் க்ளாஸ் டிக்கெட் இருக்கிறது என்று பதில் சொல்லியிருக்கிறாள். ஆனாலும்,  நம்பாமல் அந்தப் பெண்ணுடைய, பயணச்சீட்டை வாங்கிப் பரிசோதித்தபின்னும்கூட, நம்பிக்கையில்லாமல் அவளைப் பார்த்தாளாம் அந்தக் கண்காணிப்பு அதிகாரி.

இந்த நிகழ்ச்சியால் கோபமுற்ற அந்த பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண், பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்காங்க. அங்கேதான் நிக்குது நம்ம இந்தியர்களின் பெருமை.

அந்தப்பெண், தன்னுடைய கடிதத்தில், என்னிடம் சரியான பயணச்சீட்டு இருந்தும், பயணம் முழுக்க என்னைச் சந்தேகமாகப் பார்த்தீர்கள். நாளை இதுபோல, சோர்வுற்ற ஒரு இந்தியத் தொழிலாளி வந்து ஏறும்போது, அவரையும் இதுபோல இகழ்ச்சியாகப் பார்த்து, சந்தேகமாகக் கேள்வி கேட்காதீங்க. ஏன்னா, அவர் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருக்கலாம். தன்னுடைய சொந்த ஜெட் விமானத்தை விட்டுவிட்டு, மெட்ரோவில் பயணிக்கவந்திருக்கலாம். அதனால் எச்சரிக்கையாக இருங்கள் என்று எழுதியிருக்காங்க...என்ன ஒரு மரியாதை பாருங்க....எனக்குப் படிக்கும்போதே புல்லரிச்சிருச்சு :).Sunday, November 21, 2010

"கொள்ளை" கொண்ட கதை!அது ஒரு அடர்ந்த கானகம்...அங்கே ஒரு கொள்ளைக்காரன். அவன் பேரு ரத்னாகரன். அந்தக் காட்டுப்பகுதியில, வருகிற போகிறவங்ககிட்டயெல்லாம், வழிப்பறி செய்து வாழ்க்கையை நடத்திக்கிட்டிருந்தானாம்.

ஒருநாள், வழிப்பறிபண்ண யாருமே கிடைக்காம அலைஞ்சப்ப, அவங்கிட்ட, முதன்முதலாக வந்து மாட்டினாராம் ஒருத்தர்.  ஆனா, அவர்கிட்டே கொள்ளையடிக்கிற்துக்கு எதுவுமே இல்லையாம். கோபம் வந்திச்சு அந்தக் கொள்ளைக்காரனுக்கு.

கையிலயும் பையிலயும் ஒண்ணுமே இல்லாம இப்படி சுத்திக்கிட்டிருக்கியே, எப்படின்னு அவரைப்பார்த்துக் கேட்டானாம் கொள்ளையன். அதற்கு அந்த வழிப்போக்கர், என் பெயர் நாரதன்...திரிலோக சஞ்சாரி, காசில்லாமலே எல்லா இடத்திலும் சஞ்சாரம் செய்யக்கூடியவன் என்று சொல்லிவிட்டு.  "நீ ஏன் இவ்வாறு கொள்ளைத் தொழில்செய்து காலம்கடத்துகிறாய் ?..." என்று கேட்டாராம்.

அதற்கு  அந்தக் கொள்ளையன், "என்னைப் பெற்றவர்களையும், மனைவி, மக்களையும் காப்பாற்றவே நான் கொள்ளையடிக்கிறேன்" என்று சொன்னானாம். அதற்கு நாரதர், "அப்படியானால் நீ செய்கிற இந்தப் பாவமாகிய வழிப்பறியில், அவர்களுக்கும் பங்கிருக்கிறதா?" என்று கேட்டாராம். அதற்கு அந்தக் கொள்ளையன், "ஏன் இல்லை, நான் கொள்ளையடிக்கிற பொருளில் பங்கிருக்கிறமாதிரியே இந்தப் பாவத்திலும் அவர்களுக்கும் பங்கு உண்டு" என்றானாம்.

அதற்கு நாரதர், "எதற்கும், நீ இதை உன் குடும்பத்தினரிடம் கேட்டுவிட்டு, வந்து பதிலைச்சொல்" என்றாராம்.  அதற்கு அவன், நாரதரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு, தன் வீட்டுக்குப்போய்,கேள்விக்கு பதில்தெரிந்துகொள்ளப்போனானாம். திரும்பிவந்தபோது, திகைத்துப்போயிருந்தானாம் அவன்.

என்னாச்சு ரத்னாகரா? என்று அவனைக்கேட்டாராம் நாரதர். அதற்கு அவன், கட்டிவைத்திருந்த நாரத முனிவரை அவிழ்த்துவிட்டுவிட்டு,
"எங்கள் அனைவரையும்  காப்பாற்றுவது உன்னுடைய கடமையேயன்றி, நீ செய்யும் எந்தப் பாவத்திலும் எங்களுக்குப் பங்கில்லை என்று என் பெற்றவர்கள்முதற்கொண்டு எல்லாரும் மறுதலித்துவிட்டார்கள் ஐயா..." என்று மனவருத்தத்தோடு சொன்னானாம்.

அதற்கு நாரதர், "அதுதான் உண்மை ரத்னாகரா...பாவமோ புண்ணியமோ, அவனவன் செய்யும் செயல்களுக்கு அவனவனே பொறுப்பாவான். பாவப்பொருளில் மற்றவர்களுக்குப் பங்கிருந்தாலும், பெறப்போகும் தண்டனையில் அவ்ர்களுக்குப் பங்கு கிடையாது" என்று கூறினாராம்.

தான் செய்த செயல்களால், தனக்குப் பாவங்கள் சேர்ந்துவிட்டதே என்று அஞ்சிநடுங்கினானாம் அவன். அன்றைக்கு மனம்திருந்திய அந்த ரத்னாகரனாகிய வால்மீகியிடமிருந்துதான்  இன்றைக்கும் பேசப்படுகிற  ராமாயணம் பிறந்தது. கதையை நிறுத்திவிட்டு, கன்னத்தில் கைவைத்தபடி கதைகேட்டுக்கொண்டிருந்த தன் பேரனையும் பேத்தியையும் பார்த்தாள் லச்சுமிப்பாட்டி .

கதையைக்கேட்டுமுடித்ததும், கன்னத்திலிருந்த கையை எடுத்துட்டு, கவிதாக்குட்டி கேட்டது. "ஏன் பாட்டி, இப்பவும்தான் நிறையபேர் எவ்வளவோ கொள்ளையடிக்கிறாங்க...ஆனா, இப்பல்லாம் யாரும் அதுமாதிரி, கதையோ காவியமோ எழுதுறதில்லையே,  அது ஏன்??? என்று கேட்டது.

பாத்தியா பாட்டி, இவ கதையை ஒழுங்காவே கேக்கல...
 மக்கு...மக்கு...அதுக்கெல்லாம் முதல்ல மனசாட்சின்னு ஒண்ணு இருக்கணும்டி, என்று சொல்லிவிட்டுச் சிரிக்க ஆரம்பித்தான் கவிதாவின் அண்ணன் கார்த்தி.

சின்னக்குழந்தைகளின் புரிதலைப்பார்த்து சந்தோஷப்பட்டவளாக, மௌனமாய்த் தலையசைத்தாள் லச்சுமிப்பாட்டி.


Friday, November 19, 2010

அவங்க மனசிலும் ஆசைகள் இருக்கும்...

விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். வயது 65 இருக்கும். பணியிலிருக்கும்வரைக்கும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றிவந்த பெண்மணி, இப்போது சர்க்கரை வியாதியின்பிடியில் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தாங்க.

கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருக்கவும், மெல்ல வெளியில்வந்தது அவங்க மனக்குறைகள். "வீட்ல, ஆளாளுக்கு அவங்கவங்க வேலையைப் பாக்கிறாங்க. வெளியில போறாங்க வர்றாங்க.ஆனா, என்னையும் எங்கேயாவது கூட்டிட்டுப்போகணும்னா பிடிக்கமாட்டேங்குது இவங்களுக்கு..." என்றுசொல்லி வருத்தப்பட்டாங்க அவங்க.

அதைக்கேட்டுக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவங்க கணவர், "எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போகணுனுதான் ஆசைம்மா. ஆனா, இவளால, வேகமா நடக்கமுடியல, கோயில்களுக்குப்போனால்கூட, கொஞ்சநேரம் செருப்பில்லாம நடக்க கஷ்டப்படுவா. வாகனத்தில் பிரயாணம் பண்ணும்போதும், யாராவது தெரியாம காலில் லேசா இடிச்சிட்டாலோ, மிதிச்சிட்டாலோகூட வலிதாங்கமுடியாம துடிச்சுப்போயிடுறா."

"அதுமட்டுமில்லாம, விருந்து வைபவங்களுக்குப்போய், தாமதமாய்ச் சாப்பிட்டாலோ அல்லது, சாப்பாடு வித்தியாசமானதாயிருந்தாலோ உடம்புக்கு ஒத்துக்காம ரொம்ப கஷ்டப்பட்டுப்போயிடுறா. அதனாலதான் கூடியவரைக்கும் வெளியில கூட்டிப்போறதைத் தவிர்க்கிறோம்" என்று அவரும் வருத்தமாய்ச் சொன்னார். கேட்கும்போது அதுவும் நியாயமானதாய்த்தான் இருந்தது.

அப்புறம், அவங்ககிட்ட கொஞ்சநேரம் ஆறுதலாய்ப் பேசிவிட்டு, முடிஞ்ச அளவுக்கு சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வச்சுக்கிட்டு, தூரமாக எங்கேயும் போகலேன்னாலும் பக்கத்தில் நடந்துபோய் நாலுபேரைப் பாருங்க. கோயிலுக்குப் போனால்கூட, காலில் ஒரு சாக்ஸ் போட்டுக்கிட்டுப் போங்கன்னு சொல்லிட்டுவந்தேன்.ஆனாலும், அன்றிலிருந்து, முதுமையும் நோயும் சேர்ந்து ஒருத்தரை எந்த அளவு முடக்கிவிடுகிறதுன்னு மனசுக்குள் ஒரு கலக்கம்.

ஆனா, நேத்து துபாயிலிருக்கிற முஷ்ரிஃப் பார்க்குக்குப் போனபோது, நான் பார்த்த இரண்டு காட்சிகள் வியப்பைத் தோற்றுவித்தது மறுக்கமுடியாத நிஜம்.முதலாவது பார்த்த அந்த முதியவருக்கு வயது நிச்சயம் எண்பத்தைந்துக்கு மேலிருக்கும். திக்கித்திக்கிப் பேசுகிறார். கொஞ்சம் கூன்போட்டு நடக்கிறார். ஆனால்,அத்தனை நிதானம் இல்லை. எல்லாரும் புல்தரையில் பாயில் உட்கார்ந்துகொண்டு, அவரை எங்களுக்கு அருகிலிருந்த ஒரு பெஞ்ச்சில் உட்காரவைத்தார்கள்.

ஐந்து நிமிடம்கூட இருக்காது, அந்த இடத்தைவிட்டு எழுந்து கால்போனபோக்கில் நடக்க ஆரம்பித்தார் பெரியவர்.அவரையே கவனித்துக்கொண்டிருந்த அவரது பேரன், ஓடிப்போய், கையைப்பிடித்துக் கூட்டிவந்து உட்காரவைத்தான். அடுத்த சில நிமிஷங்களில், மறுபடியும் எழுந்து நடக்க ஆரம்பித்தார் அவர். அப்போது. அவரது பேத்தியாக இருக்கவேண்டும், பத்துப்பன்னிரண்டு வயசுப்பெண்குழந்தை கையில் உணவுத் தட்டுடன் ஓடிவந்து, அவரை உட்காரவைத்து, தட்டிலிருந்த சாப்பாட்டை ஸ்பூனால் ஊட்ட ஆரம்பித்தது அவருக்கு.

சாப்பிட்டுமுடிப்பதற்குள் பத்துப்பன்னிரண்டு தடவை எழுந்து நடக்க ஆரம்பித்தவரைப் பொறுமையாக உடகாரவைத்து, முழுச்சாப்பாட்டையும் ஊட்டிவிட்டது அந்தக்குழந்தை. பார்க்கும்போதே நெகிழ்ச்சியாக இருந்தது.

மாலையில் பார்க்கிலிருந்து புறப்படும்போது கண்ட இன்னொரு காட்சி, ஏற்கெனவே பார்த்த காட்சியை மறக்கடித்து விடும்போலிருந்தது. இருபதுக்குமேல் உறுப்பினர்களுடைய அரபுக் குடும்பம் அது.

அப்போதுதான் வந்து இறங்கினார்கள். அதில், ஒரு பாட்டி. அந்தப் பாட்டிக்கும் எண்பது வயசுக்குமேலிருக்கும். கால்கள் நடக்கமுடியவில்லை.மடங்கியிருந்தது. கூடவே இறங்கியது ஒரு வீல்சேர். ஆனால், இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் மேடு பள்ளமாயிருந்ததால், அந்தப்பாட்டியின் பேத்திபோலிருந்த டீனேஜ் வயசுப் பெண்கள் இருவர் பாட்டியை இருபுறமும் பிடித்துக் குழந்தையைப்போல தூக்கிக்கொண்டே போனார்கள்.

புல்தரைக்குப்போனதும் வீல்சேரை விரித்து உட்காரச்சொன்னார்கள். மறுத்த பாட்டி, தன்னைக் கீழே விடச்சொல்லி, புல்தரையில் உட்கார்ந்து, இரு கைகளையும் ஊன்றி, சிறுகுழந்தைபோல அங்கேயும் இங்கேயும் வேகமாகத் தவழ்ந்துபோனது. பார்க்கும்போதே கண்ணில் நீர்துளிர்த்தது எங்களுக்கு. ஆனால் பாட்டியின் முகத்தில் அத்தனை பரவசம்,சந்தோஷம். வீட்டுச் சிறைக்குள்ளிருந்து வெளியில்வந்த குதூகலம்போல் தெரிந்தது.

பார்த்துவிட்டுப் புறப்பட்ட எனக்கு மனசுமுழுக்கப் பாட்டிதான் நிறைந்திருந்தது. அதையும் மீறி எழுந்தது இந்தக் கேள்வி. ஒருவேளை நம்மநாட்டு மக்களுக்கு மட்டும்தான் பெரியவர்களை வைத்துக் கவனித்துக்கொள்வது ஒரு சுமையாகத் தெரிகிறதோ?Tuesday, November 16, 2010

ரத்த வாளியும் , ராத்திரி அலறலும்!

புதுசா வர்ற மாணவிகளைக் கலவரப்படுத்தணும்னே, ஒவ்வொரு கல்லூரி விடுதியிலும் ஒன்றிரண்டு சம்பவங்களை வழிவழியா சொல்லிவச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். இதுக்கு எங்க கல்லூரி விடுதிமட்டும் விதிவிலக்கா என்ன?

அது ஒரு வெள்ளிக்கிழமை. விடுதியில் சேர்ந்து ஒரு மாசம்தான் இருக்கும்...வீட்டு நினைப்பெல்லாம் மாறி, தோழமைகளுடன் சந்தோஷமாயிருக்கப் பழகியிருந்த நேரம். மாலை, ஸ்டடி டைமில் ஆரம்பித்த பேய் பிசாசுக் கதைகள், பத்து மணிக்கு ஸ்டடி முடியும்வரைக்கும் தொடர்ந்தது.

அரைவட்ட வடிவிலிருந்த எங்கள் ஹாஸ்டலில், நடுவில் மெயின் என்ட்ரன்ஸ். இரு ஓரங்களிலும் மாடியிலிருந்து இறங்கிவரும் படிகளும் இருக்கும். முன் வாயிலின் இரண்டுபுறமும் கிட்டத்தட்ட பதினைந்து அறைகள் இருக்கும். நடுவில் மாணவிகளின் அறைகளும், ஓரங்களில், வார்டன் மற்றும் ஆசிரியர்களின் அறைகளும் இருக்கும். மாடியிலும் அதேமாதிரியே.

மொத்த அறைகளுக்கும் சேர்த்து ஹாஸ்டலின் இரு புறமும் வெளிப்பக்கத்தில் குளியலறை, கழிப்பறைகளிருக்கும். ஆனால், அறைகளின் வரிசையில், சம்பந்தமே இல்லாமல், மாடியின் ஓரத்திலிருந்த ஒரு தங்கும்அறை, தடுக்கப்பட்டு, கழிப்பறையாக்கப்பட்டிருக்கும். கழிப்பறைக்குள் கம்பிவைத்த ஜன்னல், கதவுகளுடன் இருக்கும். இரவில் மட்டுமே அந்த அறையைப் பயன்படுத்துவாங்க. மற்ற நேரம் பூட்டியே இருக்கும். கூட்டமாய்ப்போய் பயன்படுத்துவோமே தவிர, தனியே யாரும் அந்தப்பக்கம் போகமாட்டாங்க.

அந்த அறைதான் அன்றைக்குப் பேசுபொருளாகியிருந்தது. சம்பந்தப்பட்ட அந்த ஓரத்து ரூமில், ரெண்டு மாணவிகள் தங்கியிருந்தாங்களாம். அதிலே ஒரு பொண்ணு, ராத்திரியில் தண்ணீர்குடிக்க எழுந்தபோது,  காலில் ஏதோ இடறியதாம். லைட்டைப்போட்டு என்னன்னு பாத்தா, அறைக்கு நடுவில், ஒரு பக்கெட் நிறைய ரத்தம் இருந்திச்சாம். அலறியடிச்சுகிட்டு, அவள் அடுத்த பெண்ணை எழுப்ப, அங்கே அவங்க, குடிக்கத் தண்ணீர் வைத்திருந்த பாட்டிலிலும் ரத்தமே நிறைஞ்சிருந்ததாம்.

கதவைத்திறந்து வெளியே ஓடிவந்த அவங்க ரெண்டுபேரும், விடுதிக் கண்காணிப்பாளரை எழுப்பி விஷயத்தைச் சொல்லிவிட்டு, அங்கேயே மூர்ச்சையாகி விழுந்திட்டாங்களாம்.

இந்த சம்பவத்துக்கப்புறம், அந்த அறையில் யாருமே தங்கலேன்னாலும், அந்தப்பக்கம் யாரும் போனா, உள்ளேயிருந்து மெல்லிசா ஒரு அழுகை சத்தம் கேட்குமாம்... என்று அந்த சீனியர் அக்கா சொல்ல, திகிலில் உறைந்துபோயிட்டாங்க கேட்டுக்கொண்டிருந்த தோழிகள்.

பத்துமணிக்கு, அவரவர் அறைக்குப் படுக்கப்போனபோது, என் தோழி, கர்த்தாவே, எங்க எல்லாரையும் பேய் பிசாசுகளிலிருந்து காப்பாற்றும் என்று எங்க எல்லாருக்காகவும் வாய்விட்டு வேண்டிக்கொள்ள, நிம்மதியாய்ப் படுத்துத் தூங்க ஆரம்பிச்சோம் நாங்க. பரிட்சைக்குப் படிக்கவேண்டிய மற்ற மாணவிகள், வராண்டாவில் அமர்ந்து படிச்சிக்கிட்டிருந்தாங்க.

மணி பதினொண்ணரை இருக்கும். வெளியே சுற்றிவரும் காவலாளியின் விசில் சத்தம் 'உய்'யென்று கேட்ட அந்த நேரத்தில், வெளியே "ஓ" வென்று காதைக் கிழிக்கிற ஒரு அலறல் சத்தம்.

வெளியே படிச்சிக்கிட்டிருந்த மாணவிகள் எல்லாரும் அலறியடிச்சிக்கிட்டு கிட்ட இருந்த அறைகளுக்குள் நுழைந்து தாளிட்டுக்கொள்ள, கதவுகளின் சத்தமும் வெளியே மாட்டிக்கொண்டவர்களின் கூச்சலுமாய் கொஞ்ச நேரம் ஒரே களேபரம். ஒருவழியாய் எல்லோரும் அறைகளுக்குள் நுழைந்து, ஆசுவாசப்படுத்திக்கொண்ட நேரம், வெளியே கூட்டமாய் எழுந்த நாய்களின் அலறல் மேலும் கிலியை உண்டாக்க, மறுபடியும் அமைதியைக் கிழித்துக்கொண்டு எழுந்தது விசில் சத்தம். ஆடிப்போயிட்டோம் எல்லாரும்.

உறங்கப்போயிருந்த விடுதிக் கண்காணிப்பாளர்கள், தோட்டக்காரரென்று எல்லாரும் வந்து ஆளாளுக்கு விசாரிக்க, என்ன நடந்ததென்று யாராலும் சொல்லமுடியவில்லை. எதுவும் புரியவும் இல்லை. கர்த்தாவே, கடவுளே, முருகா,மகமாயி என்று ஆளாளுக்கு அவரவர் இஷ்ட தெய்வங்களைக் கும்பிட்டபடி, மறுபடியும் உறங்கப்போனோம்.

காலையில், சாப்பாட்டுக்கூடத்தில் சாப்பிட்டதும் குடித்ததும்கூட அதே விஷயத்தைத்தான். அப்பதான் பக்கத்து டேபிளிலிருந்து மெல்லக் கசிந்துவந்தது அந்த விஷயம். மாலையில் கேட்ட பேய்க்கதையில் பயந்துபோன ஒரு பெண், அதுமாதிரியே ஏதோ கனவுகண்டு கத்த ஆரம்பிக்க, அவளுடைய வினோதமான அலறல் சத்தத்தைக் கேட்டு மிரண்டுபோன மற்றவர்கள், விழித்து எழுந்து அலற, மொத்தக் களேபரமும் அதனால்தான் நடந்ததென்று அறிந்தபின்தான் அப்பாடாவென்று ஆசுவாசம் பிறந்தது.

ஆனால், அந்த ரத்தவாளிக்கதை மட்டும், கல்லூரி வாழ்வின் ஐந்து வருடங்களும் அவ்வப்போது பேசப்பட்டு, அநேகரைப்  பயமுறுத்திக்கொண்டுதான் இருந்தது. யார்கண்டது, அந்தத் தொடர்கதை, இப்போதும் ஒருவேளை அங்கு இரவுகளில் பேசப்பட்டு, எத்தனையோபேரைத் தூங்கவிடாமல் பயமுறுத்திக்கொண்டிருக்கலாம்.

                                                                   :) :) :) :) :) :)

Monday, November 8, 2010

மனிதனாய்க் கழுதையாய், நாயாய்க் குரங்குமாகி...

கடவுள் உலகத்து உயிர்களை ஒவ்வொன்றாக உருவாக்கிக்கொண்டிருந்த நேரம்...

முதலாவதாக, அவர் ஒரு கழுதையைப் படைத்தாராம். அந்தக் கழுதையிடம், நீயொரு கழுதை... காலையிலிருந்து மாலைவரை நீ பாரம்சுமந்து பணிசெய்ய வேண்டும்.நீ புல்லைத் தின்னலாம். ஆனால், உனக்கு புத்தியெல்லாம் கிடையாது. உனக்கு ஆயுட்காலம் ஐம்பது வருடங்கள் என்று சொன்னாராம்.

அதற்குக் கழுதை சொன்னதாம், கடவுளே,கழுதையான எனக்கு ஐம்பது வருடங்கள் அதிகம். அதனால்,எனது ஆயுளை இருபது வருடங்களாகக் குறைத்துவிடுங்கள் என்று. கடவுளும் அதன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

அடுத்ததாக, ஒரு நாயைப் படைத்து, நீ நாயென்று அழைக்கப்படுவாய். மனிதனுக்கு நல்ல நண்பனாக இருந்து, அவனுடைய வீட்டைப் பாதுகாக்கவேண்டும். வீட்டில் மிஞ்சுகிறபொருட்களையே நீ உணவாக உண்ணவேண்டும். உனக்கு வாழ்நாள் முப்பது வருடங்கள் என்றாராம்.

அதற்கு அந்த நாய், கடவுளே,முப்பது வருடங்கள் அதிகம். எனக்கு பதினைந்து வருடங்களே போதும் என்றாதாம். கடவுளும் அதை வழங்கினாராம்.

அடுத்ததாக,கடவுள் ஒரு குரங்கைப் படைத்தாராம். நீ மரத்துக்கு மரம் தாவி,வித்தைகள் செய்து மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவாய்.உனக்கு ஆயுள் இருபது வருடங்கள் என்றார்.

அதற்குக் குரங்கு, எனக்குப் பத்தே வருடங்கள் போதும் என்றதாம். கடவுளும் அதை ஒத்துக்கொண்டாராம்.


அடுத்ததாகக் கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதனே,பகுத்தறிவுடன் உன்னைப் படைத்திருக்கிறேன். நீ உன் அறிவைப் பயன்படுத்தி, உலகத்திலுள்ள மிருகங்களையெல்லாம் அடிமைப்படுத்தி ஆளலாம்.உலகையே உன் வசப்படுத்தப்போகும் உனது ஆயுள் இருபது வருடங்கள் என்று சொன்னாராம்.

அதைக்கேட்ட மனிதன், என்ன சொல்லியிருப்பான்??????????????

நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதையேதான் செய்தான்:)

அதாவது, அவன் கடவுளிடம், உலகையே ஆளுமளவுக்கு அறிவுடன் படைக்கப்பட்ட எனக்கு, இருபது வருடங்கள் ரொம்பவும் குறைவு. அதனால், கழுதை வேண்டாமென்ற முப்பது வருடங்களையும், நாய் மறுதலித்த பதினைந்து வருடங்களையும், குரங்கு கொடுத்த பத்து வருடங்களையும் நீங்கள் எனக்குக் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டானாம்.

அதற்கு, அப்படியே ஆகட்டும் என்று ஒத்துக்கொண்டாராம் கடவுளும்.
அன்றிலிருந்து, கடவுளிடம் கேட்டுவாங்கிய வரத்தின்படி, ஒவ்வொரு மனிதனும்,முதல் இருபது வருடங்கள் முழுமையான மனிதனாகவும்,

திருமணத்தின் பின்வரும் முப்பது வருடங்கள், ஒரு கழுதையைப்போல, குடும்ப பாரத்தைச் சுமக்கமாட்டாமல் சுமந்தும்,

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும், வீட்டின் காவலாக முன்வாசலில் முடங்கி, மிச்சமானதைத் தின்று,ஒரு நாயைப்போலவும்,

வயதாகி முதிர்ந்ததும், குரங்கினைப்போல் வீட்டுக்கு வீடு, அதாவது மகளின் வீடு மகனின் வீடு என்று தாவி, பேரன் பேத்திகளை மகிழ்விக்க வித்தைகளைச்செய்தும் வாழ்கிறானாம்.

இது எப்படி இருக்கு???  இது,மின்னஞ்சலில் வந்த கதையென்றாலும் படித்துமுடிக்கையில் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது... இல்லையா????????? :)

Wednesday, November 3, 2010

யாருக்கு வேணும் இந்த ஈயம் பித்தளையெல்லாம்???


முதலாவதா நான் பண்ணின தப்பு என்னன்னு சொல்லியே ஆகணும்...

உள்ளூர்ல, அதாவது துபாயில,லேண்ட்லைன்ல ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டா அது முழுக்க முழுக்க ஃப்ரீங்கிறதால, ஆள் அகப்பட்டா அரைமணி நேரத்திலிருந்து ஆறுமணி நேரம்வரைக்கும்கூடப் பேசுவாங்க நம்ம மக்கள். அப்படியொரு பிறவிகிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட்ட சம்பவம் இது.

வேற ஒண்ணும் குத்தமாச் சொல்லலீங்க...உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்ன்னு சொன்னேன். அவ்வளவுதான். அதுக்கு அந்த அம்மா, நாங்கல்லாம் தீபாவளி கொண்டாட மாட்டோம். அது இன்னார் கொண்டுவந்து,  கொண்டாடுகிற பண்டிகை...தையில தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவோம்,போகியில பழசைக் கழிச்சு, பொங்கலும் கொண்டாடுவோம். மத்தபடி இந்தப் பண்டிகையெல்லாம் எங்களுக்குக் கிடையாதுன்னு அவங்க கருத்தைச் சொன்னதோடு விட்டிருக்கலாம் அவங்க.

ஆமா, நீங்க ஏன் இதையெல்லாம் கொண்டாடுறீங்கன்னு கேட்டதுதான் தாமதம், எனக்கு எங்கேயிருந்தோ வந்திருச்சு எரிச்சல். அட, நீங்க எந்த விதமாவும் கொண்டாடுங்க... ஆனா, மனுஷனுக்கு மனுஷன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கிற எல்லாப் பண்டிகையும் நான் கொண்டாடுவேன்னு சட்டுன்னு சொல்லிட்டுப் பட்டுன்னு ஃபோனை வச்சிட்டேன்.

அட, உட்டாங்களா அவங்க? மறுபடியும் ஃபோனைப்போட்டு, இவ்வளவு நாள் கொண்டாடுனீங்க, சரி...இனிமே வேண்டாம், இதெல்லாம் அந்த ஈயத்தோட ஆளுமை என்று அவங்க பாணியில் எடுத்துவிட, எந்தச் சுவற்றில் முட்டலாம்னு இருந்திச்சு எனக்கு. நம்ம நாட்டு எல்லையைக்கடந்து, வெளியே வந்துட்டா, அவரவரின் சுயம் தொலைந்து, இந்தியன் என்ற ஒரே இயம் இருக்கிறதைத்தான் அதிகமான மக்களிடம் பார்க்கமுடியும்.

ரம்ஜானுக்குப் பிரியாணி சாப்பிடக் கூப்பிட்டவங்க, தீபாவளிக்கு நம்ம வீட்டு அதிரசத்தையும், முறுக்கையும் ஆசையாச் சாப்பிடுவாங்க. அதுமாதிரி, கிறிஸ்துமசையும், பொங்கலையும் கூட்டமாய்ச்சேர்ந்து கடற்கரையில் கொண்டாடும் பக்குவமும்கூட இங்கிருக்கிற மக்களுக்கு இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, இதுமாதிரி ஒண்ணுரெண்டுபேரோட கலாட்டாவைப் பார்க்கும்போது, நாடு கடத்தியும் நல்லபுத்தி வரலியே இவங்களுக்கு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

பொதுவாக, நம்ம ஊர்ல கூட, ஓரளவுக்கு கல்வியறிவு வள்ர்ந்தபின்னால், முன்னமாதிரி, ஜாதி வித்தியாசம் பார்த்து, வாசல்ல நிக்கவச்சுப் பேசி அனுப்புறதோ, பின் வாசல்ல கூப்பிட்டுப் பழங்கஞ்சி ஊற்றுவதோகூட இப்போதெல்லாம் இல்லையென்றே நினைக்கிறேன். மொதல்ல யார் என்ன ஜாதியின்னு, பள்ளிக்கூடத்துல கேட்கும்போது மட்டுமே தெரியும்னு நினைக்கிறேன். அதுமட்டுமன்றி, காதல் கல்யாணங்கள் அதிகரித்திருப்பதால் ஜாதி வித்தியாசங்கள் முன்னைவிடக் குறைந்திருக்கிறதென்றே தோன்றுகிறது.

என்னோட வீட்டுச் சாப்பாட்டை நான் சாப்பிடுறேன். என்னோட கொள்கைகளை நான் கடைப்பிடிக்கிறேன்.என்னுடைய விருப்பங்களை யார்மேலயும் திணிச்சதில்லை. அதுக்காக அடுத்தவங்க கொள்கைகளை நான் ஏத்துக்கணும்னு எதிர்பார்க்கிறது தவறில்லையா?

இதையெல்லாம் யோசிக்காம, நான் இன்னார் இது என் இயம் என்றெல்லாம் பேசுவதற்குமுன், எல்லாருக்கும் பொதுவா மனித நேயம்னு ஒண்ணு இருக்கு.. .அதைக் கடைப்பிடிச்சாலே எல்லா ஏற்றத்தாழ்வும் மறைஞ்சுபோயிடும் என்பதை எல்லாரும் நினைவில் வச்சுக்கணும். இதையெல்லாம் விட்டுட்டு, அகப்பட்டவங்க மேலேயெல்லாம் ஈயத்தைக் காய்ச்சி ஊத்தினா, அப்புறம்...ஆத்திரம்தான் மிஞ்சும்.

எல்லாருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!! (( வேணும்ங்கிறவங்க எடுத்துக்கங்க  :) ))

Sunday, October 31, 2010

தொடரும் குழந்தைகள் கடத்தல்!


படம்: நன்றி தினமலர்


பஸ்ஸில் போகும்போது மூன்றுவயதுப் பெண்குழந்தை கடத்தல், வாசலில் விளையாடிக்கிட்டிருந்த இரண்டுவயதுக் குழந்தை கடத்தல், புதையலுக்குப் பலியிடுவதற்காகப் பெண் குழந்தை கடத்தல், வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யக் குழந்தைகள் கடத்தல்ன்னு மாறிமாறிச் செய்திகளைப் பார்க்கிறோம் செய்தித்தாள்களில்.

நேற்றைய செய்தியாக, கோவையில் துணிக்கடை அதிபரொருவரின் இரண்டு குழந்தைகளைக் கடத்தி வாய்க்காலில் தள்ளிவிட்டுக் கொடூரமாய்க் கொன்றிருக்கிறான் அவர்கள் பள்ளிக்குச்செல்லும் தனியார் வாகனத்தில் பணிபுரிந்த வாகன ஓட்டுனர் ஒருவன்.

மேலே படத்தில் காணப்படுகிற பத்துவயதுப் பெண்குழந்தையும், ஏழுவயதுப் பையனும் சந்தில் இருக்கிற வீட்டிலிருந்து, மெயின் ரோட்டுக்குவந்து, வழக்கமாகப் பள்ளிக்குச்செல்லும் அந்த வாகனத்துக்குக் காத்திருந்தபோது, அந்த வாகனத்தைப்போலவே இன்னொரு வாகனத்தைக்கொண்டுவந்து, பிள்ளைகளை அதில் ஏற்றிச்சென்று கொலைசெய்திருக்கிறான் அந்தக் கொடூரன்.

தொடர்ச்சியாக இதுபோல் எத்தனையோ நடந்தும்,இனிமேல் இதுபோல் சம்பவங்கள் நிகழாத அளவுக்குப் பெரிய தண்டனைகளோ,எச்சரிக்கை முயற்சிகளோ எடுத்தமாதிரித் தெரியவில்லை. இதுமாதிரிக் கொடூர சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரபுநாடுகளில் வழங்கப்படுவதுபோல, உடனடியாகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால் குற்றங்களின் சதவீதம் குறையலாம்.

அதுமட்டுமன்றி, பிள்ளைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர் இன்னும் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமாகிறது. பிள்ளைகளை வீட்டிலிருந்து அனுப்புவதோடு கடமை முடிந்தது என்று எண்ணாமல், பிள்ளைகள் சரியான வாகனத்தில் ஏறுகிறார்களா என்றும் பள்ளிசென்று பத்திரமாய்ச்சேர்ந்தார்களா என்றும் கவனிக்கவேண்டியது அவசியம்.அதுமட்டுமின்றி, இதுமாதிரி சம்பவங்கள் நேரக்கூடுமென்ற எச்சரிக்கை உணர்வையும், அப்படிப்பட்ட சமயங்களில் செயலாற்றவேண்டிய விதம்பற்றியும் அவர்களுக்கு விளங்கவைத்தல் அவசியம்.

வாகனத்தின் பதிவு எண், வாகன ஓட்டியின் செல்ஃபோன் நம்பர் இதையெல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டால், அதை அவ்வப்போது அதை பயன்படுத்திக்கொள்ளமுடியும். இதையெல்லாம் விட, தனியார் வாகனங்களைத் தவிர்த்து, பள்ளி வாகனத்தில்மட்டுமே பிள்ளைகளை அனுப்புவது அதைவிடச் சிறந்தது.

நம் எதிர்கால சந்ததிக்கு எதைச் சேர்த்துவைக்கிறோமோ இல்லையோ, அவர்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலையும், பத்திரமான வாழ்க்கையையும் ஏற்படுத்தித்தருவது பெற்றோராகிய நம் தலையாய கடமை.அதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் இன்றே செய்து எதிர்காலத்தில் இதுமாதிரி சம்பவங்கள் நிகழாமல் பாதுகாப்பது மிகமிக அவசியம்.

Thursday, October 28, 2010

தக்காளிக்காக ஒரு தலாக்!

கொஞ்சநாள் முன்னாடி, ஷாப்பிங் மாலில் நடந்த விவாகரத்து ஒன்றைப் பற்றிப்பார்த்தோம். படிக்காதவங்க இங்க பாருங்க...

தக்காளிக்காக ஒருத்தர் தலாக் சொன்ன சம்பவம் பற்றி இன்றைய கல்ஃப் நியூஸ் பத்திரிகையில வந்திருக்குது. இதெல்லாம் நிஜமாவே பண்றாங்களா, இல்ல விளையாட்டுக்காகப் பண்றாங்களான்னுதான் விளங்கமாட்டேங்குது.

தங்கத்தோட விலையைமாதிரி தக்காளியோட விலையும் அவ்வப்போது ஏறிவருவது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். மாசம் ரெண்டாயிரம் ரியால் சம்பாதிக்கிற அந்த மனிதர், மூணு நாளுக்கொருதடவை ஆறுபேர் கொண்ட தன் குடும்பத்துக்கு, 40 ரியால் செல்வழித்து,ஒரு அட்டைப்பெட்டி நிறையத் தக்காளிகளைத் தன் மனைவி வாங்குவது தன்னுடைய சம்பாத்தியத்துக்குக் கட்டுப்படியாகாதுன்னு அக்கம்பக்கத்தினர் முன்னால் கத்திச் சண்டைபோட்டிருக்கிறார்.

சண்டை கைகலப்பாக, வச்சு வாழமுடியலேன்னா என்னை விவாகரத்து செய்துவிடு என்று மனைவியும் பதிலுக்குச் சொல்ல, பத்தே நிமிஷத்தில் அக்கம்பக்கத்துக்காரங்க முன்னாடியே முடிஞ்சுபோச்சு திருமண வாழ்க்கை. என்ன சொல்ல...இப்படியும் மனிதர்கள்!!!

விபரத்தை Gulf News ல் படிக்க, இங்கே கிளிக்குங்க...

Monday, October 25, 2010

இந்தப் புள்ள(ப்பூச்சி)யும் பாவம்தான்...கல்யாணமாகி நாலுமாசம்தாங்க ஆச்சு...தலைநகரத்தில் தனிக்குடித்தனம்...


போனவாரம்,அம்மா வீட்டுக்குப்போகணும்னு ஆசையாச் சொன்னா...

கழுத, காசு போனாப்போகுதுன்னு கால்டாக்சி புடிச்சு, அத்தனைபேருக்கும்,அதாங்க,அவங்கவீட்டு நாய்க்கு உட்பட பிடிச்சதெல்லாம் வாங்கிக்கிட்டு அழைச்சிட்டுப்போனேன்.

இந்தவாரம், எங்க அம்மாவைப் பாத்துட்டுவரலாம்னு நான் சொன்னேன். எட்டாம் நம்பர் பஸ்சைப்பிடிச்சுப் போயிட்டு,சட்டுபுட்டுன்னு திரும்பிவாங்கன்னு பதில்சொல்றா.

*******************

நேத்து, புதுப்புடவை கட்டியிருக்கேன். நல்லாருக்கான்னு சொல்லுங்கன்னு வந்து நின்னா...

'உன்னோட கலருக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்மா'ன்னு இயல்பாச் சொன்னேன்.

என்னோட கலருக்கு...? கறுப்பா இருக்கேன்னுதானே இப்படிக் குத்திக்காட்டுறீங்கன்னு சொல்லி கண்ணைக் கசக்கினது மட்டுமில்லாம, என்னோட மொத்தக் குடும்பத்தையும் இழுத்து, அத்தனைபேரும் அவலட்சணம்னு ஒத்த வரியில தீர்ப்பு சொல்லிட்டுப்போயிட்டா...


*******************

அன்னிக்கி, டி.வி யைப் பாத்துக்கிட்டே அப்பிடியே கொஞ்சம் கண்ணசந்துட்டேன். ஏங்க தூங்குறீங்களான்னு கேட்டுட்டே உலுக்கி எழுப்பினா. என்னவோ ஏதோன்னு எழுந்து உக்கார்ந்தா,கனவுல நமீதாவோட டூயட் பாடுறீங்களோன்னு நெனச்சேன் என்று சொல்லிட்டு நமட்டுச் சிரிப்புச்சிரிச்சா...

சரி, நல்லமூடுல இருக்காளேன்னு நினைச்சுக்கிட்டு, கம்ப்யூட்டர் முன்னால உக்கார்ந்துகிட்டிருந்தவளை, என்னம்மா தூக்கம்வரலியான்னு சும்மாத்தான் கேட்டேன்.

பாத்தாத்தெரியல...பார்வை நல்லாத்தானே இருக்கு? கேக்குறாரு பாரு கேள்வின்னு கெத்தா சொல்லிட்டு, ஆணாதிக்கவாதிகளை அடக்குவது எப்படிங்கிற இடுகைக்கு நல்லதா ஒரு பாயிண்ட் நினைச்சுவச்சிருந்தேன்...இப்ப எல்லாம் மறந்துபோச்சுன்னு,எண்டரைத் தட்டிக்கிட்டே எல்லாப்பழியையும் எம்மேலபோட்டுட்டு, மறுபடியும் அண்ணாந்து பாத்து ஆணியவாதிகளைப்பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டா.


******************

சம்பளம் வந்திருக்குமே,கொண்டாங்க கவரைன்னு கேட்டா...

அப்படியே எடுத்து அலுங்காமக் குடுத்தேன்.

உன்னோட சம்பளக் கவரைக் காட்டுன்னு, ஒருநாளாவது கேட்டுரணும்னு நானும் நாலுமாசமா நினைச்சு,கொஞ்சங்கொஞ்சமா தைரியத்தைக் கூட்டிக்கிட்டு பக்கத்திலபோய் நின்னேன். ஆனா, கிட்டப்போய் நின்னதும் வாயில காத்துமட்டுமே வந்து தொலைக்க, 'சேத்த பணத்தை சிக்கனமா செலவு பண்ணப் பக்குவமா அம்மா கையில கொடுத்துப்போடு சின்னக்கண்ணுன்னு' அடிக்குரல்ல அந்தக்காலப் பாட்டை முணுமுணுத்துக்கிட்டே அங்கயிருந்து நகர்ந்துவந்துட்டேன்.


*********************

என்னங்க,வர்ற தீபாவளியன்னிக்கி, நான் காலைல அஞ்சுமணிக்கே எந்திரிச்சு, வாசல்ல ரங்கோலி போடப்போறேன்னு சொன்னா...

சரிம்மா, நல்லவிஷயம்தானே,போடுன்னேன்.

ஆனா,அதுக்குமுன்னாடி,நீங்க நாலுமணிக்கே எந்திரிச்சு ஹீட்டரை ஆன் பண்ணிட்டு,காஃபியும் போட்டுவச்சிரணுன்னு அடுத்ததாச் சொன்னா. அன்னிக்கித் தூக்கமும் பாழான்னு,அம்மியிலபோயி முட்டிக்கலாம்போல இருந்திச்சு..ஆனாலும், அவமுன்னால வேண்டாமேன்னு அமைதியா இருந்துட்டேன்.


*******************

தீபாவளிக்குத் துணியெடுக்க, தி.நகர் போவோம்னு சொன்னா. சரி, தலதீபாவளியாச்சே...
சேலை துணிமணியோட, சின்னதா,தங்கத்துலயும் ஏதாவது வாங்கிக்குடுக்கணும்னு மனசுல நினைச்சுக்கிட்டு, சரிம்மா போவோம்ன்னேன்.

பச்சப்புள்ள பஞ்சுமுட்டாய்க்கு ஆசப்படுறமாதிரி, பாக்கிற சேலையெல்லாம் நல்லாருக்குன்னு சொன்னா. மனசு நோகக்கூடாதேன்னு நானும் மறுக்காம தலையாட்டினேன். கடைசியில பத்துப்பதினோரு சேலைக்கு பில்போடச்சொல்லிட்டு, காசிருக்கில்லே என்று,கரிசனமாவேற கேட்டா.

கடைசியில,ரெண்டு பிக் ஷாப்பரையும் தூக்கமுடியாம கையில தூக்கிக்கிட்டு, இனிமே உங்களுக்குத் துணியெடுப்போம் வாங்கன்னு சொன்னா. இருக்கிற பதினஞ்சு ரூவா பஸ்சுக்குத்தான் சரியாவரும்னு நினைச்சிக்கிட்டே, தலையை வலிக்குது, வாம்மா வீட்டுக்குப் போவோம்னு, வலிய அவளை இழுத்துட்டுவந்தேன்.


*********************


ஆமா,,,இப்ப நீங்க ஏதோ எங்கிட்ட கேட்டமாதிரி இருந்திச்சே...

என்னது?? தங்கமா....???

உங்களுக்கெல்லாம்,என்னப்பாத்தாப் பாவமாவே இல்லயாங்க?????

*********************

Saturday, October 23, 2010

அசையிற சொத்தும் அசையாத சொத்தும்!

அசையிற சொத்து, அசையாத சொத்து எல்லாத்திலயும் பொம்பளப் புள்ளைக்கும் சரிசமமா பங்கிருக்கு... அதப் பிரிச்சுக்குடுங்கன்னு, உங்க அக்கா வீட்டுக்காரர் வந்து கேட்டுட்டுப் போயிருக்காரு...அதனாலதான் உங்க ரெண்டுபேரையும் வரச்சொன்னேம்ப்பா...டவுனிலிருந்து வந்து நின்ன மகன்களிடம் விஷயத்தை விளக்கிச்சொன்னா தங்கம்மா பாட்டி.

அசையாத சொத்துன்னு எங்கிட்ட இந்த பத்துக்குப் பத்து ஓட்டுவீடும், ஒழுகுற அடுப்படியும்தான் இருக்கு...நா இருக்கிறவரைக்கும் அத உங்க யாருக்கும் குடுக்கப்போறதில்ல...என்ன யாரு கடேசிவரைக்கும் வச்சிப் பாத்துக்கிறீகளோ அவுகளுக்கு அதக் குடுக்கலாம்னு இருக்கேன். அதுபோக,அசையிற சொத்துன்னு இருக்கிற அஞ்சாறை இப்பப் பகுந்து குடுக்கிறேன்... யாரும் மொகஞ்சுளிக்கக்கூடாது அதான் முக்கியம்...

அம்மா சொல்லச்சொல்ல ஆர்வம் பெருகியது தங்கம்மாப் பாட்டியின் பிள்ளைகளுக்கு. களையெடுத்து, நாத்து நட்டு, கிடுகு முடைஞ்சு, கூடைபின்னி, வேப்பமுத்துப் பொறுக்கி, அதை வித்துக்காசாக்கி, இப்படி, எப்பாடுபட்டாவது
சிறுவாடு சேக்கிறதில் அம்மா கில்லாடி. அப்பப்ப, சேத்துவச்ச காசில ஏதும் நகைநட்டு, பணமுன்னு நிச்சயம் வச்சிருப்பா... என்று மனசில் நினைச்சபடி, அம்மாவின் மொகத்த ஆர்வமாப் பாத்தா ஒரே மக அன்னம்.

ஏதோ இதுவரைக்கும், பாலை வித்தும், முட்டைகளை வித்தும்,அப்பப்ப ஆட்டை வித்தும், விருந்து விசேஷம், மருந்து மாத்திரையின்னு பொழைப்ப நடத்திட்டேன். இனிமே அதெல்லாம் நீங்க பாத்துக்குவீங்கன்னு, எல்லாத்தையும் உங்ககிட்ட, பிரிச்சுக் குடுக்கப்போறேன்.

நம்ம கறுப்புக் கிடாயையும் அதோட ரெண்டு குட்டியையும், அத்தோட நா வளத்த நாட்டுக்கோழி பனிரெண்டையும் அன்னம் எடுத்துக்கட்டும். வெள்ளாட்டையும் மூணு குட்டியையும் குமரேசன் வச்சிக்கட்டும். பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் பால்த்தொரைக்குக் குடுக்கிறேன். இனிமே, என்ன யாரு வச்சிப்பாத்துக்கிறதுன்னு பேசிமுடிவுபண்ணின பிற்பாடு, மத்தவிஷயங்கள முடிவுபண்ணிக்கிடலாம்...என்று, பாட்டி சொல்லிமுடிக்கவும், வள்ளுன்னு விழுந்தா அன்னம்.

ஆம்புளப் புள்ளன்னா அதுக்குத் தனிப் பவுசுதான்...என்னன்னாலும் பொட்டச்சிதானன்னு கிடாயையும் கோழியையும் குடுத்து கைகழுவி உட்டுட்ட...எம்புருஷன்கிட்டபோய்ச்சொன்னா, இம்புட்டுத்தானா உன்னோட பொறந்தவீட்டுப் பவுசுன்னு சிரிப்பாச்சிரிப்பாரு...இதெல்லாம் நீங்களே வச்சிக்கங்க...ஒண்ணும் வேணாம் எனக்குன்னு, கண்ணக் கசக்கிக்கிட்டு ஒட்டுத்திண்ணையிலபோயி உக்காந்தா அன்னம்.

ஏதோ, அடிச்சுப்புடிச்சுக் கேட்டீகளேன்னு, இருக்கிறதையெல்லாம் உங்க மூணுவேருக்கும் பங்கு வச்சுக்குடுத்துட்டேன். என்னோட சக்திக்கு இதுவே பெருசுதான். இதுக்கும் சடைஞ்சுகிட்டா நான் எங்கதான் போறது? என்று மககிட்ட கேட்டுட்டு, பெத்ததுலேருந்து, ஒத்தயா நின்னு,உங்களப் பாத்துப்பாத்து வளத்த என்ன யாரு வச்சிப்பாக்கப்போறீங்கன்னு கேட்டதுக்கு இதுவரைக்கும் யாருமே பதிலே சொல்லல...

யாருக்குமே என்ன வச்சுப் பாத்துக்க விருப்பமில்ல...இல்லயாய்யா? என்றபடி ரெண்டு மகன்களையும் ஏறிட்டுப் பாத்தா தங்கம்மாப் பாட்டி. சந்தையிலபோயி யாவாரியக் கூட்டிட்டுவந்து, மாட்டையும் ஆட்டையும் விலை பேசணும் என்று பேசிக்கொண்டிருந்த அண்ணனும் தம்பியும் ஒருத்தரையொருத்தர் பாத்துக்கிட்டுப் பேச ஆரம்பிச்சாங்க.

இல்லம்மா, நாங்களே பட்டணத்துல ஒண்டுக்குடித்தனத்துல இருக்கோம்... உன்னயும் அங்க கூட்டிட்டுப்போயி, வச்சிப் பாத்துக்க வசதிப்படாது. எங்களால முடிஞ்சது இருநூறோ முன்னூறோ மாசாமாசம் உனக்கு
அனுப்பிவச்சிர்றோம். நீ இங்கயே இருந்துக்க...தங்கச்சி ஒன்னப் பாத்துக்கிரட்டும். இந்த வீட்ட வேணும்னாலும் நீ அவளுக்கே குடுத்துரு...என்று, ஆளவிட்டாப்போதும் என்ற தோரணையில் அவசரமாச் சொல்லிமுடிச்சிட்டு வெளியே நடந்தான் குமரேசன். அண்ணனுக்கு ஒத்து ஊதிட்டு, அவனோடயே தானும் புறப்பட்டான் கதிரேசன்.

கண்ணக் கசக்கிக்கிட்டிருந்த அன்னத்துக்குக் கொஞ்சம் சந்தோஷம் வந்திருச்சு. அண்ணே, அம்மா இன்னும் நடையும் உடையுமாத்தான இருக்கு. அதனால, இந்த வீட்லயே இருக்கட்டும். நீங்க ரெண்டுபேரும், மாசாமாசம் ஆளுக்கு ஐநூறா அனுப்பிவச்சிருங்க. நா தினமும் வந்து அம்மாவப் பாத்துக்கிடுதேன், என்றபடி ஆட்டையும் கோழிகளையையும் பிடிச்சிக்கிட்டு, உள்ளூரில் இன்னொரு வீடும் கிடைக்கப்போகிற சந்தோஷத்தில், அடுத்த தெருவிலிருந்த தன் வீட்டுக்குக் கிளம்பிப்போனா அன்னம்.

அசையிற சொத்தான ஆடு மாட்டுக்குக் குடுத்த மதிப்பைக்கூட, தன் பிள்ளைகள் தனக்குக் குடுக்கலியேன்னு நினைத்து மருகியபடி, இருட்டியது கூடத் தெரியாம ஓட்டுவீட்டுத் திண்ணையில் ஒடுங்கிக் கிடந்த தங்கம்மா பாட்டி, மனசுகேக்காம, விறுவிறுன்னு எழுந்துபோயி வெளக்கேத்திவச்சிட்டு,  நம்ம கஷ்டம் நம்மளோட போகட்டும்...புள்ளைங்களாவது நல்லாயிருக்கட்டும்னு நெனைச்சுக்கிட்டு, தேவாரப் புத்தகத்த எடுத்துவச்சு, வாய்விட்டுப் படிக்க ஆரம்பிச்சிது.
                                                  *********************


Wednesday, October 20, 2010

கு...கு...கு...குளிர்காலம்!


கொளுத்திய வெயில் காலம் போயாச்சு...அப்பாடா, இன்னும் ஐந்தாறு மாசத்துக்கு அட்டகாசமான காலநிலைதான். அப்பப்போ மழைவரும். ஆளை நடுக்கும் பனி வரும். ஆனா, இப்போ, இதமான காற்றும் பதமான வெயிலுமாக இருக்கிறது பாலைவனம். தாவரங்களெல்லாம் தழைத்துப் பூக்களுடன் பொலிவாகக் காட்சியளிக்கிறது.அடுத்த மாதமெல்லாம் குளிரெடுக்க ஆரம்பித்துவிடும். பிரிந்திருக்கும் காதலர்களுக்குக் குளிர் காலம் கொடுமையாய்த் தோன்றுமென்பார்கள். பணியின் நிமித்தமாய்ப் பாலையில் தனித்து வாழுபவர்களுக்கும் அப்படித்தான். ஆனால், இதமான நினைவுகள் இல்லாதவர்களுக்குத்தான் குளிர்காலம் கடுமையாய்த் தெரியுமாம். இது ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு சொல் வழக்கு.

எத்தனை எத்தனையோ இதமும் பதமுமான நினைவுகளை இதயக்கூட்டில் சேமித்துவைத்திருப்பவர்கள் எந்தக் காலநிலையையும் எதிர்கொண்டு சமாளிக்கமுடியுமாம். ஆனால், அந்த நினைவுகளே இன்னும் ஞாபகத்தைக் கூட்டி, சுய இரக்கத்தைப் பெருக்கிவிடுமென்றுதான் தோன்றுகிறது.

இளமை பாரார் வளம்நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவண ரோ?எனப்
பெயல்புறம் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்குஎயிறு ஆக
நகுமே தோழி நறுந்தண் காரே...

இது குறுந்தொகைப்பாடல்...கார்காலத்தில் திரும்பிவருவேன் என்று சொல்லிப் பொருளீட்டச்சென்ற தலைவன், கார்காலம் வந்தும் வரவில்லை. அதனால் வருந்திய  தலைவியொருத்தி, தன் தோழியைப்பார்த்துச் சொல்கிறாள். இளமையின் இன்பங்களை மறந்துவிட்டுப் பொருள்தேடச்சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. இதையறிந்து, மழையினால் செழித்து மலர்ந்து கிடக்கின்ற முல்லைமலரானது, தன் அரும்புப் பற்களைக்காட்டி எனைக் கேலிசெய்கிறது என்று!


அங்கே தலைவி...இங்கே தலைவன்...

கம்பராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில், கிளிமொழியாள் சீதையை எண்ணி வாடுகிற இராமனைப்பற்றிச் சொல்லுவார் கம்பர்...

'மழை வாடையோடு ஆடி, வலிந்து, உயிர்மேல்
நுழைவாய்; மலர்வாய் நொடியாய் - கொடியே!
இழைவாள் நுதலாள் இடைபோல் இடையே
குழைவாய்; எனது ஆவி குழைக்குதியோ?

மழைக்காலத்து வாடைக்காற்றோடு மருவி ஆடுகிற கொடியே, நீ துவண்டுதுவண்டு ஆடுகிற அழகில், வாள்போன்ற நெற்றியையுடைய என் சீதையின் இடையழகை எனக்கு ஞாபகப்படுத்தி, என் உயிரினைத் தளரச்செய்கிறாயே என்று அசைந்தாடும்  கொடியினைக் கடிந்துகொள்கிறானாம் இராமபிரான்.

இப்படிப் பார்க்கிற பொருளெல்லாம் தன் துணையையே நினைவுறுத்த, பொருள்வயிற் பிரிந்து, காத்திருக்கும் காதலர்கள் நெஞ்சம் தளர்ந்துபோகக் காரணமாகிவிடுகிறதாம் கார்காலம்.

மழையும் வாடையுமான குளிர்காலத்தோட கஷ்டத்தைச் சொன்னதில் வருத்தப்பட்ட மனசுக்கு இதமாக,இனி, குளிரின் கொடுமையை இல்லாமல்செய்ய,
குளிர்காலத்துக்கான குறிப்பு ஒண்ணு...

குளிர்காலம் வந்துட்டா, தினமும்


உதட்டில் ரெண்டுதடவை,
கன்னத்தில் ரெண்டுதடவை,
நெற்றியில் ரெண்டுதடவை,
கண்ணிமைகளில் ஒருதடவை,
*
*
*
*
*
*
*
*
*

கோல்ட் க்ரீம் தடவிக்கிட்டா
உடம்புக்கு நல்லது...

இது நான் சொன்னதில்லேங்க...பிரபல அழகுக்கலை நிபுணர் அடிச்சுச்சொன்னது.


அடுத்ததா ஒரு மருத்துவக்குறிப்பு...

இடைவிடாத புயல் மழை, வெளியே இறங்கமுடியாத அளவுக்குக் குளிர். நள்ளிரவில் பல்வலியெடுக்கிறது உங்களுக்கு...என்ன செய்யலாம்?

இது, ஆர்க்டிக் பிரதேசத்து வைத்தியம்...ஆனா,பலன் நிச்சயம்!

கனத்த ஒரு சுத்தியலை எடுத்து, உங்கள் வலதுகைப் பெருவிரலில் நச்சுன்னு ஒரு அடி அடிச்சீங்கன்னா பல்வலி பட்டுன்னு பறந்துபோயிடுமாம். என்ன, யாருமே நம்பாதமாதிரி தெரியுதே....

ஆமாங்க...அடிபட்ட விரல் வலிக்கிற வலியில் மற்ற வலியெல்லாம் மறந்துபோயிடும் பாருங்க :) ...

என்ன, ஆளாளுக்கு சுத்தியலை எங்கேன்னு தேடுறீங்களோ? :)Sunday, October 17, 2010

சாலை விபத்துகளும் சரியும் கனவுகளும்!
அம்மா, இனிமே எனக்கு ஸ்கூலுக்கு ஸ்நாக்ஸ் குடுக்கும்போது கூடகொஞ்சம் சேத்துக்குடும்மா என்றாள் என் மகள்.

சரிடா, யாருக்கு ஃபிரெண்டுக்கா? என்றேன்.

பிரெண்டுதான்...ஆனா, குட்டி ஃபிரண்ட்...நாலுவயசுதான், என்றாள்.

அதென்னடா, கே.ஜி புள்ளையா என்றேன்.

ஆமாம்மா... என்றாள்.

தினமும் காலையில போகும்போது அந்தப்பொண்ணு எங்ககூட வரும். ஸ்கூல் பஸ்ஸில் தன்னோட இடத்துல அஞ்சு நிமிஷம்கூட உக்காராது...பேரு அஜிதா. ஒவ்வொருத்தர் மடியிலயா வந்து உக்காந்துகிட்டு, ஏதாவது சொல்லிக்கிட்டு, இல்லேன்னா கேட்டுக்கிட்டு வரும். எங்க எல்லாருக்கும் அது பெட்.

ஆனா, நேத்திலேருந்து அந்தக்குழந்தைமேல எல்லாருக்கும் பாசத்தோட, பரிதாபமும் சேந்துகிடுச்சு.

நேத்து காலையில ஸ்கூலுக்கு பஸ்ஸில் வந்தப்போ, எங்க வீட்டுக்கு கெஸ்டெல்லாம் வந்திருக்காங்க. ஆனா, எங்கம்மா மட்டும் அழுதுகிட்டு, ரூமைவிட்டு வெளியவே வரல,என் குட்டித்தம்பியைக்கூட தூக்கல...என்று அஜிதா கவலையாகச் சொன்னது.

பக்கத்திலிருந்த ஒரு பெண், பஸ்ஸில் வந்து, தன் காலைச் சிற்றுண்டியாக பர்கர் (burger) சாப்பிட்டதைப் பாத்துட்டு, எங்கப்பாவும் எங்களை ஷாப்பிங் கூட்டிட்டுப்போகும்போது, பர்கர் ஐஸ்க்ரீமெல்லாம் வாங்கிக்குடுப்பாங்க ஆனா, இனிமே எங்கப்பா எங்களைக் கடைக்கெல்லாம் கூட்டிப்போகமுடியாது...அப்பா, வெளிநாட்டுக்குப் போயிட்டாங்களாம். இனிமே, நான் வளந்து, படிச்சு, கல்யாணம் பண்ணும்போதுதான் திரும்பி வருவாங்களாம்...எங்க வீட்டுக்கு வந்திருக்கிற கிராண்ட்மா (grand mother)சொன்னாங்க என்று அஜிதா சொன்னப்ப எங்க யாருக்கும் எதுவும் புரியல.

ஆனா, மத்தியானம் கே ஜி ஸ்டூடண்ட்ஸையெல்லாம் பன்னிரண்டுமணிக்குக் கொண்டுவிட்டுட்டு, அடுத்து எங்களைக் கூட்டிட்டுவரும்போதுதான் பஸ் கண்டக்டர் சொன்னார், அஜிதாவோட அப்பா ரெண்டு நாளைக்குமுன்னாடி ரோட் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க. அஜிதாவுக்கு விபரம் தெரியவேண்டாம்னுட்டு, அதை வீட்ல வச்சுக்காம ஸ்கூலுக்கு அனுப்பிட்டிருக்காங்க என்று.

கேட்டதும் எனக்கு தொண்டைக்குள்ள வலியெடுக்க ஆரம்பிச்சிடுச்சும்மா...ஒருத்தரையொருத்தர் பாத்து வந்த கண்ணீரை அடக்கிக்கிட்டோம். இன்னிக்கும் அஜிதா ஸ்கூலுக்கு வரும். ஒவ்வொருத்தர் மடியிலயும் வந்து உக்காந்து அவங்க வீட்டுக்கதையைச் சொல்லும். நினைக்கவே கஷ்டமா இருக்கும்மா என்று சொல்லிவிட்டு,பஸ் வரவும் கிளம்பினாள் என்மகள்.

அவளைக் கையசைத்து வழியனுப்பமுடியாமல் செயலற்றுப்போய் நின்றேன் நான்.

பி.கு:-சாலையில் பாதுகாப்பு, நம் சகலருக்கும் உயிர் காப்பு!

Wednesday, October 13, 2010

இன்ஸ்டன்ட் விவாகரத்து!!!


ஆயிரம் பிரச்சனைகள் மனசில் அழுத்திக்கிட்டிருந்தாலும், குழந்தைகளுக்காகவும், கவுரவத்திற்காகவும் கடனே என்று பலர் கட்டாயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, எடுத்தேன் கவுத்தேன்னு, எதையும் விசாரிக்காம, ஷாப்பிங் மால்ல விவாகரத்து செஞ்சு பேப்பரில் வந்திருக்காங்க இவங்க...

விவாகரத்துக்கள் மலிந்துபோன இந்தக் காலகட்டத்திலும் இந்த விவாகரத்து, கொஞ்சம் வித்தியாசமானதுதான்.

மதீனாவிலுள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மால். கூட்டம் நிறைந்திருந்த அந்த மாலுக்கு வெளியே,மனைவியைக் கூட்டிச்செல்லக் காரில் காத்திருந்திருக்கிறார் அந்த சவுதி அரேபியக் கணவர். மாலிலிருந்து வெளியே வந்த தன் மனைவி இளைஞனொருவனிடமிருந்து ஒரு துண்டுச்சீட்டை வாங்கிக் கைப்பைக்குள் போட்டதைப் பார்த்துவிட்டு, காருக்குள் ஏறியதும் மனைவியின் கைப்பையைப் பிடுங்கிப்பார்க்க, அலைபேசி எண் எழுதப்பட்ட அந்தக் காகிதம் அவர் கையில் சிக்கியிருக்கிறது.

உடனே,மனைவியைக் காரிலிருந்து இறங்கச்சொன்ன அவர், ஷாப்பிங் மாலில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்புச் செய்வதற்காக வைத்திருந்த ஒலிபெருக்கியில், அங்கிருந்த மக்களை விளித்து, தன் மனைவியைத் தான் விவாகரத்துச் செய்துவிட்டதாக அறிவித்துவிட்டு, கண்ணீருடன் நின்ற மனைவியை அங்கேயே கைகழுவிட்டுத் தான் மட்டும் காரில் போய்ட்டாராம்.

சாமான் வாங்கன்னு ஷாப்பிங் மாலுக்கு வந்தா, முந்திவந்த விதி, அந்தப் பொண்ணுக்கு விவாகரத்தே வாங்கிக் கொடுத்திருச்சு. என்ன கொடுமை பாருங்க...


குறிப்பு:-இந்தச் செய்தியைஆங்கிலத்தில் படிக்கணுமா..."அழுத்துங்க இங்கே"

LinkWithin

Related Posts with Thumbnails