Wednesday, January 6, 2010

தோழி, நீ நலமா???


"என்னதான் சீக்கிரமா எழுந்தாலும் நேரத்துக்கு வேலையை முடிக்க முடியல, கணவரும் குழந்தைகளும் கிளம்புறதுக்குள்ள இன்னிக்கும் காலையில ஒரே டென்ஷன்.

காலையிலேருந்து தலை வேற வலிக்குது...அன்னிக்கு, புதுசா ஒரு குழம்பு செஞ்சதா சொன்னியே, அதைக் கொஞ்சம் சொல்றியா...வழக்கமான சமையல் ஒரே போர்ன்னு வீட்ல ஆளாளுக்கு குறை வேற..." - ஃபோனை எடுத்ததும் புலம்பலோடு ஆரம்பித்தாள் சுமதி, என்னோட பள்ளி, கல்லூரிக்காலத் தோழி.

"காலையில அஞ்சு மணிக்கு எழுந்திரிக்கிறே...அப்படியிருந்துமா உனக்கு வேலையை முடிக்கமுடியல?" என்றேன்.

"ஆமா...ஒவ்வொருத்தரா எழுப்பி, ஒண்ணொண்ணையும் எடுத்துக்கொடுத்து, அதுக்கிடையில சாப்பாடு செய்து,அவருக்குக் கட்டிக்கொடுத்து,சாப்பிடவும் வச்சு அனுப்பணுமே" என்றாள் அலுப்போடு.

ஆமா, மணி பத்தாகுதே நீ சாப்பிட்டியா? என்றேன்.

இன்னும் இல்லப்பா...எல்லாரும் கிளம்பினதும்தான் காஃபி குடிச்சேன். வீட்டைக் கொஞ்சம் ஒதுங்கவைச்சேன். துவைக்கிற துணிகளை மெஷின்ல போட்டேன்.
இனி,இருக்கிற பாத்திரங்களைக் கழுவிட்டு,மதிய சமையலை ஆரம்பிக்கணும், காய் நறுக்கணும், துவைச்ச துணியைக் காயவைக்கணும்.

அப்ப எப்பதான் காலை சாப்பாடு சாப்பிடுவே?

அநேகமா அதுக்கு நேரமிருக்காது...ரொம்பவும் பசியெடுத்தா இடையில ரெண்டு பிஸ்கெட் சாப்பிட்டுப்பேன். மத்தபடி நேரா மதியம்தான் என்றாள்.

ஐயோ, இப்படி சாப்பிடாம தவிர்க்கிறதால உடம்புகூட அதிகமா வெயிட் போடுமாம்.நேரத்துக்கு ஏதாவது சாப்பிடணும் சுமதி. ஆமா,மதியம் சாப்பிட்டப்புறமாவது கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பியா? என்றேன்.

அட போப்பா...அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கும்? மத்தியானம் ரெண்டு மணிக்கு பிள்ளைகள் வந்ததும் சாப்பாடு கொடுத்து தூங்க வச்சிட்டு, துவைச்ச துணிகளை மடிச்சு அடுக்கிவைப்பேன்.

அடுத்து வீட்டைப் பெருக்கித் துடைக்கணும். அதுக்குள்ள குழந்தைகள் எழுந்துடுவாங்க. அவங்களுக்குப் பாலைக் காய்ச்சிக்கொடுத்துட்டு கொஞ்சநேரம் விளையாட விடுவேன்.அதுக்குள்ள மதியம் சமைச்ச பாத்திரங்களையெல்லாம் கழுவிட்டு,தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் விடுவேன்.

அப்புறம்,குழந்தைகளை ஹோம்வொர்க் செய்ய வைப்பேன். என் மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறதுக்குள்ள உயிரே போயிடும் தெரியுமா?... நாம ஒண்ணு சொன்னா அவன் ஒண்ணு செய்வான். அதுக்குள்ள அவர் வந்துடுவார். அவருக்கு காஃபி,ஸ்நாக்ஸ் ஏதாவது கொடுத்துட்டு, அவர் டிவி பார்த்துட்டிருக்கும்போதே ராத்திரி சமையலுக்கு ரெடி பண்ணுவேன்.

அவருக்கு ராத்திரி கட்டாயம் சப்பாத்தி வேணும். பிள்ளைகளுக்கு பூரிதான் பிடிக்கும். ரெண்டுக்குமா சேர்த்து ஒரு குருமா பண்ணனும். அப்புறம் எல்லாரும் சாப்பிட்டுமுடிக்க மணி
ஒன்பதாயிடும்.மறுபடியும் அடுப்படியை சுத்தம் பண்ணிட்டு, தூங்கப்போக பத்தாயிடும்.

அவள்சொல்லச்சொல்ல எனக்கே அலுப்பாயிருந்தது.

ஆமா சுமதி,படிக்கிற காலத்தில, நீ நிறையக் கதை படிப்பே,ரொம்ப நல்லா கவிதை எழுதுவே, அழகா ஓவியமெல்லாம் வரைவியே அதெல்லாம் இப்ப பண்றதில்லையா என்றேன்.

அட, நீவேற, கல்யாணமாகி இத்தனை வருஷத்துல,ஒழுங்கா கையெழுத்துப்போடவே மறந்துபோச்சு... இதில கவிதையாவது, ஓவியமாவது என்று அலுப்பாய்ச் சிரித்தாள் அவள்.

பதைப்பாயிருந்தது எனக்கு. நாள் முழுக்க இப்படியே வேலைவேலைன்னு இருக்கிறியே, உன்னையும் கொஞ்சம் கவனிச்சுக்க வேண்டாமா? ஆமா, உன் கணவரோட குழந்தைகளோட உட்கார்ந்து ரிலாக்ஸா பேசவே மாட்டியா நீ? என்றேன்.

அதுக்கெல்லாம் எங்க நேரமிருக்குது சொல்லு... வீக்கெண்ட்ல எப்பவாவது வெளியே போனாதான் பேச்சு சந்தோஷமெல்லாம்...இருக்கிற வேலையெல்லாம் முடிச்சிட்டு, ராத்திரி படுக்கையில விழும்போது முதுகு, இடுப்பெல்லாம் ஏகப்பட்ட வலியாயிருக்கும்.வலிக்கு ஏதாவது க்ரீம் தடவிக்குவேன்.ரொம்பவும் வலிச்சா ஏதாவதொரு மாத்திரையை முழுங்கிட்டு கண்ணைமூடித் தூங்கிடுவேன் என்றாள்.

எவ்வளவு செல்லமாக, விளையாட்டுப்பிள்ளையாக வளர்ந்தவள் இவள்...இப்படியிருக்கிறாளே... என்று அவளை நினைக்கையில் எனக்குப் பாவமாக இருந்தது.

இப்படியே உடம்பை கவனிச்சுக்காம இருந்தா, பின்னாடி ஏதாவது பெரிய பிரச்சனையா வந்திடும் சுமதி. எவ்வளவு வேலையிருந்தாலும் உன்னோட உடம்புக்கும், உன்னோட விருப்பங்களுக்கும் கொஞ்சமாவது நேரம் எடுத்துக்கணும். இல்லேன்னா வாழ்க்கையே உப்புச்சப்பிலாம ஆயிடும் என்றேன்.

பிள்ளைகளோட வேலையை கொஞ்சம் கொஞ்சமா அவங்களாகவே செய்யப் பழக்கணும் நீ. வீட்ல,எல்லாரும் உட்கார்ந்து பேசிச்சிரிக்கவும், கருத்துக்களைப் பகிர்ந்துக்கவும் நேரம் ஒதுக்கணும்.உன்னோட வேலைகளையும் நீ திட்டமிட்டு சரியா செய்தா, உனக்கும் கொஞ்சம் நேரம் மிச்சமாகும். கிடைக்கிற அந்த நேரத்தில உன்னோட எழுதற, படிக்கிற ஆசையையும் நிறைவேத்திக்கலாம் என்றேன்.

போப்பா...உனக்கெங்கே புரியப்போகுது? நானே எந்த வேலையைக் கொஞ்சம் சுருக்கினா, எப்பவும்போல காக்காய் குளியல் குளிக்காம, கூடகொஞ்சநேரம் ஏகாந்தமா குளிக்கமுடியும்னு யோசிச்சிட்டிருக்கேன். இதில கவிதையாவது கத்திரிக்காயாவது...பிள்ளைகள் வர நேரமாச்சு...போனை வச்சிடுறேன் என்றபடி துண்டித்தாள் அவள்.

தொலைபேசியை வைக்கத்தோன்றாமல் நின்றேன் நான்.சுமதி மட்டுமல்ல... அவளைப்போல எந்திரத்தனமாக விருப்பு வெறுப்புகளைத் துறந்து, கடனேயென்று வாழ்க்கையைக்கடத்தும் தோழிகள் பலரை நினைக்கையில் நிஜமாகவே வருத்தமாக இருந்தது.

4 comments:

 1. உண்மைதான் சுந்தரா. நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளையும் ‘தோழி நீ நலமா’ என நம்மை நாமே கேட்டுக்கணும் எல்லோரும்.

  ReplyDelete
 2. உண்மை தான் சுந்தரா. குழந்தைகள் ஒருக் குறிப்பிட்ட வயது வளரும் வரை பலர் இப்படித்தான் இயந்திரத்தனமாய் வாழ்கின்றனர்

  ReplyDelete
 3. நன்றி ராமலக்ஷ்மியக்கா!

  நன்றி கலையரசன்!

  நன்றி அம்பிகா!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails