Monday, February 22, 2010

ஈ ஜோக்!


சமீபத்தில் ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்த "ஈ ஜோக்" ஒண்ணு...
*
*
*
*
*
*
மூன்று 'குடி'மகன்கள் ஒரு பாருக்குப் போயிருந்தாங்க...

அதில, ஒருத்தர் பெரும் பணக்காரர், இன்னொருத்தர் மிடில் க்ளாஸ், இன்னொருத்தரோ 'குடி'மகன்களிலேயே பெரும் 'குடி'மகன்...

மூணுபேருக்கும் கோப்பை நிறையக் கொண்டுவந்துகொடுத்தார் பார் சிப்பந்தி.

மூணுபேரோட கோப்பையிலும் ஒவ்வொரு ஈ மிதந்துகிட்டிருந்துச்சு.

சிப்பந்தியைக் கூப்பிட்டு் காட்டி, வேறு கொண்டுவந்து தரச்சொன்னார் பணக்காரர்.

மிதந்ததைத் தூக்கிப்போட்டுட்டு, சத்தமில்லாம குடிச்சிட்டுப்போய்ட்டார் மிடில் க்ளாஸ் ஆசாமி.

ஆனா, பெருங்குடிமகன் என்ன செய்தார்ன்னா......,

ஈயைத் தூக்கி கோப்பைக்கு மேலாகப் பிடிச்சுக்கிட்டு, குடிச்சதைத் துப்பு, குடிச்சதைத் துப்புன்னு கத்தி கலாட்டாபண்ணிட்டார் :) :) :)

இது எப்படியிருக்குது?????

Tuesday, February 9, 2010

கடி..... தாங்க முடியல!!!!

நான் கேட்டு அனுபவிச்சதை,நீங்க படிச்சு அனுபவிக்க...


1)ரஷ்யால கொசுவே கிடையாது...

ஏன்?

ஏன்னா, அங்கே அதுக்கு வேற பேரு (பெயர்)

*****************************************************
2)கோலமாவை வச்சு கோலம் போடலாம்...ஆனா,

கடலைமாவை வச்சு கடலைபோடமுடியுமா?

*****************************************************
3)சுதந்திரதினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் என்ன வித்தியாசம்?

????

பெருசா ஒண்ணுமில்ல,கிட்டத்தட்ட அஞ்சரை மாசம்.

*****************************************************
4)என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும்,......

அவனை துப்பாக்கியிலபோட்டு சுடமுடியுமா???

*****************************************************
5)வாழை மரம் தார் போடும்....

ஆனா, அதைவச்சு நாம ரோடுபோடமுடியுமா?

*****************************************************
6)என்னதான் நாய்க்கு நாலுகால் இருந்தாலும்,

அதால, லோக்கல் கால்,எஸ் டி டி கால், ஐ எஸ் டி கால்,ஏன் மிஸ்ட் கால்

கூடப்பண்ணமுடியாது....

*****************************************************
7)பல்வலி வந்தா பல்லைப் பிடுங்கலாம்,

அதேமாதிரி, தலைவலி வந்தா தலையைப்பிடுங்கமுடியுமா???

*****************************************************
8)சண்டேல சண்டை போடமுடியும்...ஆனா,

மண்டே ல மண்டையைப்போட முடியுமா?

*****************************************************
9)ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்...

காலேஜ் டெஸ்ட்லயும் பிட் அடிக்கலாம்...

ஆனா, ப்ளட் டெஸ்ட்ல பிட் அடிக்கமுடியுமா????

*****************************************************
10)ஒரு அண்ணனும் தங்கையும் ஓடிவராங்க...

நின்னதும் அண்ணன் மேல்மூச்சு வாங்கறான்...

தங்கை என்ன பண்ணுவா...?

female மூச்சு வாங்குவா...

Monday, February 8, 2010

மருந்தெல்லாம் மாறிப்போச்சு!!!

ஆண்டு விடுமுறையில ஊருக்குவந்தா முதல் நாலைஞ்சுநாள் நம்மளைக் கவனிச்சுக்கவே நேரம் சரியா இருக்கு. சாப்பாடு, தண்ணீர் வித்தியாசத்தால உடம்புசரியில்லாமப் போறது இப்பல்லாம் வாடிக்கையாயிடுச்சு.

போனவருஷமும் இதையெல்லாம் கடந்து, உறவுக்காரங்க வீடுகளுக்கு விசிட் அடிக்கத்தொடங்கியிருந்தோம்.விருந்து, உபசாரமெல்லாம் கொஞ்சம் அதிகமாகிப்போக, கடைசியில் அஜீரணம்தான் மிஞ்சியது. ஆளாளுக்கு டைஜின் சாப்பிடு, ஜெலுசிலைக் குடி, ஈனோவைக் குடின்னு ஏகப்பட்ட அறிவுரை சொன்னாங்க. "எலுமிச்சம்பழச்சாறில் உப்புப்போட்டுக் குடிக்கலாமே" என்றேன் நான். ஐயே, அதெல்லாம் பாட்டி காலத்து வைத்தியம். பட்டுன்னு பலன் குடுக்காது. இது உடனே கேட்கும்ன்னுசொல்லி, மாத்திரையைக் கையில திணிச்சாங்க.

ஆஹா,இப்பல்லாம் நம்ம ஊர்ல,அறிவுரை மாதிரியே மருந்து மாத்திரையும் தாராளமாக் கிடைக்கிதேன்னு நினைச்சு சிரிச்சுக்கிட்டேன் நான். சாப்பாட்டுக்கான சாமான்கள் இருக்கோ இல்லையோ, இப்பல்லாம், எல்லார் வீட்டிலும் அவரவருக்கென்று ஒரு வண்டி மாத்திரை ஸ்டாக் இருக்கிறது. இதை,அவங்க சாப்பிடுறதுமில்லாம அடுத்தவங்களுக்கு ரெக்கமெண்டேஷன் வேற பண்றாங்க...

அதிலும், சின்னக்குழந்தைங்க இருக்கும் வீடுன்னா சொல்லவே வேண்டாம். அலமாரி நிறைய அடுக்கிவச்சிருக்காங்க மருந்துகளை.ஒண்ணு வேலை செய்யலேன்னா இன்னொண்ணுன்னு ஏகப்பட்ட ஆப்ஷன் இருக்கு அதில.

முன்னெல்லாம், சின்னக் குழந்தைகள் இருக்கும் வீட்டில, சுக்கு, மிளகு, திப்பிலி,அக்கரா, சித்தரத்தை, ஜாதிக்காய், மாயக்காய்ன்னு மருந்துப் பொருட்கள் உள்ள ஒரு டப்பாவும், அதை உரசிக்கொடுக்க ஒரு உரைகல்லும் கட்டாயம் இருக்கும்.பிள்ளை வளர்ப்பான் என்று சொல்லுகிற வசம்புக்கு இதில் ஸ்பெஷல் இடம் உண்டு. அதை நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு, உரசி நாக்கில் தேச்சு விடுவாங்க. குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப் பொருமலுக்கும், வாய்வுக் கோளாறுகளுக்கும் வசம்பு அருமருந்துன்னு சொல்லுவாங்க.

வாரத்தில் ரெண்டு நாள்,இந்த மருந்துகளை உரைகல்லில் உரசி, நாக்கில் தடவி விடுவாங்க.சிலர், இந்த மருந்துகளோடு சுத்தமான தங்கத்தையும் கொஞ்சம் உரசிக்கொடுப்பாங்க. பிள்ளை தளதளன்னு தங்கமாட்டம் இருக்குமாம் :)

முன்னெல்லாம் கூட்டுக்குடும்பமாக இருந்த காலத்தில, வீட்டில அம்மா, பாட்டின்னு குழந்தைகளைக் கொண்டாட ஆள் இருப்பாங்க. இன்று, அவசர யுகம்... அனுபவமும், அறிவுரை சொல்ல ஆளும் இல்லாத இளம் பெற்றோர்கள். ஒரு பிள்ளை பெற்று வளர்ப்பதற்குள் 'போதும்டா சாமீ' என்று சலிச்சுக்கிறாங்க.மூணு குழந்தைகள் இருக்குன்னு சொன்னா, உங்களுக்கு கோயிலே கட்டலாம்னு அதிசயப்படுறாங்கன்னா பாருங்களேன்...

ஓடியாடி வேலைசெய்தா உடம்புக்கு நல்லது, கூடிவிளையாடினா குழந்தைகளுக்கு நல்லது. ஆனா, ரெண்டுமே இல்ல இப்போ. குனிஞ்சு நிமிர்ந்து வேலைசெய்றதையே மறந்தாச்சு நாம. கூட்டுப்பறவைகளா மாறிட்டாங்க குழந்தைங்க. தொலைக்காட்சியும் கணினியும்தான் வீட்டில் ஓயாமல் உழைக்கிறதாகிப்போச்சு.

வாரம் ஒருமுறை சுக்குக்கஷாயம், மாசத்துக்கொருதடவை வேப்பிலை மருந்து, ஜலதோஷம் வந்தா சுக்குக்காப்பி,வயிற்றுப்பிரச்சனைன்னா, ஓமத்திரவம்ன்னு சின்னச்சின்ன, எளிதாகக்கிடைக்கிற பொருள்களாலேயே சுகப்படுத்திக்கொண்டோம் அந்தக்காலத்தில்.

ஆனா இப்ப,சின்ன விஷயத்துக்கெல்லாம், ஏகப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டு, பின்னாடி வரப்போகும் பக்கவிளைவுகளின் தீவிரம் புரியாமலிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை. பெரியவர்கள் சொன்னால் கேட்கக்கூடிய பொறுமையும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எந்த ஒரு விஷயத்துக்கும் இன்ஸ்டன்ட் ரெமெடி வேணும். அதுமட்டும்தான் அவங்களுக்கு முக்கியம்.

ஆறேழு தும்மல் போடுறதுக்குள்ள அதிக சக்தியுள்ள ஆன்டிபயாட்டிக்கை சாப்பிட்டு, வெளியே வரவேண்டிய நீரை உள்ளேயே அழுத்தி, வயிற்றுப் பாதிப்பு மற்றும் இன்னபிற விஷயங்களையும் இலவச இணைப்பாக வரவழைத்துக்கொள்கிறார்கள்.

கொள்ளை விலைக்கு மருந்தையும் வாங்கி, சொல்லாமலே கூடவரும் பாதிப்புகளையும் அனுபவிப்பதைவிட, சரியான நேரத்தில் தூங்கி, சரியான உணவுகளைச் சமைத்துச் சாப்பிட்டு, அளவான உடற்பயிற்சியோடு அவசியமான ஆரோக்கியமுறைகளைக் கடைப்பிடிச்சா, அநாவசியப் பிரச்சனைகள் பலவற்றை நாம தவிர்க்கலாம்.

அதையும் மீறி, சீரியசான பிரச்சனைகளுக்கு மருத்துவரைப் பார்க்கலாம், தவறில்லை. ஆனா, சின்னச்சின்ன விஷயங்களுக்கு ஏகப்பட்ட முக்கியத்துவம்கொடுத்து, ஏதேதோ மருந்துகளைச் சாப்பிட்டு எதிர்ப்பு சக்தியைக் கெடுத்துக்கொள்ளாமலிருப்பது ரொம்பரொம்ப முக்கியம்.

Wednesday, February 3, 2010

என்னோட மகனுக்கும் இந்த வயசுதான் இருக்கும்...!

ஒரு வெள்ளிக்கிழமை மாலை...
பார்க் பெஞ்சுகளில் அமர்ந்து பொருளாதாரத்தை அலசுபவர்களும், கருமமே கண்ணாக நடைப்பயிற்சிசெய்பவர்களும், குழந்தைகளை விளையாடவிட்டுவிட்டு, குடும்பப் பிரச்சனைகளைப் பேசிக்கொண்டிருக்கும் பெற்றவர்களுமாக நிறைந்திருந்தது பூங்கா.

சுற்றிச்சுற்றிவந்து கீழே கிடக்கிற குப்பைகளைப் பொறுக்கிச் சுத்தம்செய்துகொண்டிருந்தார் சீருடை அணிந்த பணியாளர் ஒருத்தர்.பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த என் பிள்ளைகள் தமிழில் பேசியதைக் கவனித்திருப்பார்போலிருக்கிறது. பக்கத்தில் வந்து, 'நம்ம ஊராம்மா...' என்றார். திரும்பிப்பார்த்துத் தலையசைத்தேன். எனக்கு விழுப்புரம் பக்கம்... நீங்க எங்கேம்மா? என்றார். எனக்கு திருச்செந்தூர் பக்கம் என்றேன்.அதற்குள்,முந்திக்கொண்டு என்மகன், திருச்சி என்றான்.

அம்மாவுக்குத் திருச்செந்தூர், உனக்குத் திருச்சியா என்று கேட்டுவிட்டுச் சிரித்தார் அவர். 'ஆமாங்க, அவன் பிறந்த ஊரை அவனோட ஊர்ன்னு சொல்றான்' என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில், பின்னாலிருந்து ஒரு குழந்தையின் அழுகைச்சத்தம். ஊஞ்சலில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான் ஒரு சின்னப்பையன். பக்கத்தில் பெரியவர்கள் யாரும் இல்லை.

என்னுடன் பேசிக்கொண்டிருந்தவர் வேகமாய்ப்போய் அந்தக் குழந்தையிடம் ஹிந்தியில்,உங்க அம்மா எங்கே என்று கேட்டார். அந்தச் சிறுவனுக்கு விளங்கவில்லை. தனக்குத்தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டுப்பார்த்தார். அதற்கும் பதில்சொல்லாமல் அழுதுகொண்டே இருந்தான் பையன். 'இறக்கிவிட்டா புள்ள தனியா எங்கேயாவது போயிடக்கூடாதுல்ல...' என்று என்னிடம் சொல்லிவிட்டு,சுற்றுமுற்றும் பார்த்தார் அவர்.

அதற்குள் எங்கிருந்தோ வந்துவிட்ட அந்தப்பையனின் அம்மா, அழுதுகொண்டிருந்த மகனையும்,அருகில் நின்ற அந்த சீருடைப் பணியாளரையும் பார்த்துவிட்டு,மகனிடம் ஏதோ கேட்டாள். என்ன சொன்னானோ அந்தப்பையன், காச்சுமூச்சென்று அரபியில் கத்தத்தொடங்கினாள் அந்தப்பெண். அதிர்ந்துபோன அந்த மனிதர் அரபியில் அந்தப்பெண்ணிடம் சொல்லி விளங்கவைக்கமுயற்சித்தார். அவர் சொல்வதைக் காதில்கூட வாங்காமல் குழந்தையை இறக்கி இழுத்துக்கொண்டுபோய்விட்டாள் அந்தப்பையனின் அம்மா.

திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். அதற்குள்,சமாளித்துக்கொண்ட அவர், 'புள்ளையப் பாத்துக்காம இவுங்க உட்டுட்டுப் போயிடறாங்க. நாம என்னன்னு கேட்டா அதுக்கும் கத்துறாங்க...இங்க வேலைக்கு வந்து இதுமாதிரி நிறைய பாத்தாச்சும்மா' என்றவர் பெருமூச்சு விட்டபடி, 'எம்புள்ளைக்கும் இந்த வயசுதான் இருக்கும்...பொறந்தப்ப பார்த்தது. இப்ப, ஊர்ல ஒண்ணாவது படிக்கிறான்...' குரல் கம்மச் சொல்லிவிட்டு, சுத்தம் செய்கிற வேலையைத் தொடர்ந்தார் அவர். எனக்குப் பேச்சு வரவில்லை.

குடும்பக் கஷ்டம், கூடப்பிறந்தவங்களின் கல்யாணம், பிள்ளைங்களோட படிப்பு,பெத்தவங்களோட மருத்துவச்செலவுன்னு ஏதாவதொரு தேவை எப்போதும் தொடர்ந்துகொண்டேயிருக்க, இதுபோல மக்களின் வாழ்க்கை இந்தப் பாலைவனத்தில் பாசத்துக்கு ஏங்கியவாறே பலவருடங்களைக் கடத்தவைக்கிறது. ஆனால், உறவுகளைத் தேடி ஏங்கிப்போய், இவர்கள் ஊருக்கு வரும்போது, இவர்களைப் பணங்காய்ச்சி மரங்களாக மட்டுமே பார்க்கிற நம் சமூகத்தை நினைக்கையில், என்னையுமறியாமல் கண்ணில் நீர் துளிர்த்தது.

LinkWithin

Related Posts with Thumbnails