Wednesday, February 3, 2010

என்னோட மகனுக்கும் இந்த வயசுதான் இருக்கும்...!

ஒரு வெள்ளிக்கிழமை மாலை...
பார்க் பெஞ்சுகளில் அமர்ந்து பொருளாதாரத்தை அலசுபவர்களும், கருமமே கண்ணாக நடைப்பயிற்சிசெய்பவர்களும், குழந்தைகளை விளையாடவிட்டுவிட்டு, குடும்பப் பிரச்சனைகளைப் பேசிக்கொண்டிருக்கும் பெற்றவர்களுமாக நிறைந்திருந்தது பூங்கா.

சுற்றிச்சுற்றிவந்து கீழே கிடக்கிற குப்பைகளைப் பொறுக்கிச் சுத்தம்செய்துகொண்டிருந்தார் சீருடை அணிந்த பணியாளர் ஒருத்தர்.பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த என் பிள்ளைகள் தமிழில் பேசியதைக் கவனித்திருப்பார்போலிருக்கிறது. பக்கத்தில் வந்து, 'நம்ம ஊராம்மா...' என்றார். திரும்பிப்பார்த்துத் தலையசைத்தேன். எனக்கு விழுப்புரம் பக்கம்... நீங்க எங்கேம்மா? என்றார். எனக்கு திருச்செந்தூர் பக்கம் என்றேன்.அதற்குள்,முந்திக்கொண்டு என்மகன், திருச்சி என்றான்.

அம்மாவுக்குத் திருச்செந்தூர், உனக்குத் திருச்சியா என்று கேட்டுவிட்டுச் சிரித்தார் அவர். 'ஆமாங்க, அவன் பிறந்த ஊரை அவனோட ஊர்ன்னு சொல்றான்' என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில், பின்னாலிருந்து ஒரு குழந்தையின் அழுகைச்சத்தம். ஊஞ்சலில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான் ஒரு சின்னப்பையன். பக்கத்தில் பெரியவர்கள் யாரும் இல்லை.

என்னுடன் பேசிக்கொண்டிருந்தவர் வேகமாய்ப்போய் அந்தக் குழந்தையிடம் ஹிந்தியில்,உங்க அம்மா எங்கே என்று கேட்டார். அந்தச் சிறுவனுக்கு விளங்கவில்லை. தனக்குத்தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டுப்பார்த்தார். அதற்கும் பதில்சொல்லாமல் அழுதுகொண்டே இருந்தான் பையன். 'இறக்கிவிட்டா புள்ள தனியா எங்கேயாவது போயிடக்கூடாதுல்ல...' என்று என்னிடம் சொல்லிவிட்டு,சுற்றுமுற்றும் பார்த்தார் அவர்.

அதற்குள் எங்கிருந்தோ வந்துவிட்ட அந்தப்பையனின் அம்மா, அழுதுகொண்டிருந்த மகனையும்,அருகில் நின்ற அந்த சீருடைப் பணியாளரையும் பார்த்துவிட்டு,மகனிடம் ஏதோ கேட்டாள். என்ன சொன்னானோ அந்தப்பையன், காச்சுமூச்சென்று அரபியில் கத்தத்தொடங்கினாள் அந்தப்பெண். அதிர்ந்துபோன அந்த மனிதர் அரபியில் அந்தப்பெண்ணிடம் சொல்லி விளங்கவைக்கமுயற்சித்தார். அவர் சொல்வதைக் காதில்கூட வாங்காமல் குழந்தையை இறக்கி இழுத்துக்கொண்டுபோய்விட்டாள் அந்தப்பையனின் அம்மா.

திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். அதற்குள்,சமாளித்துக்கொண்ட அவர், 'புள்ளையப் பாத்துக்காம இவுங்க உட்டுட்டுப் போயிடறாங்க. நாம என்னன்னு கேட்டா அதுக்கும் கத்துறாங்க...இங்க வேலைக்கு வந்து இதுமாதிரி நிறைய பாத்தாச்சும்மா' என்றவர் பெருமூச்சு விட்டபடி, 'எம்புள்ளைக்கும் இந்த வயசுதான் இருக்கும்...பொறந்தப்ப பார்த்தது. இப்ப, ஊர்ல ஒண்ணாவது படிக்கிறான்...' குரல் கம்மச் சொல்லிவிட்டு, சுத்தம் செய்கிற வேலையைத் தொடர்ந்தார் அவர். எனக்குப் பேச்சு வரவில்லை.

குடும்பக் கஷ்டம், கூடப்பிறந்தவங்களின் கல்யாணம், பிள்ளைங்களோட படிப்பு,பெத்தவங்களோட மருத்துவச்செலவுன்னு ஏதாவதொரு தேவை எப்போதும் தொடர்ந்துகொண்டேயிருக்க, இதுபோல மக்களின் வாழ்க்கை இந்தப் பாலைவனத்தில் பாசத்துக்கு ஏங்கியவாறே பலவருடங்களைக் கடத்தவைக்கிறது. ஆனால், உறவுகளைத் தேடி ஏங்கிப்போய், இவர்கள் ஊருக்கு வரும்போது, இவர்களைப் பணங்காய்ச்சி மரங்களாக மட்டுமே பார்க்கிற நம் சமூகத்தை நினைக்கையில், என்னையுமறியாமல் கண்ணில் நீர் துளிர்த்தது.

9 comments:

 1. குறிப்பிட்டிருக்கும் நிகழ்வு தரும் வருத்தம் ஒருபுறம் என்றால் அவர் போன்றவர்களின் நிலைமையும்.

  ReplyDelete
 2. //முத்துலெட்சுமி/muthuletchumi said...
  சோகம் தான் அவர் நிலைமை..//

  வாங்க முத்துலட்சுமி...

  இதுபோல் பலரை இங்கே பார்க்கமுடியும்.

  நன்றி!

  ReplyDelete
 3. //ராமலக்ஷ்மி said...
  குறிப்பிட்டிருக்கும் நிகழ்வு தரும் வருத்தம் ஒருபுறம் என்றால் அவர் போன்றவர்களின் நிலைமையும்.//

  நிஜம்தான் அக்கா.

  நன்றி!

  ReplyDelete
 4. பலரின் மன ஏக்கங்களை வெளிப்படுத்திய அழகிய பதிவு.

  ReplyDelete
 5. //V.Radhakrishnan said...
  பலரின் மன ஏக்கங்களை வெளிப்படுத்திய அழகிய பதிவு.//

  நன்றி ரங்கன்!

  ReplyDelete
 6. நிறையபேர் உண்டு இந்தமாதிரி. போகுமிடமெல்லாம், என் சின்னப் பையனையும் பார்த்து “என் புள்ளையும் இந்த மாதிரிதான் இருப்பான்” என்று சொல்லும்போதே நமக்கு ரொம்ப சங்கடமா இருக்கும்.

  ReplyDelete
 7. உண்மைதான் ஹுசைனம்மா...

  நன்றி!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails