Monday, March 1, 2010

பூ வாசம்
கட்டி மல்லிகையும், கனகாம்பரமும் வாங்கி, மகளுக்கு ரெட்டைப்பின்னலில் வைத்துவிட்டு, தன்பக்கம் திருப்பி முத்தமிட்டு, அவளுக்கு நெட்டி முறித்தாள் கற்பகம். அப்பாவின் சாயலும் அம்மாவின் நிறமுமாய்த் துறுதுறுவென்று நின்ற மகளைப் பார்க்கையில் பெருமிதம் தாங்கவில்லை அவளுக்கு.

"வெளையாடப் போகணும், விடும்மா..." என்றபடி, அம்மாவின் அணைப்பிலிருந்து விடுபட்டு வாசலுக்கு ஓடினாள் எட்டு வயது அமுதா. மிச்சப்பூவிலிருந்து ரெண்டு கண்ணியைத் தன் தலையில் வைத்துக்கொண்டு, அடுப்படிக்குள் நுழைந்தாள் கற்பகம்.

வாசலில் பைக் சத்தம் கேட்க, வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான் கற்பகத்தின் கணவன் செந்தில். கணவனுக்கு சூடாகக் காப்பியை ஆற்றிக்கொண்டே வந்தவள், மகனின் குரல் கேட்கவே வாசலை எட்டிப்பார்த்தாள்.

"அம்மா, இவளை ஏன் வெளிய விளையாட அனுப்பினே? அங்க வந்து தலைவலிக்குதுன்னு அப்பவேருந்து அழுதுகிட்டிருக்கா..." என்றபடி தங்கையைக் கொண்டுவந்து விட்டுவிட்டு, திரும்பவும் விளையாட ஓடினான் அருண், அமுதாவின் அண்ணன்.

தலையைப் பிடித்தபடி வந்து கட்டிலில் விழுந்தாள் அமுதா.
"என்னம்மா, எங்கியாவது விழுந்திட்டியா? கிரிக்கெட் விளையாடும்போது பந்துகிந்து பட்டுருச்சா"ன்னு பதறிப்போனாள் கற்பகம். "ஒண்ணும் அடிபடலம்மா. சும்மாதான் வலிக்குது...ஆனா, ரொம்ப வலிக்குது" என்று அழுதபடியே சொன்னாள் அமுதா.

"வெளையாடப்போற புள்ளைக்கு ஏண்டி இத்தனை அலங்காரம் பண்ணி அனுப்புறே? யாரு கண்ணு பட்டுச்சோ? முதல்ல புள்ளைக்கு சூடம் சுத்திப்போடு" என்றபடி மகளைத் தூக்கி மடியில் இருத்திக்கொண்டான் செந்தில். ஒண்ணும் இல்லம்மா சரியாயிடும் என்ற தகப்பனின் அணைப்பிலிருந்தும் தலைவலி அதிகரிக்க, அப்பா, இந்தப் பூவைக் கழட்டச் சொல்லுங்கப்பா என்று அழுதாள் அமுதா. "எத்தனை ஹேர்ப்பின் மாட்டி வச்சிருக்கா பாரு. இதுவே புள்ளைக்குத் தலை வலிக்கும் என்றபடி, வந்து சீக்கிரம் இந்தப் பூவைக் கழற்றிவிடு நீ" என்றான் மனைவியிடம்.

வாசலில் சூடத்தைக் கொளுத்திவிட்டு வந்து பூவைக் கழற்றியபடி, "எதுக்கும் டாக்டர்கிட்ட கூட்டிப்போய்ட்டு வந்திருவோமா?" என்றாள் கற்பகம். "புள்ளைக்கு முதல்ல சூடா ஏதாவது குடிக்கக்குடு. கொஞ்ச நேரம் கழிச்சுப் பாப்போம்" என்றபடி, மகளை மடியில் படுக்கவைத்துக்கொண்டு, தலையை மெதுவாக அழுத்திக்கொடுத்தான் செந்தில்.

கொஞ்ச நேரத்தில் எழுந்துகொண்டு, தலைவலி சரியாயிருச்சுப்பா என்றபடி, விட்ட விளையாட்டைத் தொடர வெளியே ஓடினாள் அமுதா. நிம்மதிப் பெருமூச்சோடு, "அப்பா பக்கத்தில இருந்தா மகளுக்கு எல்லாம் உடனே சரியாயிடும்" என்றபடி கணவனைப் பார்த்துச் சிரித்தாள் கற்பகம்.பெருமிதம் நிறைந்திருந்த தன் கணவனின் முகத்தை ரசித்தாள்.

அதுக்கப்புறம், நல்லநாள், விசேஷம்னு வந்து ஆசையா அலங்கரிச்சுக்கிறதும், அன்னிக்கு உடம்பு முடியாம படுத்துக்கிறதும் அமுதாவுக்கு வாடிக்கையாகிப்போனது. கல்லூரிக்குப் போனபின்தான் ஒருநாள் காரணம் புரிந்தது அவளுக்கு. பக்கத்தில் இருந்த பாமா வச்சிருந்த மல்லிப்பூ, அவளுக்குள் அதே அசௌகரியத்தை ஏற்படுத்த, அம்மாவிடம் வந்து சொன்னாள்.

"பூ வாசமெல்லாம் பிடிக்காம போகாது. நீயா இப்படி எதையாவது மனசில நினைச்சுக்காத. அப்புறம் அதுவே உனக்கு ஒரு காரணமாப் போயிரும் என்றபடி, பொண்ணுன்னா பூவச்சாதாண்டி அழகே..." என்றாள் கற்பகம்.

ஆனால், மெல்லமெல்லப் பூவைத் தவிர்த்தாள் அமுதா. பக்கத்தில் யாராவது பூ வச்சவங்க உட்காந்தாகூட, தானா பூக்கிற பூவை இப்படித் தலையில வச்சு, அதுக்குத் தூக்குத்தண்டனை குடுக்கிறீங்களே என்று கடிந்துகொள்ளுவாள். எப்போதாவது அம்மா பிடிவாதம் பிடித்தால், கொஞ்சமாய்க் கனகாம்பரம் வைத்துக்கொண்டாள்.

கல்யாணத்தன்று, அவள் தலைநிறைய வச்ச பூவே அவளுக்கு பிரச்சனையை உண்டாக்கியது. "வந்த அன்னிக்கே ஏன் இப்படி முகம்வாடிப்போயிருக்கே..." என்றபடி, இன்னும் கொஞ்சம் பூவை வைத்து அலங்கரித்து, அவளை அறைக்குள் அனுப்பிவைத்தார்கள்.

அவள் சொன்ன காரணம் அவள் கணவனுக்குத் திருப்தியாயில்லாமல்போக,
"இந்தக் கல்யாணத்தில உனக்கு இஷ்டமில்லையா அமுதா" என்றான் அவன்."ஐய்யையோ, அப்படியெல்லாம் இல்லைங்க" என்று அவசரமாக மறுத்தவள், தலையிலிருந்து பூவை எடுத்துரட்டுமா என்று கணவனிடம் கேட்க நினைத்து, கட்டிலில் தூவியிருந்த பூக்களைப் பார்த்ததும் பல்லைக் கடித்துக்கொண்டு மௌனமானாள்.

அப்புறம், ஆசையாய் அவன் பூவாங்கி வருவதும், அன்றைக்கெல்லாம் சண்டை வருவதும் சகஜமாகிப்போயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக அவனும் புரிந்துகொண்டு அவளைக் கட்டாயப்படுத்துவதை விட்டிருந்தான்.

அன்றைக்குக் காலையில், புதுசாக ஒரு புடவை கட்டியிருந்த அவளிடம், "தலையில,
பூ மட்டும் வச்சிருந்தா அப்படியே தேவதை மாதிரி இருப்பே" என்று காதுக்கருகில் வந்து சொல்லிவிட்டுப்போனவன், சாலைவிபத்தில் சிக்கி உயிரற்ற உடலாகத்தான் வீட்டுக்குத் திரும்பினான்.

கத்தி அழக்கூடமுடியாமல் விக்கித்துப்போனாள் அமுதா. அக்கம்பக்கத்திலிருந்தவர்கள்,அவளுடைய உறவுகள், அவனுடன் பணியாற்றியவர்களென்று அத்தனைபேரும் மாலை வாங்கிவந்து மரியாதை செலுத்திவிட்டுப்போனார்கள். தாங்கமுடியாத வேதனையும் தலைபாரமும் சேர்ந்துகொள்ள, தன்னுணர்விழந்துபோனாள் அமுதா. மயக்கத்திலிருந்தவளைத் தெளியவைத்து கணவனுக்கான கடைசிக் கடமைகளைச் செய்யவைத்தார்கள் உறவினர்கள்.

கண்களிலிருந்து கண்ணீர் தானாக வழிந்துகொண்டிருக்க, நிலைகுத்திய பார்வையுடன் சரிந்து அமர்ந்திருந்தாள் அமுதா. கையில் குங்குமச்சிமிழும், கனகாம்பரமும் மல்லிகையுமாக உள்ளே நுழைந்தார்கள் உறவுக்காரப்பெண்கள் சிலர். என்னவோ புரிந்தது அவளுக்கு.

"ஐயோ, இன்னுமா என்னைக் கொடுமைப்படுத்துவீங்க...என்னை விட்டுடுங்க, விட்டுடுங்க" என்று பித்துப்பிடித்தவள்போலக் கத்தத் தொடங்கினாள் அமுதா. கொண்டு வந்த பூவைத் தரையில்போட்டுவிட்டு, "புருஷன் போன துக்கமும்,அடக்கிவச்ச அழுகையும் இந்தப் பொண்ணுக்கு மனசைப் பாதிச்சிருச்சோ..." என்று முணுமுணுத்தபடி, வெளியேறிச்சென்றார்கள் வந்திருந்த பெண்கள்.

சொல்லிச்சென்ற வார்த்தைகள் தன்னிரக்கத்தை உண்டுபண்ண, தரையில் கிடந்த பூவை எடுத்து வெளியே வீசிவிட்டு, அலறி அழத்தொடங்கினாள் அமுதா.

16 comments:

 1. சின்னசின்னதா விஷயங்கள் சேர்த்து, கடைசியில ஐயோன்னு சொல்ற முடிவு.குடும்பத்து விஷயங்களை நீங்க சொல்றவிதம் சும்மா சொல்லக்கூடாது சூப்பர் போங்கோ.

  ரொம்பநாள் அப்புறம் வந்தேன்.அருமையான பதிவு கிடைச்சுது.
  நன்றிங்க.

  -anu

  ReplyDelete
 2. நலமா அனு?

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 3. மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள் சுவாரஸ்யமான பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. பூ வாசம் முடிவில் சோகம்.

  சம்பவங்களைக் கோர்த்தவிதமும் எழுத்து நடையும் வழக்கம் போலவே நன்று சுந்தரா.

  ReplyDelete
 5. ரசிக்கவும், ரணப்படவும் வைத்த இடுகை...

  ReplyDelete
 6. //சசிகுமார் said...
  மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள் சுவாரஸ்யமான பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

  வாங்க சசிகுமார்...

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 7. //ராமலக்ஷ்மி said...
  பூ வாசம் முடிவில் சோகம்.

  சம்பவங்களைக் கோர்த்தவிதமும் எழுத்து நடையும் வழக்கம் போலவே நன்று சுந்தரா.//

  வாங்க அக்கா.

  மிக்க நன்றி!

  ReplyDelete
 8. //க.பாலாசி said...
  ரசிக்கவும், ரணப்படவும் வைத்த இடுகை...//

  வாங்க பாலாசி!

  மிக்க நன்றி!

  ReplyDelete
 9. பூ வாசத்தை இப்படி சோகத்தில் முடித்து விட்டீர்களே!!

  கதை நடை அழகு.

  ReplyDelete
 10. //கோமதி அரசு said...

  பூ வாசத்தை இப்படி சோகத்தில் முடித்து விட்டீர்களே!!

  கதை நடை அழகு.//

  வாங்க கோமதி அரசு...

  மிக்க நன்றி!

  ReplyDelete
 11. நல்ல அழகான நடையில் கொண்டு சென்றகதையை இப்படி சோகமா முடிச்சிட்டிங்களே.

  ReplyDelete
 12. நன்றி அம்பிகா!

  ReplyDelete
 13. பூவுக்குள் இப்படி ஒரு பூகம்பமா?

  இன்றுதான் முதல் வருகை
  இனி தொடர்ந்து வருவேன்....
  நிதானமாக வாசித்து பின்னூட்டம் இடுகிறேன்

  ReplyDelete
 14. நல்ல அழகான நடையில் கொண்டு சென்றகதையை இப்படி சோகமா முடிச்சிட்டிங்களே.

  ReplyDelete
 15. //goma said...
  பூவுக்குள் இப்படி ஒரு பூகம்பமா?

  இன்றுதான் முதல் வருகை
  இனி தொடர்ந்து வருவேன்....
  நிதானமாக வாசித்து பின்னூட்டம் இடுகிறேன்//

  முதல் வருகைக்கும் தொடர்ந்து வரவிருப்பதற்கும் மிக்க நன்றி :)

  ReplyDelete
 16. //Menaga said...
  நல்ல அழகான நடையில் கொண்டு சென்றகதையை இப்படி சோகமா முடிச்சிட்டிங்களே.//

  வாங்க மேனகா...முதல்வருகைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails