Wednesday, April 28, 2010

வெள்ளுடைத் தேவதைகள் சொல்லிச்சென்ற கதைகள்!


சின்ன வயசிலிருந்தே கதை கேட்பதிலும் படிப்பதிலும் ரொம்பவே ஆர்வம் உண்டு. ராத்திரிச் சாப்பாட்டுக்கு கட்டாயம் கதை வேணும்னு அப்பா கிட்ட அடம் பிடிப்பதுண்டு. அப்பா சொன்ன ராஜா காது கழுதைக்காது கதையை அதே மாதிரி ஏற்ற இறக்கத்துடன், ராக பாவங்களுடன் நானும் என் சிறுவயசுத் தோழமைகளிடம் சொல்லிப் பாராட்டு வாங்கியிருக்கிறேன்.

அதுமாதிரி,சின்ன வயசிலிருந்தே பாட்டிகளின் அருகாமையைப் பத்திரமாய் உணர்ந்ததுண்டு. முத்தம்மா பாட்டி,கடைக்காரப்பாட்டி,மாமிக்கம்மா இவர்களுக்கு மனசுக்குப் பிடித்தவளாக இருந்ததால், மனசிலிருக்கும் விஷயங்களையும், கடந்துவந்த சுவாரசியங்களையும் மணக்க மணக்கச் சொல்லுவார்கள் மூணுபேரும்.ஆனா, அதுக்குப் பதிலா அவங்க தலையைப் பார்க்கணும்னு, அரிச்ச தலையைப் பாத்தா அறுந்த தலையும் பொருந்தும்னு பழமொழியோடயும் ஒப்பந்தத்தோடயும் வருவாங்க மூணுபேரும்.

அதிலும் முத்தம்மா பாட்டி ரொம்ப சுவாரசியம். தென்காசிப்பக்கத்து அருவிச்சாரலோடு இயைந்திருக்கும் அவங்க சொல்லும் கதைகள்.பேய்க்கதைகளாகட்டும், புரளிகளாகட்டும் நேரில் பார்ப்பதுபோலவே இருக்கும். வேகவைத்த கீரையை ஆட்டுக்கல்லில் அரைத்துக்கொண்டு, ருசிபார்க்கக் கையில் கொஞ்சம்கொஞ்சமாய்க் கொடுத்தபடி, பாட்டி சொன்ன பனைமரத்து்ப் பேய்க்கதை இன்னும் நினைவிலிருக்கிறது.வீட்டுக்குவீடு பறந்துசென்று, சேட்டை பண்ணிய பொம்மைப் பேய்க்கதை சின்னப்பிள்ளைகள் வட்டாரத்தில் அப்போ ரொம்பப் பிரபலம்.பாட்டியிடம் கதைகேட்ட ஞாபகத்தில், வீட்டில் நானும் தம்பியும் தூக்கத்தில் பயந்து அலறியதெல்லாம் தனிக்கதை.

மாமிக்கம்மாவின் கதைகளில் இலங்கையின் வாசனை நிரம்ப வீசும். மாமிக்கம்மாவின் கணவரும் சகோதரரும் இலங்கையிலிருந்தவர்கள். அங்கிருந்து அவர்கள் கொண்டுவந்த பொருட்களைப்பற்றியும், கொழும்பு பற்றி அவங்க பகிர்ந்துகொண்ட விஷயங்களுமே கம்மாவின் கதைகளில் அதிகம் இருக்கும்.

கடைக்காரப்பாட்டிக்கு கால்நடைகள்மேல் அத்தனை பிரியம். கொஞ்ச நேரம் தலையைப் பாரும்மான்னு வந்து உட்கார்ந்தா,அவங்க பேசுறது பூராவும் பிராணிகளைப்பற்றித்தான் இருக்கும். வாயில்லா ஜீவன்களை அடிச்சா, அதுங்களோட சாபத்தால நம்ம சந்ததி எப்படி பாதிக்கப்படும்னு அடிக்கடி சொல்லுவாங்க பாட்டி. அதை நிரூபிக்கிறமாதிரியே இருக்கும் அவங்க சொல்லும் கதைகளும் விஷயங்களும். கன்னுக்குட்டியை அடிச்சுக் காலை ஒடிச்ச ஒருவருக்கு, கன்னுக்குட்டி மாதிரியே காலில் குளம்புகளோட பிள்ளை பிறந்துச்சுன்னு பாட்டி சொன்னது இப்பவும் கன்னுக்குட்டியைப்பார்த்தா நினைவுக்கு வந்துவிடும். தோட்டத்திலும், தொழுவிலும் வேலை பார்த்துப்பார்த்து முதுகை வளைத்துக்கொண்டு நடக்கும் பாட்டி, சுறுசுறுப்புக்கு முன்மாதிரியாக இருந்தவங்க மட்டுமில்ல, கதைகளாலும் அனுபவங்களாலும் நிறைய யோசிக்கவச்சவங்களும்கூட...

அம்பிகா அழைத்து ஏகப்பட்ட நாளாச்சு. இப்பத்தான் நேரம் கிடைச்சது கதைவிடுறதுக்கு.
நாட்கள் கடந்துபோனதால் எழுத யாரையும் குறிப்பிட்டு அழைக்கவில்லை. இதைப்படிச்சிட்டு யாருக்காவது அவங்க கேட்ட கதையையும் எழுதணும்னு தோணினா எழுதுங்க.

அழைப்புக்கு நன்றி அம்பிகா.

Thursday, April 22, 2010

எழுபதுகளின் அழகியும், இரக்கமில்லாத கடவுளும்

எழுபதுகளின் இறுதி...கிராமத்தில் வளர்ந்த நாத்தனார்களுக்கு மத்தியில், நகரத்திலிருந்து வந்த வீட்டின் முதல் மருமகள் அவர்.நளினமான அழகும் நாகரிகமான பேச்சும் கண்டு,புருவம் உயர்த்தியும், பொறாமைப்பட்டும் பேசியவர்களுக்குமத்தியில், பெருமிதமாய் வளையவரக்கற்றுக்கொண்டார் மிகத்திறமையாக.

பத்தே வருட மணவாழ்க்கை...சித்திரமாய் மூன்று பிள்ளைகள். அத்தோடு குலைந்தது அந்தப்பெண்ணின் மகிழ்ச்சி. சொத்தாக நினைத்திருந்த கணவனை மொத்தமாகப் பறிகொடுத்தார் சட்டென்று வந்துநின்ற நோயின் பிடிக்கு.ஆனாலும் சுதாரித்து எழுந்தார் சொந்தப்பிள்ளைகளின் சுகத்துக்காக. கைத்தொழில் கற்றார், குடும்பத்தொழிலை கவனித்தார். சுற்றியிருந்த உறவுகளின் துணையுடன், பத்திரமாய்ப் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார்.

பிள்ளைகள் வளர்ந்துவந்தபோதே தனக்குள்ளே வளர்ந்த இன்னொன்றையும் கவனிக்கத்தவறிப்போனார். சின்னச்சின்ன அறிகுறிகள் மாறி,சிக்கலாகிய தருணத்தில் மெல்ல மௌனம் உடைத்து விஷயத்தை வெளியில்சொன்னார். அதற்குள் தன் உக்கிரப்பிடியால் உடலின் பகுதிகளை வேகமாக ஆக்கிரமித்திருந்தது வெளியே சொல்லாமலிருந்த அந்த வியாதி.

மார்புப் புற்றுநோய்...ஒற்றைப்பகுதியை உருக்குலைத்து முடித்திருக்க, வெட்டியெறிந்தபின்பு வேதனைஎல்லாம் தொலைந்தது என்று நிம்மதிப்பெருமூச்சுவிட்டனர் பிள்ளைகளும் பெரியவர்களும். கற்றையான தலைமுடி காணாமல் போயிருக்க,பட்டமரமாய் நின்ற அன்றைய அழகியான அவர்களைக்கண்டிருந்தால்,நிச்சயமாக அழுகைவந்திருக்கும் யாருக்கும்.

உருக்குகிற வேதனையை உடலில் சுமந்தாலும், கதிர்வீச்சின் கொடுமைகளை அனுபவித்துவந்தாலும், நறுக்காக வீட்டுவேலைகளையும்,சிறப்பாகச் சமையலையும் தானே செய்து பார்ப்பவர்களைப் புருவம் உயரவைத்து அன்றைக்கும் தன் உறுதியான மனஅழகினை அதிகமாக்கிக்காட்டியவர்.

ரெண்டே வருடத்தில், இழந்த முடிகள் வளரத்தொடங்கியது. தொலைந்த மகிழ்ச்சியெல்லாம் வந்ததுபோல் ஒரு தெளிவு அவர் முகத்தில். தலைமுடிகள் வளந்தபோதே, அங்கே இன்னொருமுகத்துடன் வளர்ந்துகொண்டிருந்திருக்கின்றது அந்தப் புற்றின் கிளை. அது, நுரையீரலெங்கும் பற்றிப்படர்ந்துவிட, அதன்பின் சிக்கலாகிப்போனது சுவாசம். ஆனாலும் அதற்கான மருந்துகளுடன் அவஸ்தைகளைப் புறந்தள்ளி, அனைவரும் வியக்கும்படி இன்முகம் காட்டியது எல்லாருக்கும் வியப்புத்தான்.

மீண்டும் கதிர் வீச்சு, மறுபடியும் முடியிழப்பு...உடலின் செல்களையெல்லாம் உள்ளிருந்து சூறையாட, உருக்குலைந்துபோய்,எலும்பும் தோலுமாகிப்போன தேகம்...கண்ணாமூச்சியாடிக் கலங்கடித்தது விதி. ஆனாலும் பெண்ணான அவர்களின் முகத்தில் மிச்சமிருந்திருக்கிறது அந்தச் சிரிப்பு.

அன்றைய மருத்துவப் பரிசோதனைக்காக, என்றைக்கும்போலப் புறப்பட்ட அவரைப் புரட்டிப்போட்டிருக்கிறது மூச்சுத்திணறல். மருத்துவமனைக்குச் சென்றவர் ஆக்சிஜனின் உதவியுடன் அன்றைய இரவு அங்கேயே தங்கிவிட, இரக்கமில்லாத காலன் உறக்கத்தின்போதே உருவியெடுத்துவிட்டான் உயிரை.

இறந்த அன்றைய இரவு வரைக்கும், மூச்சுவிடுவதற்குச் சிரமப்பட்டநிலையிலும், வந்த அனைவரிடமும் பேசி, நலம்விசாரித்த அந்தப் புன்னகையரசி இன்றைக்கு இல்லை.இந்த நிலை யாருக்கும் வரவேகூடாது என்று சொந்தங்களெல்லாம் சொல்லிச்சொல்லி மருக,எல்லார் மனசிலும் நினைவுகளைப் பதித்துவிட்டு, நல்ல உறக்கத்தில் எல்லாரையும்விட்டுப் பிரிந்துவிட்டார்கள்.

கடந்த சிலநாட்களாக,பேசிப்பேசி மாய்கிறோம்...ஆனாலும் தீரவில்லை நினைவுகள். சின்ன வயசில் எங்களைச் செல்லமாகப் பார்த்துக்கொண்டவர்,சிறுவிளையாட்டுகளில் சமமாகப் பங்கெடுத்தவர், சென்னைப்பட்டினத்தைச் சுற்றிக்காட்டி சந்தோஷப்படுத்தியவர்,இன்னும் பலவிதமாய் நினைவுகளில் தங்கிவிட்ட, என் அன்பு அத்தைக்கு இந்தப்பதிவு சமர்ப்பணம்.

Sunday, April 4, 2010

மிஸ்டு கால்களும் மாறிவந்த அஞ்சு திர்ஹாமும்!வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும். இங்கே அமீரகத்தில் அநேகரிடம் பேசும்போது, இந்த ஆதங்கம் அடிக்கடி வார்த்தைகளில் வெளிப்படும்.

ஊரிலிருந்து உறவுக்காரங்க யாராவது இங்கே பேசணும்னா,அவங்க ஃபோனிலிருந்து ரெண்டு மூணு ரிங் குடுத்துட்டு, அவசர அவசரமா 'கட்' பண்ணிடுவாங்க. கொஞ்சம் தாராள மனசுக்காரங்கன்னா, call me immediately... ன்னு சொல்லி, மிரட்டுரமாதிரி சின்னதா ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ் குடுப்பாங்க.(இத்தனைக்கும் நம்ம ஊர்லதான் சார்ஜ் கம்மி)

அதுவும், ஊருக்கு வருகிறோம்னு சொல்லிட்டோம்னா அந்த சீசன்ல, இதுபோல நிறைய மிஸ்டு கால்களை எதிர்பார்க்கலாம். இது வாங்கிட்டுவா அது வாங்கிட்டுவான்னு சொல்றவங்ககூட, அவங்க காசில் பேசமாட்டாங்க. நாம கூப்பிட்டோம்னா, நாய்க்குட்டிக்கு சுகமில்லைங்கிறது வரைக்கும் நேரம் ஓடுதேன்னு கவலைப்படாம பேசிட்டுதான் வைப்பாங்க.இங்கே பேரீச்சை மரமெல்லாம் பணமாகக் காய்க்கிதுன்னு யாரும் சொல்லியிருப்பாங்களோ என்னவோன்னு சொல்லி வயித்தெரிச்சல் படுவாங்க தோழிகள் பலர்.காசிருக்கிறவங்களுக்காவது பரவாயில்லை. ஆனா, மிகக் குறைவான சம்பளத்தில் வேலைபார்க்கிறவங்களுக்கு இந்தச் செலவு சமாளிக்கமுடியாததாகத்தான் இருக்கும்.

போன வெள்ளிக்கிழமை... விடுமுறை நாளென்பதால் சாவகாசமா உட்கார்ந்து பேப்பர் படிச்சிட்டிருந்தேன். ஏதோ ஒரு மெஸேஜ் வந்ததை குக்கூன்னு கூவிச்சொன்னது என்னுடைய ஃபோன். அடிக்கடி etisalat(இங்குள்ள தொலைத் தொடர்புத்துறை)இல் இருந்தும், மற்ற வியாபார நிறுவனங்களிலிருந்தும் அடிக்கடி ஆஃபர் மெஸேஜ்கள் வருமென்பதால் அலட்டிக்கொள்ளவில்லை நான். அடுத்தபடியாக ரெண்டுமூணு நிமிடத்தில், ரிலையன்ஸ் ரிங்டோனில் கத்தி அழைத்தது ஃபோன்.

எடுத்துப்பார்த்தேன், உள்ளூர் நம்பர்தான்...ஆனால் எனக்குத் தெரியாத நம்பர். சரி எடுப்போம்னு எடுத்து ஹலோ சொன்னேன். அங்கிட்டு இருந்து கிடைச்சதோ சுந்தரத் தெலுங்கு..."மேடம், ஃபைவ் திர்ஹாம்" இந்த ரெண்டு வார்த்தையைத்தவிர எதிர்முனையிலிருந்து பேசிய எதுவும் புரியல எனக்கு. 'Sorry, i don't know telugu,Please,speak in english ன்னு நான் சொல்ல, என்னன்னு புரிஞ்சுதோ தெரியல,உடனே ஹிந்திக்கு மாறியது எதிர்பக்கம். என்னடா இது சோதனைன்னு, இந்தியும் தெரியாதுன்னு இறக்கமான குரலில் சொல்லிட்டு வச்சிட்டேன்.

அடுத்தும் உடனே அதே நம்பரிலிருந்து அழைப்பு. இதுக்குமேல நம்மால முடியாதுன்னு ஃபோனை என் கணவர்கிட்ட கொடுத்தேன். அவங்க இந்தியில் பேச அப்புறம்தான் விளங்கியது விஷயம். ஊருக்குப் பேசணும்னு நண்பர்கிட்ட அவரோட ஃபோனுக்கு அஞ்சு திர்ஹாம் பணம் அனுப்பச்சொன்னாராம். அந்த நண்பர் அனுப்பின பணம்தான் ஏதோ ஒரு நம்பர் மாறினதால என்னோட நம்பருக்கு வந்திருக்குன்னு சொல்ல, சட்டுன்னு ஃபோனை வாங்கி மெஸேஜ்களைப் பார்த்தேன். அஞ்சு திர்ஹாம் வந்ததற்கான மெஸேஜ் ஒண்ணு இருந்தது.

ஐயோன்னு ஆகிப்போச்சு எனக்கு...முதலிலேயே மெஸேஜைப் பாத்திருந்தா அதை உடனே திருப்பி அனுப்பியிருக்கலாமேன்னு தோண, உடனடியாக அந்த அஞ்சு திர்ஹாமை அவரோட நம்பருக்கு அனுப்பினேன். காசு போய்ச் சேர்ந்துடுச்சு. ஆனா,அஞ்சு திர்ஹாம்...வெள்ளிக்கிழமை...யார் மிஸ்டு கால் குடுத்தாங்களோ, என்ன அவசரத்தில் நண்பர்கிட்ட பணம்கேட்டாரோ என்ற எண்ணம் ரொம்ப நேரமாக மனசைவிட்டுப்போகவில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails