Thursday, April 22, 2010

எழுபதுகளின் அழகியும், இரக்கமில்லாத கடவுளும்

எழுபதுகளின் இறுதி...கிராமத்தில் வளர்ந்த நாத்தனார்களுக்கு மத்தியில், நகரத்திலிருந்து வந்த வீட்டின் முதல் மருமகள் அவர்.நளினமான அழகும் நாகரிகமான பேச்சும் கண்டு,புருவம் உயர்த்தியும், பொறாமைப்பட்டும் பேசியவர்களுக்குமத்தியில், பெருமிதமாய் வளையவரக்கற்றுக்கொண்டார் மிகத்திறமையாக.

பத்தே வருட மணவாழ்க்கை...சித்திரமாய் மூன்று பிள்ளைகள். அத்தோடு குலைந்தது அந்தப்பெண்ணின் மகிழ்ச்சி. சொத்தாக நினைத்திருந்த கணவனை மொத்தமாகப் பறிகொடுத்தார் சட்டென்று வந்துநின்ற நோயின் பிடிக்கு.ஆனாலும் சுதாரித்து எழுந்தார் சொந்தப்பிள்ளைகளின் சுகத்துக்காக. கைத்தொழில் கற்றார், குடும்பத்தொழிலை கவனித்தார். சுற்றியிருந்த உறவுகளின் துணையுடன், பத்திரமாய்ப் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார்.

பிள்ளைகள் வளர்ந்துவந்தபோதே தனக்குள்ளே வளர்ந்த இன்னொன்றையும் கவனிக்கத்தவறிப்போனார். சின்னச்சின்ன அறிகுறிகள் மாறி,சிக்கலாகிய தருணத்தில் மெல்ல மௌனம் உடைத்து விஷயத்தை வெளியில்சொன்னார். அதற்குள் தன் உக்கிரப்பிடியால் உடலின் பகுதிகளை வேகமாக ஆக்கிரமித்திருந்தது வெளியே சொல்லாமலிருந்த அந்த வியாதி.

மார்புப் புற்றுநோய்...ஒற்றைப்பகுதியை உருக்குலைத்து முடித்திருக்க, வெட்டியெறிந்தபின்பு வேதனைஎல்லாம் தொலைந்தது என்று நிம்மதிப்பெருமூச்சுவிட்டனர் பிள்ளைகளும் பெரியவர்களும். கற்றையான தலைமுடி காணாமல் போயிருக்க,பட்டமரமாய் நின்ற அன்றைய அழகியான அவர்களைக்கண்டிருந்தால்,நிச்சயமாக அழுகைவந்திருக்கும் யாருக்கும்.

உருக்குகிற வேதனையை உடலில் சுமந்தாலும், கதிர்வீச்சின் கொடுமைகளை அனுபவித்துவந்தாலும், நறுக்காக வீட்டுவேலைகளையும்,சிறப்பாகச் சமையலையும் தானே செய்து பார்ப்பவர்களைப் புருவம் உயரவைத்து அன்றைக்கும் தன் உறுதியான மனஅழகினை அதிகமாக்கிக்காட்டியவர்.

ரெண்டே வருடத்தில், இழந்த முடிகள் வளரத்தொடங்கியது. தொலைந்த மகிழ்ச்சியெல்லாம் வந்ததுபோல் ஒரு தெளிவு அவர் முகத்தில். தலைமுடிகள் வளந்தபோதே, அங்கே இன்னொருமுகத்துடன் வளர்ந்துகொண்டிருந்திருக்கின்றது அந்தப் புற்றின் கிளை. அது, நுரையீரலெங்கும் பற்றிப்படர்ந்துவிட, அதன்பின் சிக்கலாகிப்போனது சுவாசம். ஆனாலும் அதற்கான மருந்துகளுடன் அவஸ்தைகளைப் புறந்தள்ளி, அனைவரும் வியக்கும்படி இன்முகம் காட்டியது எல்லாருக்கும் வியப்புத்தான்.

மீண்டும் கதிர் வீச்சு, மறுபடியும் முடியிழப்பு...உடலின் செல்களையெல்லாம் உள்ளிருந்து சூறையாட, உருக்குலைந்துபோய்,எலும்பும் தோலுமாகிப்போன தேகம்...கண்ணாமூச்சியாடிக் கலங்கடித்தது விதி. ஆனாலும் பெண்ணான அவர்களின் முகத்தில் மிச்சமிருந்திருக்கிறது அந்தச் சிரிப்பு.

அன்றைய மருத்துவப் பரிசோதனைக்காக, என்றைக்கும்போலப் புறப்பட்ட அவரைப் புரட்டிப்போட்டிருக்கிறது மூச்சுத்திணறல். மருத்துவமனைக்குச் சென்றவர் ஆக்சிஜனின் உதவியுடன் அன்றைய இரவு அங்கேயே தங்கிவிட, இரக்கமில்லாத காலன் உறக்கத்தின்போதே உருவியெடுத்துவிட்டான் உயிரை.

இறந்த அன்றைய இரவு வரைக்கும், மூச்சுவிடுவதற்குச் சிரமப்பட்டநிலையிலும், வந்த அனைவரிடமும் பேசி, நலம்விசாரித்த அந்தப் புன்னகையரசி இன்றைக்கு இல்லை.இந்த நிலை யாருக்கும் வரவேகூடாது என்று சொந்தங்களெல்லாம் சொல்லிச்சொல்லி மருக,எல்லார் மனசிலும் நினைவுகளைப் பதித்துவிட்டு, நல்ல உறக்கத்தில் எல்லாரையும்விட்டுப் பிரிந்துவிட்டார்கள்.

கடந்த சிலநாட்களாக,பேசிப்பேசி மாய்கிறோம்...ஆனாலும் தீரவில்லை நினைவுகள். சின்ன வயசில் எங்களைச் செல்லமாகப் பார்த்துக்கொண்டவர்,சிறுவிளையாட்டுகளில் சமமாகப் பங்கெடுத்தவர், சென்னைப்பட்டினத்தைச் சுற்றிக்காட்டி சந்தோஷப்படுத்தியவர்,இன்னும் பலவிதமாய் நினைவுகளில் தங்கிவிட்ட, என் அன்பு அத்தைக்கு இந்தப்பதிவு சமர்ப்பணம்.

5 comments:

 1. உணர்வு பூர்வான வரிகள்.

  ReplyDelete
 2. மனதை உலுக்கும் எழுத்து.

  ReplyDelete
 3. முதல் வருகைக்கும் கருத்துக்கும்

  நன்றி மால்குடி!

  நன்றி ஜெயந்தி!

  ReplyDelete
 4. உருக்கமான எழுத்துகக்ள். புற்றுநோய் என்ற பெயருக்கேற்ற நோய்தான். இறைவன் காக்கட்டும் எல்லாரையும்.

  ReplyDelete
 5. மனம் வருந்துக்கிறது அக்கா....

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails