Wednesday, April 28, 2010

வெள்ளுடைத் தேவதைகள் சொல்லிச்சென்ற கதைகள்!


சின்ன வயசிலிருந்தே கதை கேட்பதிலும் படிப்பதிலும் ரொம்பவே ஆர்வம் உண்டு. ராத்திரிச் சாப்பாட்டுக்கு கட்டாயம் கதை வேணும்னு அப்பா கிட்ட அடம் பிடிப்பதுண்டு. அப்பா சொன்ன ராஜா காது கழுதைக்காது கதையை அதே மாதிரி ஏற்ற இறக்கத்துடன், ராக பாவங்களுடன் நானும் என் சிறுவயசுத் தோழமைகளிடம் சொல்லிப் பாராட்டு வாங்கியிருக்கிறேன்.

அதுமாதிரி,சின்ன வயசிலிருந்தே பாட்டிகளின் அருகாமையைப் பத்திரமாய் உணர்ந்ததுண்டு. முத்தம்மா பாட்டி,கடைக்காரப்பாட்டி,மாமிக்கம்மா இவர்களுக்கு மனசுக்குப் பிடித்தவளாக இருந்ததால், மனசிலிருக்கும் விஷயங்களையும், கடந்துவந்த சுவாரசியங்களையும் மணக்க மணக்கச் சொல்லுவார்கள் மூணுபேரும்.ஆனா, அதுக்குப் பதிலா அவங்க தலையைப் பார்க்கணும்னு, அரிச்ச தலையைப் பாத்தா அறுந்த தலையும் பொருந்தும்னு பழமொழியோடயும் ஒப்பந்தத்தோடயும் வருவாங்க மூணுபேரும்.

அதிலும் முத்தம்மா பாட்டி ரொம்ப சுவாரசியம். தென்காசிப்பக்கத்து அருவிச்சாரலோடு இயைந்திருக்கும் அவங்க சொல்லும் கதைகள்.பேய்க்கதைகளாகட்டும், புரளிகளாகட்டும் நேரில் பார்ப்பதுபோலவே இருக்கும். வேகவைத்த கீரையை ஆட்டுக்கல்லில் அரைத்துக்கொண்டு, ருசிபார்க்கக் கையில் கொஞ்சம்கொஞ்சமாய்க் கொடுத்தபடி, பாட்டி சொன்ன பனைமரத்து்ப் பேய்க்கதை இன்னும் நினைவிலிருக்கிறது.வீட்டுக்குவீடு பறந்துசென்று, சேட்டை பண்ணிய பொம்மைப் பேய்க்கதை சின்னப்பிள்ளைகள் வட்டாரத்தில் அப்போ ரொம்பப் பிரபலம்.பாட்டியிடம் கதைகேட்ட ஞாபகத்தில், வீட்டில் நானும் தம்பியும் தூக்கத்தில் பயந்து அலறியதெல்லாம் தனிக்கதை.

மாமிக்கம்மாவின் கதைகளில் இலங்கையின் வாசனை நிரம்ப வீசும். மாமிக்கம்மாவின் கணவரும் சகோதரரும் இலங்கையிலிருந்தவர்கள். அங்கிருந்து அவர்கள் கொண்டுவந்த பொருட்களைப்பற்றியும், கொழும்பு பற்றி அவங்க பகிர்ந்துகொண்ட விஷயங்களுமே கம்மாவின் கதைகளில் அதிகம் இருக்கும்.

கடைக்காரப்பாட்டிக்கு கால்நடைகள்மேல் அத்தனை பிரியம். கொஞ்ச நேரம் தலையைப் பாரும்மான்னு வந்து உட்கார்ந்தா,அவங்க பேசுறது பூராவும் பிராணிகளைப்பற்றித்தான் இருக்கும். வாயில்லா ஜீவன்களை அடிச்சா, அதுங்களோட சாபத்தால நம்ம சந்ததி எப்படி பாதிக்கப்படும்னு அடிக்கடி சொல்லுவாங்க பாட்டி. அதை நிரூபிக்கிறமாதிரியே இருக்கும் அவங்க சொல்லும் கதைகளும் விஷயங்களும். கன்னுக்குட்டியை அடிச்சுக் காலை ஒடிச்ச ஒருவருக்கு, கன்னுக்குட்டி மாதிரியே காலில் குளம்புகளோட பிள்ளை பிறந்துச்சுன்னு பாட்டி சொன்னது இப்பவும் கன்னுக்குட்டியைப்பார்த்தா நினைவுக்கு வந்துவிடும். தோட்டத்திலும், தொழுவிலும் வேலை பார்த்துப்பார்த்து முதுகை வளைத்துக்கொண்டு நடக்கும் பாட்டி, சுறுசுறுப்புக்கு முன்மாதிரியாக இருந்தவங்க மட்டுமில்ல, கதைகளாலும் அனுபவங்களாலும் நிறைய யோசிக்கவச்சவங்களும்கூட...

அம்பிகா அழைத்து ஏகப்பட்ட நாளாச்சு. இப்பத்தான் நேரம் கிடைச்சது கதைவிடுறதுக்கு.
நாட்கள் கடந்துபோனதால் எழுத யாரையும் குறிப்பிட்டு அழைக்கவில்லை. இதைப்படிச்சிட்டு யாருக்காவது அவங்க கேட்ட கதையையும் எழுதணும்னு தோணினா எழுதுங்க.

அழைப்புக்கு நன்றி அம்பிகா.

6 comments:

 1. கதைகளைப் பற்றிய கதை சுவாரஸ்யம் சுந்தரா.

  ReplyDelete
 2. கதை கேட்ட கதை நல்லாயிருக்கு சுந்தரா..

  ReplyDelete
 3. //மாமிக்கம்மா//

  பெயரே புதுசா இருக்கு!! சுவாரசியமா இருக்கு கதைகளின் விவரங்கள்.

  ReplyDelete
 4. // ராமலக்ஷ்மி said...

  கதைகளைப் பற்றிய கதை சுவாரஸ்யம் சுந்தரா//

  நன்றி அக்கா!

  ..அம்பிகா said...

  கதை கேட்ட கதை நல்லாயிருக்கு சுந்தரா..//

  நன்றி அம்பிகா!

  ReplyDelete
 5. // ஹுஸைனம்மா said...

  //மாமிக்கம்மா//

  பெயரே புதுசா இருக்கு!! சுவாரசியமா இருக்கு கதைகளின் விவரங்கள்.//

  அவங்க எங்க வீட்டுப்பக்கத்திலிருந்த முஸ்லீம் பாட்டி. பெரியவங்க எல்லாரும் அவங்களை மாமி ன்னு சொல்லுவாங்க. சின்னவங்களுக்கு மாமிக்கம்மா :)
  எங்க ஊரில் 'கம்மா'ன்னா பாட்டின்னு அர்த்தம் ஹுசைனம்மா.

  ReplyDelete
 6. கதை மிக அழகாய் சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails