Wednesday, May 5, 2010

விபரீதமாகும் சில வேண்டுதல்கள்!

 
Posted by Picasa

சமீபத்தில் திரைப்படக்காட்சியொன்றில், கதாநாயகி ஏதோவொரு வேண்டுதலுக்காக முட்டிபோட்டு மலைக்கோயில் படியேறிவர, கால்முட்டியெல்லாம் ரத்தம் வருவதுபோல் ஒரு காட்சியைக் காட்டினார்கள்.

இதேபோல, இன்னுமொரு திரைப்படத்தில் தாலியைக் கழற்றி உண்டியலில்போடுவதாக வேண்டிக்கொண்ட கதாநாயகி, வேண்டுதலைச் செலுத்துகிற சமயத்தில்,தாலிக்குப் பதிலாக அதற்குச் சமமான இன்னொரு நகையைப்போட முயற்சிக்க, அந்த உண்டியலுக்குள் அவள் பிள்ளையே விழுந்துவிடுவதாகவும், அதற்குப்பிறகு அந்த வேண்டுதலை வசூலிக்க அம்மன் ஒரு கடன்காரி ரேஞ்சுக்கு அவள் குடும்பத்தையே சுற்றிச்சுற்றிவருவதாகவும்கூடக் காண்பித்து எரிச்சலூட்டியிருப்பார்கள்.

திரைப்படங்கள்தான் இப்படின்னா, நிஜ வாழ்விலும்கூட, தலையில் தேங்காய் உடைப்பது, நாக்கில் கற்பூரம் ஏற்றுவதுன்னு ஆரம்பிச்சு, அலகு குத்துவது,ஆணிச்செருப்புப்போடுவது நரபலிகொடுப்பது, சாட்டையாலடிப்பது, தீ மிதிப்பதுன்னு ஒவ்வொரு மதத்திலும் இதுபோன்று வேண்டிக்கொள்ளும் வழக்கம் உலகமெங்கும் இருக்கத்தான் செய்கிறது.

அன்பே சிவம், கருணையே கடவுள், இரக்கமே இறைவன்னு எவ்வளவோ சொன்னாலும், தன்னை வருத்திக்கொண்டால்தான் கடவுளின் கருணை சீக்கிரம் கிடைக்குமென்கிற மக்களின் மனநிலை இன்னும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது.இதைப் பற்றிக் கொஞ்சம் அழுத்திப் பேசினால்கூட, படிச்ச திமிர்,நாகரிகம் வளர்ந்துட்டதால ஆண்டவனை அலட்சியம் பண்றாங்கன்னு அவதூறுதான் கிளம்புகிறது.

என் பக்கத்துவீட்டிலிருந்த பெண்மணியொருவரின் கணவருக்கு உயர்ரத்த அழுத்தம். அவ்வப்போது நெஞ்சுவலியும் வரும் என்று சொல்லுவாங்க. கணவரின் உடல்நிலை நல்லா இருக்கணும்னு, வெள்ளி செவ்வாய், அமாவாசை, பௌர்ணமியென்று எல்லா நாளும் ஏதாவதொரு விரதம் இருப்பாங்க அந்த அம்மா. ஆனா, அவங்க கணவர் வேலைமுடிந்து வருகையில் சில்லி சிக்கனும், பொரிச்ச பரோட்டாவும் சாப்பிட்டுவிட்டு, பிள்ளைகளுக்கும் பார்சல் வாங்கிட்டுவருவார். வீட்ல வந்து மாத்திரை போட்டுக்குவார்.

ஆனா,அடிக்கடி விரதமிருந்த அவங்க, முட்டிவலி, ரத்த சோகைன்னு வராத நோவெல்லாம் வந்து கஷ்டப்பட்டாங்க. இதையெல்லாம் பார்க்கையில் பதைப்பாக்த்தான் இருக்கும். ஆனாலும்,அவங்களோட நம்பிக்கையைச் சிதைக்கச் சங்கடமாயிருக்கும்.

சமீபத்தில், உடல்நிலை காரணமாக, சிக்கலான ஆப்பரேஷன் ஒன்றைச் செய்து, தேறிவந்த என் உறவினர் ஒருவர், சிலநூறு கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள அம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்துகொள்வதாக வேண்டியிருந்திருக்கிறார். வேண்டுதலை நிறைவேற்ற அவரும் அவருடன் சேர்ந்து இன்னும் சிலரும், அங்கேபோய் ஆலயப்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தபோது, அப்போதே அவருக்கு நெஞ்சுவலி வந்து, மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லுமுன்பாக,அங்கேயே மரணமடைந்துவிட்டார்கள்.

நடந்ததைக் கேள்விப்பட்டபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. வேண்டுதலைச்செலுத்த ஆயிரம் வழிகள் இருந்தும், உடல்நிலைக்கு ஒத்துவராத இந்தமாதிரியான வேண்டுதல்கள் அவசியம்தானா என்ற கேள்வி நெஞ்சைவிட்டு அகலமறுத்தது.

அங்கப்பிரதட்சணம் பண்ணுவதோ மற்றும் அதுபோன்ற வேண்டுதல்களோ தவறுன்னு நான் குற்றம் சொல்லவரவில்லை. கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் மனதைப் பொறுத்தது. ஆனால்,அவரவர் வயது, உடல்நிலை இவற்றைக் கருத்தில்கொண்டாவது அதற்கேற்றமாதிரி வேண்டுதல்களைச் செய்யலாம் என்பதே என் எண்ணம். அறுபது வயதுக்குமேல் கிரிவலம் வர ஆசைப்பட்டு, பாதியிலேயே ஆஸ்பத்திரிக்குப்போனவர்களும் பலர் இருக்கத்தான்செய்கிறார்கள்.

இது மட்டுமல்ல, படிக்கிற மகனுக்காகப் பால்குடம் எடுக்கிறேன் என்று வேண்டிக்கொண்ட ஒரு அம்மா, வேண்டுதல் பலமுறை தவறிப்போனதால், இப்போது அதை ஈடுகட்ட மகன் தீச்சட்டியெடுக்கவேண்டுமென்று சொல்லித் திகிலூட்டிய சம்பவமும் என் நெருங்கிய உறவிலேயே நடந்த ஒன்று.

விளக்கிடுதல், விரதமிருத்தல், கல்விக்கு உதவுதல், இல்லாத சிலருக்கு அன்னதானமளித்தல், இயலாதவர்களுக்கு உதவி செய்தலென்று தனக்கும் பிறருக்கும் பயன்படக்கூடிய வழிகள் ஆயிரம் இருக்கையில், அன்பே உருவான கடவுளை ஆத்திரக்காரனாகக் காட்டி, சாமி கண்ணைக்குத்தும் என்றமாதிரியெல்லாம் பயமுறுத்துவதைப்பார்க்கையில் இவர்களெல்லாம் எப்போ மாறுவாங்க என்ற ஆதங்கம்தான் தோன்றுகிறது.

நாம் வேண்டிக்கொள்கிற வேண்டுதல்கள் நமக்கு மன திருப்தியையும் மற்றவர்களுக்கு நல்ல பலனையும் தருவதாக இருந்துவிட்டால் எத்தனை நன்றாக இருக்கும். இனியாவது கடவுளுக்கு வேண்டிக்கொள்ளுமுன் கொஞ்சம் யோசித்தால் நல்லது.

11 comments:

 1. நல்ல போஸ்ட்! இவை மூடநம்பிக்கைகள் என்று என்றுதான் உணர்வார்களோ? :-(

  ReplyDelete
 2. //நாம் வேண்டிக்கொள்கிற வேண்டுதல்கள் நமக்கு மன திருப்தியையும் மற்றவர்களுக்கு நல்ல பலனையும் தருவதாக இருந்துவிட்டால் எத்தனை நன்றாக இருக்கும்//

  நல்ல இடுகை.. மூட நம்பிக்கைகள் நிச்சயமாக ஒழிக்கபடவேண்டும்.

  ReplyDelete
 3. கருத்துள்ள இடுகை.... நம்பிக்கைத்தேவைதான்... அது மூடமாக இல்லாமலிருப்பது நல்லது..

  ReplyDelete
 4. //சந்தனமுல்லை said...

  நல்ல போஸ்ட்! இவை மூடநம்பிக்கைகள் என்று என்றுதான் உணர்வார்களோ? :-(//

  வாங்க முல்லை...

  கஷ்டம்னு ஒண்ணு வந்துட்டா, அதுக்காக கண்ணை மூடிட்டு, இதுமாதிரி நம்பிக்கைகளில் இறங்கிடுறாங்க.

  ReplyDelete
 5. //அமைதிச்சாரல் said...

  //நாம் வேண்டிக்கொள்கிற வேண்டுதல்கள் நமக்கு மன திருப்தியையும் மற்றவர்களுக்கு நல்ல பலனையும் தருவதாக இருந்துவிட்டால் எத்தனை நன்றாக இருக்கும்//

  நல்ல இடுகை.. மூட நம்பிக்கைகள் நிச்சயமாக ஒழிக்கபடவேண்டும்.//

  அதுதான் பலரின் எதிர்பார்ப்பும்கூட...

  வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்!

  ReplyDelete
 6. நல்ல பதிவு .. பொதுவா விரதம் இருக்கறது சரி. அதுவும் குறிப்பிட வயதுக்கு மேல் இருக்கக் கூடாது

  ReplyDelete
 7. நல்ல பதிவு. என்னை பொறுத்த வரை வேண்டுதல்கள் தவறில்லை. அது உங்களையும் மற்ற யாரையும் கஷ்டபடுத்தாதவரை. நம்மை சிரமபடுத்திகிட்டு எந்த கடவுளும் எதையும் செய்ய சொல்றதில்ல. இதை சொன்னா நம்மளை நாத்திகவாதி மாதிரி பாக்குறாங்க எல்லாரும் நம்ம வீட்டுல இருக்கறவங்க உட்பட. எனக்கும் நம்பிக்கை இருக்கு ஆனா மூடநம்பிக்கை இல்ல அதோட என்னால செய்ய முடியற அளவுல. நல்லா சொல்லி இருக்கீங்க சுந்தரா

  ReplyDelete
 8. //LK said...

  நல்ல பதிவு .. பொதுவா விரதம் இருக்கறது சரி. அதுவும் குறிப்பிட வயதுக்கு மேல் இருக்கக் கூடாது//

  வாங்க எல் கே!

  அதுவும் சரிதான்...பின்னே அங்க வலிக்கிது இங்க வலிக்கிதுன்னு புலம்பவேண்டியதாயிடும்.

  ReplyDelete
 9. //அப்பாவி தங்கமணி said...

  நல்ல பதிவு. என்னை பொறுத்த வரை வேண்டுதல்கள் தவறில்லை. அது உங்களையும் மற்ற யாரையும் கஷ்டபடுத்தாதவரை. நம்மை சிரமபடுத்திகிட்டு எந்த கடவுளும் எதையும் செய்ய சொல்றதில்ல. இதை சொன்னா நம்மளை நாத்திகவாதி மாதிரி பாக்குறாங்க எல்லாரும் நம்ம வீட்டுல இருக்கறவங்க உட்பட. எனக்கும் நம்பிக்கை இருக்கு ஆனா மூடநம்பிக்கை இல்ல அதோட என்னால செய்ய முடியற அளவுல. நல்லா சொல்லி இருக்கீங்க சுந்தரா//

  வாங்க அப்பாவி தங்க(ச்சி)மணி :)

  நேத்து எதேச்சையா கண்லபட்ட உங்கவீட்டு இட்லி வரலாற்றைப் படிச்சு
  வயிறுவலிக்கச் சிரிச்சேன் :)

  ReplyDelete
 10. //நாம் வேண்டிக்கொள்கிற வேண்டுதல்கள் நமக்கு மன திருப்தியையும் மற்றவர்களுக்கு நல்ல பலனையும் தருவதாக இருந்துவிட்டால் எத்தனை நன்றாக இருக்கும்.//

  நல்ல பதிவு

  உண்மையில் நம் மரபு ஆக்க பூர்வமான சக்தி வாய்ந்த சில வழிபாடுகளையும், பரிகாரங்களையும் சொல்லி இருக்கிறது. அது மக்களிடையே சென்று சேரவில்லை என்று நினைக்கிறேன்.

  என்னுடைய வலைப்பதிவில் பதிவேற்ற முயற்சி செய்கிறேன்

  ReplyDelete
 11. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சபரிநாதன் அவர்களே.

  விரைவில் பதிவிடுங்கள். அறிந்துகொள்ள ஆவல்.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails