Saturday, May 29, 2010

தும்மலும் தீர்க்காயுசும்!


அச்சு அச்சுன்னு அடுக்கடுக்கா தும்மல் போடுவாங்க கோமதியக்கா. "அட,அபசகுனம் புடிச்சவ, தும்மிட்டாளா...இனி போன காரியம் வெளங்கினமாதிரிதான்..." என்று.
வாசல்புறத்திலிருந்து வெறுப்போடு முனங்குவாங்க அவங்க மாமியார். அக்காவுக்கு கண்ணீர் கோர்த்துக்கொள்ளும் உடனே.

வந்தா நிறுத்தமுடியாது, வருமுன்னாலும் தடுக்கமுடியாது என்ற வகையில் இந்தத் தும்மலுக்கு முக்கிய இடமுண்டு. இதிலயும், ரெட்டைத்தும்மல் போட்டா ரொம்ப நல்லதுன்னு அடுத்த தும்மலை ஆர்வமா எதிர்பார்க்கவும் செய்வாங்க சிலர்.

கல்யாணமோ, வைபவமோ ஏதாவது நடக்கும்போது யாரும் தும்மல் தும்மிடக்கூடாதுன்னு, தும்மல் வந்தா, மூக்கைத் தேச்சுவிடு. தும்மல்போட்டுராதன்னு எப்பவும் எல்லாருக்கும் எச்சரிக்கை குடுப்பாங்க எங்க பெரியம்மா.

ஆனா, தும்மல் என்பது நாம, உடலுக்கு ஒவ்வாத பொருட்களைச் சுவாசிக்க நேர்ந்தால் அதைக் கண்டுபிடித்து உடனே வெளியேற்றும் அருமையான டெக்னிக் என்பது மருத்துவம் தெரிஞ்சவங்க சொல்ற விஷயம். சிலர் அதிகாலையில அடுக்கடுக்கா தும்மல்போடுவாங்க. உறக்கத்தின்போது உடலில்சேர்ந்த தேவையற்ற நீரை அதிகாலையில் உடம்பு வெளியேற்றும் முயற்சியே அதுவாகும். இது நல்ல உடம்புக்கான அறிகுறிதான் என்றும் சொல்லுவாங்க சிலர்.

சின்னக்குழந்தைங்க தும்மும்போது "நூறு" ன்னு சொல்லி, நூறு வயசு வாழணும் என்று குறிப்பாக வாழ்த்துவாங்க எங்க பக்கத்துப் பெரியவங்க. தும்முகிற அந்த வினாடியில் இதயம் நின்று மறுபடியும் இயங்கத் தொடங்குமாம். அதனால்தான் அந்த வாழ்த்து. தான் பெற்ற பிள்ளைகள் பேரன் பேத்தியெடுத்திருந்தாலும், அந்தப் பிள்ளைகள் தும்மும்போதும் பெற்றதாய் உட்காந்து, நூறுன்னு வாழ்த்துவதைப்பார்க்க மனசு நெகிழத்தான்செய்யும்.

இங்கேயும் ஒரு தும்மல் காட்சி...வள்ளுவரின் வார்த்தைகளில் எப்படி அழகாகியிருக்குதுன்னு பாருங்க.

"வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று"

தலைவன் தும்முகிறான். உடனே அவனை வாழ்த்துகிறாள் தலைவி. ஆனால், வாழ்த்திய அடுத்த நிமிடமே, நான் இங்கே அருகிலிருக்கும்போது,வேறு யார் உங்களை நினைத்ததால் தும்மினீர்கள்?" என்று கேட்டு ஊடல்கொண்டு அழத்தொடங்குகிறாள் அவள்.

அடுத்து ஒரு சமயம், அவள் அழுதுவிடுவாளோ என்ற எண்ணத்தில், வந்த தும்மலை அடக்குகிறான் அவன். ஆனால் அவளோ, "உனக்கு வேண்டியவர்கள் நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாதென்று வந்த தும்மலை அடக்குகிறாயோ?" என்று வருந்தி அழுகிறாள்.

"தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று"

ரெண்டே ரெண்டு வரிகளில் ரெண்டுபேரோட மன உணர்வுகள் எவ்வளவு அழகா வெளிப்பட்டிருக்கு பாருங்க. இதுமாதிரி இன்னும் பல உணர்வுகளை வள்ளுவர் வார்த்தைகள்ல படிக்கணும்னா, காமத்துப்பால் புலவி நுணுக்கம் பகுதியில் படிக்கலாம்.

Wednesday, May 26, 2010

ஐ நா சபையின் கேள்வியும், அர்த்தம் புரியாத நாடுகளும்!!!
"உலகின் பிறபகுதிகளில் நிலவும் உணவுத் தட்டுப்பாட்டுக்கான தீர்வுகள் என்ன என்பதுபற்றிய உங்களுடைய நேர்மையான கருத்தைச் சொல்லுங்கள்"

- என்ற கேள்வியுடன், உலகம் முழுவதிலும் கருத்தாய்வு நடத்தியது ஐ நா சபை.
ஆனால், அந்த ஆய்வு தோல்வியில் முடிந்ததாம்.

அதற்கான காரணங்கள் என்னன்னா, அந்தக் கேள்வியிலிருந்த வார்த்தைகளுக்கே அர்த்தம் விளங்கலியாம் உலகநாடுகள் சிலவற்றிற்கு.

'உணவு' என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியவில்லையாம் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு,

'நேர்மை' என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியவில்லையாம் இந்தியாவுக்கு,

'தட்டுப்பாடு' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லையாம் பல ஐரோப்பிய நாடுகளுக்கு,

'கருத்து' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லையாம் சீனர்களுக்கு,

'தீர்வு' என்ற வார்த்தைக்கே அர்த்தம் விளங்கவில்லையாம்,மத்தியக்கிழக்கு நாட்டினருக்கு, (மிடில் ஈஸ்ட்)

'தயவுசெய்து' என்ற வார்த்தைக்குப் பொருள் தெரியவில்லையாம் தென் அமெரிக்காவுக்கு,

அதுமட்டுமில்லாமல்,

'உலகின் பிற பகுதிகள்'ன்னா என்னன்னே தெரியலியாம் அமெரிக்காவுக்கு!!!

இது எப்படியிருக்கு :)

இது ஆங்கிலத்தில்வந்த ஒரு மின்னஞ்சலின் மொழிமாற்றம்.

எனக்குப் புரிஞ்ச அளவுக்கு மொழிபெயர்த்திருக்கிறேன்.

உங்களுக்கும் புரிஞ்சா சிரிங்க, முடிஞ்சா கொஞ்சம் யோசியுங்க.

Tuesday, May 25, 2010

இவங்களைக் கொஞ்ச நேரம் கவனிக்காம விட்டுட்டா...

படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க, படங்களுக்குமேலே 'க்ளிக்' பண்ணுங்க...Sunday, May 23, 2010

ஹர்ஷினியின் கடைசி வார்த்தைகள்


"At the airport and blah =_= Only thing to look forward to is the rain'"

விமானத்தில் ஏறுமுன் கடைசியாக,தன்னுடைய அலைபேசிவாயிலாக ட்விட்டரில் ஹர்ஷினி பதிவு செய்த வார்த்தைகள் இதுதான்.மழையை எதிர்பார்த்து மங்களூருக்குப்போன பதினெட்டு வயதுப் பூ, நெருப்பில் கருகிப்போனது கண்ணீர்க்கதை.

ஹர்ஷினி பூஞ்சா...என் மகளுடைய பள்ளியில் சென்ற வருடம் படித்துமுடித்த பெண். சிலுசிலுவென்று அந்தப்பெண்ணின் பேச்சும்கூட மழைமாதிரிதான் இருக்கும் என்றுசொல்லி மறுகுகிறாள் என் மகள். அப்பா அம்மாவுடன் உறவினரின் கல்யாணத்துக்கு ஊர்வந்த குடும்பம் மொத்தமாக அழிந்துபோயிருக்கிறது.

படத்தில் பெற்றோருடன் நடுவிலிருப்பது ஹர்ஷினி...

இதேமாதிரி என் மகனின் பள்ளியில் படித்து, தற்போது ப்ளஸ் 2 முடித்து, நம் ஊரில் கம்ப்யூட்டர் படிப்புக்காக வந்த அக்ஷய் போலார், தன் அம்மாவுடனும் பாட்டியுடனும் அதே விமானத்தில் பயணித்து இறந்துபோயிருக்கிறான். எங்கே திரும்பினாலும் குழந்தைகள் பெரியவர்களென்று எல்லோரிடமும் இதே பேச்சுதான்.

ஆண்டு விடுமுறைக்குப்போக ஆவலாயிருந்தவர்கள் மனதிலெல்லாம் மருட்சி நிறைந்திருக்கிறது. உயிரைப் பணயம் வைத்துப் பயணம் செய்யப்போகிறோமோ என்று.

கடைசியாக நண்பரொருவர் சொன்ன வார்த்தைகள் மனதைத் தைத்தது.
கொத்துக்கொத்தாக இறந்துபோனவர்கள் பலர்,இங்கே இருந்தபோதும் உறவுகளுக்காக உழைத்தார்கள், இப்போது செத்தும் பல லட்சங்களாக அவர்களின் பாக்கெட்டை நிறைக்கப்போகிறார்கள். பணமிருக்கும்வரைக்கும் உறவுகளின் மனதில் அவர்களின் நினைவிருக்குமென்று.

படம் : நன்றி Gulf News.

Wednesday, May 19, 2010

பழசோ புதுசோ மதுரை மதுரைதான்!

இது மின்னஞ்சலில் வந்த புகைப்படங்களின் தொகுப்பு...

இந்தப் புகைப்படங்கள் 1858 ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

எல்லாம் கூகிளுக்கே வெளிச்சம்.

மீனாட்சியம்மன் கோபுர வாசல்திருமலை நாயக்கர் மஹால்பொற்றாமரைக்குளம்வைகைக் கல்பாலம்திருப்பரங்குன்றம் கோயில்திருப்பரங்குன்றம்
யானை மலைமீனாட்சியம்மன் கோயில் முகப்புதமுக்கம் கட்டிடம்
வண்டியூர்த் தெப்பக்குளம்கிழக்குக் கோபுர வாயில்

Tuesday, May 18, 2010

காப்பியும் காந்திஜியும்!


உயர்தரப்பள்ளியில் நான் படித்த முதல் ஆண்டில் பரீட்சையின் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. அது இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வி இலாகா இன்ஸ்பெக்டர் ஸ்ரீ கைல்ஸ் அப் பள்ளிக்கூடச் சோதனைக்காக வந்திருந்தார். எழுத்துக் கூட்டி எழுதும் பயிற்சிக்காக அவர் எங்களுக்கு ஐந்து சொற்களைக்கூறி அவற்றை எழுதச் சொன்னார். அதில் ஒரு சொல் "கெட்டில்" (Kettle) என்பது. அதை நான் தவறாக எழுதிவிட்டேன்.

உபாத்தியாயர் தம் கால் பூட்ஸ் முனையால் என் காலைச் சீண்டித் தூண்டினார். நான் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் பக்கத்துப் பையனைப் பார்த்துக் காப்பி அடிக்காமல் பார்த்துக் கொள்ளுவதற்காகவே ஆசிரியர் அங்கே இருக்கிறார் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆகையால், என் பக்கத்துப் பையனின் சிலேட்டைப் பார்த்து அப்பதத்தின் எழுத்துக்களைக் காப்பியடிக்க அவர் என்னைத் தூண்டுகிறார் என்பதை நான் அறியவில்லை.

இதன் பலன் என்னவெனில், என்னைத் தவிர மற்ற எல்லாப் பிள்ளைகளும் அப்பதத்தைச் சரியாக எழுதியிருந்தனர். நான் ஒருவனே முட்டாளாக இருந்து விட்டேன். இந்த முட்டாள்தனத்தை நான் உணரும் படி செய்வதற்கு ஆசிரியர் பிறகும் முயற்சி செய்தார். ஆனால் அதனாலும் பயனில்லை. காப்பி அடிக்கும் வித்தையை நான் என்றுமே கற்றுக்கொள்ள முடியவில்லை.

குறிப்பு:- காந்திஜியின் சத்தியசோதனை நூலின் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

Monday, May 17, 2010

எங்கே தொலைத்தோம் நம் உடல்நலத்தை???


என்னோட குறிஞ்சி மலர்கள் கவிதை வலைப்பக்கத்தில சாதாரணமா பதிவுபோடுற அன்னிக்கு கிட்டத்தட்ட முப்பது நாப்பது பேரும், பதிவு போடாத நாட்கள்ல அஞ்சோ பத்தோபேரும்தான் வந்துபோகப் பாத்திருக்கேன். ஆனா, சமீபத்தில் எழுதின "எடைகுறைக்கும் ரகசியம்" ங்கிற கவிதையைப் போட்ட அன்னிக்கி, வந்துபோனவுங்க எண்ணிக்கை 178. ஆனா இதில, கவிதைக்காக வந்தவங்க நிச்சயமா கொஞ்சம்பேர்தான், மத்தவங்கல்லாம் தலைப்புக்காக வந்தவங்கன்னு எனக்கு சந்தேகமில்லாம தெரிஞ்சுக்கமுடிஞ்சது.

எடையைக் குறைக்கணும்கிற ஆர்வம் சமீப காலமா எல்லார்கிட்டயும் ஏற்பட்டிருக்கும் ஒரு விஷயம். உயரத்தையும் எடையையும் வச்சு கணக்குப்போட்டு, இத்தனை கிலோவைக் குறைச்சிட்டீங்கன்னா எதுவும் தொல்லையில்ல. அப்படியில்லேன்னா,அந்த வியாதி இந்த வியாதின்னு இல்லாம இன்னும் பேர்வைக்காத புதுவியாதியெல்லாம்கூட வந்துடும்னு சொல்லிக் கிலியைக் கிளப்புறாங்க பலர். அதுக்கேத்தமாதிரி, சட்டுச்சட்டுன்னு சின்னவயசிலயே அநியாயமா உயிரிழக்கும் பலரைப் பார்க்கும்போது அந்த வார்த்தைகளை உறுதிப்படுத்துவதாகவும் இருக்குது.

சமீப காலமாக ஏன் இந்த மாற்றம்? எதைத் தொலைத்ததால் உடல் எடைகூடி, நம் ஆயுள் இப்படிக் குறைகிறது? உணவுமுறையா,பழக்கவழக்கமா இல்லை இரண்டுமா? இதுதான், தற்போது எல்லாரும் தனக்குள்ளும் பிறரிடமும் கேட்கிற கேள்வியாக இருக்கிறது.

தண்ணியைக் குடிச்சாலும் தவளைமாதிரி இருக்கிற உடல்வாகுன்னும், என்னத்தைத் தின்னாலும் ஏறாத உடம்புன்னும் ரெண்டு வகை சொல்லுவாங்க நம்ம பெரியவுங்க.

பழையகாலத்துக் கதை ஒண்ணு... ஒரே வீட்டுல ரெண்டு பேருக்கு ஒரே சமயத்துல குழந்தை பிறந்துச்சாம். ஒண்ணு மகள், இன்னொண்ணு மருமக. மகளை ஓய்வா உக்கார வச்சிட்டு மருமகளை மாங்குமாங்குன்னு வேலைசெய்யச்சொல்லுவாளாம் அந்த மாமியார்.
அதுமட்டுமில்லாம தன்னோட மகளுக்கு நெய்போட்டுப் பிசைந்த சாப்பாட்டையும் மருமகளுக்கு எண்ணெய் ஊத்தின சாப்பாட்டையும் கொடுப்பாளாம். நாளாக நாளாக மகளுக்கு, உடம்பு அநியாயத்துக்குப் பெருத்துப்போயி, காய்ச்சல், ஜலதோஷம்,அங்க வலிக்குது இங்க வலிக்குதுன்னு புலம்ப, மருமகளோ உறுதியாயும் அழகாயும் இருந்தாளாம்.

மனசு பொறுக்காத மாமியார், பக்கத்துவீட்டுக்காரிகிட்டபோயி இதுக்குக் காரணமென்னன்னு கேட்டாளாம். அந்தப் பக்கத்து வீட்டம்மா ரெண்டு கைப்பிடி சாதத்தை எடுத்து ஒண்ணை நெய்போட்டும் இன்னொண்ணை நல்லெண்ணெய் போட்டும் பிசைஞ்சு வெயில்ல வச்சுதாம். நெய்யில பிசைஞ்ச சாதம் வச்ச கொஞ்ச நேரத்துல பொலபொலன்னு உதிர்ந்துபோயிடுச்சாம்.ஆனா எண்ணையில பிசைஞ்ச சாதம் கெட்டியா அப்படியே இருந்துச்சாம். இதுதான் காரணம்னு சொல்லிச்சிரிச்சாளாம் அந்தம்மா.

வேலைசெஞ்சு சூடேறுகிற உடம்பை எண்ணெயும் சேர்ந்து இன்னும் உரப்படுத்தும்னு சொல்லுவாங்க. ஆனா எளிதில் ஜீரணமாகாத நெய் மாதிரி கொழுப்புப்பொருட்களும்,உடலுழைப்பில்லாத இன்றைய வாழ்க்கைமுறையும்தான் தற்போதைய உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம்.

முன்னெல்லாம் ஆத்துல குளத்துதுல இருந்து வீட்டுக்குக் குடிக்கத் தண்ணி கொண்டுவருவாங்க. அப்புறம் தெருவுக்குத் தெரு குழாய்கள் வந்திச்சு. அப்புறம் வீட்டுக்கு வீடு. ஆனா இப்ப, பாட்டிலில் வீட்டு வாசலுக்கே வந்து சமையலறையில உட்காந்திருக்குது பாட்டில் தண்ணி. இடுப்புல ஒரு குடமும் கையில் ஒரு சின்ன வாளியுமாக அன்றைக்கு தண்ணீர் எடுத்ததுண்டு. ஆனா இன்னிக்கு, ஒண்ணரை லிட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிவைக்கச்சொன்னா, எல்லா வேலையும் நானேதான் செய்யணுமான்னு அலுத்துக்குது இன்றைய தலைமுறை.

அப்பல்லாம், இடுப்பில் குடம்சுமந்து, கொடியிடையாய் இருந்த பெண்கள், இப்ப 'பிடி'யிடையுடையவர்களாகிப்போனது காலத்தோட கொடுமைன்னுதான் சொல்லி மனசத் தேத்திக்கணும்.('பிடி'ன்னா தமிழ்ல பெண்யானைன்னு அர்த்தமாம்...தெரியுமோ? :) )

கபடி, கில்லி,கோலி விளையாட்டு, பாண்டி, பம்பரம் பட்டம்விடுறதுன்னு ஆண் பெண் வித்தியாசமில்லாம எல்லா விளையாட்டையும் விளையாடுவோம் அப்போ. ஆனா, ஃபேஸ்புக்,கம்ப்யூட்டர் கேம்ஸ், ப்ளே ஸ்டேஷன்னு உட்கார்ந்த இடத்திலேயே உறைஞ்சுகிடக்குது இன்றைய தலைமுறை.(என்னையும் சேர்த்துத்தான்...)வீட்டுக்கு ஒரு பிள்ளையாவது ஓவர் வெயிட்டா இருக்கிறது இங்கே வெளிநாடுகளில் சர்வசாதாரணம்.

இளைய தலைமுறையை விட்டுவிடலாம். சமீபத்தில் தோழியொருவர் எங்கிட்டே,
புதுசா ஃப்ரிட்ஜ் வாங்கினீங்களே என்ன மாடல்ன்னு கேட்டாங்க. ப்ராண்டையும் மாடலையும் சொன்னேன். நீங்க,என்னைமாதிரி இப்ப புதுசா வந்திருக்கிற ஃப்ரீஸர் கீழேயும் ஃப்ரிட்ஜ் மேலேயும் இருக்கிற மாடல் வாங்கியிருக்கலாம்னு சொன்னாங்க. ஏன், அதில என்ன ஸ்பெஷல்னு கேட்டேன். ஒவ்வொரு தடவையும் காய்கள் பழங்கள் எடுக்க கீழே குனியவேண்டியதிருக்காது, நிமிர்ந்து நின்னுகிட்டே ஈசியா எடுக்கலாம் அந்த மாடல்லேன்னு சொன்னாங்க.

எனக்கு என்ன பதில் சொல்லன்னே தெரியல, சிரிச்சேன். உடம்பைக் குறைக்கணும்னு ஓடவா நடக்கவான்னு ஓராயிரம் யோசனை பண்ற அவங்க, நாலைஞ்சுதடவை குனியிறதுக்கு பயப்படுவதை நினைச்சப்ப சிரிப்புத்தான் வந்தது. இப்படியிருந்தா ஏன் கூடாது உடம்பு எடை? மொத்தத்துல குனிஞ்சு நிமிர இனிவரும் தலைமுறைக்கெல்லாம் காசுதான் கொடுக்கணும்போல.

பொதுவா, உடல் ஆரோக்கியம் பற்றி நாம நிறையப் படிப்போம். ஒண்ணு ரெண்டுநாள் அதை ஒழுங்கா கடைப்பிடிப்போம். நாலைஞ்சுநாள் அதை நினைவில் வச்சிருப்போம். அப்புறம், அதை அப்படியே விட்டுடுவோம். இதுதான் நம்ம வழக்கம். இதைக் கொஞ்சம் மாற்றி, படிக்கிறதில் நமக்கு ஏற்றதை எடுத்துக்கிட்டு, கொஞ்சம் நேரம் செலவுசெய்து, அதை விடாம கடைப்பிடிச்சா எதிர்வரும் நிறைய பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வுகிடைக்கும்.

'நடந்தா நாடே உறவு, படுத்தா பாயும் பகை'ன்னு சொல்லுவாங்க. அதனால வேறெதுவும் முடியலேன்னாலும் தினமும் கொஞ்சநேரம் நடைப்பயிற்சி மட்டுமாவது செய்யலாம்.முயற்சியும் பயிற்சியும் இருந்தா கட்டாயம் வாழ்வில் உயரலாம். அதனால, வாங்க, நடக்கலாம் :)

Tuesday, May 11, 2010

நான் அம்முவின் அம்மாஅம்மாவாயிருக்குறது ஒண்ணும் சுலபமில்லீங்க...அதுக மூணையும் நா விட்டுட்டு வந்தப்ப, பெரியவனுக்குப் பத்து வயசிருக்கும். ஆறு வயசிலயும் ரெண்டு வயசிலயுமா அடுத்த ரெண்டும் பொண்ணுக. சின்னது அம்மு, என்ன விட்டு எப்பிடி இருக்கப்போகுதோன்னுதான் தவிச்சுப்போனேன். ஆனா, ஏதோ அடியும் மிதியும்பட்டு அதுவா வளந்திருச்சு.

அவுகப்பாவும் புள்ளைங்க மேல பாசமில்லாதவுக கிடையாது. நல்லாத்தான் பாசமாயிருப்பாக. ஆனா, நா விட்டுட்டு வந்தப்புறம்தான் முழுசா மாறி்ப்போயிருக்காக. எனக்குப் பிறகு என் தங்கச்சியக் கல்யாணம் கெட்டிக்கிட்டவுக, அவளுக்கு ரெண்டு புள்ளைங்க பிறந்ததும், என்னோட புள்ளைகளுக்கு மாற்றாந்தகப்பன் மாதிரி மாறிப்போனதுதான் வினையாகிப்போச்சு.

நா இருந்தப்ப, புள்ளைகளோட விளையாட்டு சைக்கிள்கள நிறுத்த நாங்க கட்டுன முடுக்கு அறைதான், இப்ப என்னோட மூணு புள்ளைகளுக்கும் இருப்பிடமாயிருச்சுன்னு சொன்னாக. மனசு தாங்கல. மத்த ரெண்டும் பரவாயில்ல, சித்திக்காரி சொல்லக்கேட்டு, அவளுக்குப் பணிவிடைசெய்து பொழைக்கப் பழகிடுச்சுங்க. கடைக்குட்டி மட்டும்தான் சித்திகாரிகிட்டயும், அப்பா கிட்டயும் அடி வாங்கிச் சாகுதுன்னு தெரிஞ்சதும் அடக்கமுடியல எனக்கு.

அன்னிக்கிப் பாருங்க, தென்னை மரத்தில கட்டிவச்சு சாத்துசாத்துன்னு சாத்தியிருக்காக. சின்னப்புள்ள, அரிசி மூட்டையில ஏறி வெளயாடுனப்போ, கடைக்கு வாங்கின எண்ணெய்க்குள்ள அரிசியக் கொட்டிவிட்டிருச்சாம். ராத்திரிபூரா வீட்டுக்குள்ள கூப்பிடாம, வெறும் வயிறா வெளியவே கட்டிவச்சிருக்காக. பாக்கப்பாக்கத் தாங்கல எனக்கு.

சின்னதுல, அம்மு அம்முன்னு எப்பவும் எங்கிட்டயே வச்சிருப்பேன். அதுவும் அம்மா அம்மான்னு சுத்திவரும். அதோட நிலமையப் பாத்தீகளா? இப்பல்லாம் வீட்ல வேல பாக்கிறதுக்காக அதுங்கள ஸ்கூலுக்குக்கூட அனுப்புறதில்ல. என்னோட ஆசைமகன் இப்ப அவுகளோட கடைக்கு சம்பளமில்லாத வேலக்காரன். நா மட்டும் இருந்திருந்தா, அதுக்கு அவன் இப்ப சின்னமுதலாளி.

கடக்குட்டி அம்முவுக்கும் வயசு பதினாறாயிருச்சு. அப்பப்போ பின்னாடி வீட்டுக்குப் அவ போறது தெரியுது. அங்க வாடகைக்கு இருக்கிறவுக ரொம்ப நல்லமாதிரின்னு தோணுது. அம்முவோட கஷ்டத்தைப் பாத்துட்டு அவளுக்கு அனுசரணையா இருக்காக போல. அவுகளும் ஒருநாள் வீட்டைக் காலிபண்ண, அம்முவும் அன்னிக்கே வீட்டைவிட்டுப் போயிட்டா போல. ஒண்ணு தொலஞ்சிதுன்னு கண்டுங்காணாம இருந்துட்டாக எந்தங்கச்சியும், அம்முவோட அப்பாவும்.

அனுசரணையா இருந்த அந்த பின் வீட்டுக்காரவுக, அம்முவைக் கொஞ்ச நாள் கழிச்சு அவுங்க மகனுக்கே  கட்டிவச்சிட்டாக. அம்மு அதுக்கப்புறம் கொஞ்சநாள் சந்தோஷமாத்தான் இருந்திருக்கா. ரெண்டு புள்ளைக அவளுக்கு. அவ கட்டிக்கிட்ட அந்த கிறிஸ்தவப் பையனுக்கும் ஆயுசு கெட்டியில்லாம இருந்திருக்கு. நாலே வருஷத்துல அம்முவையும் ரெண்டு குழந்தைகளையும் விட்டுட்டு செத்துப்போயிட்டான்.

அம்மு அதுக்கப்புறம், ஒரு பாதிரியார் வீட்டுல வீட்டுவேல செஞ்சுகிட்டே, அவங்க நடத்துற பள்ளிக்கூடத்துல புள்ளைகளைப் படிக்கவச்சா. அம்முவ மாதிரி இல்லாம அவுக ரெண்டுபேருக்கும் நல்ல படிப்பு அமைஞ்சிருச்சு. ரெண்டு பிள்ளைகளும் நல்லாப் படிச்சிருச்சுக.
அம்மாவ நல்லபடியாப் பாத்துக்கணும்னு ஒரு உத்வேகம் அதுங்களுக்கு. படிப்பு முடிஞ்சதும் அந்தப் பாதிரியார் நல்ல பையன் ஒருத்தனுக்கு அம்முவோட மகளைக் கட்டிவச்சாரு. அம்முவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

அன்னிக்கி, மகளும் மருமகனும் விருந்துக்கு வாராங்கன்னு அம்முவுக்கு ஒரே பரபரப்பு. சாமான் லிஸ்ட மகன்கிட்ட கொடுத்து வாங்கியாரச் சொல்லிட்டு, பம்பு ஸ்டவ்வப் பத்தவைச்சா. அடுப்பு வேகமா எரியட்டும்னு காத்து அடிச்சுக்கிட்டிருந்தா. மக வரப்போற சந்தோஷத்துல நிறையவே வேகமா எரியவிட்டா.

'டம்'முன்னு பெருஞ்சத்தம். சேலையில பிடிச்சு கொஞ்சங்கொஞ்சமா அம்முவ விழுங்கிச்சு நெருப்பு. கடைக்குப்போன மகன் வந்து பாக்கிறான். கரிக்கட்டையா கிடக்கா அம்மு. ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப்போறாக. கூடவே நானும்போறேன். போதும், இத்தன கஷ்டப்பட்டது போதும். அம்மாகிட்ட வந்திரு அம்மு. அனத்திக்கிட்டே இருக்கேன் நான்.

டாக்டர் வந்து பாத்துட்டு கைய விரிச்சிட்டார். அம்முவோட மகன், அம்மாவப் பாக்க முடியாம வெளிய நின்னு அழுதுகிட்டிருக்கான். மகனைப் பாக்கணும்னு சைகை காட்டுனா அம்மு. அவன் கிட்ட வந்து பார்த்ததுதான் தாமதம். பட்டுன்னு நின்னுருச்சு மூச்சு. விருந்துக்கு வரதா சொன்ன மகளும் மருமகனும் அழுதுகிட்டே ஓடியாராங்க.

ரெண்டு கைகளையும் விரிச்சுகிட்டு, வா அம்மு, வா... அம்மாகிட்ட வந்துட்ட, இனி உன்ன நான் பாத்துக்கிறேன்னு வாரி அணைக்கிறேன். ஆனா, "ஐயோ, உன்ன மாதிரியே நானும் என் மக்கள தவிக்கவிட்டுட்டு வந்துட்டனே" ன்னு அப்ப நான் அழுதமாதிரியே 'ஓ'ன்னு அழுதுகிட்டிருக்கா அம்மு.

Sunday, May 9, 2010

நம்மளப்பத்தி என்னல்லாம் பேசிக்கிறாங்க பாருங்க...(பெண்களுக்கு மட்டும்)

மனைவி : ஜன்னலுக்கு திரை போடணும். எதிர்விட்டு முரடன் என்னையே பார்க்கிற மாதிரி தெரியுது.

கணவன்: ஒரு முறை பார்க்கட்டும் விடு... அப்புறம் அவனே திரை வாங்கிப் போட்டுக்குவான்.

_____________________________________________________________________________________

மனைவி: எங்கே தேடினாலும் என்னைப்போல மனைவி உங்களுக்கு கிடைக்க மாட்டாள்.

கணவன்: உன்னைப்போல மனைவியை இனிமேலும் நான் ஏன் தேடப்போறேன்?
நேர்மாறா தான் தேடுவேன்.

_____________________________________________________________________________________

பிச்சைக்காரன்: தாயே மகாலக்ஷ்மி . கண் தெரியாத எனக்கு ஒரு ரூபா கொடும்மா.

கணவன்: உன்னை மகாலக்ஷ்மின்னு சொல்றான். கண் தெரியாதவன் தான்... சந்தேகமே இல்லை 5 ரூபாயா குடு...

_____________________________________________________________________________________

ரகு : என் மனைவியின் ஞாபகசக்தி அனியாயத்துக்கு மோசமா இருக்கு.

ரவி: ஏன் எல்லாத்தையும் மறந்து தொலைக்கிறாளா?

ரகு: இல்லை... எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்கிறா.

_____________________________________________________________________________________


மணி : என் மனைவி எந்த சப்ஜக்ட் கொடுத்தாலும் அதைப்பத்தி அரை மணி நேரம் பேசுவாள்.

குரு: இது என்ன பிரமாதம்? சப்ஜெக்டே இல்லாம என் மனைவி மணிக் கணக்கிலே பேசுவாளே.

_____________________________________________________________________________________


கணவன்: நீ என்னை ஒவ்வொரு முறை கடந்து செல்லும்பொழுதும்
என் இதய துடிப்பு அதிகரிக்கிறது
ஆயிரம் மடங்கு!

மனைவி (வெட்கத்துடன்) ஏன்?

கணவன்: :) :)
(மனசுக்குள்)சாதரணமா பேய் கடந்து போனா
அப்படிதான் ஆகுமாம்.

_____________________________________________________________________________________

கோபு :நண்பனுக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம்?

மணி: நண்பனிடம் நீ தான் என் நண்பர்களிலேயே சிறந்தவன்னு சொல்ல முடியும். ஆனால் மனைவியிடம் நீ தான் என் மனைவிகளிலேயே சிறந்தவள்னு சொல்ல முடியுமா?

_____________________________________________________________________________________

பி.கு : மின்னஞ்சலில் வந்த நகைச்சுவைகளிருந்து எடுக்கப்பட்டது.

Wednesday, May 5, 2010

விபரீதமாகும் சில வேண்டுதல்கள்!

 
Posted by Picasa

சமீபத்தில் திரைப்படக்காட்சியொன்றில், கதாநாயகி ஏதோவொரு வேண்டுதலுக்காக முட்டிபோட்டு மலைக்கோயில் படியேறிவர, கால்முட்டியெல்லாம் ரத்தம் வருவதுபோல் ஒரு காட்சியைக் காட்டினார்கள்.

இதேபோல, இன்னுமொரு திரைப்படத்தில் தாலியைக் கழற்றி உண்டியலில்போடுவதாக வேண்டிக்கொண்ட கதாநாயகி, வேண்டுதலைச் செலுத்துகிற சமயத்தில்,தாலிக்குப் பதிலாக அதற்குச் சமமான இன்னொரு நகையைப்போட முயற்சிக்க, அந்த உண்டியலுக்குள் அவள் பிள்ளையே விழுந்துவிடுவதாகவும், அதற்குப்பிறகு அந்த வேண்டுதலை வசூலிக்க அம்மன் ஒரு கடன்காரி ரேஞ்சுக்கு அவள் குடும்பத்தையே சுற்றிச்சுற்றிவருவதாகவும்கூடக் காண்பித்து எரிச்சலூட்டியிருப்பார்கள்.

திரைப்படங்கள்தான் இப்படின்னா, நிஜ வாழ்விலும்கூட, தலையில் தேங்காய் உடைப்பது, நாக்கில் கற்பூரம் ஏற்றுவதுன்னு ஆரம்பிச்சு, அலகு குத்துவது,ஆணிச்செருப்புப்போடுவது நரபலிகொடுப்பது, சாட்டையாலடிப்பது, தீ மிதிப்பதுன்னு ஒவ்வொரு மதத்திலும் இதுபோன்று வேண்டிக்கொள்ளும் வழக்கம் உலகமெங்கும் இருக்கத்தான் செய்கிறது.

அன்பே சிவம், கருணையே கடவுள், இரக்கமே இறைவன்னு எவ்வளவோ சொன்னாலும், தன்னை வருத்திக்கொண்டால்தான் கடவுளின் கருணை சீக்கிரம் கிடைக்குமென்கிற மக்களின் மனநிலை இன்னும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது.இதைப் பற்றிக் கொஞ்சம் அழுத்திப் பேசினால்கூட, படிச்ச திமிர்,நாகரிகம் வளர்ந்துட்டதால ஆண்டவனை அலட்சியம் பண்றாங்கன்னு அவதூறுதான் கிளம்புகிறது.

என் பக்கத்துவீட்டிலிருந்த பெண்மணியொருவரின் கணவருக்கு உயர்ரத்த அழுத்தம். அவ்வப்போது நெஞ்சுவலியும் வரும் என்று சொல்லுவாங்க. கணவரின் உடல்நிலை நல்லா இருக்கணும்னு, வெள்ளி செவ்வாய், அமாவாசை, பௌர்ணமியென்று எல்லா நாளும் ஏதாவதொரு விரதம் இருப்பாங்க அந்த அம்மா. ஆனா, அவங்க கணவர் வேலைமுடிந்து வருகையில் சில்லி சிக்கனும், பொரிச்ச பரோட்டாவும் சாப்பிட்டுவிட்டு, பிள்ளைகளுக்கும் பார்சல் வாங்கிட்டுவருவார். வீட்ல வந்து மாத்திரை போட்டுக்குவார்.

ஆனா,அடிக்கடி விரதமிருந்த அவங்க, முட்டிவலி, ரத்த சோகைன்னு வராத நோவெல்லாம் வந்து கஷ்டப்பட்டாங்க. இதையெல்லாம் பார்க்கையில் பதைப்பாக்த்தான் இருக்கும். ஆனாலும்,அவங்களோட நம்பிக்கையைச் சிதைக்கச் சங்கடமாயிருக்கும்.

சமீபத்தில், உடல்நிலை காரணமாக, சிக்கலான ஆப்பரேஷன் ஒன்றைச் செய்து, தேறிவந்த என் உறவினர் ஒருவர், சிலநூறு கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள அம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்துகொள்வதாக வேண்டியிருந்திருக்கிறார். வேண்டுதலை நிறைவேற்ற அவரும் அவருடன் சேர்ந்து இன்னும் சிலரும், அங்கேபோய் ஆலயப்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தபோது, அப்போதே அவருக்கு நெஞ்சுவலி வந்து, மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லுமுன்பாக,அங்கேயே மரணமடைந்துவிட்டார்கள்.

நடந்ததைக் கேள்விப்பட்டபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. வேண்டுதலைச்செலுத்த ஆயிரம் வழிகள் இருந்தும், உடல்நிலைக்கு ஒத்துவராத இந்தமாதிரியான வேண்டுதல்கள் அவசியம்தானா என்ற கேள்வி நெஞ்சைவிட்டு அகலமறுத்தது.

அங்கப்பிரதட்சணம் பண்ணுவதோ மற்றும் அதுபோன்ற வேண்டுதல்களோ தவறுன்னு நான் குற்றம் சொல்லவரவில்லை. கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் மனதைப் பொறுத்தது. ஆனால்,அவரவர் வயது, உடல்நிலை இவற்றைக் கருத்தில்கொண்டாவது அதற்கேற்றமாதிரி வேண்டுதல்களைச் செய்யலாம் என்பதே என் எண்ணம். அறுபது வயதுக்குமேல் கிரிவலம் வர ஆசைப்பட்டு, பாதியிலேயே ஆஸ்பத்திரிக்குப்போனவர்களும் பலர் இருக்கத்தான்செய்கிறார்கள்.

இது மட்டுமல்ல, படிக்கிற மகனுக்காகப் பால்குடம் எடுக்கிறேன் என்று வேண்டிக்கொண்ட ஒரு அம்மா, வேண்டுதல் பலமுறை தவறிப்போனதால், இப்போது அதை ஈடுகட்ட மகன் தீச்சட்டியெடுக்கவேண்டுமென்று சொல்லித் திகிலூட்டிய சம்பவமும் என் நெருங்கிய உறவிலேயே நடந்த ஒன்று.

விளக்கிடுதல், விரதமிருத்தல், கல்விக்கு உதவுதல், இல்லாத சிலருக்கு அன்னதானமளித்தல், இயலாதவர்களுக்கு உதவி செய்தலென்று தனக்கும் பிறருக்கும் பயன்படக்கூடிய வழிகள் ஆயிரம் இருக்கையில், அன்பே உருவான கடவுளை ஆத்திரக்காரனாகக் காட்டி, சாமி கண்ணைக்குத்தும் என்றமாதிரியெல்லாம் பயமுறுத்துவதைப்பார்க்கையில் இவர்களெல்லாம் எப்போ மாறுவாங்க என்ற ஆதங்கம்தான் தோன்றுகிறது.

நாம் வேண்டிக்கொள்கிற வேண்டுதல்கள் நமக்கு மன திருப்தியையும் மற்றவர்களுக்கு நல்ல பலனையும் தருவதாக இருந்துவிட்டால் எத்தனை நன்றாக இருக்கும். இனியாவது கடவுளுக்கு வேண்டிக்கொள்ளுமுன் கொஞ்சம் யோசித்தால் நல்லது.

LinkWithin

Related Posts with Thumbnails