Monday, May 17, 2010

எங்கே தொலைத்தோம் நம் உடல்நலத்தை???


என்னோட குறிஞ்சி மலர்கள் கவிதை வலைப்பக்கத்தில சாதாரணமா பதிவுபோடுற அன்னிக்கு கிட்டத்தட்ட முப்பது நாப்பது பேரும், பதிவு போடாத நாட்கள்ல அஞ்சோ பத்தோபேரும்தான் வந்துபோகப் பாத்திருக்கேன். ஆனா, சமீபத்தில் எழுதின "எடைகுறைக்கும் ரகசியம்" ங்கிற கவிதையைப் போட்ட அன்னிக்கி, வந்துபோனவுங்க எண்ணிக்கை 178. ஆனா இதில, கவிதைக்காக வந்தவங்க நிச்சயமா கொஞ்சம்பேர்தான், மத்தவங்கல்லாம் தலைப்புக்காக வந்தவங்கன்னு எனக்கு சந்தேகமில்லாம தெரிஞ்சுக்கமுடிஞ்சது.

எடையைக் குறைக்கணும்கிற ஆர்வம் சமீப காலமா எல்லார்கிட்டயும் ஏற்பட்டிருக்கும் ஒரு விஷயம். உயரத்தையும் எடையையும் வச்சு கணக்குப்போட்டு, இத்தனை கிலோவைக் குறைச்சிட்டீங்கன்னா எதுவும் தொல்லையில்ல. அப்படியில்லேன்னா,அந்த வியாதி இந்த வியாதின்னு இல்லாம இன்னும் பேர்வைக்காத புதுவியாதியெல்லாம்கூட வந்துடும்னு சொல்லிக் கிலியைக் கிளப்புறாங்க பலர். அதுக்கேத்தமாதிரி, சட்டுச்சட்டுன்னு சின்னவயசிலயே அநியாயமா உயிரிழக்கும் பலரைப் பார்க்கும்போது அந்த வார்த்தைகளை உறுதிப்படுத்துவதாகவும் இருக்குது.

சமீப காலமாக ஏன் இந்த மாற்றம்? எதைத் தொலைத்ததால் உடல் எடைகூடி, நம் ஆயுள் இப்படிக் குறைகிறது? உணவுமுறையா,பழக்கவழக்கமா இல்லை இரண்டுமா? இதுதான், தற்போது எல்லாரும் தனக்குள்ளும் பிறரிடமும் கேட்கிற கேள்வியாக இருக்கிறது.

தண்ணியைக் குடிச்சாலும் தவளைமாதிரி இருக்கிற உடல்வாகுன்னும், என்னத்தைத் தின்னாலும் ஏறாத உடம்புன்னும் ரெண்டு வகை சொல்லுவாங்க நம்ம பெரியவுங்க.

பழையகாலத்துக் கதை ஒண்ணு... ஒரே வீட்டுல ரெண்டு பேருக்கு ஒரே சமயத்துல குழந்தை பிறந்துச்சாம். ஒண்ணு மகள், இன்னொண்ணு மருமக. மகளை ஓய்வா உக்கார வச்சிட்டு மருமகளை மாங்குமாங்குன்னு வேலைசெய்யச்சொல்லுவாளாம் அந்த மாமியார்.
அதுமட்டுமில்லாம தன்னோட மகளுக்கு நெய்போட்டுப் பிசைந்த சாப்பாட்டையும் மருமகளுக்கு எண்ணெய் ஊத்தின சாப்பாட்டையும் கொடுப்பாளாம். நாளாக நாளாக மகளுக்கு, உடம்பு அநியாயத்துக்குப் பெருத்துப்போயி, காய்ச்சல், ஜலதோஷம்,அங்க வலிக்குது இங்க வலிக்குதுன்னு புலம்ப, மருமகளோ உறுதியாயும் அழகாயும் இருந்தாளாம்.

மனசு பொறுக்காத மாமியார், பக்கத்துவீட்டுக்காரிகிட்டபோயி இதுக்குக் காரணமென்னன்னு கேட்டாளாம். அந்தப் பக்கத்து வீட்டம்மா ரெண்டு கைப்பிடி சாதத்தை எடுத்து ஒண்ணை நெய்போட்டும் இன்னொண்ணை நல்லெண்ணெய் போட்டும் பிசைஞ்சு வெயில்ல வச்சுதாம். நெய்யில பிசைஞ்ச சாதம் வச்ச கொஞ்ச நேரத்துல பொலபொலன்னு உதிர்ந்துபோயிடுச்சாம்.ஆனா எண்ணையில பிசைஞ்ச சாதம் கெட்டியா அப்படியே இருந்துச்சாம். இதுதான் காரணம்னு சொல்லிச்சிரிச்சாளாம் அந்தம்மா.

வேலைசெஞ்சு சூடேறுகிற உடம்பை எண்ணெயும் சேர்ந்து இன்னும் உரப்படுத்தும்னு சொல்லுவாங்க. ஆனா எளிதில் ஜீரணமாகாத நெய் மாதிரி கொழுப்புப்பொருட்களும்,உடலுழைப்பில்லாத இன்றைய வாழ்க்கைமுறையும்தான் தற்போதைய உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம்.

முன்னெல்லாம் ஆத்துல குளத்துதுல இருந்து வீட்டுக்குக் குடிக்கத் தண்ணி கொண்டுவருவாங்க. அப்புறம் தெருவுக்குத் தெரு குழாய்கள் வந்திச்சு. அப்புறம் வீட்டுக்கு வீடு. ஆனா இப்ப, பாட்டிலில் வீட்டு வாசலுக்கே வந்து சமையலறையில உட்காந்திருக்குது பாட்டில் தண்ணி. இடுப்புல ஒரு குடமும் கையில் ஒரு சின்ன வாளியுமாக அன்றைக்கு தண்ணீர் எடுத்ததுண்டு. ஆனா இன்னிக்கு, ஒண்ணரை லிட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிவைக்கச்சொன்னா, எல்லா வேலையும் நானேதான் செய்யணுமான்னு அலுத்துக்குது இன்றைய தலைமுறை.

அப்பல்லாம், இடுப்பில் குடம்சுமந்து, கொடியிடையாய் இருந்த பெண்கள், இப்ப 'பிடி'யிடையுடையவர்களாகிப்போனது காலத்தோட கொடுமைன்னுதான் சொல்லி மனசத் தேத்திக்கணும்.('பிடி'ன்னா தமிழ்ல பெண்யானைன்னு அர்த்தமாம்...தெரியுமோ? :) )

கபடி, கில்லி,கோலி விளையாட்டு, பாண்டி, பம்பரம் பட்டம்விடுறதுன்னு ஆண் பெண் வித்தியாசமில்லாம எல்லா விளையாட்டையும் விளையாடுவோம் அப்போ. ஆனா, ஃபேஸ்புக்,கம்ப்யூட்டர் கேம்ஸ், ப்ளே ஸ்டேஷன்னு உட்கார்ந்த இடத்திலேயே உறைஞ்சுகிடக்குது இன்றைய தலைமுறை.(என்னையும் சேர்த்துத்தான்...)வீட்டுக்கு ஒரு பிள்ளையாவது ஓவர் வெயிட்டா இருக்கிறது இங்கே வெளிநாடுகளில் சர்வசாதாரணம்.

இளைய தலைமுறையை விட்டுவிடலாம். சமீபத்தில் தோழியொருவர் எங்கிட்டே,
புதுசா ஃப்ரிட்ஜ் வாங்கினீங்களே என்ன மாடல்ன்னு கேட்டாங்க. ப்ராண்டையும் மாடலையும் சொன்னேன். நீங்க,என்னைமாதிரி இப்ப புதுசா வந்திருக்கிற ஃப்ரீஸர் கீழேயும் ஃப்ரிட்ஜ் மேலேயும் இருக்கிற மாடல் வாங்கியிருக்கலாம்னு சொன்னாங்க. ஏன், அதில என்ன ஸ்பெஷல்னு கேட்டேன். ஒவ்வொரு தடவையும் காய்கள் பழங்கள் எடுக்க கீழே குனியவேண்டியதிருக்காது, நிமிர்ந்து நின்னுகிட்டே ஈசியா எடுக்கலாம் அந்த மாடல்லேன்னு சொன்னாங்க.

எனக்கு என்ன பதில் சொல்லன்னே தெரியல, சிரிச்சேன். உடம்பைக் குறைக்கணும்னு ஓடவா நடக்கவான்னு ஓராயிரம் யோசனை பண்ற அவங்க, நாலைஞ்சுதடவை குனியிறதுக்கு பயப்படுவதை நினைச்சப்ப சிரிப்புத்தான் வந்தது. இப்படியிருந்தா ஏன் கூடாது உடம்பு எடை? மொத்தத்துல குனிஞ்சு நிமிர இனிவரும் தலைமுறைக்கெல்லாம் காசுதான் கொடுக்கணும்போல.

பொதுவா, உடல் ஆரோக்கியம் பற்றி நாம நிறையப் படிப்போம். ஒண்ணு ரெண்டுநாள் அதை ஒழுங்கா கடைப்பிடிப்போம். நாலைஞ்சுநாள் அதை நினைவில் வச்சிருப்போம். அப்புறம், அதை அப்படியே விட்டுடுவோம். இதுதான் நம்ம வழக்கம். இதைக் கொஞ்சம் மாற்றி, படிக்கிறதில் நமக்கு ஏற்றதை எடுத்துக்கிட்டு, கொஞ்சம் நேரம் செலவுசெய்து, அதை விடாம கடைப்பிடிச்சா எதிர்வரும் நிறைய பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வுகிடைக்கும்.

'நடந்தா நாடே உறவு, படுத்தா பாயும் பகை'ன்னு சொல்லுவாங்க. அதனால வேறெதுவும் முடியலேன்னாலும் தினமும் கொஞ்சநேரம் நடைப்பயிற்சி மட்டுமாவது செய்யலாம்.முயற்சியும் பயிற்சியும் இருந்தா கட்டாயம் வாழ்வில் உயரலாம். அதனால, வாங்க, நடக்கலாம் :)

13 comments:

 1. நம்ம பழைய வாழ்க்கை முறையை தொலைத்ததன் விளைவே இது

  ReplyDelete
 2. சூப்பர் போஸ்டுப்பா..

  ReplyDelete
 3. பயனுள்ள பதிவு

  ReplyDelete
 4. \எனக்கு என்ன பதில் சொல்லன்னே தெரியல, சிரிச்சேன். உடம்பைக் குறைக்கணும்னு ஓடவா நடக்கவான்னு ஓராயிரம் யோசனை பண்ற அவங்க, நாலைஞ்சுதடவை குனியிறதுக்கு பயப்படுவதை நினைச்சப்ப சிரிப்புத்தான் வந்தது.\

  Makes a lot of sense. நானும் இப்படித்தான், உணவு விஷயங்கள்ல. கொஞ்சம் காசு அதிகமானாலும் ஃப்ரோசன் பொருட்களும் பதப்படுத்தப்பட்ட பாலும் வாங்குறதில்லை. தேவையில்லாத நொறுக்குத்தீனி, சாஸ், ஜாம், ஸ்ப்ரெட் வகையறாக்கள்ல செலவழிக்கிற காச இப்படி செலவழிச்சிட்டு போலாமே!

  ReplyDelete
 5. //'பிடி'ன்னா தமிழ்ல பெண்யானைன்னு அர்த்தமாம் //

  அப்படியா!!

  //மத்தவங்கல்லாம் தலைப்புக்காக வந்தவங்கன்னு//

  ஒரு பதிவ எழுதறத விட, அதுக்குத் தலைப்பு வைக்கீறதுதான் கஷ்டமான விஷயம் தெரியுமா?!! ;-))

  //ஆனா இன்னிக்கு, ஒண்ணரை லிட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிவைக்கச்சொன்னா, எல்லா வேலையும் நானேதான் செய்யணுமான்னு அலுத்துக்குது இன்றைய தலைமுறை.//

  இதேதான் இங்கயும்!! நான் குடத்துல தண்ணி பிடிச்ச கதயச் சொன்னா, ஆ..னு வாயப்பிளந்து கேட்டுகிட்டாலும், செய்ய கஷ்டமாத்தான் இருக்கு!!

  நல்ல பதிவு!!

  ReplyDelete
 6. //LK said...
  நம்ம பழைய வாழ்க்கை முறையை தொலைத்ததன் விளைவே இது//

  அதேதான் எல் கே...

  வருகைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 7. //அமைதிச்சாரல் said...
  சூப்பர் போஸ்டுப்பா..//

  வாங்க அமைதிச்சாரல்...

  நன்றிப்பா :)

  ReplyDelete
 8. //VELU.G said...
  பயனுள்ள பதிவு//

  நன்றி வேலு ஜி!

  ReplyDelete
 9. //நாஸியா said...

  Makes a lot of sense. நானும் இப்படித்தான், உணவு விஷயங்கள்ல. கொஞ்சம் காசு அதிகமானாலும் ஃப்ரோசன் பொருட்களும் பதப்படுத்தப்பட்ட பாலும் வாங்குறதில்லை. தேவையில்லாத நொறுக்குத்தீனி, சாஸ், ஜாம், ஸ்ப்ரெட் வகையறாக்கள்ல செலவழிக்கிற காச இப்படி செலவழிச்சிட்டு போலாமே!//

  சரிதான் நாஸியா...

  வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 10. ஹுஸைனம்மா said...


  //ஒரு பதிவ எழுதறத விட, அதுக்குத் தலைப்பு வைக்கீறதுதான் கஷ்டமான விஷயம் தெரியுமா?!! ;-))//

  நிஜம்தான் ஹுசைனம்மா :)
  நானும் அதை அனுபவத்தில் புரிஞ்சுகிட்டேன்.

  //ஆனா இன்னிக்கு, ஒண்ணரை லிட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பிவைக்கச்சொன்னா, எல்லா வேலையும் நானேதான் செய்யணுமான்னு அலுத்துக்குது இன்றைய தலைமுறை.//

  இதேதான் இங்கயும்!! நான் குடத்துல தண்ணி பிடிச்ச கதயச் சொன்னா, ஆ..னு வாயப்பிளந்து கேட்டுகிட்டாலும், செய்ய கஷ்டமாத்தான் இருக்கு!!

  எங்க வீட்லதான் இப்படின்னு நினைச்சேன். மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கு :)

  //நல்ல பதிவு!!//

  நன்றி ஹுசைனம்மா.

  ReplyDelete
 11. நல்லா எழுதியிருக்கீங்க...:-)

  ReplyDelete
 12. நியாயமான பார்வை ..
  எனக்கு தெரிஞ்ச ஒரு பெரிய மனிதர் உடல் எடையை குறைக்கணும்னு சொன்னார் ,நானும் டயட் ,பயிர்ச்சி எல்லாம் சொன்னேன் ,எனக்கு அதுகெல்லாம் நேரமில்லைங்க ஏதாவது மாத்தர மருந்து இருந்தா கொடுங்கன்னு சொன்னாரு .:)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails