Wednesday, August 25, 2010

தலையணையோ தலையணை!

பட்டுத் தலையணையோ பஞ்சு மெத்தையோ வேண்டாம். கட்டாந்தரையில் படுத்தாலும் சட்டுன்னு தூங்கிருவார் தாத்தா. ஆனா, இலவம் பஞ்சுத் தலையணை, புதையுமளவுக்கு மெத்தை இருந்தாலும் தூக்கம் வராம ராத்திரியில குறுக்கும் நெடுக்குமா நடந்து கிலியைக் கிளப்புவாங்க பாட்டி.

பழகின இடம், பழக்கமான தலையணை,அளவான வெளிச்சமில்லேன்னா எனக்குத் தூக்கம் வராதுன்னு சொல்லி, கல்லூரியிலிருந்து கொடைக்கானல் டூர் போனப்போ எங்களுக்கெல்லாம் காவல்மாதிரி கொட்டக்கொட்ட முழிச்சிட்டே இருந்தா என் தோழி ஒருத்தி.

என் தோழியின் முதல் குழந்தைக்கு ஒண்ணரை வயசிருக்கும்போதே, அவளுக்கு அடுத்த குழந்தையும் பிறந்துவிட்டது. இரண்டாவது குழந்தையைப் பார்த்ததிலிருந்து ஏங்கிப்போன மூத்த குழந்தை, தன்னுடைய தலையணையே கதியென்று ஆகிப்போனது. எப்பவும் அந்தச் சின்னத் தலையணையைக் கிட்டவே வைத்திருக்கும். உறக்கம் வந்தால் தம்பியைத் தூக்கிவைத்திருக்கும் அவங்கம்மாவை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, வாயில் ஒற்றை விரலுடன் அந்தத் தலையணையைக் கட்டிக்கொண்டு உறங்கிப்போகும்.பார்க்கப் பாவமாக இருக்கும். இதைப் பார்த்து, குழந்தையைக் கவனித்துக்கொள்ள ஆளில்லாமலிருந்த என் தோழியும் கண்ணீர் விடுவாள்.நாளாக நாளாக அந்தத் தலையணை இல்லாமல் தூங்கவேமுடியாது என்று குழந்தை அடம்பிடிக்குமளவுக்கு ஆகிவிட்டது. ஊருக்கு வந்தால் அந்தத் தலையணையின் உறையைமட்டும் மறக்காம எடுத்து வருவாள் அவள். போகிற இடத்திலெல்லாம், அந்த உறைக்குப் பொருந்துவதுமாதிரி மகளுக்கு இன்னொரு சின்னத் தலையணையைத் தயார்செய்து கொடுப்பாள்.

குழந்தைதான் இப்படின்னா, அவங்க தாத்தா அதைவிட மோசமாம். படுக்கும்போது தலைக்கு மொத்தமாக நாலு தலையணை வேணுமாம். அதையும்,அடுக்கிவைப்பதிலும் ஒரு வரிசை வச்சுக்குவாங்களாம். யாராவது மாத்தி அடுக்கிட்டா, மறுபடியும் எழுந்து உட்காந்து அடுக்கிட்டுதான் படுத்துக்குவாங்கன்னு சொல்லுவா. வீட்டுக்கு எத்தனை விருந்தாளிகள் வந்தாலும் யாரு தலையணையில்லாம படுத்தாலும் அவங்களுக்கு நாலு தலையணை வேணும். அதில் அவங்க படுத்திருக்கிறதைப் பார்த்தா படுக்கையில சரிஞ்சு உட்கார்ந்திருக்கிறமாதிரியே இருக்கும்னு சொல்லுவாள் அவள்.

தலையணைக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இல்லேன்னாலும் தலையணையைக் கண்டாலே படுத்துக்கணும்னு தோன்றுவது எல்லோருக்கும் இயல்புதான். காலுக்கு ஒரு தலையணை கைக்கு ஒரு தலையணைகூட வச்சுக்குவாங்க சிலர்.

உடம்பில் ஏற்படும் வலிகளைத் தீர்க்க, தலையணைகள் ரொம்பவே உதவுதுன்னு சொல்லலாம். தோள்பட்டை வலியிருக்கிறவங்க, எந்தத் தோள்பட்டை வலிக்கிறதோ அந்தப்பக்கம் மெல்லிய தலையணையையோ, அல்லது மடித்த போர்வையொன்றையோ கைக்குக்கீழே வச்சுக்கிட்டா தோள்பட்டை வலிகுறையும்னு அனுபவப்பட்டவங்க சொல்லுவாங்க.

அதேமாதிரி கழுத்து வலியுள்ளவங்க அதிகமான உயரமில்லாத தலையணையை வச்சுக்கலாம். அதிலும் கீழேயிருக்கிறமாதிரியான தலையணை, கழுத்துவலியுள்ளவங்களுக்கு ரொம்ப நல்லது. இந்தத் தலையணையில், நேராகப் படுக்கவும் ஒருக்களித்துப்படுக்கவும் இரண்டு பக்கமும் வித்தியாசமான உயரத்தோடு இருக்கும்.
இது நம்ம ஊரில் கிடைக்குதான்னு தெரியல, ஆனா இங்கெல்லாம் கிடைக்கிறது.

முதுகுவலி, இடுப்புவலியிருக்கிறவங்க, காலுக்கும் ஒரு தலையணை வச்சுக்கலாம். காலுக்கடியில் தலையணை வைத்துக்கொள்வதால, முதுக்குப்பகுதி நன்றாக படுக்கையில் பதியும். அதனால் முதுகுவலியும் குறையும் என்கிறார்கள்.நாம விதவிதமாத் தலையணையைப் பயன்படுத்துறமாதிரி, விளையாட்டாகத் தலையணையால் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிறதைத் திருவிழாவாகவே கொண்டாடுறாங்க சிலநாட்டினர். ஏப்ரல் மாதம் மூன்றாம் நாள், இந்தத் தலையணைச் சண்டைத் திருவிழாவைக் கொண்டாடுகிறார்களாம்.

இந்தத்திருவிழாவைப்பற்றி இன்னும் தெரிஞ்சுக்கணும்ன்னா
இங்கே
பாருங்க.கடைசியா ஒரு விஷயம்...

பள்ளியில் படிக்கிறப்ப தலையில்லா முண்டம் ஒண்ணு ஊருக்குள்ள உலாவுதுன்னு கதைகட்டிவிட்டிருந்தாங்க. எல்லா வீட்டு வாசலிலும் வேப்பிலைக் கொத்துகள் சொருகியிருக்க, எல்லாரும் 'அங்கே வந்தது, இங்கே வந்தது' ன்னு அதைப்பத்தியே பேசினாங்க.

எங்க வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்த என் தங்கை ராத்திரி தூக்கத்தில் என்னை எழுப்பி, "அக்கா, இப்ப, தலையில்லாமுண்டம் நம்ம வீட்டுக்கு வந்தா, நம்மகிட்ட எதை வேணும்னாலும் பிடுங்கிக்கலாம்.ஆனா, ஒண்ணே ஒண்ணை மட்டும் அதால பயன்படுத்தவேமுடியாது. அது என்னன்னு சொல்லு?" என்று கேட்டு, தலையணைன்னு பதிலையும் சொல்லி, என் கிட்ட தலையணையாலேயே அடியும் வாங்கினா.
இன்னிக்கி நினைச்சாலும் சிரிப்பு வருது :)

12 comments:

 1. நல்ல நினைவுகள். அந்த தலையில்லாத முண்டம் கொஞ்ச வருஷம் முன்னே இங்கியும் உலாத்திக்கிட்டு இருந்தது :-))

  ReplyDelete
 2. தலகாணி வச்சும் ஒரு பதிவு எழுதலாமான்னு ஆச்சர்யமா இருக்கு. ஆனா அருமையா இருக்கு.

  சில சிறு விஷயங்கள் - அதன் முக்கியத்துவத்தை அவை இல்லாத போதுதான் அறிவோம். அந்தவகையில் இந்தத் தலையணையும் ஒன்று. வீட்டை விட்டு வெளியே தங்க நேர்ந்தால் நமக்கு வாகான தலையணை இல்லாமல் தூக்கம் வராது சிரமப்படுவதுமுண்டு!!

  தலையில்லா முண்டம் - நான் பள்ளி படிக்கும்போது ஃபேமஸ் புரளி!! அதவச்சும் ஒரு ஜோக்... குட்!!

  ReplyDelete
 3. அப்போ இப்ப தான் தூங்கி முழிச்சீங்களா அடப்பாவமே..!!

  ((முந்தைய பதிவுக்கும் இதுக்கும் உள்ள இடைவெளி))

  ReplyDelete
 4. "தலையணை மந்திரம்"என்ற
  பயன்பாட்டை விட்டுவிட்டீர்களே

  ReplyDelete
 5. சுந்தரா,
  தலையணையில் இத்தனை விஷயங்கள்.
  பதிவு அருமையா இருக்கு!

  ReplyDelete
 6. //உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

  மிக அருமை............//

  நன்றி உலவு!

  ReplyDelete
 7. //அமைதிச்சாரல் said...

  நல்ல நினைவுகள். அந்த தலையில்லாத முண்டம் கொஞ்ச வருஷம் முன்னே இங்கியும் உலாத்திக்கிட்டு இருந்தது :-))//

  வாங்க சாரல் :)

  அப்பப்ப இதுமாதிரி எதையாவது அவுத்துவிடுவாங்க நம்ம மக்கள்.

  ReplyDelete
 8. ஹுஸைனம்மா said...

  //தலையில்லா முண்டம் - நான் பள்ளி படிக்கும்போது ஃபேமஸ் புரளி!! அதவச்சும் ஒரு ஜோக்... குட்!!//

  வாங்க ஹுசைனம்மா :)

  அந்த மாதிரி புரளிகள்கூட சுவாரஸ்யம்தான் இல்லையா...

  ReplyDelete
 9. //ஜெய்லானி said...

  அப்போ இப்ப தான் தூங்கி முழிச்சீங்களா அடப்பாவமே..!!

  ((முந்தைய பதிவுக்கும் இதுக்கும் உள்ள இடைவெளி))//

  வாங்க ஜெய்லானி :)

  தூக்கம் காரணமில்ல, ரொம்ப தூரம் கடந்து நம்ம ஊருக்குப்போனதுதான் காரணம்...நன்றி!

  ReplyDelete
 10. //VijayaRaj J.P said...

  "தலையணை மந்திரம்"என்ற
  பயன்பாட்டை விட்டுவிட்டீர்களே//

  அதை வச்சு பின்னால தனிப்பதிவே போடலாமோ என்ற எண்ணத்தில்தான் எழுதல :)

  வருகைக்கு ரொம்ப நன்றி!

  ReplyDelete
 11. //அம்பிகா said...

  சுந்தரா,
  தலையணையில் இத்தனை விஷயங்கள்.
  பதிவு அருமையா இருக்கு!//

  வாங்க அம்பிகா :)

  இன்னும் நிறைய விஷயங்கள் இருக்குன்னு அண்ணன் சொல்லியிருக்காங்க பாருங்க :)

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails