Thursday, September 30, 2010

பதின்ம வயதுப் பிரச்சனைகள்!ஆறேழு மாசமிருக்கும்...மேஜை இழுப்பறைக்குள் எதையோ தேடும்போது, உள்ளே உறையில்லாமல் கிடந்த பிளேடு ஒன்று கையைக்கிழித்துவிட,விரலிலிருந்து ரத்தம்சொட்டச்சொட்ட வந்துநின்றாள் என் மகள். ரத்தத்தைப் பார்த்ததுமே பதறிப்போய் என்னாச்சு, ஏதாச்சுன்னு விசாரிச்சு,வேலைபார்க்கும்போது கவனமா இருக்கணும் என்று அறிவுரை சொல்லி, அவளுக்கு மருந்துபோட்டுவிட்டேன்.

அதற்கு அவள், அம்மா, விரல்ல லேசா வெட்டுப்பட்டதுக்கே இப்படித் துடிச்சுப்போறியே, எங்க ஸ்கூல்ல, சில பிள்ளைங்க கையில,கால்லயெல்லாம் வேணும்னே பிளேடால கிழிச்சி வச்சிருப்பாங்க என்று சொன்னதும், பதறிப்போய், ஏன் எதுக்காகன்னு அவளிடம் விசாரிக்க ஆரம்பிச்சேன். சில பொண்ணுங்க நினைச்ச இடத்தில கிழிச்சிவச்சிருப்பாங்க...சிலர், அவங்க கையில ஏதாவது இனிஷியல் போட்டுவச்சிருப்பாங்கன்னு அவள் சொல்ல, சரிதான்,ஏதோ காதல் விஷயமாயிருக்கும்போல...என்று நினைச்சு, அதுக்குமேல எதுவும் கேட்காம விட்டுட்டேன்.

ஆனா, இன்றைக்கு நாளிதழில் வந்த அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு, மறுபடியும் அவ கிட்ட அதைப்பற்றி விசாரிச்சேன். இப்படி அங்கங்கே வெட்டிக்கொண்டு, அதை அடுத்தவங்க கவனிச்சுக் கேட்டா, எனக்கு டிப்ரெஷன்...அதான் இப்படிச் செய்கிறேன் என்று அவங்க சொல்லுவாங்கம்மா என்றதும், திக்கென்றுதான் இருந்தது எனக்கு. பத்துப்பதினைந்து வயசுக்குள் அப்படியென்னதான் டிப்ரெஷனோ என்று யோசிக்கத்தோன்றியது.

நாளிதழில் நான் படிச்ச அந்த விஷயம், பதின்ம வயசுப் பிள்ளைகள் வைத்திருக்கிற பெற்றோர் அனைவரும் யோசிக்கவேண்டிய விஷயம். பதின்ம வயசின் மன அழுத்தத்தைச் சமாளிக்கமுடியாமல், அநேக ஆண்பிள்ளைகள் தங்களைத் தாங்களே நெருப்பால் சுட்டுக்கொள்வதாகவும், பெண்குழந்தைகள் இதுமாதிரி பிளேடு கத்திரி போன்ற கூரான ஆயுதங்களால் உடம்பைக் கீறிக்கொள்கிறார்கள் என்றும் சொல்லியிருக்காங்க மனநலமருத்துவரான டாக்டர். ரோகி மெக்கார்த்தி.

தாயின் பிரிவு, தந்தையின் கவனிப்பின்மை இப்படிப்பட்ட காரணங்களால் பதின்ம வயசுப்பிள்ளைகள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் விவாகரத்துஆகிப் பிரிந்துவிட, அந்தப் பதினைந்து வயதுப்பெண்,தன்னைத்தானே உடம்பு முழுவதும் கீறிக்கொண்டிருக்கிறாள்.குறிப்பாக, இந்த வயசுக்காரங்கதான் என்றில்லாமல் இளைஞர்களில் பலர் இதுமாதிரி தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வதன்மூலம், மற்றவர்களின் கவனத்தைக் கவரவும் தன்னுடைய மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளவும் முயல்கிறார்கள் என்றும் சொல்லியிருக்காங்க அந்த மருத்துவர்.

சமீபத்தில்,இலண்டன் ராயல் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் நடத்திய ஒரு ஆய்வின்படி, இளம்வயதினரில் பத்தில் ஒருவர், இதுமாதிரி, தன்னைத்தானே காயப்படுத்தித் தங்களை வருத்திக்கொள்ளுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது என்கிறார்கள்.

இளம்வயதில், பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் குழந்தைகள் பெரும்பான்மையினர் இதுமாதிரி தன்னைத்தானே வருத்திகொள்வதுண்டு என்றும் சொல்லப்படுகிறது.
வெட்டிக்கொள்வது, சுட்டுக்கொள்வதுமட்டுமன்றி, சிலநேரங்களில் காயங்கள் பெரிதாகிப்போய் தற்கொலையில்கூட முடிவடைந்துவிடுகிறதென்றும் சொல்லியிருக்கிறார் அந்த மனநலமருத்துவர்.

பெற்றவர்கள் ஓடிஓடி உழைப்பதும், ஓடாகத்தேய்வதும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத்தான். முன்னெல்லாம், கூட்டுக்குடும்பத்தில்,அப்பா அம்மா கவனிக்கலேன்னாலும், பாட்டி, தாத்தாவோ அல்லது மற்ற பெரியவர்களோ பிள்ளைகளிடம் சின்னதாய் மாற்றம் தெரிஞ்சாலும் துருவித்துருவி விசாரிப்பாங்க.

ஆனா, இன்றைய காலகட்டத்தில் குறுகிப்போன குடும்பங்கள், இறுகிப்போன மனசுகள்...அதனால் பெருகியிருப்பதோ இதுமாதிரியான பிரச்சனைகள். அதனால்,
அதிகமா ஒண்ணும் வேண்டாம். பிள்ளைங்ககிட்ட, அடிக்கடி மனசுவிட்டுப் பேசணும். பருவ வயதில் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன அழுத்தங்களையும், அவர்களால் எதிர்கொள்ள இயலாத பிரச்சனைகளையும், பெற்றோர்கள் கேட்டுத்தெரிந்துகொண்டு,அவற்றைத் தீர்த்துவைத்து, பிள்ளைகளின் மன அழுத்தங்களுக்கு வடிகாலாகவும் இருக்கவேண்டியது மிகமிக அவசியம்.


Tuesday, September 28, 2010

அமெரிக்கத் தபால்தலையில் இந்தியக் கடவுள்கள்!

இதுவரைக்கும் மன்னர்கள்,மந்திரிகள்,தலைவர்கள்,கல்வியாளர்கள்,விளையாட்டு வீரர்கள்,சாதனையாளர்களென்று பலரின் உருவத்துடன் தபால் தலைகள் வெளியானதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் புதிதாக,அமெரிக்காவில் இந்துக் கடவுள்களின் உருவம் பதித்த ஏழு தபால்தலைகள் வெளியிடப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் படித்தபோது வியப்பாகத்தான் இருந்தது.

சந்தேகமிருந்தா இங்கே பாருங்க. ஆனாலும் இது உண்மைன்னு என்னால நம்பமுடியல.

இதோ அந்தத் தபால்தலைகள்...விபரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க, இது உண்மைதானா?Sunday, September 26, 2010

தீப்பெட்டிப் பட்டும், திருமதி ஒபாமாவும்!


அவுரங்கசீப் மன்னனின் ஆட்சிக்காலத்தில் ஒருநாள், மன்னனின் மகள் ஜெபுன்னிஸா, மஸ்லின் துணியினாலான ஒரு ஆடையைத் தன் உடம்பில் எட்டுச் சுற்றாகச் சுற்றிக் கட்டிக்கொண்டு, அரசவைக்கு வந்தாளாம். அதைக் கண்ட மன்னன் அவுரங்கசீப், உடல்தெரியும்படி ஆடை உடுத்திக்கொண்டு, அரசசபைக்கு வந்திருக்கிறாயே என்று மகளைக் கடிந்து கொண்டாராம்.

மஸ்லின் துணியின் மென்மையைக் குறிப்பிடுவதற்காக இந்தக்கதையைச் செவிவழியாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இதுமாதிரி, அந்தக்காலத்துச் சீனப் பட்டுக்களை, ஒரு சிறிய தீப்பெட்டிக்குள் மடித்துவைத்துவிடலாம் என்றும் மோதிரத்துக்குள் சுருட்டி வைக்கலாமென்றும் சொல்லக்கேட்டதுண்டு. மென்மையான ஆடைகளுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல மவுசு உண்டு.

கர்நாடக மாநிலம், பெங்களூரின் புறநகர்ப்பகுதியில் வசிக்கும், குரும் நாராயணப்பாவுக்கு வயது 69. அவர் மனைவி கமலம்மாவுக்கு வயது 67. இவங்க ரெண்டுபேரும் சேர்ந்து அமெரிக்காவின் முதல் பெண்மணியான மிஷேல் ஒபாமாவுக்கு,தங்க சரிகையில் கோபுர டிசைன் இழையோட, 70 கிராம் (!!!)எடையில் ஒரு பட்டுப்புடவையைத் தயார்செஞ்சிருக்காங்க. இதுமட்டுமில்லாம அதிபர் ஒபாமாவுக்காக 30 கிராம் எடையுள்ள பட்டு ஸ்கார்ஃப்(scarf) ஒண்ணும் தயாரிச்சிருக்காங்க இந்த தம்பதிகள். இந்த ஸ்கார்ஃப் மிக எளிதாக ஒரு தீப்பெட்டிக்குள் அடங்கிவிடுமாம்.

வரும் நவம்பர் மாதத்தில் இந்தியா வரவிருக்கும் அமெரிக்க அதிபருக்கும் அவரது மனைவிக்கும் பரிசளிப்பதற்காகவே இந்தப் பட்டுப் புடவையையும்,ஸ்கார்ஃபையும் தயாரித்திருப்பதாகத் திரு நாராயணப்பா தெரிவிக்க, கர்நாடக அரசின் பட்டு நிறுவனம், அதிபருடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வதாக அவருக்கு உறுதியளித்திருக்கிறது.

சாதாரணமாகத் தயாரிக்கப்படும் ஆறரை மீட்டர் பட்டுப்புடவையொன்றின் எடை சுமாராக 600 கிராமிலிருந்து ஒரு கிலோ வரை இருக்குமாம். ஆனால்,மிக மென்மையான இழைகளைக்கொண்டு, நுண்ணிய கோபுர வேலைப்பாடுகளுடன் கூடிய இந்தப் பட்டினைத் தயாரித்ததற்கு, இந்த வயதிலும் இறைவன் கொடுத்திருக்கும் தெளிவான கண்பார்வைதான் காரணம் என்று சொல்லியிருக்கிறார் திரு நாராயணப்பா.

தன் பட்டு நெசவுத் திறமைக்காக, பல மாநில, தேசிய அளவிலான விருதுகளைப்பெற்றுள்ள திரு. நாராயணப்பா, 2000 மாவது ஆண்டில், ஆறரை மீட்டர் நீளமும், 44 அங்குல அகலமும் கொண்ட 35 கிராம் எடையுள்ள பட்டுச்சேலையைத் தயாரித்து சாதனைபடைத்திருக்கிறார். இதுவும் தீப்பெட்டிக்குள் அடங்கக்கூடிய அளவில் மிக மென்மையாகத் தயாரிக்கப்பட்டதாம்.

Saturday, September 25, 2010

மாத்தி யோசிக்கணும்!கண்பார்வையில்லாத ஒரு சிறுவன், "எனக்கு ரெண்டு கண்ணும் தெரியாது...உதவி செய்யுங்க"ன்னு ஒரு பலகையில் எழுதிப் பக்கத்தில் வச்சிட்டு,பிச்சையெடுத்துகிட்டிருந்தான். காலுக்குப் பக்கத்திலிருந்த அவனுடைய தொப்பியில், ஒன்றிரண்டு சில்லரை நாணயங்கள் மட்டுமே கிடந்தன.

அப்ப, அங்கே வந்த ஒரு மனிதன், எழுதிவச்சிருந்த பலகையையும்,கண்ணில்லாத அந்தச் சிறுவனையும் பார்த்தான். தன்னிடமிருந்த சில நாணயங்களை அந்தப் பையனின் தொப்பியில் போட்டுவிட்டு, அந்தப் பலகையிலிருந்த வாசகங்களை அழிச்சிட்டு, வேறு வாக்கியத்தை எழுதிவச்சிட்டுப் போனான்.

கொஞ்ச நேரத்திலேயே சிறுவனின் தொப்பி நிறையுமளவுக்குக் காசு சேர்ந்துவிட்டது. கடந்துபோன எல்லாரும் அந்த வாக்கியத்தைப் பாத்துட்டு, தன்னாலியன்ற சில்லரையைப் போட்டுடுப் போனாங்க.

மாலையில், பலகையில் மாத்தி எழுதிவச்சிட்டுப்போன அந்த மனிதன், என்னதான் நடந்திருக்கும்னு பார்க்க ஆர்வத்தோட வந்தான். நிறைஞ்சிருந்த தொப்பியைப் பார்த்து சந்தோஷமாயிருந்தது அவனுக்கு.அவனது காலடிச் சத்தத்தை வச்சே, காலையில் வந்து பலகையில் ஏதோ மாத்தி எழுதிவைத்த மனிதன்தான் அவன்னு கண்டுபிடிச்சிட்டான் அந்த சிறுவன்.

ஐயா,பலகையிலிருந்ததை அழிச்சு எழுதினது நீங்கதானே? நீங்க என்ன எழுதி வச்சீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமான்னு கேட்டான். அதற்கு அந்த மனிதன் சொன்னான்,நீ எழுதியிருந்ததையே நான் கொஞ்சம் வித்தியாசமா எழுதி வச்சேன். அது என்னன்னா, "இன்றைய நாள் மிகவும் அழகானது.ஆனால்,அதை என் கண்களால் காணமுடியாது" ன்னு எழுதினேன் என்று சொன்னானாம்.

இரண்டுக்குமே அர்த்தம் ஒண்ணுதான்னாலும், இரண்டாவது எழுதப்பட்ட வாக்கியம், பார்க்கிற ஒவ்வொருவரிடத்திலும், கிடைத்திருக்கிற இன்றைய நாளை நல்லபடியாக அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்தையும், அதை அனுபவிக்கமுடியாத அந்தச் சிறுவன்மேல் இயல்பாகவே ஒரு இரக்கத்தை உண்டுபண்ணுவதாகவும் இருக்கிறதல்லவா?

இதிலிருந்து நாம தெரிஞ்சிக்கவேண்டிய ரெண்டு விஷயம் என்னன்னா...

ஒண்ணு, புதுமையா சிந்திக்கணும்.

இன்னொண்ணு, அதை சிறப்பான முறையில சொல்லத்தெரியணும்.

ரெண்டும் தெரிஞ்சிட்டா, வெற்றி நம் காலடியில்தான்.


Friday, September 24, 2010

மைதா முறுக்கு

கைமுறுக்கு,அச்சு முறுக்கு, தேன்குழல்ன்னு எத்தனையோ வகை சாப்பிட்டிருப்பீங்க...ஆனா, அத்தனையிலும் எளிதானது இந்த மைதா முறுக்குதாங்க. ஒருமுறை செய்து ருசிபார்த்தா அப்புறம் உங்க அடுப்படியில் அடிக்கடி மைதாமாவு காலியாகும்.

மைதா முறுக்கு செய்யத் தேவையான பொருட்கள்

மைதா மாவு - 1/4 கிலோ

எள் - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை

மைதாவை மெல்லிய துணியில் கட்டி, ஆவியில் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்து ஆறிய மைதாவை உதிர்த்துவிட்டு, உப்பு கலந்த நீர், சீரகம், எள் சேர்த்து கெட்டியாக, முறுக்கு அச்சில் பிழியும் பக்குவத்தில் பிசைந்துகொள்ளவும். காரம் தேவையென்றால் சிறிது காரப்பொடி சேர்த்துக்கொள்ளலாம்.

பிசைந்த மாவை, சிறு சிறு தட்டுகளில் பிழிந்து,அதனை எண்ணெயில் இட்டு வேகவிடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும். சுவையான, எளிதான மைதா முறுக்கு தயார்.

Tuesday, September 21, 2010

அம்மா நமக்கு...அப்பா அவங்களுக்கு!மகனோடயும் பேரன்களோடயும் ஃபிரான்ஸுக்குப் போறியாமே...பிள்ளைங்க, பேரன்னு வந்துட்டா, பொம்பளைகளுக்குப் புருஷனெல்லாம் ரெண்டாம்பட்சமாயிடுது...எங்கிட்ட நீ ஒரு வார்த்தைகூடக் கேட்கல பாத்தியா ... அடுப்படியிலிருந்த மனைவியிடம் அடிக்குரலில் கேட்டார் பழனிச்சாமி.

அவரை மெள்ள நிமிர்ந்துபார்த்த அவரோட மனைவி ராஜம்மா, "பள்ளிக்கூடத்து வாத்தியாராயிருந்து ரிட்டையர்டும் ஆயாச்சு...நமக்கும் கல்யாணமாகி நாப்பது வருஷம் ஆகப்போகுது.  ஆனா,இன்னும் சின்னப்புள்ளையாவே இருக்கீங்க...பேரன் சொன்னதை அப்படியே நம்பிட்டு எங்கிட்ட வந்து கேள்வி கேக்கிறீங்க...சரி, விபரம் என்னன்னு எப்படியும் இன்னிக்குள்ள உங்களுக்குப் புரிஞ்சிரும்... அதுக்குள்ள, மாடியில மழைத்தண்ணி இறங்காம அடைச்சி நிக்குதுன்னு நெனைக்கிறேன். அதைக்கொஞ்சம் பாருங்க..." என்றபடி மிச்சப் பாத்திரங்களையும் மடமடவென்று விளக்கிப்போட்டாள் அவர் மனைவி.

கேள்விகள் மனசில் கனத்திருக்க, மெதுவாய் மாடிப்படியேறி மனைவி சொன்ன வேலையைக் கவனிக்கப்போனார் பழனிச்சாமி. மாடியில், மகனின் அறைக்குள்ளிருந்து அதட்டலாய்க் கேட்டது மருமகளின் குரல்.

"அப்போ, இப்பவே, எனக்கு வீட்டுவேலைக்கு ஒரு ஆளைப் பாருங்க... உங்க பையனையும் பாத்துக்கிட்டு, சமையல், வீட்டுவேலைன்னு அல்லாடமுடியாது எனக்கு"

"மெள்ளப் பேசு சுசி...வேலைக்கு ஆள் கூட்டிப்போறது ஒண்ணும் சாதாரண விஷயமில்ல...விசா செலவு, மாசச்சம்பளம், அவங்களுக்கான மத்த செலவுகள்னு ஏகப்பட்ட செலவாயிரும்... அதுக்கு, எங்கம்மா சொன்ன மாதிரியே அப்பாவையும் சேர்த்துக் கூடக் கூட்டிட்டுப்போயிரலாம்" குரலை இறக்கிப்பேசினான் குமரவேலு, வாத்தியாரின் மகன்.

"ஓ...அவங்க ரெண்டு பேரும் வந்தா மட்டும் செலவு ஆகாதா? அதுலயும் உங்கப்பாவுக்கு சர்க்கரை வியாதி. அடிக்கடி ஆஸ்துமா அட்டாக் வேற... ஃபிரான்ஸில இருக்கிற குளிருக்கு, அவருக்கு மருத்துவம் பாக்கிறதுலயே நம்ம காசெல்லாம் காலியாயிரும்" 'சுள்'ளென்று விழுந்தாள் மருமகள்.

ஆனா, அப்பாவை விட்டுட்டு வரமாட்டேன்னு அம்மா திட்டவட்டமா சொல்லிட்டாங்களே...அப்ப என்னதான் பண்றது?

உங்க தங்கச்சியும் இதே ஊர்லதானே இருக்காங்க...சொத்துல மட்டும் மகளுக்கும் பங்கு உண்டுன்னு சொல்றாங்கல்ல, அதேமாதிரி, சுமையையும் அவங்க கொஞ்சம் பகிர்ந்துக்கட்டுமே...ஒரு ரெண்டுவருஷத்துக்கு,அவங்க உங்கப்பாவைப் பார்த்துக்கட்டும். நீங்க, உங்கம்மாவை எப்படியாவது பேசி சரிக்கட்டிக் கூப்பிட்டுவரப்பாருங்க...

"அம்மாவைப்பத்தி உனக்குத்தெரியாது சுசி...அவங்க எப்படியும் அப்பாவை விட்டுட்டு வரமாட்டாங்க. பிள்ளையையும் பார்த்துகிட்டு வேலையையும் கவனிக்கக் கஷ்டம்னா, பிள்ளைகள் வளர்ற வரைக்கும் உன் மனைவியையும் குழந்தைகளையும் இங்க விட்டுட்டுப் போ"ன்னு சொல்றாங்க அவங்க...

என்னது? நானும் பிள்ளைகளும் இங்க தனியா இருக்கணுமா?

தனியா இல்ல சுசி...அப்பா அம்மாகூடத்தான்...

அப்போ, நீங்களும் உங்கம்மா சொன்னதைக்கேட்டு எங்களை இங்க கழட்டி விட்டுட்டுப்போகலாம்னு நினைக்கிறீங்க...இல்லே?

ஐயோ, இல்ல சுசி... அம்மா சொன்னதைத்தான் நான் சொல்றேன்...

ஆனாலும் உங்கம்மாவுக்கு இந்த புத்தி கூடாதுங்க. உங்களை அங்க தனியா அனுப்பிட்டு, நானும் புள்ளைங்களும் இவங்களோட தொணதொணப்பைக் கேட்டுக்கிட்டு, இங்க இருக்கணுமோ? நல்லாத்தான் திட்டம்போடுறாங்க, நம்ம ரெண்டுபேரையும் பிரிக்கிறதுக்கு.

பெரிய வார்த்தையெல்லாம் பேசாத சுசி...நீ என்ன சொல்றியோ, அதையே தான் அம்மாவும் சொல்றாங்க...அப்பாவைத் தனியா விட்டுட்டு அவங்களால நம்மகூட வந்து இருக்கமுடியாதுன்னு...

ஓஹோ, அவங்களும் நாமளும் ஒண்ணா? வயசான காலத்துல பெத்தவங்க, பிள்ளைங்களுக்கு ஆதரவா அரவணைச்சுப் போகணுமே தவிர, அவங்கவங்க சௌகரியத்தைப் பாக்கக்கூடாது. ஆனாலும் உங்கம்மா இப்படிச் சொல்லியிருக்கக்கூடாது" என்று உணர்ச்சிவசப்பட்டாள் மருமகள்.

அப்ப, ஒண்ணு பண்ணலாம் சுசி... நீ வேணும்னா, உங்கம்மாவைக் கூப்பிட்டுப்பாரேன். அவங்களும் இங்கே தனியாத்தானே இருக்காங்க...என்றான் குமரவேலு.

எங்கம்மாவை எப்படிக் கூப்பிடமுடியும்? அவங்களுக்கு மகளிர் மன்றம், அதுஇதுன்னு ஆயிரம் வேலை...அதுமட்டுமில்லாம, அங்க இங்கன்னு நாலு இடத்துக்குப் போய்வந்து இருக்கிற அவங்க எப்படி அங்கவந்து நாலுசுவத்துக்குள்ள நம்மளோட அடைஞ்சு கிடக்கமுடியும்? அதெல்லாம் முடியாது என்று அவசரமாய் மறுதலித்தாள் சுமி.

அப்போ என்னதான் பண்ணட்டும் நான்? என்னோட சம்பளத்துல வேலைக்கு ஆள்கூட்டிட்டுப்போறதெல்லாம் சாத்தியமில்ல...நீ வேணும்னா அம்மா சொன்னமாதிரி கொஞ்சநாள் இங்க இருக்கிறியா?...பக்குவமாய் ஊசியை இறக்கினான் குமரவேலு.

ஐயோ, ஆள விடுங்க சாமி, நானே அங்க பிள்ளையையும் பாத்துக்கிட்டு, வீட்டையும் பாத்துத்தொலைக்கிறேன்...யாரோட உதவியும், உபகாரமும் நமக்கு வேண்டாம் என்றபடி, கதவை அடித்துச் சாத்திவிட்டு ஆத்திரத்துடன் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தாள் மருமகள்.

மனதிலிருந்த கேள்விகளின் கனம்குறைய, மாடியிலிருந்து இறங்கத்தொடங்கினார் பழனிச்சாமி வாத்தியார்.

ராஜம்மா, மாடியில அடைச்சிருந்த கசடெல்லாம் மழைத்தண்ணியோட கீழ இறங்கிடுச்சு...இனிமே எந்தப் பிரச்சனையும் இல்ல...என்றவர், தனக்குக் காரியம் ஆகணும்னா இந்தகாலத்துப் பிள்ளைகள் எவ்வளவு சுயநலமா இருக்குதுங்க என்று தனக்குள் வியந்தபடி மனைவியைப் பார்த்தார். அவர் கண்களில் எப்போதையும்விடச் சற்று அதிகமாகவே கனிவு தென்பட்டது.

Monday, September 20, 2010

குழந்தைகளைக் குற்றம் சொல்லாதீங்க..."எட்டுப் புள்ளைங்க எங்க வீட்ல...ஆனா, வீட்டுச்சத்தம் வெளியில கேக்காது. ஆனா, இந்த ஒண்ண வச்சுக்கிட்டு நான் படுறபாடு இருக்கே...கடவுளே, இன்னும் தலை இருக்கிற இடத்துக்குக் கழுத்துவந்தா இன்னும் என்னென்ன பண்ணுமோ..." என்று அலுத்துக்கொள்ளும் அம்மாக்களைப் பார்க்கும்போது, இந்தக்காலத்துக் குழந்தைகள்தான் அதிகமா குறும்புத்தனம் பண்றாங்களா, இல்லேன்னா, அப்பா அம்மாதான் அவங்களை அதிகமா குத்தம் சொல்றாங்களா என்ற கேள்வி இப்பல்லாம் அடிக்கடி மனசில் எழுகிறது.

"இப்பல்லாம், விருந்து விசேஷம்னு எங்கேயும் போறதில்லை, எல்லாம் இவங்க வளந்த பிறகுதான்..." என்ற என் உறவுக்காரப்பெண்ணை ஏனென்று கேட்டபோது, "எங்க போனாலும் இவனுங்க பண்றசேட்டையில திட்டு வாங்கிட்டுத்தான் திரும்பவேண்டியிருக்குது. அதனால இவன்களுக்குப் புத்தி தெரிஞ்சப்புறம்தான் எல்லாம்" என்று அவள் சொல்லிக்கொண்டிருந்தபோதே, கையை உதறிவிட்டுத் தெரிச்சு ஓடித் தெருவில் விளையாடப்போன அந்தச் சிறுவனைப்பார்க்கும்போது மனசில் சங்கடம்தான் தோன்றியது.

"அன்னிக்கு, ஒரு கிரகப்பிரவேசத்துக்குப் போயிருந்தேன். எல்லாரும் வீட்டை சுத்திப்பாத்துட்டு இருந்தப்ப, எங்கே இவன்னு பாத்தா மொட்டை மாடி கட்டைச்சுவரில் ஏறி நிக்கிறான்.ஒற்றை நிமிஷம் பார்க்காம இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னு நினைச்சுப்பார்க்கவே முடியல..." என்று சொல்லிவிட்டுக் கண்கலங்கிய அந்தத் தோழியைப்பார்க்கையிலும் கஷ்டமாகத்தான் இருந்தது.

இங்கே அமீரகத்தில், காருக்கு அடியில் ஒளிந்து விளையாடிய ரெண்டு குழந்தைகள், தந்தை வந்து காரை ஸ்டார்ட் பண்ணின பிறகும்கூட வெளியே வராமல், விளையாட்டில் திளைத்திருக்க, சக்கரத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் பத்திரிகைகளில் வந்தது.

அன்றைக்கு, அந்தச் சிறுமியைக் காணவில்லையென்று தெருவே தேடிக்கொண்டிருந்தது. பக்கத்துப்பள்ளிக்கூடத்தில், சாலையில், கடைகளில், அடுத்தவீடு எதிர்த்தவீடென்று எல்லா இடத்திலும் தேடியும் கண்டுபிடிக்கமுடியாமல்போகவே, மொட்டைமாடியில் பாத்தீங்களா என்று ஒருவர் கேட்க, மொத்தக்கூட்டமும் மொட்டைமாடிக்கு ஓடியது. அங்கே ஒற்றையாய் வசிக்கும் இளைஞனுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறாள் அந்த மூன்றுவயசுக்குழந்தை.

இந்தக் குழந்தையாக மாடிக்குப்போனதா, அல்லது அவன்தான் கூட்டிட்டுப்போனானா என்று ஆளாளுக்கு அவரவர் மனப்போக்கின்படிப் பேச, "இன்னும் கொஞ்சநேரம் கதைகேட்டுட்டுவரேம்மா..." என்று தன் அம்மாவிடம் கள்ளமில்லாமல் கேட்டது அந்தக் குழந்தை. ஆனா, அதுக்குப் பதிலாகக் கிடைச்சதோ கூட ரெண்டு அடி மட்டும்தான்.

பக்கத்துவீட்டுக்காரி பொறாமை பிடிச்சவ, மாடிவீட்டுக்காரன் ஒருமாதிரி, எதிர்த்த வீட்டில் என்ன நடக்குதுன்னே தெரியல என்று அக்கம்பக்கத்தில் யாருடனும் நட்புப் பாராட்டமுடியாமல் கட்டிப்போடப்படுகிற மொட்டுகள் என்னதான் செய்யும்? காலையில் எட்டுமணிக்கு ஆட்டோவில் ஏத்தி அனுப்பினா, மாலை நாலரை மணிக்கு வந்து, நாலு பிஸ்கட்டும் பாலும் குடிச்சிட்டு, டாம் அண்ட் ஜெரியையோ, டோரா புஜ்ஜியையோ பார்க்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அடுத்து இருக்கவே இருக்கு ஹோம் வொர்க்.

கதையில் வருகிற டாம் அண்ட் ஜெரி மாதிரி குறும்பும் கும்மாளமுமாய் இருக்கவோ, டோராவை மாதிரி தானும் வெளியில்செல்லவும் விளையாடி மகிழவும் அந்தக்குழந்தையும் ஆசைப்படுமென்று ஏன் அம்மா அப்பாக்களுக்குப் புரியமாட்டேனென்கிறது?

என்றைக்காவது ஒருநாள் பார்க்கில் விளையாடக் கூட்டிப்போனால்கூட, ஒன்னோட சைக்கிளை வச்சு நீ மட்டும் விளையாடு, விச்சுகிட்ட குடுத்தே பிச்சுப்போட்டுடுவான், என் கண்ணைவிட்டு விலகி, தள்ளிப்போகக்கூடாது, கடையில இருக்கிற கருமத்தையெல்லாம் கேக்கக்கூடாது, கண்டவங்ககூடல்லாம் கதை பேசக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டளைகள் விதிக்கப்பட, என்னசெய்வதென்றே புரியாமல் திணறித்தான்போகிறது குழந்தை.

குச்சி மிட்டாயும், குருவி பிஸ்கட்டும், பச்சை மாங்காயும், பப்படமும் வாங்கி எச்சில் ஒழுகச் சாப்பிட்டுவிட்டு, பச்சைக்குதிரை, பம்பரம், பாண்டி, குச்சிக்கம்பு, கோலிவிளையாட்டென்று இச்சைப்படி தெருவில் விளையாடி வளர்ந்த தலைமுறை, தன் பிள்ளைகளைக் கயிற்றில் கட்டிய கன்றுக்குட்டிகளைப்போல் வளர்ப்பதைப்பார்க்கையில் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இதையெல்லாம் எடுத்துச்சொல்லப்போனால், 'அட, உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...காலம் கெட்டுக்கிடக்குது' என்றுசொல்லிவிட்டுக் கடந்துபோய்விடுகிறார்கள் பெற்றவர்கள்.

விபாஷா...வயது பத்து, சிம்லாவில் ஐந்தாம்வகுப்புப் படிக்கும் இந்தச் சிறுமி, ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைமை நீதிபதிக்கு இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறாள். விஷயம் என்னன்னா, சிம்லாவில் சின்னக்குழந்தைகள் விளையாட வசதியாகப் பூங்கா ஏதும் இல்லாத காரணத்தால், குழந்தைகள் தொலைக்காட்சியே கதியென்று கிடக்க நேரிடுகிறது. அதனால் எங்களுக்கு வசதியாகப் பூங்கா ஒன்று அமைத்துத் தாருங்கள் என்று கேட்டிருக்கிறாள் அந்தச் சிறுமி. சிறுமியின் வேண்டுகோளைப் பரிசீலிக்கும்படி, அரசுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறது ஹிமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம்.

வெளையாடப்போறேன், வெளையாடப்போறேன்னு, சொன்னதையே திரும்பத்திரும்பச்சொல்லித் தொல்லை கொடுக்காதே சனியனே...என்று அர்ச்சனையை ஆரம்பிக்குமுன்னால் கொஞ்சம் யோசியுங்க. படிப்பு, ட்யூஷன், பரீட்சை, மதிப்பெண் என்று ஏகப்பட்ட இறுக்கத்திலிருக்கிற குழந்தைகள் கொஞ்சம் மனதைத் தளர்த்திக்கொள்ள நாம் அனுமதித்தே ஆகவேண்டும்.அவர்களுக்குப்பிடிக்கிற விதத்தில் அவ்வப்போதாவது விளையாட அனுமதிக்கவேண்டும். கூடிவிளையாடச்செய்தல் குழந்தைகளுக்குள் குழுவாகச் சேரும் மனப்பான்மையை உண்டுபண்ணும்.

மனமகிழ்ச்சியுடன் வளரும் குழந்தைகள் வளர்ந்தபிறகு, தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அடக்குமுறைக்குள் சிக்கிய குழந்தைகள் வளர்ந்தபின்னாலும், அவசரமும் ஆத்திரமும்தான் அவர்களிடம் அதிகமாக இருக்கும். அதனால் நம் பிள்ளைகளின் எதிர்காலம்பற்றி நாம் யோசிக்கவேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.

Saturday, September 18, 2010

புதிர் எண் - 11 கண்ணால் பேசும் பெண் இவர் யார்?இவரைக் கண்டுபிடியுங்க...

அழகாயிருக்க இதெல்லாம் அவசியம்!!!


அழகாயிருக்கணுமென்ற ஆசை அனைவருக்கும் பொதுவானது. சமீபத்தில் ஆரோக்கியவாழ்வு பெண்களும் பெறலாம் என்ற யோகாசனம் பற்றிய நூலைப் படிக்கையில், நூலாசிரியர் டாக்டர் ஹேமா எழுதியிருந்த விஷயங்கள்தான் இவை...மொத்தத்தில் ஒரு யோகியைப்போல் வாழச்சொல்வதாகப்பட்டது எனக்கு. நீங்களும் படிச்சுப் பாருங்க...


பெண்களில் அழகுடன் இருக்க ஆசைப்படாதவர் யார்?

மனதில் ஏற்படும் உற்சாகம்தான் மனதின் அழகை அதிகப்படுத்தி முகத்தில் பிரதிபலிக்கும்.யோகப்பயிற்சியின்மூலம் மனம் அமைதியாகிறது. மிகச்சிறிய விஷயங்களுக்காக மன உளைச்சல்பட்டவர்கள் யோகப்பயிற்சிக்குப்பிறகு, அமைதியோடு நிதானத்துடன் எதையும் அணுகுவார்கள்.சுறுசுறுப்புடனும் ஆரோக்கியத்துடனும் இயங்குபவர்கள் சாதனை புரிந்து, மன உற்சாகம் பெற்று அகத்தின் அழகு முகத்தில் தெரியவரும்.

மேலும், நமது வலது மூளை தூண்டப்பட்டு,கருணை, அன்பு,பிறர்க்கு உதவும் பாங்கு முதலியன வளரும். வெறுப்பு, கொபம், எதிர்மறை எண்ணங்கள் நீங்கும்.நாம் வாழ்க்கையை நல்லமுறையில் வாழக் கற்றுக்கொள்ளுவோம்.மன அமைதிபெற நம் ஆன்றோர்கள் கூறிய சில வழிகள்...

* பிறரைக் குறைகூறாதீர்கள்

*கடவுள் விருப்பப்படிதான் எல்லாம் நடக்கிறது என்று உணருங்கள்.

*பொறுப்புக்களிலிருந்து தட்டிக்கழிக்காமல் உறுதியுடன் நிறைவேற்றுங்கள்.

*தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

*யாருடனும் வீண் விவாதத்தில் ஈடுபடாதீர்கள்.

*எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

*வெற்றியின் மிதப்பில் மிகையாக இருப்பதையும், தோல்வியில் துவளுவதையும் நிறுத்துங்கள்.

*எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் பிறர்க்கு முடிந்தமட்டும் உதவுங்கள்.

*பொறுமையாயிருங்கள்.

*திருப்தியுடன் இருங்கள்.

*பிறர் பொருளுக்கு ஆசைப்படவேண்டாம்.

*உலகம் அநித்தியம், மாயை என்பதை உணருங்கள்.

*எதற்கும் வருத்தப்பட்டு, சக்தியை வீணாக்காதீர்கள்.

*பிறர் உங்களுக்குச் செய்த கெடுதலையும், நீங்கள் பிறருக்குச்செய்த நல்லதையும் உடனுக்குடன் மறந்துவிடுங்கள்.

* கடவுளை நம்புங்கள்.

*எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள்.

*நிகழ்காலத்தில் வாழுங்கள்.கடந்தகாலத்தின் நினைவுகளிலும், எதிர்காலத்துக் கனவுகளிலும் மூழ்கிவிடாமல் இருங்கள்.

இவையெல்லாம் யோகப்பயிற்சிமூலம் தானாகவே உங்களைத் தேடிவரும்.உடல்வாகும் உள்ள அழகும் பெற்று வனப்புடன் திகழலாம்.

Thursday, September 16, 2010

புதிர் எண் - 10 இவர் யார்???

இந்தப் பிரபலம் யார்?
சரியான பதில்சொன்ன இளந்தென்றலுக்கு இன்னுமொரு வாழ்த்து!

மறைவிலிருந்து வெளிப்பட்ட துணைமுதல்வரின் முகம் இங்கே...

Wednesday, September 15, 2010

புதிர் எண் - 9 இந்தக் கண்ணுக்குரியவரைக் கண்டுபிடிங்க...சரியான பதில் சொன்ன இளந்தென்றலுக்கு வாழ்த்துக்கள்!


முழு முகத்தையும் காட்டும் குஷ்பூ...

Tuesday, September 14, 2010

குடைமிளகாய் பொரியல்


குடைமிளகாயைப் பலவிதங்களில் சமையலில் பயன்படுத்துவோம். ஆனால் இந்த வகை பொரியல் மிக எளிதானதும், மிகச் சுவையானதும் கூட... சாம்பார், தயிர் சாதத்துக்கு அட்டகாசமா மேட்ச் ஆகும் பாருங்க...

தேவையான பொருட்கள்
-----------------------

பச்சை குடைமிளகாய் - 1/2 கிலோ
தேங்காய்த் துருவல் - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க
--------
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு -1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை
------------

குடைமிளகாயைக் கழுவி, காம்பு மற்றும் விதைப்பகுதியை நீக்கிவிட்டு, மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

தேங்காயுடன், சீரகம் இஞ்சியைச் சேர்த்து, தண்ணீர்விடாமல் மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து,கறிவேப்பிலை இட்டுத் தாளித்து அதில் நறுக்கிய குடைமிளகாயைப் போட்டு உப்புச் சேர்த்து வதக்கவும். மூடிவைக்க வேண்டியதில்லை. மிக விரைவில் வதங்கிவிடும். வதங்கி வரும்போது, மஞ்சள் பொடி, வத்தல் பொடி சேர்த்துக் கிளறிவிடவும்.

இறுதியில், அரைத்த தேங்காய் கலவையைக் கொட்டி, மசாலா வாசனை போகும் வரை நன்றாக வதக்கி இறக்கிவிடவும்.

சூப்பரான குடைமிளகாய் பொரியல் ரெடி. இதை உதிர வடித்த சாதத்துடன் கலந்து
காப்ஸிகம் ரைஸ் என்று பிள்ளைகளுக்கு லஞ்ச்பாக்ஸிற்கும் தயார் செய்து அனுப்பலாம்.

ஆங்கிலக்காற்றில் அணையலாமா தமிழ் ஜோதி??!சமீபத்தில், தமிழ்நாட்டுக்கு வந்திருந்தபோது, பக்கத்துவீட்டுக் குழந்தையின் கையிலிருந்த காயத்தைப் பார்த்து, "என்னடா, கீழவிழுந்து அடிபட்டுக்கிட்டியா?" என்று கேட்டேன். அதற்கு அந்தக்குழந்தை, "இல்ல ஆன்ட்டி, எனக்கும் ஹர்ஷினிமாதிரி இங்லீஷ் பேசத்தெரியலேன்னு எங்கம்மா அடிச்சதுதான் இது" ன்னு சொன்னப்போ நிஜமாகவே அதிர்ச்சியாக இருந்தது.

naan unnai loving...what u r telling? என்று மியூசிக் சேனல் எஸ் எம் எஸ் களில் ஆரம்பித்து, வந்திங்,போயிங்,வாய்விட்டுச் சிரிச்சிங் என்று எங்க பார்த்தாலும் அரைகுறை ஆங்கிலம் கலந்துகிடக்க, ஆங்கிலத்தில் பேசினால்தான் தங்களுக்கு கவுரவமென்று, ஒரு மாயைக்குள் சிக்கி மயங்கிக்கிடக்கிறது இன்றைய இளைய தலைமுறை.

பொண்ணு பார்க்கப்போகையில் முன்னெல்லாம் ஆடத்தெரியுமா பாடத் தெரியுமான்னு கேப்பாங்களாம். இனிமே போகிறபோக்கில், பொண்ணுக்கு ஆங்கிலத்தில் பேசத்தெரியுமான்னு மாப்பிள்ளையும், மாப்பிளைக்கு ஆங்கிலம் தெரியுமான்னு பொண்ணும், பரிட்சை வச்சிப் பாத்துட்டுதான் கல்யாணம் பண்ணிக்குவாங்களோன்னு தோணுது.

ஆயிரத்து நூறுக்குமேல் மதிப்பெண் வாங்கி, பொறியியல் படிக்கப்போன அண்ணா பல்கலைக்கழகத்து மாணவி ஜோதி, மற்றவர்களைப்போலத் தனக்கு ஆங்கிலத்தில் பேசத்தெரியவில்லை என்பதற்காக அநியாயமாக தற்கொலை செய்துகொண்டாள் என்று சொல்கிறார்கள். இங்கே, உண்மை என்னவென்று சரிவரத் தெரியவில்லை என்றாலும், தங்களால் ஆங்கிலத்தில் பேசமுடியவில்லையே என்ற தாழ்வுமனப்பான்மையுடன் பலர் வருத்தப்படுவதைப் பார்க்கமுடிகிறது.

அதுவும் அநியாயத்துக்கு நம் தமிழகத்து மக்களிடம் இந்த மோகம் சமீப காலமாகப் பெருகிக்கொண்டிருக்கிறது. ஆங்கிலப்பள்ளிகள், ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் என்று ஆங்கிலத்தைக் கையில்வைத்துக்கொண்டு ஆயிரமாயிரமாய்ப் பணம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் பலர்.

ஆங்கிலேயர்கள் ரெண்டுபேர் சந்தித்துக்கும்போது ஆங்கிலத்தில் பேசலாம், தப்பில்லை. ஆனா, தமிழ் தெரிஞ்ச ரெண்டு தமிழர்கள் சந்திக்கும்போது அங்கேயும் ஆங்கிலத்தில்பேசி தன் புலமையைக் காட்டிக் 'கொல்'லும்போது, வேடிக்கையாய்த்தான் இருக்கிறது. இதுவே ஒரு மலையாளியும் இன்னொரு மலையாளியும் சந்தித்துக்கொண்டால், என்னதான் அவங்க ஆங்கிலத்தை அரைச்சுக் குடிச்சவங்களா இருந்தாலும், மலையாளத்தில்மட்டுமே பேசிக்குவாங்க. இது தமிழர்களாகிய நாம் கவனிக்கவேண்டிய விஷயம்.

ஆங்கில அறிவு அவசியம்தான். ஆங்கிலத்தில் எழுதவும் படிக்கவும் தெரிஞ்ச அநேகருக்கு, ஆங்கிலத்தில் பேசவராது. காரணம் போதிய பயிற்சியில்லாமை. அஞ்சாவதுகூடப் படிக்காம, அயல்நாட்டுக்கு வேலைக்குப்போன அஞ்சலை, கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி, அருமையா ஆங்கிலம்பேசுவதைப் பார்க்கமுடிகிறது. இதுபோல, நிர்பந்தமும், வாய்ப்பும் அமைகையில் நிச்சயம் நம்மாலும் ஆங்கிலத்தில் பேசமுடியும்.

ஆங்கிலத்தில் பேசியே ஆகணும்னு முடிவெடுத்துட்டீங்கன்னா, உடனே, ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாருங்க. கையில கிடைக்கிற ஆங்கில செய்தித்தாள் மற்றும் புத்தகங்களைப் படிக்க ஆரம்பிங்க. அதையும், சும்மாப் படிச்சாப் பத்தாது. வாய்விட்டு வாசிக்கணும். தொடர்ந்து இதுபோல வாசிக்கும்போது ஆங்கில வார்த்தைகளைச் சேர்த்து உச்சரித்தல் சுலபமாகிப்போகும். தப்பு சரின்னு கவலைப்படாம தைரியமாப் பேசவேண்டியது இங்கே ரொம்ப முக்கியம். இப்படி, அசராம முயற்சிபண்ணினா, ஆங்கிலம் நம்மகிட்ட வந்து அடிமையா நிக்கும். அதைவிட்டு, அதைப்பார்த்து பயந்துபோனோம்ன்னா அது நம்மை மிரட்டிக்கிட்டே இருக்கும்.

ஆங்கிலம் தெரியலேன்னு நாம வருத்தப்படுறோம். ஆனா, தமிழ் தெரியலேன்னு எந்த ஆங்கிலேயனாவது வருத்தப்பட்டதைப் பாத்திருக்கீங்களா? ஆங்கிலத்தில் எண்களின் பெயரைமட்டும் தெரிந்துவைத்துக்கொண்டு, திறமையாய்த் தொழில் நடத்தும் சைனாக்காரர்கள் பலரை அமீரகத்தில் பார்த்ததுண்டு. அவர்களெல்லாம் ஆங்கிலம் தெரியவில்லையென்று அதிகமாக அலட்டிக்கொள்வதில்லையென்றே தோன்றுகிறது.

இதைவிடவும் முக்கியமாக, என் பிள்ளைகளுக்குத் தமிழே பேசத்தெரியாதுன்னு சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளும், தமிழர்கள் பலர் இருக்கிற இந்த உலகத்தில், ஆங்கிலம் பேசத்தெரியாத தமிழனாகஇருப்பது ஒண்ணும் அத்தனை குத்தமா எனக்குத் தெரியலை.

கடைசியா ஒரு விஷயம்...ஆங்கிலம் என்பது அறிவில்லை, அது ஒரு மொழி மட்டுமே. சுட்டுப்போட்டாலும் எனக்கு ஆங்கிலம் வராதுன்னு சொல்றவங்களா நீங்க? வருத்தப்படவேண்டாம்...என் அன்னைமொழியில் என்ன இல்லையென்று பெருமையுடன் நிமிர்ந்து நில்லுங்கள். இன்னும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் கடலளவு இருக்கிறது நம் தமிழில்.

கிங் ஃபிஷர் தத்துவம்!விமானநிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடத்திலிருந்து, புகைபிடித்தபடியே மது அருந்திக்கொண்டிருந்தாராம் ஒருவர்.

அருகிலிருந்த ஒருவர் அவரிடம்சென்று, "புகைபிடிக்கவும்,மது அருந்தவும் ஒருநாளைக்கு நீங்கள் எவ்வளவு செலவுசெய்வீர்கள்?" என்று கேட்டாராம்.

அதற்கு, புகைபிடித்துக்கொண்டிருந்தவர், "எதற்காகக் கேட்கிறீர்கள்?" என்றாராம்.

அதற்கு அந்த மனிதர், "புகைக்கவும் குடிக்கவும் நீங்கள் செலவுசெய்யும் பணத்தைச் சேமித்தால், நீங்கள் சொந்தமாக ஒரு விமானமே வாங்கிவிடலாம்" என்றாராம்.

அதற்கு அந்தப் புகைபிடிக்கிறவர், "நீங்கள் புகைப்பதோ, மது அருந்துவதோ கிடையாதா?" என்று அந்த மனிதரைப் பார்த்துக் கேட்டாராம்.

"இல்லை" என்று மறுத்தாராம் அந்த மனிதர்.

"அப்படியானால், அங்கே நிற்கிற விமானம் உங்களுடையதா?" என்று கேட்டாராம் புகைபிடித்தவர்.

"இல்லை" என்று மறுத்தாராம் அந்த மனிதர்.

"உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி. ஆனால்,அந்த விமானம் என்னுடையது" என்றாராம் அந்தப் புகைபிடித்துக்கொண்டிருந்த மனிதர்.

அங்கே, புகைபிடித்தபடி மதுஅருந்திக்கொண்டிருந்த அந்த மனிதர் வேறுயாருமல்ல, கிங் ஃபிஷர் விமான நிறுவனத்துக்குச் சொந்தக்காரரான விஜய் மல்லையாதான்.

இதிலே, நாம விளங்கிக்கவேண்டிய தத்துவம் என்னன்னா, ஆகாத இடத்தில் அறிவுரை சொன்னா அது நமக்கே சிலசமயம் ஆப்புவைத்துக்கொள்வதாகத்தான் அமையும் என்பதுதான் :)

இது உண்மையோ, கற்பனையோ படித்தபோது பிடித்திருந்ததால் இந்தப் பகிர்வு.

படப்புதிர் எண் - 8 இங்கே எட்டிப் பார்க்கிற இவர் யார்?

இங்கே எட்டிப்பார்க்கிற 'புள்ளகுட்டிக்காரர்' யார்ன்னு சொல்லுங்க...சரியான பதில் சொல்லி ஜெயித்தவர் சின்ன அம்மிணி...

வாழ்த்துக்கள் சின்ன அம்மிணி!


Monday, September 13, 2010

படப்புதிர் - 7 இந்தப் பிரபலம் யார்?

படத்திலிருக்கும் இந்தப் பிரபலம் யார்ன்னு கண்டுபிடியுங்க...

படப்புதிர் எண் ஏழுக்கான சரியான விடையளித்தவர் சின்ன அம்மிணி.

வாழ்த்துக்கள் சின்ன அம்மிணி!


மறைக்கப்பட்ட பிரபலத்தின் முழுப்படம்...

Saturday, September 11, 2010

படப்புதிர் எண் - 6

படத்தில் முகம்காட்ட மறுக்கிற இந்தப் பெரியவர் யார்?இந்தப் புதிருக்கு விடைசொல்லி,வெற்றிபெற்றவர் இளந்தென்றல்.

வாழ்த்துக்கள் இளந்தென்றல்!

திரைவிலகிய தோற்றம் இதோ...

Friday, September 10, 2010

படப்புதிர் எண் - 5

எல்லாருக்கும் இனிய ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்!

இவரைத் தெரியுதான்னு கொஞ்சம் கண்ணைச்சுருக்கி கவனமாப் பாருங்க :)***********************************************

சரியான பதில்சொன்ன இளந்தென்றலுக்கு வாழ்த்துக்கள்!!!

மறைக்கப்பட்ட படம் இதோ...


Wednesday, September 8, 2010

படப்புதிர் எண் -4

யாரிந்த இளைஞர்?

ல...ல...லா...லால்பாக்!!!

அமீரகத்தின் அதிகமான வெம்மை, கண்ணைக்கூசவைக்கும் வெயிலிலிருந்துவிலகி, பெங்களூரு வந்தபோது,அவ்வப்போது பெய்த மழையும்,உறுத்தாத இளம்வெயிலும்,கண்ணைக் குளிர்விக்கும் பசுமையும் மனதை நிறைத்தது. பாதிநாளை எங்களுடன் பகிர்ந்துகொண்ட லால்பாகின் அழகான காட்சிகளில் சில இங்கே...சில்க் காட்டன் மரமாம்...

லால்பாக் ஏரியில் நீந்திய பாம்பு...
LinkWithin

Related Posts with Thumbnails