Sunday, September 26, 2010

தீப்பெட்டிப் பட்டும், திருமதி ஒபாமாவும்!


அவுரங்கசீப் மன்னனின் ஆட்சிக்காலத்தில் ஒருநாள், மன்னனின் மகள் ஜெபுன்னிஸா, மஸ்லின் துணியினாலான ஒரு ஆடையைத் தன் உடம்பில் எட்டுச் சுற்றாகச் சுற்றிக் கட்டிக்கொண்டு, அரசவைக்கு வந்தாளாம். அதைக் கண்ட மன்னன் அவுரங்கசீப், உடல்தெரியும்படி ஆடை உடுத்திக்கொண்டு, அரசசபைக்கு வந்திருக்கிறாயே என்று மகளைக் கடிந்து கொண்டாராம்.

மஸ்லின் துணியின் மென்மையைக் குறிப்பிடுவதற்காக இந்தக்கதையைச் செவிவழியாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இதுமாதிரி, அந்தக்காலத்துச் சீனப் பட்டுக்களை, ஒரு சிறிய தீப்பெட்டிக்குள் மடித்துவைத்துவிடலாம் என்றும் மோதிரத்துக்குள் சுருட்டி வைக்கலாமென்றும் சொல்லக்கேட்டதுண்டு. மென்மையான ஆடைகளுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல மவுசு உண்டு.

கர்நாடக மாநிலம், பெங்களூரின் புறநகர்ப்பகுதியில் வசிக்கும், குரும் நாராயணப்பாவுக்கு வயது 69. அவர் மனைவி கமலம்மாவுக்கு வயது 67. இவங்க ரெண்டுபேரும் சேர்ந்து அமெரிக்காவின் முதல் பெண்மணியான மிஷேல் ஒபாமாவுக்கு,தங்க சரிகையில் கோபுர டிசைன் இழையோட, 70 கிராம் (!!!)எடையில் ஒரு பட்டுப்புடவையைத் தயார்செஞ்சிருக்காங்க. இதுமட்டுமில்லாம அதிபர் ஒபாமாவுக்காக 30 கிராம் எடையுள்ள பட்டு ஸ்கார்ஃப்(scarf) ஒண்ணும் தயாரிச்சிருக்காங்க இந்த தம்பதிகள். இந்த ஸ்கார்ஃப் மிக எளிதாக ஒரு தீப்பெட்டிக்குள் அடங்கிவிடுமாம்.

வரும் நவம்பர் மாதத்தில் இந்தியா வரவிருக்கும் அமெரிக்க அதிபருக்கும் அவரது மனைவிக்கும் பரிசளிப்பதற்காகவே இந்தப் பட்டுப் புடவையையும்,ஸ்கார்ஃபையும் தயாரித்திருப்பதாகத் திரு நாராயணப்பா தெரிவிக்க, கர்நாடக அரசின் பட்டு நிறுவனம், அதிபருடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வதாக அவருக்கு உறுதியளித்திருக்கிறது.

சாதாரணமாகத் தயாரிக்கப்படும் ஆறரை மீட்டர் பட்டுப்புடவையொன்றின் எடை சுமாராக 600 கிராமிலிருந்து ஒரு கிலோ வரை இருக்குமாம். ஆனால்,மிக மென்மையான இழைகளைக்கொண்டு, நுண்ணிய கோபுர வேலைப்பாடுகளுடன் கூடிய இந்தப் பட்டினைத் தயாரித்ததற்கு, இந்த வயதிலும் இறைவன் கொடுத்திருக்கும் தெளிவான கண்பார்வைதான் காரணம் என்று சொல்லியிருக்கிறார் திரு நாராயணப்பா.

தன் பட்டு நெசவுத் திறமைக்காக, பல மாநில, தேசிய அளவிலான விருதுகளைப்பெற்றுள்ள திரு. நாராயணப்பா, 2000 மாவது ஆண்டில், ஆறரை மீட்டர் நீளமும், 44 அங்குல அகலமும் கொண்ட 35 கிராம் எடையுள்ள பட்டுச்சேலையைத் தயாரித்து சாதனைபடைத்திருக்கிறார். இதுவும் தீப்பெட்டிக்குள் அடங்கக்கூடிய அளவில் மிக மென்மையாகத் தயாரிக்கப்பட்டதாம்.

9 comments:

 1. தமிழ் மண ஓட்டு அட்டை வேலை செய்ய வில்லை

  ReplyDelete
 2. நல்ல தகவல்..
  தமிழ்மணம் ஓட்டு பட்டைய கீழ கொண்டு வந்துருங்க...

  ReplyDelete
 3. ம்...
  கொடுத்து வச்சவக...

  ReplyDelete
 4. //LK said...

  தமிழ் மண ஓட்டு அட்டை வேலை செய்ய வில்லை//

  ஒரு வாரமாக இப்படித்தான் இருக்கிறது கார்த்திக்.தமிழ்மணத்துக்குத் தகவல் அனுப்பினேன் பலனில்லை :(

  ReplyDelete
 5. //அமைதிச்சாரல் said...

  பட்டான தகவல் இது..//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாரல் :)

  ReplyDelete
 6. //Balaji saravana said...

  நல்ல தகவல்..
  தமிழ்மணம் ஓட்டு பட்டைய கீழ கொண்டு வந்துருங்க...//

  நன்றி சரவணன்!

  எப்படி இடம்மாத்தணும்னு தெரியாதே...

  ReplyDelete
 7. //தியாவின் பேனா said...

  ம்...
  கொடுத்து வச்சவக...//

  வாங்க தியா...நன்றி!

  ReplyDelete
 8. இது கடையில கிடைக்குமா?(கட்டுப்படியாகுற விலையில!!)

  ஹி.. ஹி.. வாங்கறதுக்கு இல்லை, தொட்டுப் பாக்கிறதுக்குத்தான்..

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails