Thursday, September 30, 2010

பதின்ம வயதுப் பிரச்சனைகள்!ஆறேழு மாசமிருக்கும்...மேஜை இழுப்பறைக்குள் எதையோ தேடும்போது, உள்ளே உறையில்லாமல் கிடந்த பிளேடு ஒன்று கையைக்கிழித்துவிட,விரலிலிருந்து ரத்தம்சொட்டச்சொட்ட வந்துநின்றாள் என் மகள். ரத்தத்தைப் பார்த்ததுமே பதறிப்போய் என்னாச்சு, ஏதாச்சுன்னு விசாரிச்சு,வேலைபார்க்கும்போது கவனமா இருக்கணும் என்று அறிவுரை சொல்லி, அவளுக்கு மருந்துபோட்டுவிட்டேன்.

அதற்கு அவள், அம்மா, விரல்ல லேசா வெட்டுப்பட்டதுக்கே இப்படித் துடிச்சுப்போறியே, எங்க ஸ்கூல்ல, சில பிள்ளைங்க கையில,கால்லயெல்லாம் வேணும்னே பிளேடால கிழிச்சி வச்சிருப்பாங்க என்று சொன்னதும், பதறிப்போய், ஏன் எதுக்காகன்னு அவளிடம் விசாரிக்க ஆரம்பிச்சேன். சில பொண்ணுங்க நினைச்ச இடத்தில கிழிச்சிவச்சிருப்பாங்க...சிலர், அவங்க கையில ஏதாவது இனிஷியல் போட்டுவச்சிருப்பாங்கன்னு அவள் சொல்ல, சரிதான்,ஏதோ காதல் விஷயமாயிருக்கும்போல...என்று நினைச்சு, அதுக்குமேல எதுவும் கேட்காம விட்டுட்டேன்.

ஆனா, இன்றைக்கு நாளிதழில் வந்த அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு, மறுபடியும் அவ கிட்ட அதைப்பற்றி விசாரிச்சேன். இப்படி அங்கங்கே வெட்டிக்கொண்டு, அதை அடுத்தவங்க கவனிச்சுக் கேட்டா, எனக்கு டிப்ரெஷன்...அதான் இப்படிச் செய்கிறேன் என்று அவங்க சொல்லுவாங்கம்மா என்றதும், திக்கென்றுதான் இருந்தது எனக்கு. பத்துப்பதினைந்து வயசுக்குள் அப்படியென்னதான் டிப்ரெஷனோ என்று யோசிக்கத்தோன்றியது.

நாளிதழில் நான் படிச்ச அந்த விஷயம், பதின்ம வயசுப் பிள்ளைகள் வைத்திருக்கிற பெற்றோர் அனைவரும் யோசிக்கவேண்டிய விஷயம். பதின்ம வயசின் மன அழுத்தத்தைச் சமாளிக்கமுடியாமல், அநேக ஆண்பிள்ளைகள் தங்களைத் தாங்களே நெருப்பால் சுட்டுக்கொள்வதாகவும், பெண்குழந்தைகள் இதுமாதிரி பிளேடு கத்திரி போன்ற கூரான ஆயுதங்களால் உடம்பைக் கீறிக்கொள்கிறார்கள் என்றும் சொல்லியிருக்காங்க மனநலமருத்துவரான டாக்டர். ரோகி மெக்கார்த்தி.

தாயின் பிரிவு, தந்தையின் கவனிப்பின்மை இப்படிப்பட்ட காரணங்களால் பதின்ம வயசுப்பிள்ளைகள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் விவாகரத்துஆகிப் பிரிந்துவிட, அந்தப் பதினைந்து வயதுப்பெண்,தன்னைத்தானே உடம்பு முழுவதும் கீறிக்கொண்டிருக்கிறாள்.குறிப்பாக, இந்த வயசுக்காரங்கதான் என்றில்லாமல் இளைஞர்களில் பலர் இதுமாதிரி தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வதன்மூலம், மற்றவர்களின் கவனத்தைக் கவரவும் தன்னுடைய மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளவும் முயல்கிறார்கள் என்றும் சொல்லியிருக்காங்க அந்த மருத்துவர்.

சமீபத்தில்,இலண்டன் ராயல் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் நடத்திய ஒரு ஆய்வின்படி, இளம்வயதினரில் பத்தில் ஒருவர், இதுமாதிரி, தன்னைத்தானே காயப்படுத்தித் தங்களை வருத்திக்கொள்ளுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது என்கிறார்கள்.

இளம்வயதில், பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் குழந்தைகள் பெரும்பான்மையினர் இதுமாதிரி தன்னைத்தானே வருத்திகொள்வதுண்டு என்றும் சொல்லப்படுகிறது.
வெட்டிக்கொள்வது, சுட்டுக்கொள்வதுமட்டுமன்றி, சிலநேரங்களில் காயங்கள் பெரிதாகிப்போய் தற்கொலையில்கூட முடிவடைந்துவிடுகிறதென்றும் சொல்லியிருக்கிறார் அந்த மனநலமருத்துவர்.

பெற்றவர்கள் ஓடிஓடி உழைப்பதும், ஓடாகத்தேய்வதும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத்தான். முன்னெல்லாம், கூட்டுக்குடும்பத்தில்,அப்பா அம்மா கவனிக்கலேன்னாலும், பாட்டி, தாத்தாவோ அல்லது மற்ற பெரியவர்களோ பிள்ளைகளிடம் சின்னதாய் மாற்றம் தெரிஞ்சாலும் துருவித்துருவி விசாரிப்பாங்க.

ஆனா, இன்றைய காலகட்டத்தில் குறுகிப்போன குடும்பங்கள், இறுகிப்போன மனசுகள்...அதனால் பெருகியிருப்பதோ இதுமாதிரியான பிரச்சனைகள். அதனால்,
அதிகமா ஒண்ணும் வேண்டாம். பிள்ளைங்ககிட்ட, அடிக்கடி மனசுவிட்டுப் பேசணும். பருவ வயதில் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன அழுத்தங்களையும், அவர்களால் எதிர்கொள்ள இயலாத பிரச்சனைகளையும், பெற்றோர்கள் கேட்டுத்தெரிந்துகொண்டு,அவற்றைத் தீர்த்துவைத்து, பிள்ளைகளின் மன அழுத்தங்களுக்கு வடிகாலாகவும் இருக்கவேண்டியது மிகமிக அவசியம்.


2 comments:

  1. :( வளரும் பிள்ளைகள்கிட்ட நாம் அதிகம் அக்கறை கட்டவேண்டும்.

    உமா

    ReplyDelete
  2. வாங்க உமா...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails