Tuesday, September 14, 2010

ஆங்கிலக்காற்றில் அணையலாமா தமிழ் ஜோதி??!சமீபத்தில், தமிழ்நாட்டுக்கு வந்திருந்தபோது, பக்கத்துவீட்டுக் குழந்தையின் கையிலிருந்த காயத்தைப் பார்த்து, "என்னடா, கீழவிழுந்து அடிபட்டுக்கிட்டியா?" என்று கேட்டேன். அதற்கு அந்தக்குழந்தை, "இல்ல ஆன்ட்டி, எனக்கும் ஹர்ஷினிமாதிரி இங்லீஷ் பேசத்தெரியலேன்னு எங்கம்மா அடிச்சதுதான் இது" ன்னு சொன்னப்போ நிஜமாகவே அதிர்ச்சியாக இருந்தது.

naan unnai loving...what u r telling? என்று மியூசிக் சேனல் எஸ் எம் எஸ் களில் ஆரம்பித்து, வந்திங்,போயிங்,வாய்விட்டுச் சிரிச்சிங் என்று எங்க பார்த்தாலும் அரைகுறை ஆங்கிலம் கலந்துகிடக்க, ஆங்கிலத்தில் பேசினால்தான் தங்களுக்கு கவுரவமென்று, ஒரு மாயைக்குள் சிக்கி மயங்கிக்கிடக்கிறது இன்றைய இளைய தலைமுறை.

பொண்ணு பார்க்கப்போகையில் முன்னெல்லாம் ஆடத்தெரியுமா பாடத் தெரியுமான்னு கேப்பாங்களாம். இனிமே போகிறபோக்கில், பொண்ணுக்கு ஆங்கிலத்தில் பேசத்தெரியுமான்னு மாப்பிள்ளையும், மாப்பிளைக்கு ஆங்கிலம் தெரியுமான்னு பொண்ணும், பரிட்சை வச்சிப் பாத்துட்டுதான் கல்யாணம் பண்ணிக்குவாங்களோன்னு தோணுது.

ஆயிரத்து நூறுக்குமேல் மதிப்பெண் வாங்கி, பொறியியல் படிக்கப்போன அண்ணா பல்கலைக்கழகத்து மாணவி ஜோதி, மற்றவர்களைப்போலத் தனக்கு ஆங்கிலத்தில் பேசத்தெரியவில்லை என்பதற்காக அநியாயமாக தற்கொலை செய்துகொண்டாள் என்று சொல்கிறார்கள். இங்கே, உண்மை என்னவென்று சரிவரத் தெரியவில்லை என்றாலும், தங்களால் ஆங்கிலத்தில் பேசமுடியவில்லையே என்ற தாழ்வுமனப்பான்மையுடன் பலர் வருத்தப்படுவதைப் பார்க்கமுடிகிறது.

அதுவும் அநியாயத்துக்கு நம் தமிழகத்து மக்களிடம் இந்த மோகம் சமீப காலமாகப் பெருகிக்கொண்டிருக்கிறது. ஆங்கிலப்பள்ளிகள், ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் என்று ஆங்கிலத்தைக் கையில்வைத்துக்கொண்டு ஆயிரமாயிரமாய்ப் பணம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் பலர்.

ஆங்கிலேயர்கள் ரெண்டுபேர் சந்தித்துக்கும்போது ஆங்கிலத்தில் பேசலாம், தப்பில்லை. ஆனா, தமிழ் தெரிஞ்ச ரெண்டு தமிழர்கள் சந்திக்கும்போது அங்கேயும் ஆங்கிலத்தில்பேசி தன் புலமையைக் காட்டிக் 'கொல்'லும்போது, வேடிக்கையாய்த்தான் இருக்கிறது. இதுவே ஒரு மலையாளியும் இன்னொரு மலையாளியும் சந்தித்துக்கொண்டால், என்னதான் அவங்க ஆங்கிலத்தை அரைச்சுக் குடிச்சவங்களா இருந்தாலும், மலையாளத்தில்மட்டுமே பேசிக்குவாங்க. இது தமிழர்களாகிய நாம் கவனிக்கவேண்டிய விஷயம்.

ஆங்கில அறிவு அவசியம்தான். ஆங்கிலத்தில் எழுதவும் படிக்கவும் தெரிஞ்ச அநேகருக்கு, ஆங்கிலத்தில் பேசவராது. காரணம் போதிய பயிற்சியில்லாமை. அஞ்சாவதுகூடப் படிக்காம, அயல்நாட்டுக்கு வேலைக்குப்போன அஞ்சலை, கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி, அருமையா ஆங்கிலம்பேசுவதைப் பார்க்கமுடிகிறது. இதுபோல, நிர்பந்தமும், வாய்ப்பும் அமைகையில் நிச்சயம் நம்மாலும் ஆங்கிலத்தில் பேசமுடியும்.

ஆங்கிலத்தில் பேசியே ஆகணும்னு முடிவெடுத்துட்டீங்கன்னா, உடனே, ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாருங்க. கையில கிடைக்கிற ஆங்கில செய்தித்தாள் மற்றும் புத்தகங்களைப் படிக்க ஆரம்பிங்க. அதையும், சும்மாப் படிச்சாப் பத்தாது. வாய்விட்டு வாசிக்கணும். தொடர்ந்து இதுபோல வாசிக்கும்போது ஆங்கில வார்த்தைகளைச் சேர்த்து உச்சரித்தல் சுலபமாகிப்போகும். தப்பு சரின்னு கவலைப்படாம தைரியமாப் பேசவேண்டியது இங்கே ரொம்ப முக்கியம். இப்படி, அசராம முயற்சிபண்ணினா, ஆங்கிலம் நம்மகிட்ட வந்து அடிமையா நிக்கும். அதைவிட்டு, அதைப்பார்த்து பயந்துபோனோம்ன்னா அது நம்மை மிரட்டிக்கிட்டே இருக்கும்.

ஆங்கிலம் தெரியலேன்னு நாம வருத்தப்படுறோம். ஆனா, தமிழ் தெரியலேன்னு எந்த ஆங்கிலேயனாவது வருத்தப்பட்டதைப் பாத்திருக்கீங்களா? ஆங்கிலத்தில் எண்களின் பெயரைமட்டும் தெரிந்துவைத்துக்கொண்டு, திறமையாய்த் தொழில் நடத்தும் சைனாக்காரர்கள் பலரை அமீரகத்தில் பார்த்ததுண்டு. அவர்களெல்லாம் ஆங்கிலம் தெரியவில்லையென்று அதிகமாக அலட்டிக்கொள்வதில்லையென்றே தோன்றுகிறது.

இதைவிடவும் முக்கியமாக, என் பிள்ளைகளுக்குத் தமிழே பேசத்தெரியாதுன்னு சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ளும், தமிழர்கள் பலர் இருக்கிற இந்த உலகத்தில், ஆங்கிலம் பேசத்தெரியாத தமிழனாகஇருப்பது ஒண்ணும் அத்தனை குத்தமா எனக்குத் தெரியலை.

கடைசியா ஒரு விஷயம்...ஆங்கிலம் என்பது அறிவில்லை, அது ஒரு மொழி மட்டுமே. சுட்டுப்போட்டாலும் எனக்கு ஆங்கிலம் வராதுன்னு சொல்றவங்களா நீங்க? வருத்தப்படவேண்டாம்...என் அன்னைமொழியில் என்ன இல்லையென்று பெருமையுடன் நிமிர்ந்து நில்லுங்கள். இன்னும் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் கடலளவு இருக்கிறது நம் தமிழில்.

4 comments:

 1. நல்ல பதிவு சுந்தரா.

  ReplyDelete
 2. நன்றிகள் அக்கா.

  ReplyDelete
 3. //ஆங்கிலம் என்பது அறிவில்லை, அது ஒரு மொழி மட்டுமே. //
  ரொம்பச் சரியா சொன்னீங்க!
  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 4. நன்றிகள் சரவணன்!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails