Monday, November 29, 2010

அவங்களுக்கு.....தலைக்கு "மேல" வேலையிருக்குதாம்!!!என் தோழியோட அப்பா அம்மாவுக்கு எழுவது வயசுக்குமேல் இருக்கும். அவங்களுக்குக் கல்யாணமான புதுசில் அவங்களோட ஓய்வு நேரத்தை எப்படிக் கழிச்சாங்கன்னு அவங்க சொல்ல அத்தனைபேரும் விழுந்துவிழுந்து சிரிச்சோம்...

கல்யாணமான புதுசுல, அதை வாங்கித்தாங்க இதை வாங்கித்தாங்கன்னு அவுகள ஒருநாளும் பிடுங்கி எடுத்ததில்ல...ஆனா,அவுக தலையிலிருக்கிற வெள்ளை முடிகளை ஒண்ணொண்ணாத் தேடித்தேடிப் பிடுங்கியெடுப்பேன்" என்று சொல்லி வெள்ளையாச் சிரிச்சாங்க என் தோழியின் அம்மா.

அப்பா,உங்களுக்கு சின்ன வயசிலயே அவ்வளவு வெள்ளை முடியா இருக்கும் என்று நான் கேட்க, "அதிகமா இருந்தாத்தான் அப்புடியே விட்டிருப்பேனே...ஆனா அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருக்கிறதைத் தேடிப் பிடுங்குறேன்னு சொல்லி, ஆறேழு வருஷத்துல தேடினாக்கூட கறுப்பு முடி கிடைக்காதுங்கிற அளவுக்கு ஆக்கிட்டா உங்கம்மா என்று சொல்லி, குறும்பாகச் சிரிச்சாங்க தோழியின் அப்பா.

இருக்கிறதைப் பிடுங்கியெடுத்தா, இன்னும் அதிகமாகும்னு அப்ப தெரியல...இப்பத்தான் தெரியுதுன்னு சொல்லி தன் கணவரைப்பார்த்துச் சிரிச்சாங்க தோழியின் அம்மா.

பத்துவருஷத்துக்குமேலிருக்கும்...அப்போ,நான் துபாய்க்கு வந்த புதுசு. தோழிகூட வெளியே போனபோது, கண்ணில் பட்ட அந்தக் காட்சியில் அதிர்ந்துபோய்விட்டேன். "அச்சச்சோ, அங்க பாருங்களேன்...அந்தப்பொண்ணுக்கு தலையில ஏதோ பெரிய அடி பட்டிருக்குன்னு நினைக்கிறேன். சுத்திக் கட்டுபோட்டிருக்கு பாருங்க..." என்று நான் பதறிப்போய்ச்சொல்ல, பக்கத்திலிருந்த என் தோழி பதற்றமே இல்லாம சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

என்னடா இது, கொஞ்சங்கூட வருத்தப்படாம சிரிக்கிறாங்களேன்னு பார்த்தா, "ஐயோ, இது அடியுமில்லை, காயமுமில்லை...அவங்க, பார்லர்ல போயி,தலைக்கு ஹென்னா போட்டிருக்காங்க. அதனால தலையைச் சுத்தி அது வழியாம 'பேக்' பண்ணியிருக்காங்க என்று சொல்ல, மறுபடியும் அந்த வித்தையைத் திரும்பிநின்று பார்த்தேன்.

வெள்ளை முடியை மறைக்க வகை வகையா ஹேர்டை உபயோகிச்சு இப்ப டை அடிக்கிற அளவுக்குக்கூட முடியில்லாமப்போச்சு என்று வருத்தப்படுறவங்க அநேகம்பேரை இப்ப பார்க்கமுடிகிறது.ரஜினி கூட ஒரு நிகழ்ச்சியில சொன்னார், ஒவ்வொரு ஹேர் டையா மாத்திமாத்தி அடிச்சுப்பார்த்து, கடைசியில நமக்கு ஹேர் டை ஒத்துக்கலேன்னு தெரிஞ்சப்ப, தலைமுடியில பாதி போயிருச்சுன்னு.


என் பெரியம்மாவோட கதையும் அதுமாதிரிதான்...லேசா நரை தெரியிறப்போ, கண்மையைத் தடவி காப்பாத்திக்கிட்டிருந்தேன். அப்புறம் மருதாணியைத் தடவுன்னு சொன்னாங்க. மருதாணி தடவிக்கிட்டா மறுநாளே ஜலதோஷம் பிடிச்சுக்கிட, வைத்தியம் பாத்துக்கிட்டு வருத்தத்தோட இருந்தப்ப,செயற்கையாக் கிடைக்கிற கலர் பத்திச் சொன்னாங்க. அடுத்ததா அதை அடிச்சுக்க ஆரம்பிச்சேன். விட்டேனாபார்ன்னு வந்துசேர்ந்திச்சு அலர்ஜி.அத்தோட முடியும் குறைய ஆரம்பிச்சிருச்சு.

அத்தோட விட்டேன் அத்தனை முயற்சியையும். இப்பப்பாரு, மாசத்துக்கொருதடவை கலர் பண்ணிக்கிட்டு உங்க பெரியப்பா சின்னப்பையன் மாதிரி இருக்கார் நான் அவருக்கு அக்கா மாதிரி இருக்கேன் என்று ஆதங்கத்தோட அலுத்துக்குவாங்க அவங்க.

அலுத்துக்காதீங்க பெரியம்மா... முதுமையும் நரையும்கூட அழகுதான். அது உங்க அனுபவத்தோட வெளிப்பாடு. அன்னை தெரசாவும் அழகுதான், அப்துல்கலாமும் அழகுதான். ஆனா, அவங்கல்லாம் டை அடிச்சோ மேக்கப் போட்டோ அவங்க அழகை வெளிப்படுத்திக்கல. அவங்களோட அன்பாலயும் அறிவாலயும்தான் அழகாத் தெரியிறாங்க.
அதுமாதிரி, நம்ம அன்பு,பண்பு, அறிவு இதைவச்சு நம்ம அழகை வெளிப்படுத்திக்கிட்டாப்போதும்னு அவங்ககிட்ட ஆறுதலாச் சொல்லிட்டுவந்தேன்.

ஆனாலும், முன்னால தெரியிற ஒண்ணுரெண்டு நரைமுடியை என்னசெய்யலாம்னு கண்ணாடி என்னைக் கேட்டுக்கிட்டே இருக்குது. என்ன சொல்லட்டும்???

Thursday, November 25, 2010

ஐயோ...என்னதிது??!

புளிப்பு சாப்பிடும் பூக்கள்...

எத்தனையோ தடவை டேஸ்ட் பண்ணியிருந்தாலும் எலுமிச்சம்பழத்தை,ஒவ்வொருதடவை வாயில் வைக்கும்போதும் உச்சிமுதல் உள்ளங்கால்வரை ஒரு சிலிர்ப்பு ஓடும்.

முதல்முதலா சில குழந்தைகள் எலுமிச்சம்பழத்தை டேஸ்ட் பண்ற வீடியோ இது...அநேகர் பார்த்திருப்பீங்க. பார்க்காதவங்களுக்காக...
Tuesday, November 23, 2010

ஹெச் ஐ வி பாசிட்டிவ்...மற்றதெல்லாம் நெகட்டிவ்...

'தாயற்றபோதே சீரற்றுப்போகும்' என்று சொல்வழக்கு ஒண்ணு உண்டு நம்ம ஊரில்.  அது அந்த ஆப்பிரிக்கப் பெண்ணுக்கும் அப்படியே பொருந்தித்தான் போனது....

அவளுக்கு வயது பதினெட்டு. அவளோடு சேர்த்து வீட்டில் ஆறு பிள்ளைகள். அத்தனையையும் விட்டுவிட்டு செத்துப்போனாள் அவளுடைய தாய்.  கட்டிய மனைவி காலமானதும், பிள்ளைகள் ஆறுபேரையும் விட்டுவிட்டு, எங்கேயோ போய்விட்டார் அவர்களுடைய தந்தை.

ஆளுக்கொரு திசையாய்ப்போனார்கள் பிள்ளைகள் ஆறுபேரும். ஒற்றையாகிப்போனாள் பதினெட்டு வயசு ரெபேக்கா. காய்கிற வயிற்றுக்கு உணவும், காப்பாற்றிக் கைகொடுக்கக் கொஞ்சம் அன்பும் கிடைக்காதா என்ற ஏக்கத்திலிருந்த அவளுக்கு, அந்த ஆண்மகனின் அருகாமை ஆறுதலாயிருந்தது. அவனே எல்லாமென்று நம்பிய அவளுக்கு அவனிடமிருந்து பரிசாகக் கிடைத்ததோ இரண்டு. ஒன்று, வயிற்றில் உருவான குழந்தை, இன்னொன்று பால்வினை நோய்.

இரண்டாவதின் காரணம் அறியமுற்பட்டபோதுதான் உணர்ந்தாள், அவளுடைய கணவன் அவளுக்கு உண்மையானவனாக இருக்கவில்லை, பல பெண்களுடன் பழக்கம் வைத்திருக்கிறான்  என்பதை.  விளைவு விவாகரத்தில் முடிந்தது வாழ்க்கை. இடையில்விட்ட உயர்நிலைப் படிப்பைத் தொடரலாம் என நினைத்தாள் அவள். ஆனால், கல்வியில் கவனத்தை ஒருமுகப்படுத்தமுடியாமல், எல்லாத்தேர்வுகளிலும் தோல்வியுற்றாள் அவள். வெறுமையாய்ப்போன வாழ்வில், வேதனைகளைக் கிறுக்கிச்சென்றது விதியின் கைகள்.

மனதில் நிறைந்த வெறுமையையும் வேதனையையும் துடைக்க, இன்னுமொரு  இதமான துணை கிடைக்காதா என்று ஏங்கினாள் அவள். இருபத்துமூன்று வயதில் இன்னொரு திருமணமும் செய்துகொண்டாள்.

வாழ்ந்து ஜெயிக்கவேண்டுமென்ற உத்வேகத்தில்,  வேலைதேடி மும்முரமாய் இறங்கினாள் அவள். அவளுக்கும் அவள் கணவனுக்கும் உள்ளூரிலுள்ள ஒரு சுகாதார நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையின் ஒளியை உணரத்தொடங்கினாள் அவள்.

முந்தைய திருமணத்தின் வலியும், ஏற்கெனவே இருக்கிற ஒரு குழந்தையை வளர்த்தால்போதும் என்ற நினைப்பும், மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தைத் துரத்தியது அவளிடமிருந்து. ஆனாலும், இரண்டு வருடங்களுக்குப்பிறகு, இரண்டாவது கணவனின் ஆசைக்கு ஒத்துக்கொண்டு, ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள் அவள்.

ஒரே வயதுதான் ஆகியிருந்தது அவள் மகனுக்கு. அதற்குள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள் அவள். உடம்பில் என்னவென்றே தெரியாமல், திடீர்திடீரென்று தோன்றுகிற தடிப்புகளும், அடிக்கடி வருகிற காய்ச்சலுமாக அவதிப்பட்டாள் அவள். காரணம் என்னவென்று சோதித்தபோது, எல்லாமே காலங்கடந்துபோயிருந்தது. ஹெச் ஐ வி நோய்க்கிருமிகள் உச்சந்தலைமுதல் உள்ளங்கால்வரை பரவிப்போயிருந்தன அவளுக்கு.

அவள் மட்டுமின்றி, பிறந்த ஆண்குழந்தையும் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தாள். இரண்டாவது திருமணவாழ்க்கை கொடுத்த வெகுமதி அது என்று உணர அதிகநேரமாகவில்லை அவளுக்கு. அவள் கணவனோ, மனைவியின் சுகவீனம் பற்றி எதுவுமே அறியாதவனாக, இரவு விடுதிகளிலும், மதுக்கடைகளிலும் விழுந்துகிடந்தான்.

அடுத்ததாக வந்தது, அவளுக்கு எலும்புருக்கி நோய். உடம்பின் எதிர்ப்புசக்தி மிகக்குறைவாக இருந்த காரணத்தால், உட்கொண்ட மருந்துகள்கூட உதவாமல் போயின. அரசின் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்கள் அவளும் அவளது இரண்டு வயது மகனும். எயிட்ஸ் நோய்க்கான பதினைந்துநாளுக்கான ஆரம்ப சிகிச்சைக்கு ஆயத்தமானார்கள்.

 சின்ன உடம்பில் செலுத்தப்பட்ட வீரியமான மருந்துகள், அவற்றின் உக்கிரம் தாங்கமுடியாமல் ஏழாம் நாளே இறந்துபோனான் அவளது மகன். இழப்பின் துயரம், எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் வீரியம் இரண்டுமாகச் சேர்ந்து, விதவிதமான வலிகளை உண்டாக்கியது அவள் உடம்பில். மூத்த மகளையும் பராமரிக்கமுடியாதவளாக, அவளைத் தன் சகோதரியின் வீட்டுக்கு அனுப்பிவைத்தாள் ரெபேக்கா.

பட்ட காலிலே படும் என்பதுபோல, விட்டுச்செல்லமாட்டேனென்று மறுபடியும் வந்தது எலும்புருக்கிநோய், கொஞ்சங்கொஞ்சமாக அவள் உடல், அசையக்கூடமுடியாமல் ஆகிப்போனது. அப்புறம் எடுத்த சிகிச்சைகளாலும் பயிற்சிகளாலும் உட்காரக்கூடிய அளவுக்கு ஓரளவுக்குத் தேறியிருக்கிறாள்.

ஆனால், இத்தனைக்கும் காரணமான அவள் கணவன், உடம்பில், ஏகப்பட்ட சுகவீனங்கள் இருந்தாலும் மருத்துவ சிகிச்சைக்கு உட்படாமல் தன் மைனர் வாழ்க்கையைத் தொடர்ந்தபடியிருக்க, இறப்புக்கும் பிழைப்புக்கும் இடையில் இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிறாள் அவள்.

இது, உலகின் எங்கோ ஒரு மூலையில், மலாவி என்ற ஆப்பிரிக்கநாட்டில் வசிக்கிற பெண்ணொருத்தியின் கதைதான் என்றாலும், இந்தியாவில் தென்பாதி மாநிலங்களிலும், வடகிழக்கில் மணிப்பூர், நாகாலாந்திலும்தான்  எயிட்ஸ் மிக அதிகமாகப் பரவியிருக்கிறது என்பது அதிர்ச்சியான விஷயம்.

2007 ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2.31 மில்லியன் மக்கள், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதில் 3.5 சதவீதம்பேர் குழந்தைகள் என்றும் தெரிகிறது. புள்ளிராஜாக்கள்முதல் பள்ளிக்கூடக்குழந்தைகள் வரை எல்லோரிடமும் பரவியிருக்கும் இந்த உயிர்க்கொல்லி நோயை இல்லாமல் செய்ய எல்லா மக்களுக்கும் விழிப்புணர்வு மிக அவசியம்.அதைவிட முக்கியமாக, தனிமனித ஒழுக்கம் மிகமிக அவசியம்.

இதில், கொஞ்சம் ஆறுதலான விஷயம் என்னன்னா, இந்த ஒன்றிரண்டு வருடங்களில் எயிட்ஸ் நோய் பரவுவது கொஞ்சம் குறைந்திருக்கிறதாம்.

பி.கு: மேலேயிருக்கிற படத்தைப்பார்த்ததும், மனசில் சட்டென்று தாக்கியது ரெண்டு விஷயம்...ஒண்ணு, நம்ம இந்திய நாட்டின் மொட்டையான உருவ அமைப்பு, இன்னொண்ணு, அதிகம் பாதிக்கப்பட்ட தென் மாநிலங்களில், கேரளா இல்லாமலிருப்பதும்,அதற்குக் காரணமான அடிப்படைக் கல்வியும், விழிப்புணர்வும் மற்ற மாநிலங்களில் போதுமான அளவு இல்லாமலிருப்பதும்தான். ஆக, கேரளாவைப் பார்த்து, நாம படிக்கவும் கத்துக்கணும், பாதுகாப்பா இருக்கவும் கத்துக்கணும்.

Monday, November 22, 2010

நமக்கிருக்கிற மரியாதையைப் பாருங்க...

இந்தப் பிறவியில் புண்ணியம் செய்யுங்கள்...அப்பொழுதுதான், அடுத்த பிறவியிலாவது இந்தியனாகப் பிறக்கலாம் என்று சீனாவிலுள்ள ஒரு பள்ளிக்கூடச் சுவற்றில் எழுதப்பட்டிருந்ததாக முன்னர் எங்கோ படித்த ஞாபகம்..

இதுமாதிரியே நம்ம சந்த்ரயான் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டபோது, கத்தார் நாட்டுப் பத்திரிக்கையொன்று, இந்தியத் தொழிலாளர்களை இளக்காரமாக நினைக்காதீர்கள். அவர்களுக்குச் சந்திரனுக்கே ராக்கெட் விடுமளவுக்கு அறிவுத்திறமை உண்டென்று எழுதியதாகவும் படித்ததுண்டு. இன்றைக்கு, இங்கே துபாயிலுள்ள பத்திரிக்கையொன்றில் படித்ததும் அதுமாதிரி ஒரு விஷயம்தான்...

துபாய் மெட்ரோ ரயிலின், கோல்ட் க்ளாஸில்( அதுதாங்க ஃபர்ஸ்ட் க்ளாஸ்) பயணிக்கச் சீட்டுவாங்கிய ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்ணை, அந்தப் பெட்டியில் கண்காணிப்புப் பணியிலிருந்த இன்னொரு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண், இது முதல் வகுப்புப்பயணிகள் ஏறக்கூடிய பெட்டி, நீங்கள் ஏறக்கூடாது என்று உரத்த குரலில் அதட்டியிருக்கிறாள். அதற்கு, ஏறிய அந்தப்பெண்,  என்னிடமும் கோல்ட் க்ளாஸ் டிக்கெட் இருக்கிறது என்று பதில் சொல்லியிருக்கிறாள். ஆனாலும்,  நம்பாமல் அந்தப் பெண்ணுடைய, பயணச்சீட்டை வாங்கிப் பரிசோதித்தபின்னும்கூட, நம்பிக்கையில்லாமல் அவளைப் பார்த்தாளாம் அந்தக் கண்காணிப்பு அதிகாரி.

இந்த நிகழ்ச்சியால் கோபமுற்ற அந்த பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண், பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்காங்க. அங்கேதான் நிக்குது நம்ம இந்தியர்களின் பெருமை.

அந்தப்பெண், தன்னுடைய கடிதத்தில், என்னிடம் சரியான பயணச்சீட்டு இருந்தும், பயணம் முழுக்க என்னைச் சந்தேகமாகப் பார்த்தீர்கள். நாளை இதுபோல, சோர்வுற்ற ஒரு இந்தியத் தொழிலாளி வந்து ஏறும்போது, அவரையும் இதுபோல இகழ்ச்சியாகப் பார்த்து, சந்தேகமாகக் கேள்வி கேட்காதீங்க. ஏன்னா, அவர் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருக்கலாம். தன்னுடைய சொந்த ஜெட் விமானத்தை விட்டுவிட்டு, மெட்ரோவில் பயணிக்கவந்திருக்கலாம். அதனால் எச்சரிக்கையாக இருங்கள் என்று எழுதியிருக்காங்க...என்ன ஒரு மரியாதை பாருங்க....எனக்குப் படிக்கும்போதே புல்லரிச்சிருச்சு :).Sunday, November 21, 2010

"கொள்ளை" கொண்ட கதை!அது ஒரு அடர்ந்த கானகம்...அங்கே ஒரு கொள்ளைக்காரன். அவன் பேரு ரத்னாகரன். அந்தக் காட்டுப்பகுதியில, வருகிற போகிறவங்ககிட்டயெல்லாம், வழிப்பறி செய்து வாழ்க்கையை நடத்திக்கிட்டிருந்தானாம்.

ஒருநாள், வழிப்பறிபண்ண யாருமே கிடைக்காம அலைஞ்சப்ப, அவங்கிட்ட, முதன்முதலாக வந்து மாட்டினாராம் ஒருத்தர்.  ஆனா, அவர்கிட்டே கொள்ளையடிக்கிற்துக்கு எதுவுமே இல்லையாம். கோபம் வந்திச்சு அந்தக் கொள்ளைக்காரனுக்கு.

கையிலயும் பையிலயும் ஒண்ணுமே இல்லாம இப்படி சுத்திக்கிட்டிருக்கியே, எப்படின்னு அவரைப்பார்த்துக் கேட்டானாம் கொள்ளையன். அதற்கு அந்த வழிப்போக்கர், என் பெயர் நாரதன்...திரிலோக சஞ்சாரி, காசில்லாமலே எல்லா இடத்திலும் சஞ்சாரம் செய்யக்கூடியவன் என்று சொல்லிவிட்டு.  "நீ ஏன் இவ்வாறு கொள்ளைத் தொழில்செய்து காலம்கடத்துகிறாய் ?..." என்று கேட்டாராம்.

அதற்கு  அந்தக் கொள்ளையன், "என்னைப் பெற்றவர்களையும், மனைவி, மக்களையும் காப்பாற்றவே நான் கொள்ளையடிக்கிறேன்" என்று சொன்னானாம். அதற்கு நாரதர், "அப்படியானால் நீ செய்கிற இந்தப் பாவமாகிய வழிப்பறியில், அவர்களுக்கும் பங்கிருக்கிறதா?" என்று கேட்டாராம். அதற்கு அந்தக் கொள்ளையன், "ஏன் இல்லை, நான் கொள்ளையடிக்கிற பொருளில் பங்கிருக்கிறமாதிரியே இந்தப் பாவத்திலும் அவர்களுக்கும் பங்கு உண்டு" என்றானாம்.

அதற்கு நாரதர், "எதற்கும், நீ இதை உன் குடும்பத்தினரிடம் கேட்டுவிட்டு, வந்து பதிலைச்சொல்" என்றாராம்.  அதற்கு அவன், நாரதரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு, தன் வீட்டுக்குப்போய்,கேள்விக்கு பதில்தெரிந்துகொள்ளப்போனானாம். திரும்பிவந்தபோது, திகைத்துப்போயிருந்தானாம் அவன்.

என்னாச்சு ரத்னாகரா? என்று அவனைக்கேட்டாராம் நாரதர். அதற்கு அவன், கட்டிவைத்திருந்த நாரத முனிவரை அவிழ்த்துவிட்டுவிட்டு,
"எங்கள் அனைவரையும்  காப்பாற்றுவது உன்னுடைய கடமையேயன்றி, நீ செய்யும் எந்தப் பாவத்திலும் எங்களுக்குப் பங்கில்லை என்று என் பெற்றவர்கள்முதற்கொண்டு எல்லாரும் மறுதலித்துவிட்டார்கள் ஐயா..." என்று மனவருத்தத்தோடு சொன்னானாம்.

அதற்கு நாரதர், "அதுதான் உண்மை ரத்னாகரா...பாவமோ புண்ணியமோ, அவனவன் செய்யும் செயல்களுக்கு அவனவனே பொறுப்பாவான். பாவப்பொருளில் மற்றவர்களுக்குப் பங்கிருந்தாலும், பெறப்போகும் தண்டனையில் அவ்ர்களுக்குப் பங்கு கிடையாது" என்று கூறினாராம்.

தான் செய்த செயல்களால், தனக்குப் பாவங்கள் சேர்ந்துவிட்டதே என்று அஞ்சிநடுங்கினானாம் அவன். அன்றைக்கு மனம்திருந்திய அந்த ரத்னாகரனாகிய வால்மீகியிடமிருந்துதான்  இன்றைக்கும் பேசப்படுகிற  ராமாயணம் பிறந்தது. கதையை நிறுத்திவிட்டு, கன்னத்தில் கைவைத்தபடி கதைகேட்டுக்கொண்டிருந்த தன் பேரனையும் பேத்தியையும் பார்த்தாள் லச்சுமிப்பாட்டி .

கதையைக்கேட்டுமுடித்ததும், கன்னத்திலிருந்த கையை எடுத்துட்டு, கவிதாக்குட்டி கேட்டது. "ஏன் பாட்டி, இப்பவும்தான் நிறையபேர் எவ்வளவோ கொள்ளையடிக்கிறாங்க...ஆனா, இப்பல்லாம் யாரும் அதுமாதிரி, கதையோ காவியமோ எழுதுறதில்லையே,  அது ஏன்??? என்று கேட்டது.

பாத்தியா பாட்டி, இவ கதையை ஒழுங்காவே கேக்கல...
 மக்கு...மக்கு...அதுக்கெல்லாம் முதல்ல மனசாட்சின்னு ஒண்ணு இருக்கணும்டி, என்று சொல்லிவிட்டுச் சிரிக்க ஆரம்பித்தான் கவிதாவின் அண்ணன் கார்த்தி.

சின்னக்குழந்தைகளின் புரிதலைப்பார்த்து சந்தோஷப்பட்டவளாக, மௌனமாய்த் தலையசைத்தாள் லச்சுமிப்பாட்டி.


Friday, November 19, 2010

அவங்க மனசிலும் ஆசைகள் இருக்கும்...

விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். வயது 65 இருக்கும். பணியிலிருக்கும்வரைக்கும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றிவந்த பெண்மணி, இப்போது சர்க்கரை வியாதியின்பிடியில் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தாங்க.

கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருக்கவும், மெல்ல வெளியில்வந்தது அவங்க மனக்குறைகள். "வீட்ல, ஆளாளுக்கு அவங்கவங்க வேலையைப் பாக்கிறாங்க. வெளியில போறாங்க வர்றாங்க.ஆனா, என்னையும் எங்கேயாவது கூட்டிட்டுப்போகணும்னா பிடிக்கமாட்டேங்குது இவங்களுக்கு..." என்றுசொல்லி வருத்தப்பட்டாங்க அவங்க.

அதைக்கேட்டுக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவங்க கணவர், "எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போகணுனுதான் ஆசைம்மா. ஆனா, இவளால, வேகமா நடக்கமுடியல, கோயில்களுக்குப்போனால்கூட, கொஞ்சநேரம் செருப்பில்லாம நடக்க கஷ்டப்படுவா. வாகனத்தில் பிரயாணம் பண்ணும்போதும், யாராவது தெரியாம காலில் லேசா இடிச்சிட்டாலோ, மிதிச்சிட்டாலோகூட வலிதாங்கமுடியாம துடிச்சுப்போயிடுறா."

"அதுமட்டுமில்லாம, விருந்து வைபவங்களுக்குப்போய், தாமதமாய்ச் சாப்பிட்டாலோ அல்லது, சாப்பாடு வித்தியாசமானதாயிருந்தாலோ உடம்புக்கு ஒத்துக்காம ரொம்ப கஷ்டப்பட்டுப்போயிடுறா. அதனாலதான் கூடியவரைக்கும் வெளியில கூட்டிப்போறதைத் தவிர்க்கிறோம்" என்று அவரும் வருத்தமாய்ச் சொன்னார். கேட்கும்போது அதுவும் நியாயமானதாய்த்தான் இருந்தது.

அப்புறம், அவங்ககிட்ட கொஞ்சநேரம் ஆறுதலாய்ப் பேசிவிட்டு, முடிஞ்ச அளவுக்கு சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வச்சுக்கிட்டு, தூரமாக எங்கேயும் போகலேன்னாலும் பக்கத்தில் நடந்துபோய் நாலுபேரைப் பாருங்க. கோயிலுக்குப் போனால்கூட, காலில் ஒரு சாக்ஸ் போட்டுக்கிட்டுப் போங்கன்னு சொல்லிட்டுவந்தேன்.ஆனாலும், அன்றிலிருந்து, முதுமையும் நோயும் சேர்ந்து ஒருத்தரை எந்த அளவு முடக்கிவிடுகிறதுன்னு மனசுக்குள் ஒரு கலக்கம்.

ஆனா, நேத்து துபாயிலிருக்கிற முஷ்ரிஃப் பார்க்குக்குப் போனபோது, நான் பார்த்த இரண்டு காட்சிகள் வியப்பைத் தோற்றுவித்தது மறுக்கமுடியாத நிஜம்.முதலாவது பார்த்த அந்த முதியவருக்கு வயது நிச்சயம் எண்பத்தைந்துக்கு மேலிருக்கும். திக்கித்திக்கிப் பேசுகிறார். கொஞ்சம் கூன்போட்டு நடக்கிறார். ஆனால்,அத்தனை நிதானம் இல்லை. எல்லாரும் புல்தரையில் பாயில் உட்கார்ந்துகொண்டு, அவரை எங்களுக்கு அருகிலிருந்த ஒரு பெஞ்ச்சில் உட்காரவைத்தார்கள்.

ஐந்து நிமிடம்கூட இருக்காது, அந்த இடத்தைவிட்டு எழுந்து கால்போனபோக்கில் நடக்க ஆரம்பித்தார் பெரியவர்.அவரையே கவனித்துக்கொண்டிருந்த அவரது பேரன், ஓடிப்போய், கையைப்பிடித்துக் கூட்டிவந்து உட்காரவைத்தான். அடுத்த சில நிமிஷங்களில், மறுபடியும் எழுந்து நடக்க ஆரம்பித்தார் அவர். அப்போது. அவரது பேத்தியாக இருக்கவேண்டும், பத்துப்பன்னிரண்டு வயசுப்பெண்குழந்தை கையில் உணவுத் தட்டுடன் ஓடிவந்து, அவரை உட்காரவைத்து, தட்டிலிருந்த சாப்பாட்டை ஸ்பூனால் ஊட்ட ஆரம்பித்தது அவருக்கு.

சாப்பிட்டுமுடிப்பதற்குள் பத்துப்பன்னிரண்டு தடவை எழுந்து நடக்க ஆரம்பித்தவரைப் பொறுமையாக உடகாரவைத்து, முழுச்சாப்பாட்டையும் ஊட்டிவிட்டது அந்தக்குழந்தை. பார்க்கும்போதே நெகிழ்ச்சியாக இருந்தது.

மாலையில் பார்க்கிலிருந்து புறப்படும்போது கண்ட இன்னொரு காட்சி, ஏற்கெனவே பார்த்த காட்சியை மறக்கடித்து விடும்போலிருந்தது. இருபதுக்குமேல் உறுப்பினர்களுடைய அரபுக் குடும்பம் அது.

அப்போதுதான் வந்து இறங்கினார்கள். அதில், ஒரு பாட்டி. அந்தப் பாட்டிக்கும் எண்பது வயசுக்குமேலிருக்கும். கால்கள் நடக்கமுடியவில்லை.மடங்கியிருந்தது. கூடவே இறங்கியது ஒரு வீல்சேர். ஆனால், இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் மேடு பள்ளமாயிருந்ததால், அந்தப்பாட்டியின் பேத்திபோலிருந்த டீனேஜ் வயசுப் பெண்கள் இருவர் பாட்டியை இருபுறமும் பிடித்துக் குழந்தையைப்போல தூக்கிக்கொண்டே போனார்கள்.

புல்தரைக்குப்போனதும் வீல்சேரை விரித்து உட்காரச்சொன்னார்கள். மறுத்த பாட்டி, தன்னைக் கீழே விடச்சொல்லி, புல்தரையில் உட்கார்ந்து, இரு கைகளையும் ஊன்றி, சிறுகுழந்தைபோல அங்கேயும் இங்கேயும் வேகமாகத் தவழ்ந்துபோனது. பார்க்கும்போதே கண்ணில் நீர்துளிர்த்தது எங்களுக்கு. ஆனால் பாட்டியின் முகத்தில் அத்தனை பரவசம்,சந்தோஷம். வீட்டுச் சிறைக்குள்ளிருந்து வெளியில்வந்த குதூகலம்போல் தெரிந்தது.

பார்த்துவிட்டுப் புறப்பட்ட எனக்கு மனசுமுழுக்கப் பாட்டிதான் நிறைந்திருந்தது. அதையும் மீறி எழுந்தது இந்தக் கேள்வி. ஒருவேளை நம்மநாட்டு மக்களுக்கு மட்டும்தான் பெரியவர்களை வைத்துக் கவனித்துக்கொள்வது ஒரு சுமையாகத் தெரிகிறதோ?Tuesday, November 16, 2010

ரத்த வாளியும் , ராத்திரி அலறலும்!

புதுசா வர்ற மாணவிகளைக் கலவரப்படுத்தணும்னே, ஒவ்வொரு கல்லூரி விடுதியிலும் ஒன்றிரண்டு சம்பவங்களை வழிவழியா சொல்லிவச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். இதுக்கு எங்க கல்லூரி விடுதிமட்டும் விதிவிலக்கா என்ன?

அது ஒரு வெள்ளிக்கிழமை. விடுதியில் சேர்ந்து ஒரு மாசம்தான் இருக்கும்...வீட்டு நினைப்பெல்லாம் மாறி, தோழமைகளுடன் சந்தோஷமாயிருக்கப் பழகியிருந்த நேரம். மாலை, ஸ்டடி டைமில் ஆரம்பித்த பேய் பிசாசுக் கதைகள், பத்து மணிக்கு ஸ்டடி முடியும்வரைக்கும் தொடர்ந்தது.

அரைவட்ட வடிவிலிருந்த எங்கள் ஹாஸ்டலில், நடுவில் மெயின் என்ட்ரன்ஸ். இரு ஓரங்களிலும் மாடியிலிருந்து இறங்கிவரும் படிகளும் இருக்கும். முன் வாயிலின் இரண்டுபுறமும் கிட்டத்தட்ட பதினைந்து அறைகள் இருக்கும். நடுவில் மாணவிகளின் அறைகளும், ஓரங்களில், வார்டன் மற்றும் ஆசிரியர்களின் அறைகளும் இருக்கும். மாடியிலும் அதேமாதிரியே.

மொத்த அறைகளுக்கும் சேர்த்து ஹாஸ்டலின் இரு புறமும் வெளிப்பக்கத்தில் குளியலறை, கழிப்பறைகளிருக்கும். ஆனால், அறைகளின் வரிசையில், சம்பந்தமே இல்லாமல், மாடியின் ஓரத்திலிருந்த ஒரு தங்கும்அறை, தடுக்கப்பட்டு, கழிப்பறையாக்கப்பட்டிருக்கும். கழிப்பறைக்குள் கம்பிவைத்த ஜன்னல், கதவுகளுடன் இருக்கும். இரவில் மட்டுமே அந்த அறையைப் பயன்படுத்துவாங்க. மற்ற நேரம் பூட்டியே இருக்கும். கூட்டமாய்ப்போய் பயன்படுத்துவோமே தவிர, தனியே யாரும் அந்தப்பக்கம் போகமாட்டாங்க.

அந்த அறைதான் அன்றைக்குப் பேசுபொருளாகியிருந்தது. சம்பந்தப்பட்ட அந்த ஓரத்து ரூமில், ரெண்டு மாணவிகள் தங்கியிருந்தாங்களாம். அதிலே ஒரு பொண்ணு, ராத்திரியில் தண்ணீர்குடிக்க எழுந்தபோது,  காலில் ஏதோ இடறியதாம். லைட்டைப்போட்டு என்னன்னு பாத்தா, அறைக்கு நடுவில், ஒரு பக்கெட் நிறைய ரத்தம் இருந்திச்சாம். அலறியடிச்சுகிட்டு, அவள் அடுத்த பெண்ணை எழுப்ப, அங்கே அவங்க, குடிக்கத் தண்ணீர் வைத்திருந்த பாட்டிலிலும் ரத்தமே நிறைஞ்சிருந்ததாம்.

கதவைத்திறந்து வெளியே ஓடிவந்த அவங்க ரெண்டுபேரும், விடுதிக் கண்காணிப்பாளரை எழுப்பி விஷயத்தைச் சொல்லிவிட்டு, அங்கேயே மூர்ச்சையாகி விழுந்திட்டாங்களாம்.

இந்த சம்பவத்துக்கப்புறம், அந்த அறையில் யாருமே தங்கலேன்னாலும், அந்தப்பக்கம் யாரும் போனா, உள்ளேயிருந்து மெல்லிசா ஒரு அழுகை சத்தம் கேட்குமாம்... என்று அந்த சீனியர் அக்கா சொல்ல, திகிலில் உறைந்துபோயிட்டாங்க கேட்டுக்கொண்டிருந்த தோழிகள்.

பத்துமணிக்கு, அவரவர் அறைக்குப் படுக்கப்போனபோது, என் தோழி, கர்த்தாவே, எங்க எல்லாரையும் பேய் பிசாசுகளிலிருந்து காப்பாற்றும் என்று எங்க எல்லாருக்காகவும் வாய்விட்டு வேண்டிக்கொள்ள, நிம்மதியாய்ப் படுத்துத் தூங்க ஆரம்பிச்சோம் நாங்க. பரிட்சைக்குப் படிக்கவேண்டிய மற்ற மாணவிகள், வராண்டாவில் அமர்ந்து படிச்சிக்கிட்டிருந்தாங்க.

மணி பதினொண்ணரை இருக்கும். வெளியே சுற்றிவரும் காவலாளியின் விசில் சத்தம் 'உய்'யென்று கேட்ட அந்த நேரத்தில், வெளியே "ஓ" வென்று காதைக் கிழிக்கிற ஒரு அலறல் சத்தம்.

வெளியே படிச்சிக்கிட்டிருந்த மாணவிகள் எல்லாரும் அலறியடிச்சிக்கிட்டு கிட்ட இருந்த அறைகளுக்குள் நுழைந்து தாளிட்டுக்கொள்ள, கதவுகளின் சத்தமும் வெளியே மாட்டிக்கொண்டவர்களின் கூச்சலுமாய் கொஞ்ச நேரம் ஒரே களேபரம். ஒருவழியாய் எல்லோரும் அறைகளுக்குள் நுழைந்து, ஆசுவாசப்படுத்திக்கொண்ட நேரம், வெளியே கூட்டமாய் எழுந்த நாய்களின் அலறல் மேலும் கிலியை உண்டாக்க, மறுபடியும் அமைதியைக் கிழித்துக்கொண்டு எழுந்தது விசில் சத்தம். ஆடிப்போயிட்டோம் எல்லாரும்.

உறங்கப்போயிருந்த விடுதிக் கண்காணிப்பாளர்கள், தோட்டக்காரரென்று எல்லாரும் வந்து ஆளாளுக்கு விசாரிக்க, என்ன நடந்ததென்று யாராலும் சொல்லமுடியவில்லை. எதுவும் புரியவும் இல்லை. கர்த்தாவே, கடவுளே, முருகா,மகமாயி என்று ஆளாளுக்கு அவரவர் இஷ்ட தெய்வங்களைக் கும்பிட்டபடி, மறுபடியும் உறங்கப்போனோம்.

காலையில், சாப்பாட்டுக்கூடத்தில் சாப்பிட்டதும் குடித்ததும்கூட அதே விஷயத்தைத்தான். அப்பதான் பக்கத்து டேபிளிலிருந்து மெல்லக் கசிந்துவந்தது அந்த விஷயம். மாலையில் கேட்ட பேய்க்கதையில் பயந்துபோன ஒரு பெண், அதுமாதிரியே ஏதோ கனவுகண்டு கத்த ஆரம்பிக்க, அவளுடைய வினோதமான அலறல் சத்தத்தைக் கேட்டு மிரண்டுபோன மற்றவர்கள், விழித்து எழுந்து அலற, மொத்தக் களேபரமும் அதனால்தான் நடந்ததென்று அறிந்தபின்தான் அப்பாடாவென்று ஆசுவாசம் பிறந்தது.

ஆனால், அந்த ரத்தவாளிக்கதை மட்டும், கல்லூரி வாழ்வின் ஐந்து வருடங்களும் அவ்வப்போது பேசப்பட்டு, அநேகரைப்  பயமுறுத்திக்கொண்டுதான் இருந்தது. யார்கண்டது, அந்தத் தொடர்கதை, இப்போதும் ஒருவேளை அங்கு இரவுகளில் பேசப்பட்டு, எத்தனையோபேரைத் தூங்கவிடாமல் பயமுறுத்திக்கொண்டிருக்கலாம்.

                                                                   :) :) :) :) :) :)

Monday, November 8, 2010

மனிதனாய்க் கழுதையாய், நாயாய்க் குரங்குமாகி...

கடவுள் உலகத்து உயிர்களை ஒவ்வொன்றாக உருவாக்கிக்கொண்டிருந்த நேரம்...

முதலாவதாக, அவர் ஒரு கழுதையைப் படைத்தாராம். அந்தக் கழுதையிடம், நீயொரு கழுதை... காலையிலிருந்து மாலைவரை நீ பாரம்சுமந்து பணிசெய்ய வேண்டும்.நீ புல்லைத் தின்னலாம். ஆனால், உனக்கு புத்தியெல்லாம் கிடையாது. உனக்கு ஆயுட்காலம் ஐம்பது வருடங்கள் என்று சொன்னாராம்.

அதற்குக் கழுதை சொன்னதாம், கடவுளே,கழுதையான எனக்கு ஐம்பது வருடங்கள் அதிகம். அதனால்,எனது ஆயுளை இருபது வருடங்களாகக் குறைத்துவிடுங்கள் என்று. கடவுளும் அதன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

அடுத்ததாக, ஒரு நாயைப் படைத்து, நீ நாயென்று அழைக்கப்படுவாய். மனிதனுக்கு நல்ல நண்பனாக இருந்து, அவனுடைய வீட்டைப் பாதுகாக்கவேண்டும். வீட்டில் மிஞ்சுகிறபொருட்களையே நீ உணவாக உண்ணவேண்டும். உனக்கு வாழ்நாள் முப்பது வருடங்கள் என்றாராம்.

அதற்கு அந்த நாய், கடவுளே,முப்பது வருடங்கள் அதிகம். எனக்கு பதினைந்து வருடங்களே போதும் என்றாதாம். கடவுளும் அதை வழங்கினாராம்.

அடுத்ததாக,கடவுள் ஒரு குரங்கைப் படைத்தாராம். நீ மரத்துக்கு மரம் தாவி,வித்தைகள் செய்து மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவாய்.உனக்கு ஆயுள் இருபது வருடங்கள் என்றார்.

அதற்குக் குரங்கு, எனக்குப் பத்தே வருடங்கள் போதும் என்றதாம். கடவுளும் அதை ஒத்துக்கொண்டாராம்.


அடுத்ததாகக் கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதனே,பகுத்தறிவுடன் உன்னைப் படைத்திருக்கிறேன். நீ உன் அறிவைப் பயன்படுத்தி, உலகத்திலுள்ள மிருகங்களையெல்லாம் அடிமைப்படுத்தி ஆளலாம்.உலகையே உன் வசப்படுத்தப்போகும் உனது ஆயுள் இருபது வருடங்கள் என்று சொன்னாராம்.

அதைக்கேட்ட மனிதன், என்ன சொல்லியிருப்பான்??????????????

நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதையேதான் செய்தான்:)

அதாவது, அவன் கடவுளிடம், உலகையே ஆளுமளவுக்கு அறிவுடன் படைக்கப்பட்ட எனக்கு, இருபது வருடங்கள் ரொம்பவும் குறைவு. அதனால், கழுதை வேண்டாமென்ற முப்பது வருடங்களையும், நாய் மறுதலித்த பதினைந்து வருடங்களையும், குரங்கு கொடுத்த பத்து வருடங்களையும் நீங்கள் எனக்குக் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டானாம்.

அதற்கு, அப்படியே ஆகட்டும் என்று ஒத்துக்கொண்டாராம் கடவுளும்.
அன்றிலிருந்து, கடவுளிடம் கேட்டுவாங்கிய வரத்தின்படி, ஒவ்வொரு மனிதனும்,முதல் இருபது வருடங்கள் முழுமையான மனிதனாகவும்,

திருமணத்தின் பின்வரும் முப்பது வருடங்கள், ஒரு கழுதையைப்போல, குடும்ப பாரத்தைச் சுமக்கமாட்டாமல் சுமந்தும்,

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும், வீட்டின் காவலாக முன்வாசலில் முடங்கி, மிச்சமானதைத் தின்று,ஒரு நாயைப்போலவும்,

வயதாகி முதிர்ந்ததும், குரங்கினைப்போல் வீட்டுக்கு வீடு, அதாவது மகளின் வீடு மகனின் வீடு என்று தாவி, பேரன் பேத்திகளை மகிழ்விக்க வித்தைகளைச்செய்தும் வாழ்கிறானாம்.

இது எப்படி இருக்கு???  இது,மின்னஞ்சலில் வந்த கதையென்றாலும் படித்துமுடிக்கையில் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது... இல்லையா????????? :)

Wednesday, November 3, 2010

யாருக்கு வேணும் இந்த ஈயம் பித்தளையெல்லாம்???


முதலாவதா நான் பண்ணின தப்பு என்னன்னு சொல்லியே ஆகணும்...

உள்ளூர்ல, அதாவது துபாயில,லேண்ட்லைன்ல ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டா அது முழுக்க முழுக்க ஃப்ரீங்கிறதால, ஆள் அகப்பட்டா அரைமணி நேரத்திலிருந்து ஆறுமணி நேரம்வரைக்கும்கூடப் பேசுவாங்க நம்ம மக்கள். அப்படியொரு பிறவிகிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட்ட சம்பவம் இது.

வேற ஒண்ணும் குத்தமாச் சொல்லலீங்க...உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்ன்னு சொன்னேன். அவ்வளவுதான். அதுக்கு அந்த அம்மா, நாங்கல்லாம் தீபாவளி கொண்டாட மாட்டோம். அது இன்னார் கொண்டுவந்து,  கொண்டாடுகிற பண்டிகை...தையில தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவோம்,போகியில பழசைக் கழிச்சு, பொங்கலும் கொண்டாடுவோம். மத்தபடி இந்தப் பண்டிகையெல்லாம் எங்களுக்குக் கிடையாதுன்னு அவங்க கருத்தைச் சொன்னதோடு விட்டிருக்கலாம் அவங்க.

ஆமா, நீங்க ஏன் இதையெல்லாம் கொண்டாடுறீங்கன்னு கேட்டதுதான் தாமதம், எனக்கு எங்கேயிருந்தோ வந்திருச்சு எரிச்சல். அட, நீங்க எந்த விதமாவும் கொண்டாடுங்க... ஆனா, மனுஷனுக்கு மனுஷன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கிற எல்லாப் பண்டிகையும் நான் கொண்டாடுவேன்னு சட்டுன்னு சொல்லிட்டுப் பட்டுன்னு ஃபோனை வச்சிட்டேன்.

அட, உட்டாங்களா அவங்க? மறுபடியும் ஃபோனைப்போட்டு, இவ்வளவு நாள் கொண்டாடுனீங்க, சரி...இனிமே வேண்டாம், இதெல்லாம் அந்த ஈயத்தோட ஆளுமை என்று அவங்க பாணியில் எடுத்துவிட, எந்தச் சுவற்றில் முட்டலாம்னு இருந்திச்சு எனக்கு. நம்ம நாட்டு எல்லையைக்கடந்து, வெளியே வந்துட்டா, அவரவரின் சுயம் தொலைந்து, இந்தியன் என்ற ஒரே இயம் இருக்கிறதைத்தான் அதிகமான மக்களிடம் பார்க்கமுடியும்.

ரம்ஜானுக்குப் பிரியாணி சாப்பிடக் கூப்பிட்டவங்க, தீபாவளிக்கு நம்ம வீட்டு அதிரசத்தையும், முறுக்கையும் ஆசையாச் சாப்பிடுவாங்க. அதுமாதிரி, கிறிஸ்துமசையும், பொங்கலையும் கூட்டமாய்ச்சேர்ந்து கடற்கரையில் கொண்டாடும் பக்குவமும்கூட இங்கிருக்கிற மக்களுக்கு இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, இதுமாதிரி ஒண்ணுரெண்டுபேரோட கலாட்டாவைப் பார்க்கும்போது, நாடு கடத்தியும் நல்லபுத்தி வரலியே இவங்களுக்கு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

பொதுவாக, நம்ம ஊர்ல கூட, ஓரளவுக்கு கல்வியறிவு வள்ர்ந்தபின்னால், முன்னமாதிரி, ஜாதி வித்தியாசம் பார்த்து, வாசல்ல நிக்கவச்சுப் பேசி அனுப்புறதோ, பின் வாசல்ல கூப்பிட்டுப் பழங்கஞ்சி ஊற்றுவதோகூட இப்போதெல்லாம் இல்லையென்றே நினைக்கிறேன். மொதல்ல யார் என்ன ஜாதியின்னு, பள்ளிக்கூடத்துல கேட்கும்போது மட்டுமே தெரியும்னு நினைக்கிறேன். அதுமட்டுமன்றி, காதல் கல்யாணங்கள் அதிகரித்திருப்பதால் ஜாதி வித்தியாசங்கள் முன்னைவிடக் குறைந்திருக்கிறதென்றே தோன்றுகிறது.

என்னோட வீட்டுச் சாப்பாட்டை நான் சாப்பிடுறேன். என்னோட கொள்கைகளை நான் கடைப்பிடிக்கிறேன்.என்னுடைய விருப்பங்களை யார்மேலயும் திணிச்சதில்லை. அதுக்காக அடுத்தவங்க கொள்கைகளை நான் ஏத்துக்கணும்னு எதிர்பார்க்கிறது தவறில்லையா?

இதையெல்லாம் யோசிக்காம, நான் இன்னார் இது என் இயம் என்றெல்லாம் பேசுவதற்குமுன், எல்லாருக்கும் பொதுவா மனித நேயம்னு ஒண்ணு இருக்கு.. .அதைக் கடைப்பிடிச்சாலே எல்லா ஏற்றத்தாழ்வும் மறைஞ்சுபோயிடும் என்பதை எல்லாரும் நினைவில் வச்சுக்கணும். இதையெல்லாம் விட்டுட்டு, அகப்பட்டவங்க மேலேயெல்லாம் ஈயத்தைக் காய்ச்சி ஊத்தினா, அப்புறம்...ஆத்திரம்தான் மிஞ்சும்.

எல்லாருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!! (( வேணும்ங்கிறவங்க எடுத்துக்கங்க  :) ))

LinkWithin

Related Posts with Thumbnails