Friday, November 19, 2010

அவங்க மனசிலும் ஆசைகள் இருக்கும்...

விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். வயது 65 இருக்கும். பணியிலிருக்கும்வரைக்கும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றிவந்த பெண்மணி, இப்போது சர்க்கரை வியாதியின்பிடியில் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தாங்க.

கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருக்கவும், மெல்ல வெளியில்வந்தது அவங்க மனக்குறைகள். "வீட்ல, ஆளாளுக்கு அவங்கவங்க வேலையைப் பாக்கிறாங்க. வெளியில போறாங்க வர்றாங்க.ஆனா, என்னையும் எங்கேயாவது கூட்டிட்டுப்போகணும்னா பிடிக்கமாட்டேங்குது இவங்களுக்கு..." என்றுசொல்லி வருத்தப்பட்டாங்க அவங்க.

அதைக்கேட்டுக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவங்க கணவர், "எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போகணுனுதான் ஆசைம்மா. ஆனா, இவளால, வேகமா நடக்கமுடியல, கோயில்களுக்குப்போனால்கூட, கொஞ்சநேரம் செருப்பில்லாம நடக்க கஷ்டப்படுவா. வாகனத்தில் பிரயாணம் பண்ணும்போதும், யாராவது தெரியாம காலில் லேசா இடிச்சிட்டாலோ, மிதிச்சிட்டாலோகூட வலிதாங்கமுடியாம துடிச்சுப்போயிடுறா."

"அதுமட்டுமில்லாம, விருந்து வைபவங்களுக்குப்போய், தாமதமாய்ச் சாப்பிட்டாலோ அல்லது, சாப்பாடு வித்தியாசமானதாயிருந்தாலோ உடம்புக்கு ஒத்துக்காம ரொம்ப கஷ்டப்பட்டுப்போயிடுறா. அதனாலதான் கூடியவரைக்கும் வெளியில கூட்டிப்போறதைத் தவிர்க்கிறோம்" என்று அவரும் வருத்தமாய்ச் சொன்னார். கேட்கும்போது அதுவும் நியாயமானதாய்த்தான் இருந்தது.

அப்புறம், அவங்ககிட்ட கொஞ்சநேரம் ஆறுதலாய்ப் பேசிவிட்டு, முடிஞ்ச அளவுக்கு சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வச்சுக்கிட்டு, தூரமாக எங்கேயும் போகலேன்னாலும் பக்கத்தில் நடந்துபோய் நாலுபேரைப் பாருங்க. கோயிலுக்குப் போனால்கூட, காலில் ஒரு சாக்ஸ் போட்டுக்கிட்டுப் போங்கன்னு சொல்லிட்டுவந்தேன்.ஆனாலும், அன்றிலிருந்து, முதுமையும் நோயும் சேர்ந்து ஒருத்தரை எந்த அளவு முடக்கிவிடுகிறதுன்னு மனசுக்குள் ஒரு கலக்கம்.

ஆனா, நேத்து துபாயிலிருக்கிற முஷ்ரிஃப் பார்க்குக்குப் போனபோது, நான் பார்த்த இரண்டு காட்சிகள் வியப்பைத் தோற்றுவித்தது மறுக்கமுடியாத நிஜம்.முதலாவது பார்த்த அந்த முதியவருக்கு வயது நிச்சயம் எண்பத்தைந்துக்கு மேலிருக்கும். திக்கித்திக்கிப் பேசுகிறார். கொஞ்சம் கூன்போட்டு நடக்கிறார். ஆனால்,அத்தனை நிதானம் இல்லை. எல்லாரும் புல்தரையில் பாயில் உட்கார்ந்துகொண்டு, அவரை எங்களுக்கு அருகிலிருந்த ஒரு பெஞ்ச்சில் உட்காரவைத்தார்கள்.

ஐந்து நிமிடம்கூட இருக்காது, அந்த இடத்தைவிட்டு எழுந்து கால்போனபோக்கில் நடக்க ஆரம்பித்தார் பெரியவர்.அவரையே கவனித்துக்கொண்டிருந்த அவரது பேரன், ஓடிப்போய், கையைப்பிடித்துக் கூட்டிவந்து உட்காரவைத்தான். அடுத்த சில நிமிஷங்களில், மறுபடியும் எழுந்து நடக்க ஆரம்பித்தார் அவர். அப்போது. அவரது பேத்தியாக இருக்கவேண்டும், பத்துப்பன்னிரண்டு வயசுப்பெண்குழந்தை கையில் உணவுத் தட்டுடன் ஓடிவந்து, அவரை உட்காரவைத்து, தட்டிலிருந்த சாப்பாட்டை ஸ்பூனால் ஊட்ட ஆரம்பித்தது அவருக்கு.

சாப்பிட்டுமுடிப்பதற்குள் பத்துப்பன்னிரண்டு தடவை எழுந்து நடக்க ஆரம்பித்தவரைப் பொறுமையாக உடகாரவைத்து, முழுச்சாப்பாட்டையும் ஊட்டிவிட்டது அந்தக்குழந்தை. பார்க்கும்போதே நெகிழ்ச்சியாக இருந்தது.

மாலையில் பார்க்கிலிருந்து புறப்படும்போது கண்ட இன்னொரு காட்சி, ஏற்கெனவே பார்த்த காட்சியை மறக்கடித்து விடும்போலிருந்தது. இருபதுக்குமேல் உறுப்பினர்களுடைய அரபுக் குடும்பம் அது.

அப்போதுதான் வந்து இறங்கினார்கள். அதில், ஒரு பாட்டி. அந்தப் பாட்டிக்கும் எண்பது வயசுக்குமேலிருக்கும். கால்கள் நடக்கமுடியவில்லை.மடங்கியிருந்தது. கூடவே இறங்கியது ஒரு வீல்சேர். ஆனால், இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் மேடு பள்ளமாயிருந்ததால், அந்தப்பாட்டியின் பேத்திபோலிருந்த டீனேஜ் வயசுப் பெண்கள் இருவர் பாட்டியை இருபுறமும் பிடித்துக் குழந்தையைப்போல தூக்கிக்கொண்டே போனார்கள்.

புல்தரைக்குப்போனதும் வீல்சேரை விரித்து உட்காரச்சொன்னார்கள். மறுத்த பாட்டி, தன்னைக் கீழே விடச்சொல்லி, புல்தரையில் உட்கார்ந்து, இரு கைகளையும் ஊன்றி, சிறுகுழந்தைபோல அங்கேயும் இங்கேயும் வேகமாகத் தவழ்ந்துபோனது. பார்க்கும்போதே கண்ணில் நீர்துளிர்த்தது எங்களுக்கு. ஆனால் பாட்டியின் முகத்தில் அத்தனை பரவசம்,சந்தோஷம். வீட்டுச் சிறைக்குள்ளிருந்து வெளியில்வந்த குதூகலம்போல் தெரிந்தது.

பார்த்துவிட்டுப் புறப்பட்ட எனக்கு மனசுமுழுக்கப் பாட்டிதான் நிறைந்திருந்தது. அதையும் மீறி எழுந்தது இந்தக் கேள்வி. ஒருவேளை நம்மநாட்டு மக்களுக்கு மட்டும்தான் பெரியவர்களை வைத்துக் கவனித்துக்கொள்வது ஒரு சுமையாகத் தெரிகிறதோ?13 comments:

 1. நல்ல பதிவு சுந்தரா! நம் நாட்டில் ஒருவரை வீல்சேரில் வைத்து வெளியில் தடையின்றி அழைத்து செல்ல முடியுமா? அக்கறை இருந்தாலும் இது போல் வெளியில் கூட்டிப்போவது சிரமம். ஆனால் அவர்களோடு அமர்ந்து மனம் விட்டு பேசலாம். அதற்குத்தான் நம் மக்களுக்கு ஏனோ நேரமில்லாமல் போகிறது :(

  ReplyDelete
 2. //ஒருவேளை நம்மநாட்டு மக்களுக்கு மட்டும்தான் பெரியவர்களை வைத்துக் கவனித்துக்கொள்வது ஒரு சுமையாகத் தெரிகிறதோ? //

  இருக்கலாம்...

  நிறைய பேர் இப்படித்தான் செய்கிறார்கள்... பின்னாளில் அவர்களும் பெரியவர்கள் ஆவார்கள்..

  ReplyDelete
 3. //ஒருவேளை நம்மநாட்டு மக்களுக்கு மட்டும்தான் பெரியவர்களை வைத்துக் கவனித்துக்கொள்வது ஒரு சுமையாகத் தெரிகிறதோ//

  நல்ல கேள்வி சுந்தரா, நம்மைச்சுமந்தவங்க நமக்கு என்னிக்குமே சுமையாகமுடியாது.

  இதேசமயம் இன்னொரு சந்தேகமும் வருது.வெளி நாடுகளில் வயசாயிட்டாலும் மனசளவில் உற்சாகமா இளமையாவே இருக்காங்க ,இங்கே அம்பது வயசாயிட்டாலே 'இனி எனக்கு என்ன இருக்கு' என்ற விரக்தி வந்துடுதோன்னு தோணுது. இதனால அவங்களும் மனசளவில் குடும்பத்திலிருந்து ஒதுங்கிடமாதிரி இருக்கு.இதனாலும் இடைவெளிகள் வர வாய்ப்பிருக்கு.

  ReplyDelete
 4. இங்கும் எல்லோரும் அப்படியிருப்பதில்லை சுந்தரா!

  ReplyDelete
 5. அக்கா, எல்லாம் மனமே காரணம்.

  ReplyDelete
 6. யோசிக்க வைத்துவிட்டீர்கள். சட் என்று மாறி விட்ட வாழ்க்கை சூழல், அவரவர் வேலை என்றெல்லாம் சொல்லி சமாளிக்காமல், நம் பெரியவர்களை முடிந்தளவு பேண வேண்டும்.

  ReplyDelete
 7. உயிரோடு இருக்கும் போது கொஞ்சமும் அன்பு செலுத்திக் கவணிக்காமல்,இறந்ததும் அடிக்கும் ஆர்ப்பாட்டம் இருக்கிறதே அது தான் உண்மையான எரிச்சல். அண்மையில் சென்னையில் நடந்ததாம் ஒரு புது மனைப் புகு விழா. பெயர் "அன்னை இல்லம்".அழகான இல்லம். விருந்து முடிந்ததும் நண்பர் கேட்டார், அம்மா எங்கே என்று ? பதில் அவுங்க முதியோர் இல்லத்திலே இருக்காங்க!

  ReplyDelete
 8. //நல்ல பதிவு சுந்தரா! நம் நாட்டில் ஒருவரை வீல்சேரில் வைத்து வெளியில் தடையின்றி அழைத்து செல்ல முடியுமா? அக்கறை இருந்தாலும் இது போல் வெளியில் கூட்டிப்போவது சிரமம். ஆனால் அவர்களோடு அமர்ந்து மனம் விட்டு பேசலாம். அதற்குத்தான் நம் மக்களுக்கு ஏனோ நேரமில்லாமல் போகிறது :( //

  நிஜம்தான் கவிசிவா...நேரமும் இல்லை மனமும் இல்லை.

  வருகைக்கு நன்றிகள்!

  ReplyDelete
 9. //சங்கவி said...

  //ஒருவேளை நம்மநாட்டு மக்களுக்கு மட்டும்தான் பெரியவர்களை வைத்துக் கவனித்துக்கொள்வது ஒரு சுமையாகத் தெரிகிறதோ? //

  இருக்கலாம்...

  நிறைய பேர் இப்படித்தான் செய்கிறார்கள்... பின்னாளில் அவர்களும் பெரியவர்கள் ஆவார்கள்..//

  நமக்கும் வயசாகும் என்ற பயம் யாருக்குமே இருப்பதாய்த் தெரியவில்லை சங்கவி.

  நன்றி!

  ReplyDelete
 10. //அமைதிச்சாரல் said...

  //ஒருவேளை நம்மநாட்டு மக்களுக்கு மட்டும்தான் பெரியவர்களை வைத்துக் கவனித்துக்கொள்வது ஒரு சுமையாகத் தெரிகிறதோ//

  நல்ல கேள்வி சுந்தரா, நம்மைச்சுமந்தவங்க நமக்கு என்னிக்குமே சுமையாகமுடியாது.

  இதேசமயம் இன்னொரு சந்தேகமும் வருது.வெளி நாடுகளில் வயசாயிட்டாலும் மனசளவில் உற்சாகமா இளமையாவே இருக்காங்க ,இங்கே அம்பது வயசாயிட்டாலே 'இனி எனக்கு என்ன இருக்கு' என்ற விரக்தி வந்துடுதோன்னு தோணுது. இதனால அவங்களும் மனசளவில் குடும்பத்திலிருந்து ஒதுங்கிடமாதிரி இருக்கு.இதனாலும் இடைவெளிகள் வர வாய்ப்பிருக்கு.//

  இருக்கலாம் சாரல். ஆசைப்பட்டாலும்கூட, அதைக் காட்டிக்கொள்ளத் தயங்குகிறார்கள்.

  நன்றி!

  ReplyDelete
 11. //அன்புடன் அருணா said...

  இங்கும் எல்லோரும் அப்படியிருப்பதில்லை சுந்தரா!//

  அதுதான் கொஞ்சம் ஆறுதல் அருணா...நன்றிகள்!

  ReplyDelete
 12. //LK said...

  அக்கா, எல்லாம் மனமே காரணம்.//

  நிஜம்தான் தம்பி :)

  நன்றிகள்!

  ReplyDelete
 13. மிக நல்ல பதிவு

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails