Tuesday, December 14, 2010

நீயா கொண்டுபோனாய் நிமோனியா??!2009 ம் வருஷம்...விடுமுறைக்கு இந்தியாவந்தபோது, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் முதல் ஃபோன்கால்... என் தங்கையிடமிருந்து... அதாவது என் சித்தி மகளிடமிருந்து. "அக்கா, வந்துட்டீங்களா? ஒருவருஷம் ஆச்சு உங்க எல்லாரையும் பார்த்து. எப்ப சென்னை வருவீங்க? இப்பவேயிருந்து நான் உங்களுக்காக வெய்ட்டிங்" என்று அப்பழுக்கில்லாத அவள் பாசத்தால் என்னையும் என் பிள்ளைகளையும் நனைத்தாள்.

அவளுக்கு அப்போது வயது 21. திருமணம் முடிந்து நாலைந்து மாதங்களே ஆகியிருந்தது. முந்திய விடுமுறைக்குப் போனபோது, என்னையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்னையைச் சுற்றிவந்தவள், அந்தமுறை நான் சென்னைக்குப் போனபோது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அது தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவிக்கொண்டிருந்தநேரம். நுரையீரல் முழுக்கச் சளி படர்ந்திருக்கிறதென்றும் காய்ச்சல் அதிகமாக இருக்கிறதென்றும் சொல்லி அதற்கான ட்ரீட்மென்ட் நடந்துகொண்டிருந்தது. ஆஸ்பத்திரியில் சென்றுபார்க்கவும் அனுமதிக்கவில்லை. அவளைப் பார்க்கவென்றே சென்னையில் அவள் வீட்டுக்குச் சென்றுவிட்டு, அவளைப் பார்க்கமுடியாமல் திரும்பிவந்தது மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.

நெல்லை எக்ஸ்பிரசில் ஊருக்கு வந்துசேர்ந்து, உட்காரக்கூட இல்லை... சென்னையிலிருந்து ஃபோன். மருத்துவமனையிலிருந்த என் தங்கை இறந்துவிட்டாளென்று. நம்பவேமுடியாவிட்டாலும் அன்றைக்கு நடந்தது நிஜம். அவள் கணவனும் குடும்பமும் துடித்த துடிப்பு இன்னமும் தீரவில்லை. இன்றைக்கும் அவள் பெயரைச்சொன்னாலே மனசு பதறத்தான்செய்கிறது, அன்பான உரிமையான ஒரு உறவை இழந்துவிட்டோமென்று.

அந்தச் சம்பவத்துக்கு நிகரான இன்னொரு சம்பவம், நாலைந்துநாள் முன்பு என் மகளின் பள்ளியில் நடந்தது. பத்தாவது படித்துக்கொண்டிருந்த பெண். அதே நுரையீரல் இன்ஃபெக்ஷன், அதிகப்படியான காய்ச்சல் காரணமாக இறந்துபோனாள். ஃபேஸ்புக்கில் அந்தப் பெண்ணுக்கான அஞ்சலிகள் குவிந்திருக்க, அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்தபோது எனக்கே மனசெல்லாம் நடுநடுங்கிப்போனது. இப்படியொரு மகளை இழந்து அந்தப் பெற்றோர் எத்தனை கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கநினைக்க இப்போதும் நெஞ்சு பதறுகிறது.

இங்கே சம்பந்தப்பட்ட இரண்டுபேரின் இறப்புக்கும் காரணம், நிமோனியா என்கிறார்கள். நுரையீரலில் பாக்டீரியா, வைரஸ்,ஃபங்கஸ் அல்லது பூஞ்சைத் தொற்றினால் ஏற்படக்கூடிய வியாதி இது. சாதாரண சளித்தொந்தரவுபோல, காய்ச்சல், இருமல்,நெஞ்சுவலி, மூச்சுவிடுவதில் சிரமமென்று ஆரம்பித்து கிருமிகளின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல்போனால், கடைசியில் உயிரிழப்பும் ஏற்பட்டுவிடுகிறது.

உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் பத்துலட்சம்பேர் நிமோனியாவால் உயிரிழக்கிறார்களாம். அதில் 25% பேர் இந்தியர்கள். இந்தியாவில் ஒருமணி நேரத்துக்கு 45 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழக்கிறார்கள் என்று தெரிந்தபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இதில் அநேகக் குழந்தைகள் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள்.

கிருமித்தொற்றைத் தவிர்த்து, ஊட்டச்சத்துக் குறைவு, நோய் எதிர்ப்பு சக்தியின்மை, மாசுபட்ட காற்றைச் சுவாசித்தல் இவையெல்லாம் நிமோனியாவை உண்டுபண்ணும் முக்கியமான காரணிகள். நுரையீரல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், இரத்தப் பரிசோதனையின் மூலமும், எக்ஸ்ரே மூலமும் இந்த நோயை அறிந்துகொள்ளமுடியும்.

ஆரம்பக்கட்டத்தில் கண்டறியப்பட்டால் நிமோனியா நோயை எளிதில் குணப்படுத்திவிடலாம் என்கிறார்கள். சாதாரண காய்ச்சலும் சளியும்தானே, என்று அலட்சியமாக எடுத்துக்கொண்டு சுயமருத்துவம் செய்வதை விட்டுவிட்டு, சளித்தொந்தரவு அதிகமாயிருக்கும்பட்சத்தில் உடனே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

ஆகமொத்தம், எல்லா நோய்களுக்கும் காரணம் நோய் எதிர்ப்புசக்திக் குறைவுதான். அது நல்லா இருந்தா எல்லா நோயையும் இல்லாமப் பண்ணிடலாம். ஆனா, அது இல்லாம இருந்தாலோ, உள்ள நோயெல்லாம் உடம்புக்குள்ள குடியேறிடும்.

அதனால, எந்த நோயும் வந்தபின் வருத்தப்படுவதைவிட, வருமுன் காத்தல் மிகவும் சிறந்தது. அதனால் சுகாதாரமான வாழ்க்கைமுறையையும், சத்துள்ள உணவுப்பழக்கத்தையும் கடைப்பிடித்தல் மிகமிக அவசியம்.

நிமோனியாவைப்பற்றி இன்னும் அதிகம் அறிந்துகொள்ள இங்கே பாருங்க...

படம் : இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.


6 comments:

 1. நெருக்கமான இழப்புகளின் வலி ஆற்றமுடியாததுதான்.
  என் பெரிய பையனுக்கு, குழந்தையாயிருந்தபோது, மீசில்ஸ் வந்து அதனைத் தொடர்ந்த நிமோனியாவால் மிகவும் கஷ்ட பட்டான். உடனடியாக சிகிச்சையினால் குணமாயிற்று. படிக்கும் போதே வருத்தமாயிருக்கிறது.

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு..

  நிச்சயமா இது போல் எண்ணற்ற உயிர்கள் சரியான முன்னெச்சரிக்கை இன்மை, அலட்சிய தன்மை இவற்றின் மூலம் போய்க்கொண்டு தான் இருக்கின்றது...

  விழிப்புடன் இருப்போம்

  ReplyDelete
 3. தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://tamilblogs.corank.com/

  ReplyDelete
 4. பயமுறுத்தும் ஆனால் பயனுள்ள
  பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 5. பிரிவுகள் இயற்கையாக இருந்தாலே தாங்க முடியாது. இது போல என்றால் ஆறா வடுவாக மனதில் நிலைத்துக் கொல்லும்.

  நல்ல பதிவு.. தேவை விழிப்புணர்வு என்று கூறுவது...

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails