Sunday, February 27, 2011

எந்திரன் நடத்திவைத்த கல்யாணம்!

பொதுவா கல்யாண சீசன் வந்துட்டா, மண்டபம் கிடைக்கிறதும்,கல்யாணத்தை நடத்திவைக்க ஐயர் கிடைக்கிறதும் அத்தனை கஷ்டம்னு புலம்புவாங்க மக்கள். ஒரு தமிழ்த் திரைப்படத்தில், ஐயர் செல்ஃபோனிலேயே கல்யாணம் நடத்திவைக்கிறதாகக்கூடக் காட்டியிருக்காங்க. இந்தமாதிரித் தொல்லையெல்லாம் எனக்கு வேணாம்னா, நீங்களும்
i-Fairy யை வரவழைச்சுக் கல்யாணம் செய்துக்கலாம்.

அதென்ன i-Fairy ன்னு கேக்கிறீங்களா? ரோபோவுக்குக் காதல் வரவச்சு, வசீகரன் வாங்கிக்கட்டிக்கிட்டதெல்லாம் எந்திரனில் பாத்திருப்பீங்க. ஆனா,ஜப்பானில் ஒரு எந்திரம் அதாங்க ரோபோ, கல்யாணமே பண்ணிவைக்குது .அதோட பேருதான் i-Fairy. கணினியைக் கண்டுபிடிச்சதிலிருந்து, கல்யாணம்கூட மென்பொருள் மயமாய்ப்போச்சு...

அந்த எந்திரன், இல்லையில்லை எந்திரி நடத்திவச்ச கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நீங்களே பாருங்க...

Friday, February 25, 2011

கொசுப் பேச்சுக் கேட்கவா...


அம்மா கொசு: செல்லம், மாடிவீட்டுப்பக்கம் மறந்துகூடப் போயிராதே...

குட்டிக்கொசு : ஏம்மா, அவங்கல்லாம் ஓடோமாஸ் போடுறவங்களா?

அம்மாகொசு : இல்லடா, அந்த வீட்டுக்காரருக்கு சிக்கன்குனியாவாம்...

*********************

ராமு கொசு : நேத்திலேருந்து ஆளையே காணமே...எங்கடா போனே?

சோமு கொசு : கவுன்சிலர் வீட்டு ஏசி கார்ல கொஞ்சநேரம் கண்ணசந்துட்டேனா, அவங்ககூட பழனிவரைக்கும் போகவேண்டியதாப்போச்சு. சும்மா சொல்லக்கூடாதுடா, பழனிக் கொசுவெல்லாம் பக்தர்களைக் கடிச்சுக்கடிச்சு,நம்மளைவிட ரொம்ப சௌக்கியமா ஸ்ட்ராங்கா இருக்குதுங்க.

*********************


கணவன் கொசு: பிள்ளைங்களும் நானும் தொழிலுக்குப்போகும்போது முகத்தைச் சோகமா வச்சிட்டு உட்கார்ந்திருக்காதேன்னு எத்தனைநாள் சொல்றது?

மனவி கொசு : உங்களுக்கென்ன,யாரைவேணுன்னாலும் கடிக்கலாம், எந்த ரத்தத்தை வேணுன்னாலும் குடிக்கலாம். சர்க்கரைவியாதி வந்ததுலேருந்து பத்திய ரத்தம் தேடித்தேடி, எனக்குப் பைத்தியமே பிடிச்சிரும்போலிருக்கு.

**********************

அண்ணன் கொசு : விடிஞ்சும் விடியாமலும் வெளியில புறப்பட்டுட்டியே, என்னடா வேலை?

தம்பி கொசு : நம்ம ஊர் லயன்ஸ் கிளப் ல ரத்ததானம் பண்றாங்களாம். ரகரகமா ரத்தமெல்லாம் ஒரே இடத்துல கிடைச்சா வேணாம்னா சொல்லுவாங்க,அதான்...

**********************

கொசு கமலா : அந்த கோழிப்பண்ணைக் கொசுவோட கொஞ்சிக்கிட்டுத் திரியாதேன்னு எத்தனைநாள் சொல்றேன்?

கொசு விமலா : ஏண்டி, உனக்கென்ன பொறாமை?

கொசு கமலா : பொறாமையா,அடிபோடீ... பறவைக்காச்சல் வந்திச்சுன்னா, யாரும் பக்கத்துலகூட வரமாட்டாங்க, பாத்துக்கோ...

***********************

மனைவி கொசு(அலைபேசியில்) : ஏங்க கோயிலூர் பக்கம் இலவசமா கொசுமருந்தடிக்கிற வண்டி வந்திருக்காம். அந்தப்பக்கம் போயிராதீங்க.

கணவன் கொசு : அடிப்போடி இவளே...காலைலேருந்து அந்தக்கொசு மருந்து வண்டியிலதான் உக்காந்திருக்கேன். கொஞ்சம் புகைமூட்டமா இருக்கு, மத்தபடி ஒண்ணும் ஆகல.

Monday, February 14, 2011

கும்மாயம் செய்த குடும்பக்கதை!


அம்மா, ஏன்னோட பிறந்தநாளுக்கு என்ன ஸ்வீட் பண்ணப்போறே?
கேக்? காஜூ கத்லி? சேமியா கேசரி?
அம்மாவின் கன்னத்தைப்பிடித்துக்கொண்டு கொஞ்சிக்கொஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தாள்  ரேணுவின் சின்ன மகள்.

மீனுக்குட்டி, இந்தப் பிறந்த நாளுக்கு, உங்க அம்மாவைப் புதுசா ஒரு ஸ்வீட் பண்ணச்சொல்லலாமா? என்றபடி அடுக்களைக்குள் நுழைந்தான் கதிர், மீனுவின் அப்பா.

சரிப்பா, என்ன ஸ்வீட் பண்ணலாம்? சொல்லுங்கப்பா என்றபடி, அப்பாவிடம் தாவினாள் மீனு.

இது, ரொம்ப ரொம்பப் பழமையான ஸ்வீட்...

நம்ம பாட்டி பண்ணுவாங்களாப்பா? என்றாள் மீனு.

இல்லம்மா, பாட்டிகாலத்தையெல்லாம்விடப் பலநூறுவருஷப் பழசு.நம்ம தமிழ் இலக்கியத்தில் இருக்கிற பழங்காலப் பாடல்கள்மூலமாதான் இந்த ஸ்வீட்டை அந்தக்காலத்திலேயே நம்ம மக்கள் சாப்பிட்டாங்கன்னு நாம தெரிஞ்சுக்கமுடியுது என்றான் கதிர்.

அந்தக்காலத்து ஸ்வீட்னா, அது பணியாரம், பாயசம் மாதிரிதான் இருக்கும் அதெல்லாம் எனக்குப் பிடிக்காதுப்பா...என்றாள் மீனு.

இல்லம்மா, இது சத்துள்ள பயறுவகைகள் இன்னும் பச்சரிசி, அச்சுவெல்லம் சேர்த்துச் செய்யப்படுகிற பலகாரம். கிட்டத்தட்ட உங்கம்மா செய்யிற சர்க்கரைப்பொங்கல் மாதிரின்னு வச்சுக்கோயேன் என்றான் கதிர்.

அந்தக்காலத்துல, இந்தப்பலகாரத்தை, வரகரிசியும், அவரை வகையைச்சேர்ந்த பயறுகளையும் வைத்து இனிப்புச்சேர்த்துத் தயாரிச்சிருக்காங்க.

பெரும்பாணாற்றுப்படை என்கிற பத்துப்பாட்டு நூலில்,முல்லைநிலத்து மக்களின் உணவுப்பழக்கம்பற்றிச் சொல்லும்போது, இந்த இனிப்பைப்பற்றியும் சொல்லியிருக்கார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

"குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் வேங்கை வீகண் டன்ன
அவரை வான்புழுக் கட்டிப் பயில்வுற்
றின்சுவை மூரற் பெருகுவீர்"

முல்லை நிலத்துக் குடிமக்களிடம் சென்றால், சிறியகொத்துக்களையுடைய பூளைப்பூப்போன்ற வரகரிசியோடு, அவரைவிதை வகையினைச்சேர்ந்த பருப்பினை இட்டுச் சமைத்த, இனிப்புச்சுவையுடைய மூரல் எனும் சோற்றைப் பெறுவீர்கள் என்று பாணனொருவன் இன்னொரு பாணனை ஆற்றுப்படுத்தியதாகச்
(வழிசொல்லியனுப்புதல்) சொல்கிறார் உருத்திரங்கண்ணனார்.

இது, நாம் வழக்கமாகப் பச்சரிசியைவைத்துச் செய்யும் சர்க்கரைப்பொங்கல் மாதிரியேதான் என்றாலும்  இதைக் கொஞ்சம் வித்தியாசமா, இன்னும் நம்ம செட்டிநாட்டு மக்கள் தங்கள் பாரம்பரிய உணவுவகையாக விருந்து, விசேஷங்களில் தயாரிச்சுக்கிட்டிருக்காங்க.

ஒரே வித்தியாசம் இப்ப நமக்கு, வரகரிசி அதிகமா கிடைக்காதுங்கிறதால பச்சரிசி, அவ்வளவுதான். இவ்வளவு சிறப்புள்ள ஒரு இனிப்பை உன்னோட பிறந்தநாளுக்குச் செய்தா அது இன்னும் சிறப்புதானே? என்று மகளிடம் கேட்டான் கதிர்.

சரிப்பா, நீங்க சொல்றதப்பாத்தா இந்த ஸ்வீட் நல்லாருக்கும்னுதான் தோணுது. அம்மாவை அதையே பண்ணச்சொல்லுங்கப்பா...என்றாள் மீனு.

அம்மாடி, அப்பாவும் மகளும்சேர்ந்து சங்ககாலம், சரித்திரகாலத்துப் பண்டம் பலகாரத்தையெல்லாம் இப்போ செய்யச்சொன்னா, அது என்னாலமுடியாது என்று நழுவினாள் ரேணு.

உனக்குத் தெரியலேன்னா சொல்லும்மா, அப்பாவே அதைச் செஞ்சு அசத்திடுவாங்க...இல்லேப்பா? என்று மீனு அப்பாவின் முகத்தைப்பார்க்க, குறிப்புதானே வேணும் உனக்கு, இந்தா எழுதிவச்சுக்கோ என்று சொல்லத் தொடங்கினான் கதிர்...

பாசிப்பருப்பு - 200 கிராம்

உளுத்தம் பருப்பு- 50 கிராம்

பச்சரிசி - 100 கிராம்

வெல்லம் அல்லது கருப்பட்டி - 1/2 கிலோ

நெய் - 100 கிராம்


பருப்பு வகைகளையும் அரிசியையும் வாசம் வரும்வரை வறுத்து,  அதை நல்லாப் பொடிபண்ணிக்கணும்.

வெல்லம் அல்லது கருப்பட்டியை நீர்சேர்த்து, அடுப்பில்வைத்துக் கரையவிட்டு, வடிகட்டிக்கொள்ளணும்.

வடிகட்டிய பாகோடு, பொடிசெய்த மாவினைக் கலந்து, சிறுதீயில்வைத்து,நெய் ஊற்றிச் சுருளக்கிண்டி இறக்கினா கும்மாயம் தயார். இதை லட்டுமாதிரி உருண்டை பிடிச்சோ அல்லது அப்படியே கூட சாப்பிடலாம் என்று கதிர் சொல்லிமுடிக்க,

இந்தா, அடுப்பைப் பத்தவச்சுட்டேன்... சமையல் மன்னரான நீங்களே வந்து மத்ததை கவனிங்க என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தாள் ரேணு.

பி.கு : படத்திலிருப்பது கும்மாயம் அல்ல. இது இணையத்தில் கிடைத்த இன்னொரு இனிப்பு :)

*********

Wednesday, February 9, 2011

சிவன் சொத்து!

மண்ணின்மேலும் மதங்களின்மேலும் மக்கள் கொண்டிருக்கும் பற்று மிகவும் சென்சிடிவான ஒன்று. குடும்பங்களுக்கிடையே சிக்கிக்கொண்ட சில கோயில்களே கோர்ட் வரைக்கும் இழுக்கப்படும்போது, இரண்டு நாடுகளுக்கிடையேயான எல்லையில் ஒரு கோயில் அமைந்திருந்தால்?

 பதினொன்றாம் நூற்றாண்டின் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்றாக விளங்கும் அந்தக்கோயில், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தலங்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்தில் நடந்திருக்கும் கம்போடிய தாய்லாந்து நாடுகளுக்கிடையேயான போரில், இந்தக்கோயில், மேலும் சிதைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.


பிரசாத் பிரியா விஹார், தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கு இறையாயிருந்தவன் என்பதற்குச் சான்றுரைக்கும் வகையில், கெமர் பேரரசின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக, முதலாம் மற்றும் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற சிவாலயம் இது. அமைந்திருப்பது கம்போடிய, தாய்லாந்து எல்லையில் இருக்கும் டாங்கிரெக் மலையின்மீது. எல்லைச்சாமி மாதிரி இரண்டு நாடுகளுக்கிடையே இருப்பதுதான் இங்கு பிரச்சனையே.

எல்லைக்கு நடுவில், கோயில் எங்கே இருக்குது பாருங்க...


1962 ம் ஆண்டிலேயே இந்தச் சொத்துப்பிரச்சனை தலைதூக்க, பிரச்சனையில் தலையிட்ட பன்னாட்டு நீதிமன்றம், இந்தக்கோயில் கம்போடியாவுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளித்திருக்கிறது. ஆனாலும் ஆசை யாரைவிட்டது? அதனால், இன்றுவரை ஓயவில்லை பிரச்சனை.

தமிழகத்தில்,பழங்காலச் சிவன் கோயில்கள் பலவற்றிற்கு, அக்கால மன்னர்கள் ஏராளமான சொத்துக்களை எழுதிவைத்ததாகவும், தற்காலத்தில் அத்தகைய சொத்துக்களெல்லாம் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதாகவும் படித்ததும் கேட்டதும் உண்டு. கிராமங்களில் அப்படிப்பட்ட சம்பவங்களைக் கேள்விப்பட்டவர்கள் சொல்வார்கள், சிவன் சொத்து குலநாசம் என்று. அதாவது சிவனுக்குரிய சொத்தை அபகரித்துப் பயன்படுத்துபவர்களின் குலம் தழைக்காமல் அழிந்துபோகும் என்று. இங்கே ரெண்டு நாட்டுப் பிரச்சனையில் யார்குலத்தைக் குற்றம்சொல்வது?


மன்னர்களின் காலத்தில் மதிப்போடிருந்த ஆன்மீகத் தலங்கள்பல, பிற்கால அரசியல் மாற்றங்களால் பிரச்சனைகளில் சிக்கியிருப்பதை நாம் பல நாடுகளில் பார்க்கமுடிகிறது. இந்துமதத்தின் பழம்பெருமைக்குச் சான்றாக நிற்கும் இந்தச் சிவன்சொத்து,  இரண்டு நாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு அழிந்துபோகக்கூடாதென்று, உலக இந்துக் கலச்சார அமைப்பு ஒன்று உலகெங்குமிருக்கிற இந்து மக்களின் ஆதரவை வேண்டியிருக்கிறது.

அதை இங்கே பார்க்கலாம்...

மக்களுக்குக் கஷ்டம்ன்னு வந்தா கடவுள்கிட்டபோய் முறையிடலாம். ஆனா, கடவுளுக்கே கஷ்டம்வந்தா எங்கேபோய் முறையிடுவதாம்????

எல்லாம் அவனோட திருவிளையாடல்ன்னு சிவனேன்னு இருக்கவேண்டியதுதான்.

தகவல்கள் : விக்கிபீடியாவிலிருந்து.
படங்கள் உபயம்: google
.

Tuesday, February 8, 2011

சிரிப்பு வருதா என்ன???

இது நம் இந்திய அரசியல்வாதிகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய மெட்ரிக் அளவீட்டுக்கான வாய்ப்பாடு...

100 கோடி = 1 எடியூரப்பா

100 எடியூரப்பா = 1 ரெட்டி

100 ரெட்டி = 1 ராடியா

100 ராடியா = 1 கல்மாடி

100 கல்மாடி = 1 பவார்

100 பவார் = 1 ராஜா

100 ராஜா = 1 கருணாநிதி

100 கருணாநிதி = 1 சோனியா

********

மேலிருக்கும் அளவீடு மின்னஞ்சலில் வந்தது. அநேகர் படிச்சிருப்பீங்க...படிக்காதவங்களுக்காக இந்தப்பதிவு.

100 சோனியா = ????? வேண்டாம்பா வேண்டாம்...ஒரு சோனியாவுக்கே ஏகப்பட்ட மக்களைக் காவு கொடுத்துட்டோம். இன்னும் நூறு மடங்குன்னா, பூமி தாங்காதுடா சாமீ!!!!!!!!!!!!!........இது நொந்துபோன நம்ம தமிழினத்துப் பிரதிநிதி ஒருத்தரின் அலறல்!


Tuesday, February 1, 2011

என் ஆர் ஐ (N R I) மக்களே, இறப்புக்கும் திட்டமிடுங்கள்!


பலமுறை எழுத நினைத்தும் எழுதவா வேண்டாமா என்று மனசைத் தடுமாறவைத்த விஷயம் இது. நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துவிடாதுதான்...ஆனால், இறப்புன்னுசொல்லும்போது, எல்லோருக்கும் உச்சிமுதல் பாதம்வரை அதிரத்தான் செய்கிறது.

பிறப்புக்குத் திட்டமிடுகிறோம், வளர்ப்புக்கு வசதிகள் தேடுகிறோம், முதுமையில் நிம்மதியாயிருக்கவும் வழிவகை செய்ய நினைக்கிறோம். ஆனால், வெளிநாட்டில் வசிக்கிற யாராவது, இறப்பைப்பற்றி எண்ணியாவது பார்த்திருப்போமா?

ஆனால், இனிமேல் எண்ணியே ஆகவேண்டும், திண்ணிய நெஞ்சத்துடன் திடமான முடிவெடுக்கவேண்டுமென்று சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், அமீரகத்துப் பத்திரிகையான கல்ஃப் நியூஸ் முகத்திலறைகிறமாதிரி சொன்னது. பத்திரிகையில் வந்திருந்த இரண்டு கட்டுரைகளை வாசித்த வெளிநாட்டு மக்களின் மனதில் மிகப்பெரும் அதிர்ச்சி உண்டாகியிருக்கும் என்பதில் ஐயமேஇல்லை.

இதையெல்லாம் நாங்கள் எண்ணிப்பார்த்ததுண்டு, இன்னும் எதற்காக பயமுறுத்துறீங்கன்னு சொல்றவங்க, இதற்குமேல் படிக்காதீங்க. ஏன்னா, விஷயம் அதிர்ச்சியூட்டக்கூடியதுதான்.

நாளிதளில்வந்த கட்டுரை சொன்னது என்னன்னா, இங்கே(அமீரகத்தில்) இறப்பின் விலை
மிக மிக அதிகம், அதற்காக அயல்நாட்டினர் அனைவரும் முன்னேற்பாடு செய்துகொள்வது அவசியம் என்பதே.

அதாவது அயல்நாட்டுக் குடிமகன் ஒருவர் அமீரகத்தில் மரணமடைந்தால், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும், எத்தனையெத்தனை செலவுகள் வரும், என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டிவருமென்று புட்டுப்புட்டுவைத்திருந்தார்கள். படிக்கும்போதே மனசில் பயம் தொற்றிக்கொண்டது மறுக்கமுடியாத விஷயம்.

கடந்த ஆண்டு, அமீரகத்தில் பணியிலிருக்கும்போது இறந்த,வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 800 என்று அந்தக் கட்டுரை சொல்லியிருந்தது. அதிலும் இதய சம்பந்தப்பட்ட நோய்களால் இங்கு இறப்பவர்களில் அதிகம்பேர் இந்தியர்கள்தான் என்றும் கூறுகிறார்கள்.

பணியிலிருக்கும் குடும்பத்தலைவரொருவர் இங்கே இறந்துபோக நேரிட்டால், அமீரகத்தில் அவருக்கு இருக்கிற கடன்கள், வீட்டுவாடகை, ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் ஃபைன் உட்பட எந்த பாக்கியுமில்லாமல் வசூலித்த பின்னர்தான் இறந்தவரின் உடலை ஊருக்குக்கொண்டுபோக அனுமத்திப்பார்கள் என்பது, சொல்லும்போதே கஷ்டமாக இருந்தாலும், சொல்லியே ஆகவேண்டிய நிஜம்.

இன்னொரு மனசு வலிக்கிற உண்மை என்னன்னா, வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் இறந்தவுடன், உடனடியாக, ஊரிலிருக்கிற அவருடைய வங்கிக்கணக்கு மற்றும் கூட்டுக்கணக்குகள் (joint account)ஏதுமிருந்தால், அனைத்தும் முடக்கப்படும் என்கிறார்கள். இன்ஸ்யூரன்ஸ் செய்திருந்தாலும் அந்தப்பணம் கிடைக்க மிகவும் தாமதமாகுமென்கிறார்கள்.

அதுமட்டுமன்றி, ஆற்றமுடியாத இழப்பின் துயரத்துக்கு மத்தியில்,இறந்தவருக்கான அரசுச் சான்றிதழ்களுக்காகவும், மற்றும் உடலைப் பதப்படுத்துதல், விமானம் மூலமாகக் கொண்டுசெல்லும் செலவு என்று அதற்காக இன்னும் ஒரு பெருந்தொகையும் உழைப்பும் தேவைப்படும் அந்தக் குடும்பத்திற்கு.

ஏர் இந்தியா, இந்தியர்களுக்காக, இலவசமாக உடலை ஊருக்குக்கொண்டுசேர்க்கும் பணியைச் செய்கிறதாம். மற்ற விமான நிறுவனங்கள் 50% சலுகைவிலையில் இந்தச் சேவையைச் செய்கிறார்களாம். ஆனால், உடல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் கூடுமாம். அதிக உடல்எடையென்றால் இங்கேகூடக் கஷ்டம்தான் :(

வாழுகிறவரை, மற்றவர் வாழ வசதிசெய்துகொடுத்த ஒருவன், இறப்புக்குப்பின் பயணிக்கையில், சரக்குகளோடு சரக்காகிப்போவது கொடுமையிலும் கொடுமை. அதிலும், மொத்த சரக்குக் கட்டணம் 1500 திர்ஹாம்களாம்!
(Total cargo cost is Dh1,500)

எந்தநாடாக இருந்தாலும்,வெளிநாட்டில் வாழுகிற ஒருவர், இதுவரைக்கும் யார்யாருக்காக, எவ்வளவு பணம் சேர்த்துவைத்திருந்தாலும், இனிமேல்,இக்கட்டான சூழ்நிலைகளில் உதவுவதற்கென்றும் முன்னேற்பாடாகப் பணம் சேர்த்துவைத்தாகவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது அவரது பெயரில் இல்லாதிருப்பது மிகவும் முக்கியம். இல்லையேல்,
பாவப்பட்டு நிற்கப்போவது அவரது குடும்பமும் குழந்தைகளும்தான்.

இதுதொடர்பான கருத்துக்களை Gulf News ல் படிக்க "இங்கே" பாருங்க...

பி.கு : இது அச்சப்படுத்துகிற விஷயமென்றாலும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று. முடிந்தவரைக்கும் நீங்க படிச்சதைப் பிறர் அறிய எடுத்துச்சொல்லவேண்டியது அவசியம்.

நன்றி : Gulf News

LinkWithin

Related Posts with Thumbnails