Monday, February 14, 2011

கும்மாயம் செய்த குடும்பக்கதை!


அம்மா, ஏன்னோட பிறந்தநாளுக்கு என்ன ஸ்வீட் பண்ணப்போறே?
கேக்? காஜூ கத்லி? சேமியா கேசரி?
அம்மாவின் கன்னத்தைப்பிடித்துக்கொண்டு கொஞ்சிக்கொஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்தாள்  ரேணுவின் சின்ன மகள்.

மீனுக்குட்டி, இந்தப் பிறந்த நாளுக்கு, உங்க அம்மாவைப் புதுசா ஒரு ஸ்வீட் பண்ணச்சொல்லலாமா? என்றபடி அடுக்களைக்குள் நுழைந்தான் கதிர், மீனுவின் அப்பா.

சரிப்பா, என்ன ஸ்வீட் பண்ணலாம்? சொல்லுங்கப்பா என்றபடி, அப்பாவிடம் தாவினாள் மீனு.

இது, ரொம்ப ரொம்பப் பழமையான ஸ்வீட்...

நம்ம பாட்டி பண்ணுவாங்களாப்பா? என்றாள் மீனு.

இல்லம்மா, பாட்டிகாலத்தையெல்லாம்விடப் பலநூறுவருஷப் பழசு.நம்ம தமிழ் இலக்கியத்தில் இருக்கிற பழங்காலப் பாடல்கள்மூலமாதான் இந்த ஸ்வீட்டை அந்தக்காலத்திலேயே நம்ம மக்கள் சாப்பிட்டாங்கன்னு நாம தெரிஞ்சுக்கமுடியுது என்றான் கதிர்.

அந்தக்காலத்து ஸ்வீட்னா, அது பணியாரம், பாயசம் மாதிரிதான் இருக்கும் அதெல்லாம் எனக்குப் பிடிக்காதுப்பா...என்றாள் மீனு.

இல்லம்மா, இது சத்துள்ள பயறுவகைகள் இன்னும் பச்சரிசி, அச்சுவெல்லம் சேர்த்துச் செய்யப்படுகிற பலகாரம். கிட்டத்தட்ட உங்கம்மா செய்யிற சர்க்கரைப்பொங்கல் மாதிரின்னு வச்சுக்கோயேன் என்றான் கதிர்.

அந்தக்காலத்துல, இந்தப்பலகாரத்தை, வரகரிசியும், அவரை வகையைச்சேர்ந்த பயறுகளையும் வைத்து இனிப்புச்சேர்த்துத் தயாரிச்சிருக்காங்க.

பெரும்பாணாற்றுப்படை என்கிற பத்துப்பாட்டு நூலில்,முல்லைநிலத்து மக்களின் உணவுப்பழக்கம்பற்றிச் சொல்லும்போது, இந்த இனிப்பைப்பற்றியும் சொல்லியிருக்கார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

"குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் வேங்கை வீகண் டன்ன
அவரை வான்புழுக் கட்டிப் பயில்வுற்
றின்சுவை மூரற் பெருகுவீர்"

முல்லை நிலத்துக் குடிமக்களிடம் சென்றால், சிறியகொத்துக்களையுடைய பூளைப்பூப்போன்ற வரகரிசியோடு, அவரைவிதை வகையினைச்சேர்ந்த பருப்பினை இட்டுச் சமைத்த, இனிப்புச்சுவையுடைய மூரல் எனும் சோற்றைப் பெறுவீர்கள் என்று பாணனொருவன் இன்னொரு பாணனை ஆற்றுப்படுத்தியதாகச்
(வழிசொல்லியனுப்புதல்) சொல்கிறார் உருத்திரங்கண்ணனார்.

இது, நாம் வழக்கமாகப் பச்சரிசியைவைத்துச் செய்யும் சர்க்கரைப்பொங்கல் மாதிரியேதான் என்றாலும்  இதைக் கொஞ்சம் வித்தியாசமா, இன்னும் நம்ம செட்டிநாட்டு மக்கள் தங்கள் பாரம்பரிய உணவுவகையாக விருந்து, விசேஷங்களில் தயாரிச்சுக்கிட்டிருக்காங்க.

ஒரே வித்தியாசம் இப்ப நமக்கு, வரகரிசி அதிகமா கிடைக்காதுங்கிறதால பச்சரிசி, அவ்வளவுதான். இவ்வளவு சிறப்புள்ள ஒரு இனிப்பை உன்னோட பிறந்தநாளுக்குச் செய்தா அது இன்னும் சிறப்புதானே? என்று மகளிடம் கேட்டான் கதிர்.

சரிப்பா, நீங்க சொல்றதப்பாத்தா இந்த ஸ்வீட் நல்லாருக்கும்னுதான் தோணுது. அம்மாவை அதையே பண்ணச்சொல்லுங்கப்பா...என்றாள் மீனு.

அம்மாடி, அப்பாவும் மகளும்சேர்ந்து சங்ககாலம், சரித்திரகாலத்துப் பண்டம் பலகாரத்தையெல்லாம் இப்போ செய்யச்சொன்னா, அது என்னாலமுடியாது என்று நழுவினாள் ரேணு.

உனக்குத் தெரியலேன்னா சொல்லும்மா, அப்பாவே அதைச் செஞ்சு அசத்திடுவாங்க...இல்லேப்பா? என்று மீனு அப்பாவின் முகத்தைப்பார்க்க, குறிப்புதானே வேணும் உனக்கு, இந்தா எழுதிவச்சுக்கோ என்று சொல்லத் தொடங்கினான் கதிர்...

பாசிப்பருப்பு - 200 கிராம்

உளுத்தம் பருப்பு- 50 கிராம்

பச்சரிசி - 100 கிராம்

வெல்லம் அல்லது கருப்பட்டி - 1/2 கிலோ

நெய் - 100 கிராம்


பருப்பு வகைகளையும் அரிசியையும் வாசம் வரும்வரை வறுத்து,  அதை நல்லாப் பொடிபண்ணிக்கணும்.

வெல்லம் அல்லது கருப்பட்டியை நீர்சேர்த்து, அடுப்பில்வைத்துக் கரையவிட்டு, வடிகட்டிக்கொள்ளணும்.

வடிகட்டிய பாகோடு, பொடிசெய்த மாவினைக் கலந்து, சிறுதீயில்வைத்து,நெய் ஊற்றிச் சுருளக்கிண்டி இறக்கினா கும்மாயம் தயார். இதை லட்டுமாதிரி உருண்டை பிடிச்சோ அல்லது அப்படியே கூட சாப்பிடலாம் என்று கதிர் சொல்லிமுடிக்க,

இந்தா, அடுப்பைப் பத்தவச்சுட்டேன்... சமையல் மன்னரான நீங்களே வந்து மத்ததை கவனிங்க என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தாள் ரேணு.

பி.கு : படத்திலிருப்பது கும்மாயம் அல்ல. இது இணையத்தில் கிடைத்த இன்னொரு இனிப்பு :)

*********

11 comments:

 1. கும்மாயம் அறிமுகம் அருமை.

  ReplyDelete
 2. நிறைய விசயங்களை அறிந்து கொண்டேன்

  ReplyDelete
 3. வாவ்... கதை வடிவுல சமையல் குறிப்பு...ரெம்ப நல்லா இருக்குங்க...இந்த பாட்டு பத்தி கேள்விப்பட்டு இருக்கேன்... படிக்க வாய்ப்பு குடுத்ததுக்கு நன்றிங்க...:)

  ReplyDelete
 4. //asiya omar said...

  கும்மாயம் அறிமுகம் அருமை.//

  நன்றி ஆசியா!

  ReplyDelete
 5. //அரசன் said...

  நிறைய விசயங்களை அறிந்து கொண்டேன்//

  நன்றி அரசன்!

  ReplyDelete
 6. //அப்பாவி தங்கமணி said...

  வாவ்... கதை வடிவுல சமையல் குறிப்பு...ரெம்ப நல்லா இருக்குங்க...இந்த பாட்டு பத்தி கேள்விப்பட்டு இருக்கேன்... படிக்க வாய்ப்பு குடுத்ததுக்கு நன்றிங்க...:)//


  வாங்க புவனா, ரொம்ப நாளுக்கப்புறம் பார்க்கிறேன் :)

  நன்றி!

  ReplyDelete
 7. நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....

  ReplyDelete
 8. தொடங்கும்போது சிறுகதையோன்னு நினைச்சேன். உண்மையிலேயே உங்கள் எழுத்து வித்தியாசமானது. தொடர்ந்து இது போல் நிறைய எதிர்பார்க்கிறோம்!

  ReplyDelete
 9. நன்றிகள் கருன்!

  முதல்வருகைக்கு நன்றிகள் ஞாஞளஙலாழன்!

  ReplyDelete
 10. சமையல் குறிப்புன்ன எட்டிக் கூட பார்க்காத என்னையும் படிக்க வைத்துவிட்டீர்கள். சங்கப்பாடலில் இருந்து குறிப்பெடுத்து சிறுகதை போல் ஆரம்பித்து பிரமாதம் போங்கள்.

  ReplyDelete
 11. செட்டிநாட்டு கல்யாணங்கள்ல இதுக்கு முக்கியஇடம் உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails