Monday, May 2, 2011

பெண்டிர் தேசம் (2) * நெருப்பினில் கருகாத நம்பிக்கை *

முகத்தில் பருவந்தால்கூட முகத்தை மறைக்கிற பெண்களையும், ஒப்பனை செய்துகொள்ளாமல் வெளியுலகிற்கு முகம்காட்டாத பெண்களையும்கூடப் பார்த்திருப்போம். ஆனால், நெருப்பில் எரிந்து, கழுத்தெல்லாம் கருகிப்போனாலும், பலப்பல சிகிச்சைகளுக்குப்பின், இன்றைக்குப் பலருக்கு நம்பிக்கை தரக்கூடிய தன் அடையாளத்தை அடைந்தவர் டாக்டர் பிரேமா தன்ராஜ்.பக்கத்தில் வரவே தயங்கியவர்களையும், பேய்,பிசாசு என்று கேலிசெய்தவர்களையும் கடந்து, ஏகப்பட்ட போராட்டத்துக்கும் அவமானங்களுக்குமிடையில் ஆர்வமுடன் படித்து, மருத்துவப் பட்டம் பெற்று, இன்றைக்கு அதன் மூலம் நெருப்பில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை செய்வதோடுமட்டுமன்றி, இன்றைக்குத் தன்னைப்போல் நெருப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவச சேவை நிறுவனத்தையும் நடத்திவருபவர் டாக்டர் பிரேமா தன்ராஜ்.

அன்றைக்கு, வீட்டில் யாருமில்லாத நேரத்தில், வீட்டிலிருந்த பம்ப் ஸ்டவ்வில் தேநீர் போடப்போன எட்டுவயதுச் சிறுமி பிரேமாவின் உடலில்,  நெருப்புப் பற்றிக்கொண்டது. 50 சதவீதம் நெருப்புக்காயங்களுடன், அடையாளம் தெரியாத சதைக்கோளமாய் வெந்துபோனது அந்தச் சிறுமியின் முகம்.

வேலூரிலுள்ள கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரேமா, உயிருக்குப் போராடியதைப் பார்த்த அவரின் அன்னை, மகள் உயிர்பிழைத்தால் அவளை அந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே மக்களுக்குச் சேவைசெய்யவைக்கிறேனென்று கடவுளைவேண்டிக்கொண்டாராம்.

அந்தச் சின்ன முகத்தில் ஏகப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்தபின், நான்குவருடம் கழித்து மீண்டும் பள்ளிக்குப்போன சிறுமி பிரேமாவுக்குப் பரிசாகக் கிடைத்ததோ அவமானமும் நிராகரிப்புமே. 13 வயதிலேயே பள்ளியிறுதித் தேர்வெழுதி, அடுத்த ஆண்டே பி.யூ.சி யில் சேர, அங்கே, அவரது உழைப்புக்குக் கிடைத்தது உயர்ந்த மதிப்பெண்கள்.

மதிப்பெண் அதிகம் வாங்கியதும் அருகில்வர ஆரம்பித்தார்கள் உடன்பயின்றவர்கள். பி யூ சியில் பல்கலைக்கழகத்திலேயே முதல்மாணவியாகவந்து, அடுத்து ஹூப்ளி மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பட்டமும் பெற்றார் பிரேமா.

அடுத்தபடியாக, அவரது அன்னை செய்த வேண்டுதல் நிறைவேற, தனக்குச் சிகிச்சையளித்த பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர்.ஜோசஃப்பிடமே பிளாஸ்டிக் சர்ஜரியில் மேல்படிப்புக்காக மாணவியாகச் சேர்ந்தார். அதுதவிர அமெரிக்காவிலும் சென்று பிளாஸ்டிக் சர்ஜரி பற்றிப்படித்துவந்தார்.

அமெரிக்காவில் மட்டுமன்றி, நார்வே,கென்யா,எதியோப்பியா,தான்சானியா போன்ற நாடுகளுக்கும் சென்று அங்கிருக்கும் பலருக்கும் மருத்துவ சேவையாற்றியிருக்கிறார் டாக்டர் பிரேமா. அன்றைக்குப் பலர் பார்க்க வெறுத்த அவரது முகமே, இன்றைக்கு பாதிக்கப்பட்ட பலருக்கு நம்பிக்கையளிப்பதாகக் கூறுகிறார் அவர்.


தற்போது, பிளவுபட்ட உதடுகளுடையவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளித்தும், பெங்களூரில் அக்னி ரக்ஷா என்ற சேவை நிறுவனத்தை நடத்தியும், பலருக்கு ஒளிவிளக்காகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார் டாக்டர் பிரேமா.

*** படங்கள், தகவல்கள் அனைத்தும் இணையத்திலிருந்து திரட்டப்பட்டவை ***


6 comments:

 1. நல்ல பதிவு சுந்தரா. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. really impressive. thanx for sharing.

  ReplyDelete
 3. பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி சுந்தரா.. அவங்களோட தன்னம்பிக்கைக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 4. நன்றிகள் அக்கா!

  நன்றிகள் வளர்மதி!

  நன்றிகள் சாரல்!

  ReplyDelete
 5. பகிர்வு அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. பகிர்வு அருமை தோழி

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails