Thursday, September 29, 2011

இப்படியும் ஒரு கொடுமை நடக்குமா???

இரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான் முக்கியமான பேச்சாக இருக்கிறது. ஆனால், படிக்கப்படிக்கப் பெருகுகிறது, பேசப்பேசப் பொங்குகிறது நெஞ்சிலிருக்கிற சோகம்.

அதிகாலை ஐந்துமணியிலிருந்து எழுமணிவரைக்கும் எல்லா அம்மாக்களும் ஏகப்பட்ட பிஸியாக இருப்பது வழக்கம். பிள்ளைகளை எழுப்பி, உணவு தயாரித்துக்கொடுத்து பள்ளிக்கு அனுப்புதல், கணவருக்கான பணிவிடைகளைச் செய்தல், இத்தோடு தானும் வேலைக்குச் செல்வதென்றால் அதற்கான ஏற்பாடுகளைச்செய்தலென்று இயந்திரகதியில் இயங்கிக்கொண்டிருப்பார்கள். விதிவிலக்காகச் சில குடும்பங்களில் அந்த அவசரவேளையில் அப்பாக்களும் சற்று உதவிசெய்வதுண்டு.

அப்பா வெளிநாடு சென்றிருக்க, அம்மாமட்டுமே அத்தனையையும் கவனித்துக்கொள்ளவேண்டியிருந்த அந்தக் குடும்பத்தில் அன்றைக்கு விழுந்திருக்கிறது விதியின் பார்வை. பதினான்கு வயது மகளைப் பள்ளிப்பேருந்தில் ஏற்றிவிட்டுவருவதற்காக அம்மா கீழே சென்றிருக்க, (அநேகமாக அதுவரை உறங்கிக்கொண்டிருந்த) ஐந்தே வயதான அந்தச் சிறுவன் விழித்து எழுந்து, எட்டாவது மாடியின் கண்ணாடி ஜன்னல் வழியாகக் கீழே நிற்கிற அம்மாவையும் அக்காவையும் எட்டிப்பார்த்திருக்கிறான்.


                                                படம் : இணையத்திலிருந்து, நன்றி!

படத்திலிருக்கிற அமைப்பிலான ஜன்னல் அது.

எப்படி ஏறினானென்றும் தெரியவில்லை, எப்படித் தவறினானென்றும் புரியவில்லை. கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்த சிறுவனைப்பார்த்து கட்டிடத்துக் காவலரும் மற்றவர்களும் சேர்ந்து அதிர்ந்து அலற, கவனித்த அந்தச் சிறுவனின் தாய் அலறியடித்துக்கொண்டு தன்னுடைய வீட்டுக்கு ஓடியிருக்கிறார், மகனை உள்ளே இழுத்துக் காப்பாற்ற.

அங்கே, அம்மாவையும் முந்திவிட்டிருக்கிறது அநியாய விதி. அதற்குள் சிறுவன்  எட்டாவது மாடியிலிருந்து விழுந்து, ரத்தக் குளத்தில் மூழ்கிப்போனான். வீட்டுக்கு வந்து, ஜன்னல்வழியாக மகனின் நிலையைக்கண்ட அந்த அம்மா, மறுபடியும் கீழே ஓடியிருக்கிறாள்.

செத்துக்கொண்டிருந்த மகனின் கையைப் பற்றியபடி அழுதுகொண்டிருந்த மகளைப் பார்த்தவள், "இது துரதிருஷ்டமான நாள்" என்று அரபியில் சொல்லி அலறியபடியே, மறுபடியும்  தன் வீட்டுக்கு ஓடிச்சென்று, மகன் விழுந்த அதே ஜன்னல் திறப்பின் வழியே, தன் உடலை வலுக்கட்டாயமாக நுழைத்து, அத்தனைபேர் கண்முன்னாலும் விழுந்து உயிரைவிட்டிருக்கிறாள். மகனை முந்தி, முதலில் போயிருக்கிறது அவளது உயிர்.

அம்மாவும் தம்பியும் கண்முன்னே அடுத்தடுத்து விழுந்து இறந்துபோக, அப்பாவும் அருகிலில்லாமல், என்ன நிலையிலிருந்திருக்கும் அந்தப் பதினான்கு வயதான சிறுமியின் மனசு என்று எண்ணிப்பார்க்கக்கூடமுடியவில்லை :(

பிள்ளைகளுக்குச் சிறுதுயரம் வந்தால்கூடத் தாங்காது பெற்றமனசு. அதில் இப்படிப்பட்ட இடியே விழுந்தால்????
இது, உயரமான மாடிக் கட்டிடங்களில் வசிக்கிற சிறுகுழந்தைகளை வைத்திருக்கிற பெற்றோருக்கான எச்சரிக்கைப் பதிவு. குழந்தைகளை உங்கள் கண்காணிப்பின்றி, ஒருபோதும் வீட்டில் தனியே விடாதீர்கள். அது பின்னர், தாங்கமுடியாத துயரங்களுக்கு வழிவகுத்துவிடலாம்.

Tuesday, September 20, 2011

விரிச்சி கேட்டல்!

"பரிட்சை பக்கத்துல வந்திருச்சு...ஆனா, இவன் என்னடான்னா, படிப்புன்னா என்ன வெலன்னு கேக்குறான். அவங்கப்பாவோ முன்னெல்லாம் எங்கிட்ட ரொம்ப அன்பா நடந்துப்பாரு. ஆனா இப்ப, மகனைக் கெடுக்கிறது நீதான்னு சொல்றதோடு, தொட்டதுக்கெல்லாம் சண்டை வேற. என்னை யாரோ வேண்டாதவ மாதிரி நடத்துறாரு. வீட்ல நிம்மதியே இல்ல. மனசுல இருக்குறதையெல்லாம் சொல்லி அழுவுறதுக்கு நமக்கு இங்க யாரு இருக்கா? அதான், கடவுளே உண்டுன்னு கொஞ்சநேரம் கண்ணமூடிட்டு ப்ரேயர் பண்ணினேன்.

"என்னதான் நினைக்கிறே கடவுளே...எனக்கு ஒரு நல்ல வார்த்தை சொல்லு. என்னோட பேசு"ன்னு என்னையுமறியாம அழுதுட்டேன். வாசல் மணியடிக்கவும் கண்ணத்தொடச்சிக்கிட்டு போயிப்பாத்தேன். அடுத்தவீட்டு அன்னபூரணி மாமி. "ஒரு சந்தோஷமான சேதி கேட்டியோ...என் மருமகள் ஸ்வாதிக்கும் துபாய்லயே வேலைகெடைச்சிருக்கு. இவ்வளவுநாளா, அவ சென்னையிலும் என் மகன் சரவணன் இங்கியுமா கஷ்டப்பட்டுட்டிருந்தாங்க. இனிமே, இங்கே எல்லாரும் ஒண்ணா ஒரே குடும்பமா இருக்கப்போறோம்.

வீட்ல எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். அதான் பால்பாயசம் பண்ணினேன். உனக்குக் கொடுக்கணும்னு தோணித்து. அதான் கொண்டுவந்தேன். நீ ஏன் வாடினாப்போல இருக்கே...எதுக்கும் கலங்காதே. எல்லாத்தையும் கடவுள் பாத்துப்பார்" என்று நல்லசேதியொன்றைச் சொன்னதோடு, என் வேண்டுதலுக்கும் ஏத்தமாதிரி பதிலைச்சொல்லிட்டுக் கண்நிறைய சந்தோஷத்துடன் திரும்பிப்போனாங்க மாமி. அவங்க வந்து சொன்னதைக் கேட்டதும் நானும் சந்தோஷப்பட்டேன். எதிர்பார்த்த மாதிரியே நல்ல வார்த்தைகளைக் கேட்கவும், நம்ம குடும்பமும் இனிமே, ஒற்றுமையா நல்லாயிரும் என்று எனக்கும் நம்பிக்கைவந்துடுச்சு" என்று சொல்லித் தானும் சந்தோஷப்பட்டாள் என் சிநேகிதி.

பிரச்சனைகளின் கனம்தாளாமல் மனசுகிடந்து மறுகும்போது, அருகிலிருந்து யாராவது ஆறுதலாய் நாலு நல்லவார்த்தை சொல்லமாட்டார்களா என்று ஏங்கிப்போகிறது மனித மனது. அப்போது, மனசு நிறைகிறமாதிரி, நல்ல நிகழ்வுகளேதேனும் நடந்தாலோ, நல்ல வார்த்தைகளைக் கேட்டாலோ சுமை குறைந்து நம்பிக்கை பிறக்கிறது வாழ்க்கையில்.

படிக்கிற காலத்தில் கல்லூரி விடுதியிலிருந்தபோது, மனதின் இத்தகைய ஆதங்கம் இன்னோர் வடிவில் விரிவதைப் பார்த்ததுண்டு. வீட்டிலிருந்து, மாதக்கட்டணம் கட்ட மணியார்டர் வரவில்லையே என்ற கவலை,  போனகடிதத்தில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்திவந்த தவிப்பு, எழுதிய செமஸ்டரில் எல்லாப்பாடமும் பாஸாகவேண்டுமென்ற வேண்டுதல் எல்லாவற்றிற்கும் பதிலாக, யார் கையிலாவது பைபிளைக் கொண்டுவந்து கொடுத்து ஏதாவதொரு பக்கத்தைத் திறந்து அதிலிருக்கிற முதல்வசனத்தைப் படி என்று கேட்பாள் எஸ்தர் மரியம்.

நல்லதாய் ஏதாவது வசனம் வந்துவிட்டால் அன்றைக்குமுழுக்க அவள்முகம் சந்தோஷத்தில் ஜொலிக்கும். இல்லாமல், ஏதாவது வித்தியாசமாய் வந்தாலோ, நாள் முழுக்கப் புலம்பிக்கொண்டே இருப்பாள். எஸ்தர் மாதிரியில்லாமல், இன்னும் சிலர், தாங்களாகவே ஏதாவதொரு பக்கத்தை எடுத்து வாசித்துவிட்டு, ஆண்டவர் என்னோடு பேசிவிட்டார் என்று, இறுக்கம் தளர்ந்தவர்களாய் எழுந்துபோவார்கள்.

இங்கேயும் அப்படியொரு காட்சி...


"அருங்கடி மூதூர் மருங்கில் போகி
யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை 
அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரனோக்கி யாய்மகள்
நடுங்குசுவ லசைத்த கையள் கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர
இன்னே வருகுவர் தாய ரென்போள்

நன்னர் நன்மொழி கேட்டன மதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல் தலைவர் வாய்வது நீநின்
பருவர லெவ்வம் களைமாயோயென"

கார்காலம் வந்துவிட்டது. போருக்குச்சென்ற தலைவனைக் காணாமலும் அவனிடமிருந்து செய்தியேதும் வராமலும் கலங்கிநிற்கிறாள் தலைவி. அவளுடைய அந்த நிலையைக் காணப்பொறுக்காத அவளின் வீட்டிலிருந்த  முதியபெண்கள், நெல்லுடன் முல்லைமலர்களைத்தூவி, இறைவனை வழிபட்டுவிட்டு, ஊருக்குள்ளே சென்று, தலைவிக்காக விரிச்சி கேட்டு நிற்கின்றனர். 

அப்போது, தாம்புக்கயிற்றால் கட்டப்பட்ட சிறு பசுங்கன்றானது, பசியினால் சுற்றிச்சுற்றி வருவதைக்கண்ட ஆயர்குலத்துப் பெண்மணியொருத்தி, அக்கன்றினைநோக்கி, கோலுடன் மேய்ச்சலுக்குக் கூட்டிச்சென்ற கோவலர்கள் பின்னேயிருந்து வழிநடத்த, 
உன் தாய் இப்போது வந்துவிடுவாள், வருந்தாதே என்று கூறியதைக் கேட்கிறார்கள். 

நல்லமொழியை விரிச்சியாகக் கேட்ட அவர்கள், சஞ்சலத்தில் தவிக்கும் தலைவியிடம் வந்து, நாங்கள் கேட்ட நல்ல வார்த்தைகளும், கண்ட சகுனமும் நல்லதையே சொல்லுகிறது. அதனால்,போருக்குச்சென்ற தலைவன் பகைவர்களை வெற்றிகொண்ட திறைப்பொருளுடன் விரைவில் உன்னிடம் வருவான். நீ கலங்காமல் காத்திரு என்று கூறுகிறார்கள். 

இது முல்லைப்பாட்டு காட்டுகிற சங்ககாலக் காட்சி. அக்காலக் காட்சியை அடியொற்றிய நிகழ்வுகளை இக்காலத்திலும் நாம் காணும்போது, அன்றைய மக்களின் பழக்கவழக்கங்களில் சிலவற்றை இன்றைக்கும் நம் மக்களில் சிலர் மறவாதிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.  

LinkWithin

Related Posts with Thumbnails