Tuesday, September 20, 2011

விரிச்சி கேட்டல்!

"பரிட்சை பக்கத்துல வந்திருச்சு...ஆனா, இவன் என்னடான்னா, படிப்புன்னா என்ன வெலன்னு கேக்குறான். அவங்கப்பாவோ முன்னெல்லாம் எங்கிட்ட ரொம்ப அன்பா நடந்துப்பாரு. ஆனா இப்ப, மகனைக் கெடுக்கிறது நீதான்னு சொல்றதோடு, தொட்டதுக்கெல்லாம் சண்டை வேற. என்னை யாரோ வேண்டாதவ மாதிரி நடத்துறாரு. வீட்ல நிம்மதியே இல்ல. மனசுல இருக்குறதையெல்லாம் சொல்லி அழுவுறதுக்கு நமக்கு இங்க யாரு இருக்கா? அதான், கடவுளே உண்டுன்னு கொஞ்சநேரம் கண்ணமூடிட்டு ப்ரேயர் பண்ணினேன்.

"என்னதான் நினைக்கிறே கடவுளே...எனக்கு ஒரு நல்ல வார்த்தை சொல்லு. என்னோட பேசு"ன்னு என்னையுமறியாம அழுதுட்டேன். வாசல் மணியடிக்கவும் கண்ணத்தொடச்சிக்கிட்டு போயிப்பாத்தேன். அடுத்தவீட்டு அன்னபூரணி மாமி. "ஒரு சந்தோஷமான சேதி கேட்டியோ...என் மருமகள் ஸ்வாதிக்கும் துபாய்லயே வேலைகெடைச்சிருக்கு. இவ்வளவுநாளா, அவ சென்னையிலும் என் மகன் சரவணன் இங்கியுமா கஷ்டப்பட்டுட்டிருந்தாங்க. இனிமே, இங்கே எல்லாரும் ஒண்ணா ஒரே குடும்பமா இருக்கப்போறோம்.

வீட்ல எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். அதான் பால்பாயசம் பண்ணினேன். உனக்குக் கொடுக்கணும்னு தோணித்து. அதான் கொண்டுவந்தேன். நீ ஏன் வாடினாப்போல இருக்கே...எதுக்கும் கலங்காதே. எல்லாத்தையும் கடவுள் பாத்துப்பார்" என்று நல்லசேதியொன்றைச் சொன்னதோடு, என் வேண்டுதலுக்கும் ஏத்தமாதிரி பதிலைச்சொல்லிட்டுக் கண்நிறைய சந்தோஷத்துடன் திரும்பிப்போனாங்க மாமி. அவங்க வந்து சொன்னதைக் கேட்டதும் நானும் சந்தோஷப்பட்டேன். எதிர்பார்த்த மாதிரியே நல்ல வார்த்தைகளைக் கேட்கவும், நம்ம குடும்பமும் இனிமே, ஒற்றுமையா நல்லாயிரும் என்று எனக்கும் நம்பிக்கைவந்துடுச்சு" என்று சொல்லித் தானும் சந்தோஷப்பட்டாள் என் சிநேகிதி.

பிரச்சனைகளின் கனம்தாளாமல் மனசுகிடந்து மறுகும்போது, அருகிலிருந்து யாராவது ஆறுதலாய் நாலு நல்லவார்த்தை சொல்லமாட்டார்களா என்று ஏங்கிப்போகிறது மனித மனது. அப்போது, மனசு நிறைகிறமாதிரி, நல்ல நிகழ்வுகளேதேனும் நடந்தாலோ, நல்ல வார்த்தைகளைக் கேட்டாலோ சுமை குறைந்து நம்பிக்கை பிறக்கிறது வாழ்க்கையில்.

படிக்கிற காலத்தில் கல்லூரி விடுதியிலிருந்தபோது, மனதின் இத்தகைய ஆதங்கம் இன்னோர் வடிவில் விரிவதைப் பார்த்ததுண்டு. வீட்டிலிருந்து, மாதக்கட்டணம் கட்ட மணியார்டர் வரவில்லையே என்ற கவலை,  போனகடிதத்தில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்திவந்த தவிப்பு, எழுதிய செமஸ்டரில் எல்லாப்பாடமும் பாஸாகவேண்டுமென்ற வேண்டுதல் எல்லாவற்றிற்கும் பதிலாக, யார் கையிலாவது பைபிளைக் கொண்டுவந்து கொடுத்து ஏதாவதொரு பக்கத்தைத் திறந்து அதிலிருக்கிற முதல்வசனத்தைப் படி என்று கேட்பாள் எஸ்தர் மரியம்.

நல்லதாய் ஏதாவது வசனம் வந்துவிட்டால் அன்றைக்குமுழுக்க அவள்முகம் சந்தோஷத்தில் ஜொலிக்கும். இல்லாமல், ஏதாவது வித்தியாசமாய் வந்தாலோ, நாள் முழுக்கப் புலம்பிக்கொண்டே இருப்பாள். எஸ்தர் மாதிரியில்லாமல், இன்னும் சிலர், தாங்களாகவே ஏதாவதொரு பக்கத்தை எடுத்து வாசித்துவிட்டு, ஆண்டவர் என்னோடு பேசிவிட்டார் என்று, இறுக்கம் தளர்ந்தவர்களாய் எழுந்துபோவார்கள்.

இங்கேயும் அப்படியொரு காட்சி...


"அருங்கடி மூதூர் மருங்கில் போகி
யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை 
அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரனோக்கி யாய்மகள்
நடுங்குசுவ லசைத்த கையள் கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர
இன்னே வருகுவர் தாய ரென்போள்

நன்னர் நன்மொழி கேட்டன மதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருதல் தலைவர் வாய்வது நீநின்
பருவர லெவ்வம் களைமாயோயென"

கார்காலம் வந்துவிட்டது. போருக்குச்சென்ற தலைவனைக் காணாமலும் அவனிடமிருந்து செய்தியேதும் வராமலும் கலங்கிநிற்கிறாள் தலைவி. அவளுடைய அந்த நிலையைக் காணப்பொறுக்காத அவளின் வீட்டிலிருந்த  முதியபெண்கள், நெல்லுடன் முல்லைமலர்களைத்தூவி, இறைவனை வழிபட்டுவிட்டு, ஊருக்குள்ளே சென்று, தலைவிக்காக விரிச்சி கேட்டு நிற்கின்றனர். 

அப்போது, தாம்புக்கயிற்றால் கட்டப்பட்ட சிறு பசுங்கன்றானது, பசியினால் சுற்றிச்சுற்றி வருவதைக்கண்ட ஆயர்குலத்துப் பெண்மணியொருத்தி, அக்கன்றினைநோக்கி, கோலுடன் மேய்ச்சலுக்குக் கூட்டிச்சென்ற கோவலர்கள் பின்னேயிருந்து வழிநடத்த, 
உன் தாய் இப்போது வந்துவிடுவாள், வருந்தாதே என்று கூறியதைக் கேட்கிறார்கள். 

நல்லமொழியை விரிச்சியாகக் கேட்ட அவர்கள், சஞ்சலத்தில் தவிக்கும் தலைவியிடம் வந்து, நாங்கள் கேட்ட நல்ல வார்த்தைகளும், கண்ட சகுனமும் நல்லதையே சொல்லுகிறது. அதனால்,போருக்குச்சென்ற தலைவன் பகைவர்களை வெற்றிகொண்ட திறைப்பொருளுடன் விரைவில் உன்னிடம் வருவான். நீ கலங்காமல் காத்திரு என்று கூறுகிறார்கள். 

இது முல்லைப்பாட்டு காட்டுகிற சங்ககாலக் காட்சி. அக்காலக் காட்சியை அடியொற்றிய நிகழ்வுகளை இக்காலத்திலும் நாம் காணும்போது, அன்றைய மக்களின் பழக்கவழக்கங்களில் சிலவற்றை இன்றைக்கும் நம் மக்களில் சிலர் மறவாதிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.  

3 comments:

  1. மிக் மிக அருமை
    சங்ககால நிகழ்வுகளை இக்காலத்தோடு
    தொடர்புபடுத்தச் ிசொல்லிச் சென்ற விதம் அருமை
    கால எத்தனை மாறினாலும்
    மனித மனம் என்பது ஆறுதல் தேடும்
    தன்னை கொண்டது தானே
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம1

    ReplyDelete
  2. ஆறுதல் வார்த்தைகள் உண்டாக்கும் அமைதியை எந்தச் செல்வமோ பொருளோ தந்துவிட முடியாது. விரிச்சிக் கேட்டல் என்றதுமே முல்லைப்பாட்டு நினைவு வந்தது. முல்லைப் பாட்டின் பொருள் சொல்லி, அன்றைய காலத்தையும் தோழியின் நிலை சொல்லி, இன்றைய காலத்தையும் அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. கொஞ்சம் புரியுது :-)

    மறுக்க்கா வாசிச்சா புடிபடும்னு நெனைக்கிறேன் ஹி...ஹி...ஹி...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails