Thursday, September 29, 2011

இப்படியும் ஒரு கொடுமை நடக்குமா???

இரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான் முக்கியமான பேச்சாக இருக்கிறது. ஆனால், படிக்கப்படிக்கப் பெருகுகிறது, பேசப்பேசப் பொங்குகிறது நெஞ்சிலிருக்கிற சோகம்.

அதிகாலை ஐந்துமணியிலிருந்து எழுமணிவரைக்கும் எல்லா அம்மாக்களும் ஏகப்பட்ட பிஸியாக இருப்பது வழக்கம். பிள்ளைகளை எழுப்பி, உணவு தயாரித்துக்கொடுத்து பள்ளிக்கு அனுப்புதல், கணவருக்கான பணிவிடைகளைச் செய்தல், இத்தோடு தானும் வேலைக்குச் செல்வதென்றால் அதற்கான ஏற்பாடுகளைச்செய்தலென்று இயந்திரகதியில் இயங்கிக்கொண்டிருப்பார்கள். விதிவிலக்காகச் சில குடும்பங்களில் அந்த அவசரவேளையில் அப்பாக்களும் சற்று உதவிசெய்வதுண்டு.

அப்பா வெளிநாடு சென்றிருக்க, அம்மாமட்டுமே அத்தனையையும் கவனித்துக்கொள்ளவேண்டியிருந்த அந்தக் குடும்பத்தில் அன்றைக்கு விழுந்திருக்கிறது விதியின் பார்வை. பதினான்கு வயது மகளைப் பள்ளிப்பேருந்தில் ஏற்றிவிட்டுவருவதற்காக அம்மா கீழே சென்றிருக்க, (அநேகமாக அதுவரை உறங்கிக்கொண்டிருந்த) ஐந்தே வயதான அந்தச் சிறுவன் விழித்து எழுந்து, எட்டாவது மாடியின் கண்ணாடி ஜன்னல் வழியாகக் கீழே நிற்கிற அம்மாவையும் அக்காவையும் எட்டிப்பார்த்திருக்கிறான்.


                                                படம் : இணையத்திலிருந்து, நன்றி!

படத்திலிருக்கிற அமைப்பிலான ஜன்னல் அது.

எப்படி ஏறினானென்றும் தெரியவில்லை, எப்படித் தவறினானென்றும் புரியவில்லை. கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்த சிறுவனைப்பார்த்து கட்டிடத்துக் காவலரும் மற்றவர்களும் சேர்ந்து அதிர்ந்து அலற, கவனித்த அந்தச் சிறுவனின் தாய் அலறியடித்துக்கொண்டு தன்னுடைய வீட்டுக்கு ஓடியிருக்கிறார், மகனை உள்ளே இழுத்துக் காப்பாற்ற.

அங்கே, அம்மாவையும் முந்திவிட்டிருக்கிறது அநியாய விதி. அதற்குள் சிறுவன்  எட்டாவது மாடியிலிருந்து விழுந்து, ரத்தக் குளத்தில் மூழ்கிப்போனான். வீட்டுக்கு வந்து, ஜன்னல்வழியாக மகனின் நிலையைக்கண்ட அந்த அம்மா, மறுபடியும் கீழே ஓடியிருக்கிறாள்.

செத்துக்கொண்டிருந்த மகனின் கையைப் பற்றியபடி அழுதுகொண்டிருந்த மகளைப் பார்த்தவள், "இது துரதிருஷ்டமான நாள்" என்று அரபியில் சொல்லி அலறியபடியே, மறுபடியும்  தன் வீட்டுக்கு ஓடிச்சென்று, மகன் விழுந்த அதே ஜன்னல் திறப்பின் வழியே, தன் உடலை வலுக்கட்டாயமாக நுழைத்து, அத்தனைபேர் கண்முன்னாலும் விழுந்து உயிரைவிட்டிருக்கிறாள். மகனை முந்தி, முதலில் போயிருக்கிறது அவளது உயிர்.

அம்மாவும் தம்பியும் கண்முன்னே அடுத்தடுத்து விழுந்து இறந்துபோக, அப்பாவும் அருகிலில்லாமல், என்ன நிலையிலிருந்திருக்கும் அந்தப் பதினான்கு வயதான சிறுமியின் மனசு என்று எண்ணிப்பார்க்கக்கூடமுடியவில்லை :(

பிள்ளைகளுக்குச் சிறுதுயரம் வந்தால்கூடத் தாங்காது பெற்றமனசு. அதில் இப்படிப்பட்ட இடியே விழுந்தால்????
இது, உயரமான மாடிக் கட்டிடங்களில் வசிக்கிற சிறுகுழந்தைகளை வைத்திருக்கிற பெற்றோருக்கான எச்சரிக்கைப் பதிவு. குழந்தைகளை உங்கள் கண்காணிப்பின்றி, ஒருபோதும் வீட்டில் தனியே விடாதீர்கள். அது பின்னர், தாங்கமுடியாத துயரங்களுக்கு வழிவகுத்துவிடலாம்.

10 comments:

  1. படிக்கவே நெஞ்சம் கனக்கிறது ..

    ReplyDelete
  2. படிக்கவே பதறுகிறது
    ஜன்னல் படத்தையும் பதிவிட்டுருப்பதால்
    எப்படி நடந்திருக்கும் என் புரிய
    குலை நடுங்குகிறது
    அது எந்த வகையான ஜன்னல் ?
    ஏன் அந்த மாதிரி பயன்படுத்துகிறார்கள் ?
    நல்ல எச்சரிக்கைப் பதிவு
    த.ம 2

    ReplyDelete
  3. ரொம்ப மோசமான செய்தி.பாவம் அந்த பெண் குழந்தை..

    ReplyDelete
  4. நினைக்கவே நெஞ்சு பதறுகிறது. அந்தத் தாய் அப்படியொரு கொடிய முடிவை எடுக்குமுன் தன் மகளின் எதிர்காலத்தை கொஞ்சமாவது நினைத்துப் பார்த்திருந்திருக்கலாம். குழந்தைகளிருக்குமிடத்தில் இதுபோன்ற சன்னல்களை பூட்டியே வைத்திருப்பது மிகவும் நல்லது.

    ReplyDelete
  5. உண்மையில் மிகவும் கொடுமையான நிகழ்வு..
    கண்கள் குளமாகிறது.
    இதயம் கனக்கிறது...
    விதியின் வலிமையால் மகனுக்கு நடந்திருந்தாலும்
    அந்தத் தாயின் பாசம் தான் எத்தனை பெரிது.
    உயிரையும் விடுமளவிற்கு!...

    ஒருகணம் நிதானித்து இருக்கலாம் உயிரோடு இருக்கும்
    தனது மகளை நினைத்து..

    அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிப்போர்.
    உண்மை தான் சன்னல்களில் சட்டங்களைப் பொருத்தி
    அவைகளைப் பூட்டி உயரமான இடங்களில் வைப்பதே சிறந்தது..

    நாங்கள் வாழும் சிங்கப்பூரில் பெரும்பாலும் கடை பிடிக்கப் படுகிறது..
    சட்டமும் கூட.

    அவசியமானப் பதிவு.. இருந்தும் கண் கலங்க வைத்து விட்டது..
    நன்றிகள் சகோதிரி...

    தமிழ் விரும்பி - ஆலாசியம் கோ.

    http://tamizhvirumbi.blogspot.com/

    ReplyDelete
  6. உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும்

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_25.html

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails