Saturday, February 15, 2014

ஆளில்லா மங்கைக்கு அழகு!

கல்யாணம் பண்ணி இன்னிக்கி நாப்பத்தெட்டு வருஷமாச்சு. கட்டிக்கிட்டு வந்ததிலிருந்து கஷ்ட ஜீவனம் தான். பொறந்த இடத்திலயும் பெருசா எதுவும் வசதியாயிருக்கல. கடவுள் புண்ணியத்துல பிள்ளைங்க நாலுபேரும் நல்லாப் படிச்சதால இன்னிக்கி எல்லாக் கஷ்டமும் தீர்ந்துபோச்சு. ஆனா, இதையெல்லாம் பார்க்க அவங்க அப்பாவுக்குத்தான் குடுத்துவைக்காம போச்சு.

அப்பல்லாம், நாலு பிள்ளைங்களும் படிச்ச காலத்துல அவங்க அப்பா ஒரு ஆள் சம்பளம். அதுல, அம்பது ரூவா  ஒதுக்கி பெரியவனுக்கு இஞ்சினீயரிங் காலேஜ் புஸ்தகம் வாங்கவும், சின்னவனுக்குக் கிழிஞ்சுபோன பள்ளிக்கூடத்து யூனிஃபாரத்துக்குப் பதிலா புதுசு வாங்கவும் எவ்வளவோ சிரமப்பட்டிருக்கோம். ஆனா, இப்பப் பாருங்க,  பிள்ளைங்க  தலையெடுத்த பிறகு, என்ன வேணும்னு நெனச்சாலும் அது அடுத்த நிமிஷமே கிடைக்குது. ஆனா, கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு, கஞ்சத் தனமே ஊறிப்போன இந்தப் பிறவிக்கு இப்போ அதை அனுபவிக்க நினைச்சாலும் முடியல.

நேத்துப்பாருங்க பேச்சுவாக்குல, "கல்யாணத்தப்போ மாம்பழக்கலருல பச்சைக்கரை போட்ட பட்டுச் சேலை வாங்கணும்னு ஆசைப்பட்டதையும், உனக்கு அறுவதாம் கல்யாணத்துக்கு அந்தக் கலர் சேலை வாங்கிருவோம்னு அவங்கப்பா கிண்டலா சொன்னதையும் சின்னப்பையன் குமார் கிட்ட விளையாட்டா சொல்லிட்டிருந்தேன், "கிறுக்குப்பய,  அங்க இங்க அலைஞ்சு அதே நிறத்துல ஒரு பட்டுச்சேலையக் கொண்டு வந்து சாயங்காலமே கையில குடுக்குறான்.

எனக்கு சட்டுன்னு கண்ணுல நீர் கோர்த்துக்கிச்சு கண்ணம்மா. போற வயசுல இதைக் கட்டிக்கிட்டு நான் எங்க போகப்போறேன் வரப்போறேன்?" என்று மறுபடியும் கண்ணில் நீர்வரச் சொல்லிய காந்திமதிப் பாட்டியிடம்,

"இதெல்லாம் குடுப்பினை காந்திமதி, அன்னிக்கி அத்தனை வறுமையிலயும் பொறுமையே தவமா நீ குடும்பத்தைக் காப்பாத்தினதுக்குக் கிடைச்ச பரிசு. இந்தப் பரிசுக்கு நீ முழுக்க முழுக்க தகுதியானவதான். ஆனா என்ன, கொஞ்சம் காலங்கடந்து ஒனக்குக் கிடைச்சிருக்கு அவ்வளவுதான் என்றது காந்திமதியின் தோழி கண்ணம்மா பாட்டி.

இப்போ, நீ சொல்லிப் புலம்புற இதே விஷயத்தைப் பத்தி,
நம்ம ஔவைப்பாட்டி, மூதுரைப் பாட்டுல எவ்வளவு அழகாச் சொல்லியிருக்காங்க தெரியுமா?

"இன்னா விளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா வளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு"

"அதாவது, சுபமான, மங்கல விழாக்காலங்களில் இல்லாமல் மற்றைய காலங்களில் பூக்கிற அழகிய பூக்களையும், துணைவனில்லாத ஒரு இளம் பெண்ணுக்கு அமைந்திருக்கிற அழகையும்போல,  இளமைப்பருவத்தில் வந்து வாட்டுகிற வறுமையும், அனுபவிக்க இயலாத முதுமைப் பிராயத்திலே வந்து சேர்கின்ற இனிமையும் துன்பத்தையே தரும் என்று மூதுரையின் மூன்றாவது பாட்டில் அன்னிக்கே சொல்லியிருக்காங்க..." என்று கண்ணம்மா பாட்டி சொல்ல,

" அடடா...நம்ம மனசு புரிஞ்சாப்பல எவ்வளவு அருமையா அப்பவே சொல்லி வச்சிருக்காங்க பாரு!" என்று வியந்து போனது காந்திமதிப் பாட்டி.

6 comments:

 1. Dindigul Dhanabalan commented on your blog post

  ஆகா...! மூதுரைப் பாட்டு விளக்கம் சொன்ன விதம் அருமை... இது போல் மேலும் தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் தனபாலன் சார்!

   Delete

 2. s suresh shared your blog post on Google+

  மூதுரைப்பாட்டு விளக்கம் அருமை! நல்லதொரு பதிவு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நன்றிகள் சுரேஷ்!

   Delete
 3. Bagawanjee KA shared your blog post on Google+

  மூதுரைப் பாட்டு மழையில் நனைந்து சாரல் சுகக் கண்டேன் !
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான் ஜீ!

   Delete

LinkWithin

Related Posts with Thumbnails