Saturday, February 22, 2014

நடந்தாய் வாழி காவேரி!

இப்போதெல்லாம் விடுமுறையில், திருச்சிக்குப் போகவேண்டுமென்று பேச்செடுத்தாலே அங்கே இரண்டு நாள்தான் இருக்கமுடியும். அதுக்கு சரின்னு சொன்னா வரேன் என்று கண்டிப்போடு சொல்லுவார்கள் பிள்ளைகள். அவர்களிடம் என்ன காரணமென்று கேட்டால் சட்டென்று பதில்வரும். அங்கே தண்ணி நல்லாருக்காது.போர் தண்ணியில குளிச்சா தலை சிக்குப்பிடிச்சுப்போகும். சோப்புப் போட்டாக்கூட நுரையே வராது என்று ஆளுக்கொரு குறை சொல்லுவார்கள்.

கேட்கையில் மிகையாகத் தெரிந்தாலும் விடுமுறையான ஜூன் ஜூலையில் அங்கே செல்லும்போது அநேகமாக எப்போதும் அதே நிலைமைதான். குழாயில் வருகிற தண்ணீரைக் கொதிக்கவைத்துக் குடித்தாலும் நன்றாக இல்லையென்று மினரல் வாட்டருக்கு முக்கால்வாசிப்பேர் மாறிவிட்டதாகச் சொன்னபோது, தென்னக நதிகளில் தலையாய நதியாக நம் தமிழ்ப்புலவன் பாரதி குறிப்பிட்ட காவிரியின் இன்றைய நிலைமை மனதைக் கனக்கவைத்தது உண்மைதான்.

இன்றைக்கு நிலைமை இப்படியென்றாலும், தென்னகத்தின் கங்கையெனுமளவுக்குப் புகழ் பெற்றது காவிரி நதி. தலைக்காவிரியில் பிறந்து வங்காள விரிகுடாவில் வந்து சேருகிற அந்தக் காவிரிப்பெண்ணுக்கு வருகிற வழியெங்கும் வழிபாடு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

 காதோலை,கருகமணி, கருப்பு வளை, இவற்றோடு பூ, பழம் படையலுமாகச் சீர்கொண்டுபோய் ஆடிப்பெருக்கில் அவளை வழிபடும் வழக்கம் காவிரிக்கரைகளில் இன்றும் கண்கூடாகப் பார்க்கிற ஒன்று. ஆடிப்பெருக்கன்று அவளை வழிபட்ட கையோடு புதுமணத் தம்பதிகள் தங்கள் மணநாளில் அணிந்த மாலைகளை அவளிடம் சமர்ப்பிக்கின்ற சடங்கும் இன்றைக்கும் இருக்கிற ஒன்று.

கவிஞர்கள் பலருக்குக் கருப்பொருளாகவும், காண்பவர் கண்ணுக்குக் தாயாகவும் தென்படுகிற காவிரிக்கு இலக்கியத் தொடர்புகள் ஏராளம். 

சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில்,

"வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தனைய கடற்காவிரி 
புனல் புரந்து பொன் கொழிக்கும்”

காவிரியின் மெல்லிய மணல் பொன்னிறமாகத் திகழ்வதால்தான் அதற்குப் பொன்னியென்றும், வடமொழியில் ஸ்வர்ண நதியென்றும் பெயர் வந்ததோ என வியக்கிறார் பட்டினப்பாலையின் உரையாசிரியரான நச்சினார்க்கினியர்.

ஆடிப்பெருக்கில் கூடி வழிபடப்பெறும் காவிரிப்பெண்ணுக்குத் தான் தமிழ்க் குறுமுனிவன் அகத்தியரின் மனைவியென்ற கர்வமும் உண்டு.
ஆம், குறுமுனி அகத்தியர் கவேர மகரிஷியின்  மகளான லோபமுத்திரையை மணந்துகொண்டு, அவளை ஒரு சமயம் கமண்டலத்தில் நீராக்கித் தன்னுடன் எடுத்துச்செல்ல, அந்தக் கமண்டல நீரைக் கணபதியாகிய விநாயகப்பெருமான் காகமாகி வந்து தட்டிவிட, அந்நீரே காவிரி நதியானதாகப் புராணக்கதையாகச் சொல்லுவார்கள்.

இதே கருத்தையே,

"கஞ்ச வேட்கையின் காந்த மன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது 
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை" 

காந்தமன் எனும் அரசனின் வேண்டுகோளுக்கிணங்கி அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்தவள் காவிரி என்று மணிமேகலை கூறும்.

மணிமேகலையில் காந்தமன் எனப்படுகின்ற அதே கண்டம சோழன் எனும் மன்னன், குறுகிய பகுதியிலேயே பாய்ந்துகொண்டிருந்த காவிரியைக் குடகுமலைப் பாறைகளை உடைத்துச் சோழ நாட்டுக்குள் கொண்டுவந்தானென்றும் கூறப்படுகிறது. அந்தச் சோழ மன்னனின் பெருமுயற்சியால் தானோ என்னவோ மிகக் குறுகிய நதியாகப் பாறை இடைவெளியில் பாய்ந்துகொண்டிருந்த, ஆடுதாண்டும் காவிரி என அழைக்கப்பட்ட காவிரி, சோழ மண்டலத்தில் நுழைந்து அகண்ட காவிரியாகி அதைப் பொன்விளையும் பூமியாகப் பூரிக்கவைத்திருக்கிறது.

இவ்வாறு அன்றைக்குக் கண்டமன் கொண்டு வந்த காவிரிக்குக் கல்லணை கட்டிப் பெருமை பெற்றான் மன்னன் கரிகால் சோழன். அவனை,

"குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும் 
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழ வோனே"

மலையெனக் குவித்துவைக்கப்பட்ட நெற்குவியல்கள், மூடைகளில் நிரப்பித் தைக்கப்பட்டும் மிகுந்துபோய் எங்கும் பரந்துகிடக்கின்ற,ஒருவேலி நிலத்தில் ஆயிரம் கலம் நெல் விளையுமளவுக்குக் காவிரியின் நீரால் செழுமைப்படுத்தப்பட்ட, நிலப்பகுதிக்குத் தலைவன் என்று பொருநராற்றுப்படை புகழ்ந்து பேசுகிறது. 

“மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்தும்
கருங்கயற்கண் விழித்து ஓல்கி
நடந்தாய் வாழி! காவேரி!

வண்டுகள் மொய்க்கும்படியாக மலர்களை ஆடையாகப் போர்த்தி, கரிய கயல்கள் கண்களாகி விழித்து நோக்க, நடைபயிலுகின்ற காவிரியின் அழகைச் சிலப்பதிகாரத்தில் சிறப்பித்துப்பாடுகிறார் இளங்கோவடிகள்.

கவிஞர்கள் தன் பங்குக்குக் காவிரியைப் பாட, கல்கி அவர்களின் காவிரி வர்ணனை அதன் மேல் அவருக்கிருந்த காதலைச் சொல்லாமல் சொல்லும். பொன்னியின் செவன் ஒன்பதாவது அத்தியாயத்தில் அவர் காவிரியைப் புகழும் அழகைப் பாருங்கள்...

"குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தன் மணாளனாகிய சமுத்திர ராஜனிடம் சென்றடைய விரும்பினாள். காடும் மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும் தாண்டிக் கொண்டு விரைந்து சென்றாள். சமுத்திர ராஜனை நெருங்க நெருங்க, நாயகனைக் காணப் போகிறோம் என்ற குதூகலத்தினால் அவள் உள்ளம் விம்மி உடல் பூரித்தது. இன்னும் சற்றுத் தூரம் சென்றாள், காதலனை அணைத்துக் கொள்ளக் கரங்கள் இரண்டு உண்டாயின. இரு கரங்களை விரித்தவாறு தாவிப் பாய்ந்து சென்றாள். ஆனால் உள்ளத்தில் பொங்கிய ஆர்வ மிகுதிக்கு இரு கரங்கள் போதுமென்று தோன்றவில்லை; அவளுடைய ஆசைக் கரங்கள் பத்து, இருபது, நூறு என்று வளர்ந்தன. அவ்வளவு கரங்களையும் ஆவலுடன் நீட்டிக் கொண்டு சமுத்திர ராஜனை அணுகினாள். இவ்விதம் ஆசைக் கணவனை அடைவதற்குச் சென்ற மணப் பெண்ணுக்குச் சோழ நாட்டுச் செவிலித் தாய்மார் செய்த அலங்காரங்கள்தான் என்ன? அடடா! எத்தனை அழகிய பச்சைப் புடைவைகளை உடுத்தினார்கள்? எப்படியெல்லாம் வண்ண மலர்களைச் சூட்டினார்கள்? எவ்விதமெல்லாம் பரிமள சுகந்தங்களைத் தூவினார்கள்? ஆஹா! இரு கரையிலும் வளர்ந்திருந்த புன்னை மரங்களும் கடம்ப மரங்களும் ரத்தினப் பூக்களையும் வாரிச் சொரிந்த அருமையை எவ்விதம் வர்ணிப்பது? தேவர்கள் பொழியும் பூமாரியும் இதற்கு இணையாகுமா?
பொன்னி நதியே! உன்னைப் பார்த்துக் களிப்படையாத கன்னிப் பெண் யார்தான் இருக்க முடியும்! உன் மணக்கோல ஆடை அலங்காரங்களைக் கண்டு உள்ளம் பொங்காத மங்கை யார் இருக்க முடியும்?
கலியாணப் பெண்ணைச் சுற்றி ஊரிலுள்ள கன்னிப் பெண்கள் எல்லோரும் சூழ்ந்து கொள்வதுபோல் உன்னை நாடிப் பெண்கள் வந்து கூடுவதும் இயற்கையே அல்லவா!" 
என்று காவிரியின் அழகைச் சிலாகித்துச் சொல்லியிருக்கிறார் கல்கி.

இத்தனை புகழ்பெற்ற நம் காவிரிப் பெண், அகத்தியர் என்ற திரைப்படத்தின் பாடலாக கே. டி. சந்தானம் அவர்களது படைப்பில், குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையில், சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது கம்பீரமான குரலில் எவ்வாறு நடைபயிலுகிறாள் என்பதையும் கேட்டு மகிழுங்கள்.இலக்கியத்தில் படிக்கும்போதும், எத்தனையோ பாடல்களில் கேட்கும்போதும் காவிரியை நினைத்து மகிழ்கிற தமிழனின் மனசு, வளருகிற பயிருக்காகவும், வாழ்வாதாரமான குடிநீருக்காகவும் இன்றைக்கு வழக்குப்போட்டு அண்டை மாநிலத்திடம் சண்டைபோடுகிற நிலைமையைப் பார்த்தால் வருந்தத்தான் செய்கிறது.

                                                                            *********

6 comments:

 1. கீத மஞ்சரி shared your blog post on Google+
  இலக்கியச் சான்றுகளோடு காவிரியின் கடந்த காலப் பெருமையை வாசித்தபோது மகிழ்ந்த மனம், இன்றைய கவலைக்கிடமான நிலைமையையும் விவரிக்கும்போது கலங்குவது உண்மை. நல்லதொரு பகிர்வு. நன்றி சுந்தரா.

  ReplyDelete
 2. Bagawanjee KA shared your blog post on Google+

  காவிரி வரலாறை விரித்து சொன்ன விதம் அருமை !

  ReplyDelete

 3. Dindigul Dhanabalan commented on your blog post

  காவிரியின் அழகு ரசிக்க வைத்தது... காணொளி பாடல் என்று கேட்டாலும் இனிமை...

  இங்கு இப்போதே தண்ணீர் பஞ்சம் ஆரம்பித்து விட்டது... ம்...

  ReplyDelete
 4. உடனடியாக மறுமொழியிட்டு உற்சாகப்படுத்தும் உங்களுக்கு

  நன்றிகள் தனபாலன் சார்!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails