Monday, March 10, 2014

அடுப்படியில ஃபிரிட்ஜும் அரைச்சுவச்ச மாவும் இருக்கா?

அரைச்சு வச்ச மாவோ, ஆட்டி விற்கிற மாவோ ஏதோ ஒன்று வீட்டில் இருந்தால் குடும்பத்தலைவிகளுக்குக் கொஞ்சம் நிம்மதிதான். அவசரத்துக்கும் அந்த நேரத்துக்கும் ஏற்றமாதிரி இட்லியோ தோசையோ ஊற்றி, அதுக்கு சட்னியோ, சாம்பாரோ, தக்காளித் தொக்கோ, இல்லை இவை அத்தனையும் சேர்த்துவச்சோ சமாளிச்சிருவாங்க. சில சமயம், இதுமூணுக்குமே வழியில்லேன்னா, இருக்கவே இருக்கு இட்லிப்பொடி!

அரைச்சுவச்ச மாவை ஆறேழுநாள் வச்சு சாப்பிடுறதும், ஆட்டிவிற்கிற மாவை அப்பப்போ வாங்கிக்கிறதும் வழக்கமாகிப் போன ஒன்று. ஆனா, நம்ம ஊரைப்பொருத்தவரைக்கும் ஆட்டி விற்கப்படுகிற மாவு எப்போ அரைக்கப்பட்டது, எப்படி அரைக்கப்பட்டது, யார்ட்ட இருந்து யார் வாங்கி எப்படிப் பேக் பண்ணி விக்கிறாங்கங்கிறது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இதைப்பத்தி நிறைய செய்திகளை நீங்களே படிச்சிருக்கலாம். 

வெளிநாடுகளில், பாக்கெட்டில் விற்கிற மாவுக்கும் தயாரிச்ச தேதி, அது எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம்ங்கிற தேதி நிச்சயம் குறிச்சிருப்பாங்க. ஆனா, நம்ம ஊரைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கைதான் வாழ்க்கை. கொன்னால் பாவம் தின்னால் தீரும்ங்கிறமாதிரி, அது, எங்கே எப்படிப்பட்ட சூழ்நிலையில, அதில எந்தத் தண்ணீரை ஊத்தி அரைச்சாங்களோ என்கிற சந்தேகமெல்லாம் அடுப்பில வச்சு,  அவிச்சு எடுத்திட்டா அக்னியில் வெந்து சுத்தமாயிருது, ஆரோக்கியம் பத்தின அக்கறையும் அமுங்கிப்போயிருது. 

பெரிய நிறுவனங்கள் தரம், சுத்தம், சுகாதாரம் எல்லாத்தையும் கடைப்பிடிச்சாலும், சின்ன அளவுல இந்தத் தொழிலைச் செய்கிற அநேகர் அதை எப்படிப் பண்ணுறாங்க என்பதை ஒருநாள் கண்ணால பார்த்தாலே தெரிஞ்சு போயிரும். நாள் முழுக்க ஓடிக்கிட்டிருக்கிற கிரைண்டரை எப்போ கழுவுவாங்க எப்படிக் கழுவுவாங்கங்கிறதெல்லாம் யோசிச்சா மிச்சமாகிறது கஷ்டம்தான். 

சமைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் ஆயுள் ஒரு குறிப்பிட்ட கால அளவு இருக்கு. காலைல வச்ச சட்னி, மத்தியானத்துக்குள்ள புளிச்சுப்போயிரும். மதியம் வச்ச சாம்பார் மாலையில் ஒரு தடவை சூடாக்கி வைக்கலேன்னா ராத்திரிக்கு வீணாப்போயிரும். மத்தியானத்து சாதம் இரவுக்குள்ள வேர்த்துப்போகும். அதுக்குள்ள தண்ணீரை ஊத்திவைச்சு மறுநாள் அதைப் பழையசாதமாப் பயன்படுத்தினாங்க நம்ம மக்கள்.

ஆனா, நாம இப்போ சமைச்சு, ஆறினதும் எடுத்து ஐஸ் பெட்டியில வச்சு, அடுத்த நாள், அதற்கடுத்தநாள், இன்னும் ஐந்தாறுநாள் கழிச்சு என்று சாப்பிடுவதெல்லாம்,  பாடம் பண்ணப்பட்ட உணவுகள். ஒருவேளை, சமீபகாலத்தில் நமக்குள் வந்துசேர்ந்த இந்தப் பழக்கம்தான் இல்லாத நோய்களையெல்லாம் உடம்புக்குள்ள கொண்டுவந்து நம்மைப் பாடாய்ப் படுத்துகிறதோ என்னவோ...

இன்றைக்குத் தற்செயலாகக் கண்ணில்பட்ட இந்த வீடியோ, எளிமையான தமிழில் சொல்லப்பட்டிருந்தது.ஆரம்பிச்சதும் இவர் ஏதோ வேற விஷயம் பேசிட்டிருக்காரேன்னு நினைப்பீங்க...ஆனா மேலேயுள்ள சப்ஜெக்டுக்கு சம்பந்தப்பட்ட விஷயம் நாலைஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம்தான் வரும். இதை, முழுமையாய்ப் பாக்க நேரமில்லேன்னாலும் முடிஞ்சவரைக்கும் பாருங்க...


6 comments:

 1. அட! சுந்தரா............. நலமா? ரொம்பநாள் கழிச்சு உங்க பதிவைப்பார்க்கிறேன்.

  எங்களுக்கு இந்தஐட்லி/தோசை மாவு பிரச்சனையே இல்லை. கடைகளில் கிடைக்காது என்பதால் நம் கையே நமக்குதவி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க டீச்சர் :) வணக்கம்.

   நான் நலம், நீங்க நலம்தானே?

   நம்ம நாட்டில் இப்ப இட்லி/தோசை மாவு மட்டுமில்லை, குழம்பு வகைகள் கூடப் பாக்கெட்டில் கிடைக்குதுன்னு சொன்னாங்க :)

   Delete
 2. ஆரோக்கியத்தைக் கூட யோசிக்காமல் செயல்படும் அவசரயுகம் ?

  ReplyDelete
  Replies
  1. நிஜம்தான் சார்...

   மக்கள் ஓட்டமா ஓடிக்கிட்டிருக்காங்க, எதை நோக்கின்னு அவங்களுக்கே தெரியலே :)

   Delete
 3. இல்லாத நோய்களையெல்லாம் உடம்புக்குள்ள கொண்டுவந்து நம்மைப் பாடாய்ப் படுத்தும் பழக்கங்களை மாற்றவாவது முயற்சி செய்யவேண்டும்..!

  ReplyDelete
 4. ஃபிரிட்ஜ் தான் பல நோய்களுக்கு காரணமா என்ற சந்தேகம் எனக்கும் உண்டு! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails