Wednesday, December 9, 2015

அடைமழையும் ஔவையின் மொழியும்!

மாரி அல்லது காரியம் இல்லை இது ஔவையின் மொழி. மழையில்லாவிட்டால் இவ்வுலகில் எதுவுமே இல்லைதான். ஆனால் இப்படியொரு மழையை சென்னை மாநகரமோ அதைச் சுற்றியிருக்கிற மக்களோ எதிர்பார்க்கவில்லை என்பதுதான் நிஜம். 

ஆனால், இந்த மழை ஏகப்பட்ட காரியங்களைச் சத்தமின்றிச் செய்திருக்கிறது என்பதும் நிஜம். மக்களின் மனதில் நிறைய மாற்றங்களை விதைத்திருக்கிறது. இவர் இன்னார் என்பதையும் இது இன்னாதது என்பதையும் உரக்கச் சொல்லியிருக்கிறது, அடித்துச் சொல்லியிருக்கிறது. இந்த மாற்றம் எளிதில் நீங்காது என்றுதான் தோன்றுகிறது. இந்த மழை மட்டும் வரவில்லையென்றால் நம் மக்கள் இலவசங்களின் பெருக்கில் எல்லாவற்றையும் மறந்து கிடந்திருப்பார்கள்.

மாரி அல்லது காரியம் இல்லை என்ற மொழி எவ்வளவு உண்மையோ அதைப்போல அடுத்து வரும் ஔவையின் மொழியும். வானம் சுருங்கில் தானம் சுருங்கும். உண்மைதான். அப்படியென்றால் வானம் பெருகின் தானம் பெருகும் என்பதுதானே பொருள்? இங்கே வானம் பெருகி எம்மக்களின் தானம் செய்யும் குணத்தை உலகிற்கு உணர்த்தியிருக்கிறது. இங்கே பாதிக்கப்பட்டவர்களைவிட உதவிசெய்ய முன்வருபவர்கள் அதிகம் என்று பாராட்டவைத்திருக்கிறது.

பள்ளிக் குழந்தைகள் முதல் பெரும்பணக்காரர்கள்வரை எத்தனையோபேர் பணமும் பொருளுமாக மனமுவந்து கொடுத்திருக்கிறார்கள்.  எத்தனை எத்தனையோ மக்கள் தங்கள் மக்களின் இன்னல் காணப் பொறுக்காமல் இறங்கிவந்து வேலை செய்கிறார்கள். எத்தனை எத்தனையோ இளைஞர்கள் ஓய்வு உறக்கமின்றி ஓடிஓடி உழைக்கிறார்கள். இவற்றையெல்லாம் காணக் கொடுத்ததும் இந்த மழையின் செயல்தான்.

அடுத்ததாக இன்னொரு ஔவையின் மொழி... நீரகம் பொருந்திய ஊரகத்து இரு. இதைத்தான் நம் மக்கள் தவறாக உணர்ந்துகொண்டார்கள் போலிருக்கிறது. நீர்நிலைகளை உடைய ஊரில் குடியிரு என்பது இதற்கான பொருள். ஆனால் நேரடியாக நீர்நிலைகளிலேயே குடியேறிவிட்டார்கள் நம் மக்கள். குடியேறியது மட்டுமா மிச்சமிருக்கிற நீர்வழித்தடங்களையும் மக்காத கழிவுகளால் மறைத்துவிட்டார்கள். இங்கே விளைந்ததுதான் அத்தனை துயரமும்.

இதைத்தான், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தன் இன்னொரு மொழியால் எச்சரிக்கிறாள் ஔவை. இந்த மழை நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கைதான். இப்படியே போனால் இந்தச் சென்னையை என்னால் கூடக் காப்பாற்றமுடியாது என்று இயற்கையின் வாயிலாக இறைவன் கொடுத்திருக்கிற எச்சரிக்கை. அன்றைக்குச் செய்ததற்கெல்லாம் இன்றைக்கு பலன் கிடைத்திருக்கிறது. இனி என்றைக்கும் இது நடக்காமலிருக்கவேண்டுமானால், இனிவரும் மழைக்குள் நம் தவறுகளைத் திருத்திச் சீர்செய்தல் மிக மிக அவசியம்.

Tuesday, December 1, 2015

எப்போது மாறுவீர்கள் இளைஞர்களே!?

பத்து வருடத்திற்கு முன்னாலிருந்த தமிழகத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் இப்போதிருக்கிற வாழ்க்கைநிலையையும் வருடத்திற்கொருமுறை வந்து பார்க்கிற ஒரு விருந்தாளியின் பார்வையில் பார்க்கையில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கிறதாகத்தான் தோன்றும் எனக்கு. கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியும் கணினி மற்றும் இணையப் பயன்பாடும் நிறைய மாற்றங்களை மக்களிடையே உண்டுபண்ணியிருப்பதாகத்தான் தெரிகிறது.

பத்துப் பதினைந்து வருடங்களுக்குமுன் பத்துப் பைசாவுக்கு இருந்த மதிப்புத்தான் இப்போது பத்து ரூபாய்க்கு என்று உறவினர் ஒருவர் சொன்னது உண்மையென்றே தோன்றியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்கு தற்போது அதிகமென்றும் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் லட்சங்களில் சம்பாதிக்கிறதெல்லாம் நிறையப்பேர் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது. அத்தோடு பொருத்தமான பெண் கிடைப்பதற்கு எத்தனை சிரமப்பட்டோமென்று சில மாப்பிள்ளை வீட்டார் சொல்லி அங்கலாய்த்ததையும் கேட்க முடிந்தது.  

 முன்பெல்லாம் பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொல்லிப் போகிற பிள்ளை வீட்டாரைப் போல, இப்போது மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று நிராகரிக்கும் பெண்களைப் பற்றியும் கேள்விப்பட்டபோது, பெண்களின் கருத்தையும் கேட்டு நடக்கிற காலம் வந்துவிட்டதே என்று சந்தோஷமாகத்தான் இருந்தது.

ஆனால், சமீபத்தில் கேள்விப்பட்ட சில விஷயங்கள் இத்தனை மாற்றம் வந்தும் இவர்கள் இன்னும் மாறவில்லையா என்ற சலிப்பைத்தான் தந்தது. சென்னையில் சாஃப்ட்வேர் இஞ்சினீயராகப் பணிபுரியும் தோழியொருவரின் மகளுக்கு வந்த மாப்பிள்ளை வீட்டார், பெண்ணை எங்கள் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது என்று சொல்லி, மாப்பிள்ளை சிறிது நேரம் அந்தப் பெண்ணுடன் பேச விருப்பப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள். சம்மதித்த பெண்ணின் வீட்டார் இருவரையும் பேச அனுமதிக்க, அந்தப் பையன் கேட்ட ஒரே கேள்வியில் அந்தப் பெண் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று மறுத்து விட்டாள்.

அப்படியென்ன கேட்டார் அந்த மாப்பிள்ளை? நாகரீக மயக்கத்தில் எசகுபிசகாக ஏதேனும் கேள்வி கேட்டுவிட்டாரோ என்று நான் நினைக்கையில், திருமணம் ஆனதும் சம்பளப் பணம் முழுவதையும் (ஐம்பதாயிரம்) அப்படியே தன்னிடம் கொடுக்கமுடியுமா என்று கேட்டிருக்கிறார் அந்த புத்திசாலி. இந்தப் பெண் சுதாரித்துக் கொண்டவளாய் நான் வங்கியில் வாங்கிய லோனுக்குப் பிடிப்பது போக நான் பாதி சம்பளம்தான் கையில் வாங்குகிறேன் என்று பதில் சொல்லியிருக்கிறாள். போனவர்கள் ஒரேயடியாய்ப் போய்விட்டார்கள். மாதம் ஐம்பதாயிரம் பெண்ணிடமிருந்து கையில் வரவேண்டுமென்ற எதிர்பார்ப்புடனேயே வந்திருக்கிறார்கள் அந்தப் பெருமக்கள்.

இன்னொரு இடம் இன்னும் விசேஷம்... பையனைப் படிக்கவைத்ததற்கும் படிப்பிற்குப் பட்ட கடனுக்கும்கூடப் பெண்ணின் வீட்டில் வசூலிக்க நினைத்த பிள்ளையைப் பெற்றவர்கள். பிற்காலத்தில் என் பிள்ளையின் சம்பாத்தியம் முழுவதையும் உங்கள் பெண்தானே அனுபவிக்கப்போகிறாள் என்ற பெருந்தன்மைப் பேச்சு வேறு...

மூன்றாவது இடம்  இருபது பவுன் நகையில் இல்லாமல் போன ஒன்று. கைநிறைய சம்பாதிக்கிற பெண்ணுக்கு முப்பது பவுன் நகை போட நினைத்திருக்கிறார்கள் பெற்றவர்கள். வந்த பிள்ளை வீட்டார், பெண்ணைப் பிடித்திருக்கிறதென்று சொல்லிவிட்டு சம்பிரதாயப் பேச்சுக்கு வர, இருபது பவுன் வித்தியாசத்தில் இடம்மாறிப் போய்விட்டது அந்த சம்பந்தம். தங்கம் போலக் குணமுடைய ஒரு பெண்ணை இருபது பவுன் தங்கத்துக்காக வேண்டாமென்று சொன்னால் நஷ்டம் யாருக்கு? நகை மோகம் யாருக்கென்று இப்போது புரிகிறதா?  

வந்ததிலிருந்து அவள் கொண்டுவந்ததைக் கொள்ளையடிக்கவென்றே காத்திருக்கிற இந்த மக்கள் எப்போது திருந்துவார்கள்? பெண்ணைக் கட்டிக்கொடுத்துவிட்டால் பெண்ணோடு அவள் சம்பாத்தியம், சொத்துக்கள் எல்லாம் தனக்கென்று உரிமைகொண்டாடுகிற இந்தக் குணம் என்று மாறும் இந்த மக்களுக்கு? தன் கணவன் தன் குடும்பமென்று வருகையில் அவளாகவே கொடுக்கமுன்வந்தால் அது அழகு. அதை விட்டு அழவைத்துப் பிடுங்கினால்? 

திருமணத்திற்குப் பின் மனமொத்து வாழ்ந்து, இருவருமாக முடிவெடுத்து தங்களுக்கான எதிர்காலத்தை இருவரின் வருமானத்திலும் திட்டமிட்டால் அது சிறப்பு. எல்லாவற்றையும் என்கையில் கொடுத்துவிட்டு உன்னுடைய செலவுக்குக் கூட என்னிடத்தில் நீ கையேந்தவேண்டுமென்று நினைப்பது அதிகாரத்தின் உச்ச கட்டம். என்றைக்கு மாறும் இந்த மனநிலை?அவளுக்கென்று ஒரு மனசு, அதிலும் சில ஆசைகள், தேவைகள் இதெல்லாம் இருக்கக்கூடாதா? அவளுக்கானதை வாங்கிக்கொள்ளும் சுதந்திரம் அவசியம் இல்லையா? 

மதங்களைப் பொறுத்தமட்டிலும் மற்ற சில விஷயங்களிலும் இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் மனமுதிர்ச்சி நிச்சயமாகப் பாராட்டப்படவேண்டியது. ஆனால், கல்யாணம் என்று வரும்போது மட்டும் இவர்கள் பெற்றோருக்குப் பின்னால் பதுங்கிக்கொள்ளுதல் எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை. 

இங்கே, கேட்பது பையனின் அம்மாதானே? அதாவது ஒரு பெண்தானே? பையனோ அவனது தந்தையோ இல்லையே என்ற நழுவல் பதில் வரலாம். ஆனால், அந்தக் காலத்து அம்மாவுக்குக் கணினியிலும் கைபேசியிலும் புரியாதவற்றைக் கற்றுக்கொடுத்துப் புரியவைக்கிறீர்கள். மதங்கள் ஜாதிகளைப் பற்றிப் பேசினால் அதெல்லாம் போனகதை என்றுசொல்லிப் புத்திசொல்லுகிறீர்கள். ஆனால், பெண்ணிடமிருந்து பொருளீட்ட நினைக்கும் குணத்துக்கு மட்டும் முட்டுக்கட்டை போட ஏன் முன்வரமாட்டேனென்கிறீர்கள்? எல்லாம் உனக்காகத்தானே என்கிற அன்னையிடம், என்னை ஏன் விலைபேசுகிறாய் அம்மா என்றுஏன் எதிர்க்கேள்வி கேட்கமாட்டேனென்கிறீர்கள்?

முயற்சி செய்யுங்கள் இளைஞர்களே...ஒரு புதிய மனமாற்றத்தைக் கொண்டு வாருங்கள். அது உங்களுக்கான மதிப்பை நிச்சயம் அதிகப்படுத்தும்.


Thursday, November 26, 2015

கன்னம் வைத்தவர் யாரோ!?

பூங்காவில் நிறையக்கூட்டம். புதன் மாலையென்றதால் விடுமுறைக் கொண்டாட்டம் அப்பொழுதே ஆரம்பித்திருந்தது. மற்ற இடங்களில் சனி ஞாயிறு போல அப்போதெல்லாம் அமீரகத்தில் வியாழன் வெள்ளி விடுமுறையாயிருந்த காலம். நாங்களும் என் கணவரது நண்பர்கள் சிலரும் குடும்பங்களாய்ச் சேர்ந்து குழந்தைகளுடன் பூங்காவுக்குச் சென்றுவிட்டு, அடுத்து அத்தியாவசியப் பொருட்கள் வாங்க அங்கிருந்த சூப்பர்மார்க்கெட்டுக்குச் சென்றுவிட்டு இறுதியாக அங்கிருந்த ஒரு தமிழக உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டுத் திரும்புவதாக ஏற்பாடு.

ஒன்றரை மணி நேரமாயிற்று. பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை கஷ்டப்பட்டு அங்கிருந்து நகர்த்திக்கொண்டு அந்த மாலுக்குள் நுழைந்தோம். நிறையக் கடைகளில் ஸேல் அறிவிப்புகள். அதனால் அங்கும் கூட்டத்திற்குக் குறைவில்லை. கூட்டத்தைத் தாண்டி சூப்பர்மார்க்கெட்டுக்குள் நுழைந்தோம். எங்களில் ஒரு நண்பரின் மனைவி மட்டும் குழந்தைக்கான ப்ராமுடன் (Pram) வந்திருந்தார். கடைக்குள் நுழையும்போதே விளையாடிய அசதியில் அவர்களின் இரண்டரை வயது மகள் ப்ராமில் உறங்க ஆரம்பித்துவிட்டாள். 

வழக்கம்போல ஆண்கள் நால்வரும் கடைக்கு வெளியே நின்றுகொள்ள நாங்கள் பெண்கள் நால்வரும் கடைக்குள் போனோம். உறங்கிய குழந்தையின் தந்தை, "ப்ராமை இங்கயே விட்டுட்டுப் போ..." என்றார் மனைவியிடம். "இல்லேங்க...எழுந்துட்டாள்ன்னா அழுவா...அதனாலே நானே பாத்துக்கறேன் என்று சொல்லிவிட்டு எங்களுடன் வந்தார் அந்தத் தோழி.

பிள்ளைகளுக்கு, கணவருக்கு, வீட்டுக்கு என்று தேவையானவற்றை ட்ராலியில் எடுத்துப் போட்டுக்கொண்டு பில் போடுகிற இடத்தில் வந்து நின்றாயிற்று. " ஸ்வாதி, அடுத்து நாம சாப்பிடப் போகணும் எழுந்திரு குட்டிம்மா..." என்று ப்ராமில் தூங்கிய மகளைக் கன்னத்தைத் தட்டி எழுப்பினார் அந்தக் குழந்தையின் அம்மா. "ஐயோ விடுங்க... நல்லாத் தூங்கறா... ஹோட்டல் போறவரைக்கும் தூங்கட்டும்" என்றேன் நான். இல்லேங்க... இவ தூங்கி எழுந்தா உடனே எதுவும் சாப்பிட மாட்டா. அதான் இப்பவே எழுப்புறேன் என்று உலுக்கி எழுப்பினார். கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள் குழந்தை. நாங்கள் முதலில் பில் போட்டுவிட்டு நகர, மற்ற மூவரும் பின்னால் முடித்துக்கொண்டு வந்தார்கள். 

பில் போடுகிற இடைத்தைவிட்டுச் சிறிது தள்ளி, கடையின் வாசல்வழியாக வெளியேறுகையில் நுழைவாயிலின் செக்யூரிடி அலார்ம் சென்ஸர் விழித்துக்கொண்டு கத்தியது. வாயிலில் நின்ற காவலர்கள் அருகில் வந்து ஒவ்வொருத்தராக வெளியே வரச்சொன்னார்கள். ஒவ்வொரு குடும்பமாக வெளியில் வர, ப்ராம் வைத்திருந்த நண்பரின் மனைவி கடைசியாக நின்றார். அவர்கள் கடக்கும்போது அலார்ம் மறுபடியும் ஒலித்தது. தான் கடையில் பணம் செலுத்தியதற்கான பில்லை எடுத்துக் காட்டினார் அந்த நண்பரின் மனைவி. பையைச் சோதனையிட்டு அதை வெளியே வைத்துவிட்டு, அந்தப் பெண்ணை மறுபடியும் கடந்துவரச் சொன்னார்கள் வாயில் காவலர்கள். ப்ராமுடன் அவர் வருகையில் மறுபடியும் சத்தம். 

அதற்குள் காவலர்களில் ஒருவர் ப்ராமில் என்ன இருக்கிறது? என்று கேட்டார். குழந்தை தான் இருக்கிறது வேறு என்ன? என்றார் அந்தப் பெண் சிரித்துக்கொண்டே. அதற்குள், அம்மா முகத்தையும் அங்கிருந்தவர்களையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தை அருகில் நின்ற தன் அண்ணனை நோக்கிக் கையை நீட்டியது. "விடு அவளை..." என்ற அம்மாவின் வார்த்தையை கவனிக்காமல், பொருத்தியிருந்த பெல்ட்டை விடுவித்துக் குழந்தையை இறக்கிவிட்டான் அந்தச் சிறுவன். குழந்தை எழுந்த இடத்திலிருந்து பெண்களுக்கான ஒரு அழகு சாதன கிரீம் தென்பட்டது. அதைப் பார்த்தவுடன் அந்த வாயில் காவலர் குனிந்து அதைக் கையிலெடுத்துக்கொண்டு மேலும் ஏதேனும் இருக்கிறதா என்று ப்ராமைத் துழாவினார். உள்ளே இன்னொரு வாசனைத் திரவிய பாட்டிலும், ஆடவர்கள் பயன்படுத்தும் ஆஃப்டர் ஷேவ் லோஷனும் இருந்தது. 

நாங்களெல்லாம் அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அந்தப் பெண் அருகில் நின்ற மகளின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார். இரண்டரை வயதுக் குழந்தை...அம்மா எதற்காக அடிக்கிறாள் என்றுகூடத் தெரியாமல் கத்தி அழுதது. அதிர்ச்சியில் நாங்கள் யாரும் எதுவும் பேசவில்லை. கடைக்குள் நுழைந்தது முதல் பில் போடுகிற இடம் வரை அந்தக் குழந்தை உறங்கியது எங்கள் எல்லாருக்கும் தெரியும். அவர்களைக் கடையின் மேலாளரிடம் அழைத்துச்சென்றார்கள் காவலர்கள்.

கடையிலிருந்து வெளியே சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தனர் அப்பாக்கள் நால்வரும். அவர்களிடம் சென்று விஷயத்தைச் சொன்னதும் அந்தப் பெண்ணின் கணவர் கடையின் மேலாளரைக் காண உள்ளே சென்றார். சின்னக்குழந்தை... தெரியாம எடுத்துப்போட்டிருக்கு. அதுக்குப் போயி இப்படியா என்று பேசிக்கொண்டே என் கணவரும் அவர் நண்பர்களும் கூடவே சென்றார்கள். நாங்கள் பெண்கள் மூன்று பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டோம். குழந்தையோ கடைக்குள் முழுக்க உறங்கிக்கொண்டிருந்தது. எடுத்துவைக்கப்பட்டிருந்ததோ பெரியவர்களுக்கான விலை கூடிய அழகுசாதனப் பொருட்கள். நடந்தது என்னவென்று புரிந்தாலும் நாங்கள் மூவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. 

உள்ளே சென்ற அனைவரும் திரும்பி வந்தனர். அந்தக் குழந்தையின் அடிபட்ட கன்னமும் அழுத கண்களும் சிவந்துபோயிருந்தன. "பார்த்தீங்களா...இவளால எவ்வளவு பெரிய அவமானமாப் போச்சு" என்று திரும்பத் திரும்ப எங்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார் அந்த நண்பரின் மனைவி. நாங்கள் யாரும் பதில் சொல்லவில்லை. "சரி சரி விடு... நாம சாப்பிடப்போகலாம்" என்றார் அவர் கணவர். "இல்லையில்லை... இன்னொருநாள் பார்த்துக்கொள்ளலாம் என்று நாங்கள் மூன்று பெண்களும் கோரஸாகச் சொல்லிவிட்டு தனித்தனியாக அவரவர் வீட்டிற்குப் புறப்பட்டோம். 

குழந்தைகளுக்கு எதுவும் தெரிந்துவிடவேண்டாம் என்ற எண்ணத்தில் வீடு செல்லும்வரை நான் எதுவுமே பேசவில்லை. என் கணவரிடம் தனியாக விஷயத்தைச் சொன்னபோது, "அடப் பாவமே... நாங்க போனபிறகும் அந்தக் குழந்தைக்கு நாலைந்து அடி விழுந்ததே..." என்றார் அவர். ஒரு பாவமும் அறியாத அந்தக் குழந்தைக்கு மட்டும் விஷயம் புரிந்தால் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என்ற நினைவு நீண்ட நேரம் மனசைவிட்டு நீங்கவில்லை. 

Sunday, November 22, 2015

அடுக்களை ஜோடிப் பொருத்தம்!

"அடேய்...நம்ம வீட்ல முட்டைக்கோஸ் கூட்டுப் பண்ணினா கிட்டக்கூட வரமாட்டே...ஆனா பாட்டி வீட்டுல, பத்து நாள் பட்டினி கிடந்த மாதிரி சாப்பிடுறே..." ஆச்சரியத்துடன் அலுத்துக்கொண்டாள் புவனி. பதில் சொல்லாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்தான் அவள் மகன் சரவணன். எப்பவும் இவன் இப்படித்தான் பாட்டிபாவுக்கும் பிள்ளைக்கும் வெளியே சாப்பிடுகிற சாப்பாடு, இல்லேன்னா ஹோட்டல் சாப்பாடுதான் பிடிக்குது. வீட்டுச் சாப்பாடு சுத்தமாப் பிடிக்கிறதில்லை. சொல்லி வருத்தப்பட்டாள் புவனி.

சில மாதங்களுக்கு பிறகு புவனியின் வீட்டிற்குச் சென்றபோது அதிர்ஷ்டவசமாக அவள் சமைக்கிறதைப் பார்க்கிற சந்தர்ப்பம் கிடைத்தது கல்யாணிப் பாட்டிக்கு. முட்டைக்கோஸை நறுக்கி அரை லிட்டர்  அளவுக்கு நீர் சேர்த்து வேகவைத்து இன்னொரு அடுப்பில் பாசிப்பருப்பையும் தனியே வேகவைத்து இரண்டையும் நீரை வடித்து எடுத்துவைத்தாள். வாணலியில் கடுகு கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அத்துடன் உப்பும் தேங்காய்த்துருவலும் சேர்த்தாள். முடிந்தது வேலை.

சாம்பார், முட்டைக்கோஸ் கோஸுடன் சாப்பிட உட்கார்ந்தானது. அரை உப்புத்தான் இருந்தது முட்டைக்கோஸ் கூட்டில். காரசாரமில்லாத சாம்பார். இரண்டுக்கும் ஒத்துவரவே இல்லை. வழக்கம்போல வைத்த கூட்டைத் தட்டிலேயே வைத்துவிட்டு எழுந்தான் அவள் மகன். பாருங்க பாட்டி...அன்னிக்கி உங்க வீட்ல நல்ல சாப்பிட்டான்ல...இப்பப் பாருங்க என்று உச்சுக்கொட்டியவாரு தட்டை எடுக்கப்போனாள் புவனி. அவளைக் கையைப் பிடித்துப் பக்கத்தில் உட்காரச் சொன்னாள் கல்யாணிப் பாட்டி.

ஜோடிப் பொருத்தம்னு ஒண்ணு சொல்லுவாங்களே...அது என்னன்னு தெரியுமா உனக்கு? அது கல்யாணத்துக்கு மட்டும் பொருந்தாது, சமையலுக்கும் பொருந்தும். எந்த மாதிரி குழம்புக்கு என்ன மாதிரி தொடுகறி பண்ணினா நல்லாருக்கும்னு முதல்ல புரிஞ்சிக்கணும். முதல்ல, தேவைக்கு அதிகமா தண்ணீர் வச்சு வேக விடக்கூடாது. காய்களைக் நல்லா கழுவினபிறகு நறுக்கணும். முட்டைக்கோஸை நறுக்கி, நல்லா அலசிட்டு, கொஞ்சமா தண்ணீர் தெளிச்சு,  சிறுதீயில மூடி வச்சு வேக விடு. காய் ருசியும் போகாது, சத்தும் போகாது.

அதுக்கப்புறம் என்ன குழம்புக்கு எந்த கூட்டு நல்லாருக்கும்னு யோசி.
புளிக்குழம்பு, வத்தக்குழம்புக்கு பருப்புப்போட்ட கூட்டு வகைகள் நல்லருக்கும். சாம்பாருக்கு அதையே கொஞ்சமா எண்ணெய்ல வதக்கி பருப்பு சேர்க்காம பொரியலாய்ப் பண்ணலாம். இல்லை, மிளகாய்த்தூள் சேர்த்துக் கொஞ்சம் காரமா வேறு ஏதேனும் பொரியல் செய்து கொடுக்கலாம். காய்கறிகள் பிள்ளைகளுக்குப் பிடிக்காதுன்னு பொதுவா ஒதுக்கிடக் கூடாது. பிடிக்கிற விதத்தில் பண்ணினாப் பிரியமா சாப்பிடுவாங்க.

இப்படித்தான் போனவாரம் தெரிஞ்ச ஒரு பொண்ணுகிட்ட என்ன சமையல்னு எதேச்சையாக் கேட்டேன். ரசம் வச்சு, கீரை கடைஞ்சேன் பாட்டின்னு சொன்னா. அவ குடும்பத்து மனுஷங்களை நினைச்சுப் பாவப்படத்தான் தோணிச்சு எனக்கு. கடமைக்கு சாப்பிடுறதில்லை சாப்பாடு. அதைக் கொஞ்சம் கரிசனத்தோடு சமைச்சா குழந்தைகளும் நல்லா சாப்பிடுவாங்க, நாம சமைச்சதும் வீணாகாது என்ற கல்யாணிப் பாட்டியிடம், "போங்க பாட்டி, இப்படித்தான் நேத்திக்கி, பூண்டுக்குழம்பும் புளிபோட்ட வெண்டைக்காயும் பண்ணிவச்சேன். அப்பக்கூட இந்தப் பையன் சாப்பிடவே இல்லை" என்றாள் புவனி. குழம்பும் புளிப்பு, கூட்டிலும் புளிப்பா என்று வியப்புடன் அவளைப் பார்த்த பாட்டி, அப்போ, உன் வீட்டுக்காரர் சாப்பிட்டாரா என்றாள். அவர் வயிறு சரியில்லைன்னு தயிரும் ஊறுகாயுமா சாப்பிட்டு முடிச்சிக்கிட்டார் என்று அப்பாவியாய்ச் சொன்னாள் புவனி.

பிரச்சனை பிள்ளை கிட்டயோ புருஷன் கிட்டயோ இல்லை...இவளின் சுவையுணர்வில் இருக்கிறது என்று புரிந்தது பாட்டிக்கு. சமையல் கற்றுக்கொடுக்கலாம்... ஆனால், ருசி உணர்ச்சியை நம்மால் கற்றுக்கொடுக்க முடியாதுடா சாமி... என்று எழுந்து புறப்பட்டாள் கல்யாணிப் பாட்டி.


Thursday, November 12, 2015

உறக்கமில்லாத இரவு

தட்டிலிருந்த கடைசிக் கவளத்தை மனைவியின் வாயில் ஊட்டியவன், "உனக்கு ஒண்ணும் பயமில்லையே மீரா? என்று சோகமாய்க் கேட்க, வாய் நிறைய சாதத்துடன் சிரித்தபடி, குறுக்கும் நெடுக்குமாகத் தலையசைத்தாள் மீரா.  தண்ணீரைக் குடித்துவிட்டு அவனைப் பார்த்து சிரித்தவள்,  "தைரியத்துல நானெல்லாம் திருநெல்வேலிலயே நம்பர் ஒன் தெரியுமா?  ஹாஸ்டல்ல இருந்தப்ப என்னோட தோழிங்க எல்லாரும், நைட்ல பாத்ரூம் போணும்னாகூட பாடிகார்டா என்னைத்தான் கூப்பிடுவாங்க. நீங்க எதுக்கு சின்னப்பிள்ளை மாதிரி கவலைப்படுறீங்க? என்று கணவனைத் தேற்றினாள் அவள்.

கல்யாணம் முடிந்து ஒருமாசம் ஆன பிறகு சரவணனுக்கு இன்றைக்குத்தான் முதலாவதாக நைட் ஷிஃப்ட். இரவு பத்திலிருந்து காலை ஆறுவரைக்கும். சுற்றிலும் வீடுகள், குடும்பங்கள் இருக்கிற பகுதியாய்ப் பார்த்துத்தான் வீடு எடுத்திருந்தான் என்றாலும் மனசுக்குள் மனைவியைத் தனியாக விடுவதற்குத் தைரியம் வரவில்லை அவனுக்கு.

"நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க...நான் என்னோட சின்ன அரண்மனையை 'சிக்'குன்னு பூட்டிக்கிட்டு செல்ஃபோன்ல பாட்டுக் கேட்டுக்கிட்டே தூங்கிருவேன் என்றவளை, அருகணைத்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டுக் கிளம்பினான் சரவணன்.

வாசலில் நின்றவன், " நீ உள்ள போயி பூட்டிக்கோ... அப்புறம் நான் கிளம்பறேன்" என்று சொல்ல, "அடடா... இது ரொம்ப சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு" என்றவள், கணவனின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ளிவிட்டு உள்ளே சென்று கதவைத் தாளிட்டாள். வெளியே சரவணனின் பைக் புறப்படும் சத்தம் கேட்டது. 

மெல்லிய முறுவலுடன் அடுக்களைப் பாத்திரங்களை ஒதுக்கி, சமையலறையைச் சுத்தம்செய்துவிட்டுத் திரும்புகையில், பின்னால் எதுவோ விழுந்து பாத்திரம் அதிர்ந்த சத்தம் கேட்டது. பதறிப்போய்த் திரும்பினாள் அவள். சுவரோரத்தில், குடத்தின் மூடியின் மேல் தலையை உயர்த்தியபடி உட்கார்ந்திருந்தது பல்லி ஒன்று. அவள் அருகில் செல்லவும், குதித்து மேடைக்கு அடியில் ஓடியது.  மேலே ட்யூப் லைட்டுக்குப் பின்னாலிருந்து விழுந்திருக்கும் போல... அதுதான் சத்தம் என்று நினைத்தவள், தண்ணீர்ப் பாத்திரங்களை நாளைக்கு வேறு இடத்தில் வைக்கணும் என்று நினைத்தபடி அடுக்களை விளக்கை அணைத்தாள்.

செல்போனைக் கையிலெடுத்து பாட்டுக்கேட்கலாம் என்று நினைத்த தருணத்தில் சட்டென்று அது சிணுங்கியது. சரவணனாய்த்தான் இருக்கும் என்று சந்தோஷத்துடன் எடுத்தவளை ஏதோ ராங் நம்பர் ஒன்று வெறுப்பேற்ற, அணைத்துவிட்டுப் படுக்கையில் உட்கார்ந்தாள்.  அருகிலிருந்த ஸ்டூலில் அடுக்கியிருந்த புத்தகங்கள் கண்ணில் படவே அந்த வாரத்துப் பெண்கள்  இதழைக் கையில் எடுத்தாள். 

முன்னெல்லாம் புத்தகம் வாங்கினால் வாங்கிய கையோடு அதை முடித்துவிட்டுத்தான் கீழே வைப்பாள். இப்போ, பதினைந்துநாள் முன்னால் வாங்கிய புத்தகம் பாதிகூடப் படிக்கப்படாமல் இருந்தது. நான்குபேராயிருந்த பிறந்த வீட்டிலிருந்து விலகிக் கணவனும் அவளுமாய் இரண்டுபேரே இருக்கிற குடும்பத்துக்கு வந்தாலும் எந்த நேரமும் ஏதாவது செய்வதற்கு இருந்தது அவளுக்கு. உறக்கம் வருவதற்குள் எடுத்த புத்தகத்தைப் படித்து முடித்துவிடவேண்டுமென்ற உத்வேகத்துடன் பக்கங்களைப் புரட்டுகையில் வாசல் பக்கம் ஏதோ கதவைப் பிறாண்டுகிற சத்தம் கேட்டது. குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டுக் கேட்ட அந்தச் சத்தம் ஏதோ சமிக்ஞை போல் தோன்றியது அவளுக்கு. இதயத்தின் துடிப்பு எகிறத் தொடங்கியது அவளுக்கு.

வாசலுக்குப் பக்கத்தில் சிறிய சன்னல் ஒன்றிருந்தது. வாசலில் விளக்கு எரிந்துகொண்டுதான் இருந்தது. எட்டிப்பார்க்கலாம் என்று நினத்தவளை ஏதோ உணர்வு பின்னுக்கு இழுத்தது. பூனையோ நாயாகவோ இருக்கும் அல்லது கீரிப்பிள்ளையாக இருக்குமோ என்று நினைத்தவள், என்ன சத்தம் வந்தாலும் கதவைமட்டும் திறக்கக்கூடாது என்று சரவணன் சொன்னதை நினைத்துக்கொண்டிருக்கையில் அந்தச் சத்தம் நின்றுவிட, மறுபடியும் படுக்கையில் வந்து உட்காந்தாள்.

முள்காடாகவும் விளைநிலமாகவும் இருந்த பகுதியை அழித்து உருவான குடியிருப்புப் பகுதி அது. இப்போது குடியிருப்புப் பகுதியாய் மாறியிருந்தாலும், முன்னாளைய இப்பகுதி வாசிகளான பாம்பு, ஓணான், கீரிப்பிள்ளை ஆகியவை இன்றைக்கும் அவ்வப்போது வந்துபோவதுண்டு என்று வீடு பார்க்கவந்த அன்றைக்கே பக்கத்துவீட்டு வான்மதியின் மாமியார் சொன்னது நினைவுக்கு வந்தது.

  மனுஷங்களோட ஆக்ரமிப்புல உலகத்துல உள்ள உயிரினங்கள் ஒண்ணொண்ணா அழிஞ்சுகிட்டு வருது. அதுங்களும்தான் எங்க போகும் பாவம் என்று எண்ணியபடியே புத்தகத்தை எடுத்து விட்ட இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தாள். 

நான்கைந்து பக்கம்தான் புரட்டியிருப்பாள் அதற்குள் எரிந்துகொண்டிருந்த ட்யூப்லைட்டும் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியும் பட்டென்று நின்றுபோனது, "ஆஹா, கரண்ட் கட்...ஆனா, இன்வெர்டர் ஏன் வேலை செய்யலை? என்று எண்ணியவளுக்கு அப்போதுதான் உரைத்தது. இந்த மாசத்துல இருந்து ராத்திரி பத்து டூ பன்னிரண்டு கரண்ட் கட் என்று.

சரவணன் புறப்பட்டப்பவே கரண்ட் போயி, இவ்ளோ நேரம் இன்வெர்டர்லதான் ஓடியிருக்கும்போல என்று நினைத்தவள், கையிலிருந்த செல்போனை உயிர்ப்பித்து அந்த வெளிச்சத்தில் அடுக்களைக்கு நடந்தாள். 

அடுக்களை அலமாரியில் மெழுகுவர்த்தியைத் தேடுவதற்குள் வெளிச்சம் அணைந்துவிட, கைகளால் தடவிக் கண்டுபிடித்தவள் மறுபடியும் செல்போனை உயிர்ப்பிக்காமல் தீப்பெட்டியை எடுக்க விளக்கு மாடத்தை நோக்கி நடந்தாள். சட்டென்று யார் மேலேயோ மோதியதுபோலிருந்தது அவளுக்கு. அவளையுமறியாமல் 'வீல்' என்று சத்தமிட்டவள், நடுங்குகிற கரங்களால் செல்ஃபோனை மறுபடியும் உயிர்ப்பித்தாள். சுற்றிலும் வெளிச்சம் பரவ அங்கே எதுவும் தென்படவில்லை.

பின்பக்கமாகவே நடந்து, மாடத்திலிருந்த தீப்பெட்டியை எடுத்து மெழுகுவர்த்தியை ஏற்றியவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். ஆறுக்கு எட்டு அடுப்படியும் பத்துக்குப் பத்து படுக்கையறையும், சின்னதொரு குளியலறையும் உள்ள அந்த வீட்டில் அவளைத்தவிர யாரும் இல்லை. ஆனால், அவள்மீது மோதியது யார்? அது நிச்சயம் பிரமையில்லை, நிஜம்தான் என்று அவள் உள்ளுணர்வு உறுத்த, அதற்குள் கரண்ட் வந்துவிட்டது.

அடுக்களை லைட்டையும் எரியவிட்டாள். வீடு பளிச்சென்றிருந்தது. கட்டிலுக்கடியில் குனிந்து பார்க்காமலே தெரிந்தது. அங்கே அவளைத் தவிர யாருமில்லை. குளியலறைக் கதவு வெளிப்பக்கம் தாளிடப்பட்டிருந்தது ஆனாலும் விளக்கைப் போட்டுவிட்டுத் திறந்துபார்த்தாள். அதுவும் காலியாக இருந்தது. வாசல்கதவும் பூட்டித் தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது. முதல்முறையாக மனசிலிருந்த தைரியம் போக, பயம் வந்து ஒட்டிக்கொண்டதை உணர்ந்தாள். 

இனிமேல் நிச்சயம் உறங்கமுடியாது என்று தோன்றவே, செல்போனை உயிர்ப்பித்து, சரவணனின் எண்ணை அழுத்தினாள். நடந்ததைச் சொன்னால் அவனும் பயப்படுவானா அல்லது பகடி பண்ணுவானா என்ற எண்ணம் வர, அதை நேரிலேயே சொல்லிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தாள்.

அலைபேசியில், "என்னடா, இன்னுமா நீ தூங்கல? என்றான் சரவணன். "என்னமோ தெரியலங்க...தூக்கமே வரல. இனிமே, நானும் ராத்திரி பூரா முழிச்சிருந்துட்டு, பகல்ல நீங்க வந்ததும் தூங்கலாம்னு நினைக்கிறேன்" என்று சொல்ல, "அசட்டுக் கழுத...விளையாடாம சீக்கிரம் தூங்கு. எனக்கு வேலை இருக்கு என்று சிரித்தபடி இணைப்பைத் துண்டித்தான் சரவணன்.

மனதில் பயம் பிறாண்ட,அம்மா சொல்வதுபோல சஷ்டிக் கவசத்தின் வரிகளை உச்சரித்தபடியே கணினியை எடுத்து உயிர்ப்பித்தாள். தனக்குத் தோன்றிய அனுபவத்தைக் குறிப்பிட்டு கூகிளில் தேட ஆரம்பித்தாள். அவளைப் போலவே இன்னும் பலர் எழுதியிருக்க, அதை ஒவ்வொன்றாகப் படிக்க ஆரம்பித்தாள். சுவாரசியம் பற்றிக்கொண்டது. சிலரின் அனுபவங்கள் சிரிக்கவைப்பதாயும் சில அனுபவங்கள் சில்லிடவைப்பதாயும் இருந்தது.

அடுத்ததாய், தனிமையின் பயத்தை விரட்டுவது எப்படி என்று இன்னொரு தலைப்பைத் தேட ஆரம்பித்தாள். பக்கம்பக்கமாய் விரிந்தது பலரின் அனுபவங்களும் அறிவுரைகளும். சுற்றியிருந்த அத்தனையும் மறந்துபோக புதுப்புது விஷயங்களை வாசித்து அதிலேயே ஆழ்ந்துபோனாள். ஆக, அன்றைக்கு கூகிளின் துணையுடன் தொலைந்துபோனது அவளது தூக்கமும்  தனிமையின் பயமும்.Thursday, September 10, 2015

மூதுரைக்கதைகள் - 2 "புலி கிடந்த புதர்!"

மாலை மணி ஐந்து முப்பது. அலுவலகம் காலியாய்த் தெரிந்தது. இருந்த ஒன்றிரண்டுபேரும் வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தனர்.

"சண்முகம் சார், உங்களுக்கு காப்பி, டீ ஏதாச்சும் வாங்கியாரவா?" என்றபடி அவரது இருக்கைக்கு அருகில் வந்து நின்றார் பியூன் மாணிக்கம். "வேண்டாம் மாணிக்கம் கொஞ்ச நேரம் கழிச்சு டிபனே வாங்கிட்டு வந்துட்டு நீ வீட்டுக்குக் கிளம்பு. நான், இன்னிக்கி நைட் ஷிஃப்டும் முடிச்சு தான் வீட்டுக்குப் போகணும்" என்றபடி ஃபைலில் பார்வையைப் புதைத்துக்கொண்டார் சண்முகம்.

"அப்போ, காலாற நடந்துபோயி டீ சாப்டுட்டு வந்து உக்காரலாமே சார்...காலைல வந்ததுலே இருந்து ஃபைலே கதின்னு இருக்கீங்களே...மத்தியானம் கூட வெளியே போகல...உடம்பு கிடம்பு சரியில்லயா சார்?" என்று அக்கறையுடன் அவர் முகத்தைப் பார்த்தார் மாணிக்கம். மாணிக்கத்துக்கும் அவருக்கும் அலுவலக இடைவெளிகளை மீறிய நல்ல நட்பு உண்டு.

நிமிர்ந்து அவரைப் பார்த்தவர், "நீ போயி வேலையைப் பாரு மாணிக்கம்" என்றபடி, அலைபேசியை எடுத்து அரிசிக்கடை செட்டியாருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, தன்னுடைய நாற்காலியிலிருந்து எழுந்துபோய் தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்பவந்து அமர்ந்தார். 
 காதுகளில் காலையில் மனைவி பரமு சொன்ன வார்த்தைகள் திரும்பத்திரும்ப எதிரொலித்துக்கொண்டே இருந்தன.

"வக்கத்த வாத்தியாரும் வேண்டாம், போக்கத்த போலீசும் வேண்டாம்னு சல்லடை போட்டுத் தேடிப் பிடிச்சு இந்த ஆக்கங்கெட்ட ஆபீசருக்குக் கட்டிவச்சார் எங்க அப்பா. இங்க என்ன வாழுது? ஒரு நல்லது கெட்டதுக்கு முன்னால நிக்கிறமாதிரியா இருக்கு? ஆசைஆசையா வாங்கின நகைய அடகுவச்சுத்தான் பிள்ளையைப் படிக்கவைக்கவேண்டியிருக்கு. நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது...வீட்டுக்கு வரும்போது என்னோட வளையலோட வரணும். இல்லேன்னா..." என்றவாறு அவள் அடுப்படிக்குள் நுழையவும் இவர் ஆபீசுக்குப் புறப்பட்டு வந்துவிட்டார். காலையில் காப்பி கொடுக்கையில் ஆரம்பித்த அர்ச்சனை அதுவரைக்கும் ஓயவில்லை.

மகனைப் பொறியியல் கல்லூரியில் சேர்க்க ஏகப்பட்ட செலவாகிவிட்டது அவருக்கு. சேமிப்பெல்லாம் கரைந்துபோக இறுதியில் போனவருஷம் தீபாவளிக்கு வாங்கிக்கொடுத்த வளையை வங்கியில் வைக்கவேண்டியதாகிவிட்டது. அதனால்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும்.

அடுத்த வாரம் வருகிற அண்ணன் மகனின் பிறந்த நாளுக்கு அந்த வளையல் இல்லாமல் போகமுடியாது என்ற பிடிவாதம் வேறு. "அவரவருக்கு இருக்கிற பிரச்சனையில் உன்னோட கையில் கிடக்கிற வளையல் புதுசா பழசா என்று யாரும் பார்க்கப்போவதில்லை" என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்துவிட்டார். பரமு கேட்பதாயில்லை. அரிசிக்கடை செட்டியாரிடம் வட்டிக்குப் பணம் கேட்டிருந்தார். நாளைதான் கிடைக்கும். அதற்குள் வீட்டுக்குப்போய் இன்னும் கொஞ்சம் வாய்ப்பரப்பு வாங்கிக்கொள்ள விருப்பமில்லை சண்முகத்துக்கு.

சண்முகத்தைப்போலப் பலரும் இல்லற வாழ்க்கையில் சங்கடப்படுவது தெரிந்துதான் அன்றைக்கே ஔவை மூதாட்டி, சுடுசொல் பேசுகிற இல்லாள் அமைந்த வீடு, புலி பதுங்கிக்கிடக்கும் புதருக்கு சமமானது என்று அழுத்திச் சொல்லியிருக்கிறாள்.

"இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்".

மூதுரையின் இருபத்தோராவது பாடலில், மனைவி நல்லவளாக அமைகிற குடும்பத்தில் இல்லாதது எதுவுமே இல்லை. அங்கே எல்லாச் சிறப்புகளும் நிறைந்திருக்கும். அவளே, சுடுசொல்லால் தகிக்கிறவளாக அமைந்துவிட்டால் அந்த வீடு புலி பதுங்கிக்கிடக்கிற புதரைப்போல அச்சத்தைத் தருவதாக அமைந்துவிடும் என்று அழகாகச் சொல்லுகிறாள் ஔவைப்பாட்டி.

பாட்டி சொன்னதைக் கேட்டுக்கிட்டா நல்லதுதானே?


Saturday, September 5, 2015

எங்கிருந்தோ வந்தான்!


அவன் என்றைக்கு வந்தான்எப்போது என்னில் கலந்தான்எந்தத் தருணத்தில் என்னைத் தன்னுடையதாக்கினான் எதுவும் புரியவில்லை...ஆனால்அவன் இதயப் பரப்பெல்லாம் வியாபித்து விளையாடுகின்றான். என்ன நினைத்தாலும் கண்ணில் தெரிகிறான்...என் வழிகளில் கரம்பிடித்து வழிப்படுத்திச் சிரிக்கிறான். 

இவனை என்னென்று விளிப்பேன்யாரென்று நினைப்பேன்எதுவும் புரியாமல் தவிக்கிற மனசு அவனை எல்லாமாகப் பார்த்து மகிழ்கிறது. இப்படித்தான் வியந்திருக்கிறான் பாரதியும்.  

கண்ணனைத் தோழனாய்தாயாய்தந்தையாய்சேவகனாய்அரசனாய்
மாணாவனாய்சற்குருவாய்சின்னக்குழந்தையாய்காதலனாய்
காதலியாய்ஆண்டானாய்குலதெய்வமாய்க் கண்டு வியக்கிறான் அவன். காதலியாகிற கண்ணன் கண்ணம்மாவாகியிருக்கிறான் அவன் கவிதைகளில்.

எத்தனை காதல் அவனுக்குக் கண்னனிடத்தில்! சொல்லத்தெரியாத பிள்ளையெனத் தவிக்கிற அவன் மனது,  "இங்கிவனை யான் பெறவே என்னதவம் செய்துவிட்டேன்" என்று உருகிப்போகிறது. அனைத்தும் அவனென்ற அன்பினில் கட்டுண்டு அகமகிழ்ந்து நிற்கிறது.

கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
கலக்க மிலாதுசெய் வான் - பெருஞ்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்
தேர்நடத் திக்கொ டுப்பான் - என்றன்
ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்
உற்ற மருந்துசொல் வான் - நெஞ்சம்
ஈனக் கவலைக ளெய்திடும் போதில்
இதஞ்சொல்லி மாற்றிடு வான்.

அவனைப் பொறுத்தவரை அனைத்துமே கண்ணன்தான். 

அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கிற அத்தனை போராட்டங்களையும் அன்பால் களைந்து வழிநடத்துகிற ஒரு துணையிருந்தால் நமக்கு எல்லா நாளும் நல்லநாள்தான். விடுதலைப் போராட்டமும் வாழ்க்கைப் போராட்டமுமாகத் தவித்த அந்த ஏழைக் கவிஞனின் மனசுக்கு ஆறுதலாயிருந்திருக்கிறான் அந்தக் கண்ணன். அதனால்தான் அத்தனை சுமைகளுக்கிடையிலும் சோர்ந்துபோகாமல் தன் மனதை ஒரு உயர்ந்த சிம்மாசனத்தில் வைத்திருக்க முடிந்திருக்கிறது பாரதிக்கு. "நமக்குத்தொழில் கவிதைநாட்டிற்குழைத்தல்இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்று இறுமாப்போடு சொல்லவைக்கிறது.

காதல்மனித மனங்களை மிதக்கவைக்கிற மென்மையான ஒரு உணர்வு. அவனும் மிதக்கிறான்கண்ணனின் காதலில். உணவு செல்லமாட்டெனென்கிறது...உறக்கமும் வரமாட்டேனென்கிறது. கண்ணனவன் வந்து தன்னைக் கரத்தால் தொட்டணைத்த கனவில் திளைத்துக் கிடக்கிறது மனசு.

எண்ணும்  பொழுதிலெல்லாம் -அவன்கை 
           இட்ட விடத்தினிலே 
தண்ணென்றிருந்ததடீ! - புதிதோர் 
           சாந்தி பிறந்ததடீ!
எண்ணி  எண்ணிப் பார்த்தேன் - அவன்தான் 
            யாரெனச் சிந்தை  செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்கனே 
            கண்ணின் முன் நின்றதடீ!

பலவிதமான பிரச்சனைகளின் மத்தியிலும் பற்றுக்கோடாய் ஒரு நம்பிக்கையிருந்தால் மனிதனின் மனது அந்தத் தளைகளில் கட்டுப்படாமல் உயர உயர உற்சாகமாய்ப் பறக்கும். கற்பனைச் சிறகுகொண்டு காற்றிலே மிதக்கும். வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம் என்கிற உறுதி வரும். பற்றுக்கோடாய்ப் பராசக்தியும்கரம் பற்றி வழிநடத்தக் கண்ணனும் பாரதிக்குக் கிடைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவன் அடிமைத்தளையிலும் ஆனந்த சுதந்திரத்தைக் கண்ணில் கண்டான். 

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே 
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று...

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் 
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு 
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் 
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே"

என்று சிங்கநாதம் எழுப்புகிறான். சோர்ந்து கிடந்த அடிமை மனங்களுக்கு உற்சாகமூட்டுகிறான். மேலும்,

"வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் 
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் 
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்".

என்று தன் கற்பனைச் சிறகுவீசிக் கனவுகாண்கிறான். இது ஒரு கவிஞனுக்கே உரித்தான உணர்வு. அவனால் மட்டுமே அப்போதைய நினைவுகளிலிருந்து அப்பால் விலகி ஒரு அற்புதமான உலகத்தில் சஞ்சரிக்கமுடியும். அவனும் சஞ்சரித்தான். அழகான ஒரு உலகம் அவன் கண்ணில் விரிந்தது. அடிமைத்தளைகள் நீங்கிய ஒரு ஆனந்த உலகம். கண்ணனின் கரங்களைப் பற்றியபடி கனவுகளோடு மரித்துப் புத்துலகம் போனான் அந்தக் கவிஞன். தன்னை  மகாகவியாய் மக்கள் மனதில் நிறுத்திப்போனான். கண்ணனின் காதல், அவன் வரிகளில் காலங்காலமாய் நிலைத்திருக்கும். காதல் மனங்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails