Thursday, November 26, 2015

கன்னம் வைத்தவர் யாரோ!?

பூங்காவில் நிறையக்கூட்டம். புதன் மாலையென்றதால் விடுமுறைக் கொண்டாட்டம் அப்பொழுதே ஆரம்பித்திருந்தது. மற்ற இடங்களில் சனி ஞாயிறு போல அப்போதெல்லாம் அமீரகத்தில் வியாழன் வெள்ளி விடுமுறையாயிருந்த காலம். நாங்களும் என் கணவரது நண்பர்கள் சிலரும் குடும்பங்களாய்ச் சேர்ந்து குழந்தைகளுடன் பூங்காவுக்குச் சென்றுவிட்டு, அடுத்து அத்தியாவசியப் பொருட்கள் வாங்க அங்கிருந்த சூப்பர்மார்க்கெட்டுக்குச் சென்றுவிட்டு இறுதியாக அங்கிருந்த ஒரு தமிழக உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டுத் திரும்புவதாக ஏற்பாடு.

ஒன்றரை மணி நேரமாயிற்று. பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை கஷ்டப்பட்டு அங்கிருந்து நகர்த்திக்கொண்டு அந்த மாலுக்குள் நுழைந்தோம். நிறையக் கடைகளில் ஸேல் அறிவிப்புகள். அதனால் அங்கும் கூட்டத்திற்குக் குறைவில்லை. கூட்டத்தைத் தாண்டி சூப்பர்மார்க்கெட்டுக்குள் நுழைந்தோம். எங்களில் ஒரு நண்பரின் மனைவி மட்டும் குழந்தைக்கான ப்ராமுடன் (Pram) வந்திருந்தார். கடைக்குள் நுழையும்போதே விளையாடிய அசதியில் அவர்களின் இரண்டரை வயது மகள் ப்ராமில் உறங்க ஆரம்பித்துவிட்டாள். 

வழக்கம்போல ஆண்கள் நால்வரும் கடைக்கு வெளியே நின்றுகொள்ள நாங்கள் பெண்கள் நால்வரும் கடைக்குள் போனோம். உறங்கிய குழந்தையின் தந்தை, "ப்ராமை இங்கயே விட்டுட்டுப் போ..." என்றார் மனைவியிடம். "இல்லேங்க...எழுந்துட்டாள்ன்னா அழுவா...அதனாலே நானே பாத்துக்கறேன் என்று சொல்லிவிட்டு எங்களுடன் வந்தார் அந்தத் தோழி.

பிள்ளைகளுக்கு, கணவருக்கு, வீட்டுக்கு என்று தேவையானவற்றை ட்ராலியில் எடுத்துப் போட்டுக்கொண்டு பில் போடுகிற இடத்தில் வந்து நின்றாயிற்று. " ஸ்வாதி, அடுத்து நாம சாப்பிடப் போகணும் எழுந்திரு குட்டிம்மா..." என்று ப்ராமில் தூங்கிய மகளைக் கன்னத்தைத் தட்டி எழுப்பினார் அந்தக் குழந்தையின் அம்மா. "ஐயோ விடுங்க... நல்லாத் தூங்கறா... ஹோட்டல் போறவரைக்கும் தூங்கட்டும்" என்றேன் நான். இல்லேங்க... இவ தூங்கி எழுந்தா உடனே எதுவும் சாப்பிட மாட்டா. அதான் இப்பவே எழுப்புறேன் என்று உலுக்கி எழுப்பினார். கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள் குழந்தை. நாங்கள் முதலில் பில் போட்டுவிட்டு நகர, மற்ற மூவரும் பின்னால் முடித்துக்கொண்டு வந்தார்கள். 

பில் போடுகிற இடைத்தைவிட்டுச் சிறிது தள்ளி, கடையின் வாசல்வழியாக வெளியேறுகையில் நுழைவாயிலின் செக்யூரிடி அலார்ம் சென்ஸர் விழித்துக்கொண்டு கத்தியது. வாயிலில் நின்ற காவலர்கள் அருகில் வந்து ஒவ்வொருத்தராக வெளியே வரச்சொன்னார்கள். ஒவ்வொரு குடும்பமாக வெளியில் வர, ப்ராம் வைத்திருந்த நண்பரின் மனைவி கடைசியாக நின்றார். அவர்கள் கடக்கும்போது அலார்ம் மறுபடியும் ஒலித்தது. தான் கடையில் பணம் செலுத்தியதற்கான பில்லை எடுத்துக் காட்டினார் அந்த நண்பரின் மனைவி. பையைச் சோதனையிட்டு அதை வெளியே வைத்துவிட்டு, அந்தப் பெண்ணை மறுபடியும் கடந்துவரச் சொன்னார்கள் வாயில் காவலர்கள். ப்ராமுடன் அவர் வருகையில் மறுபடியும் சத்தம். 

அதற்குள் காவலர்களில் ஒருவர் ப்ராமில் என்ன இருக்கிறது? என்று கேட்டார். குழந்தை தான் இருக்கிறது வேறு என்ன? என்றார் அந்தப் பெண் சிரித்துக்கொண்டே. அதற்குள், அம்மா முகத்தையும் அங்கிருந்தவர்களையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தை அருகில் நின்ற தன் அண்ணனை நோக்கிக் கையை நீட்டியது. "விடு அவளை..." என்ற அம்மாவின் வார்த்தையை கவனிக்காமல், பொருத்தியிருந்த பெல்ட்டை விடுவித்துக் குழந்தையை இறக்கிவிட்டான் அந்தச் சிறுவன். குழந்தை எழுந்த இடத்திலிருந்து பெண்களுக்கான ஒரு அழகு சாதன கிரீம் தென்பட்டது. அதைப் பார்த்தவுடன் அந்த வாயில் காவலர் குனிந்து அதைக் கையிலெடுத்துக்கொண்டு மேலும் ஏதேனும் இருக்கிறதா என்று ப்ராமைத் துழாவினார். உள்ளே இன்னொரு வாசனைத் திரவிய பாட்டிலும், ஆடவர்கள் பயன்படுத்தும் ஆஃப்டர் ஷேவ் லோஷனும் இருந்தது. 

நாங்களெல்லாம் அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அந்தப் பெண் அருகில் நின்ற மகளின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார். இரண்டரை வயதுக் குழந்தை...அம்மா எதற்காக அடிக்கிறாள் என்றுகூடத் தெரியாமல் கத்தி அழுதது. அதிர்ச்சியில் நாங்கள் யாரும் எதுவும் பேசவில்லை. கடைக்குள் நுழைந்தது முதல் பில் போடுகிற இடம் வரை அந்தக் குழந்தை உறங்கியது எங்கள் எல்லாருக்கும் தெரியும். அவர்களைக் கடையின் மேலாளரிடம் அழைத்துச்சென்றார்கள் காவலர்கள்.

கடையிலிருந்து வெளியே சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தனர் அப்பாக்கள் நால்வரும். அவர்களிடம் சென்று விஷயத்தைச் சொன்னதும் அந்தப் பெண்ணின் கணவர் கடையின் மேலாளரைக் காண உள்ளே சென்றார். சின்னக்குழந்தை... தெரியாம எடுத்துப்போட்டிருக்கு. அதுக்குப் போயி இப்படியா என்று பேசிக்கொண்டே என் கணவரும் அவர் நண்பர்களும் கூடவே சென்றார்கள். நாங்கள் பெண்கள் மூன்று பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டோம். குழந்தையோ கடைக்குள் முழுக்க உறங்கிக்கொண்டிருந்தது. எடுத்துவைக்கப்பட்டிருந்ததோ பெரியவர்களுக்கான விலை கூடிய அழகுசாதனப் பொருட்கள். நடந்தது என்னவென்று புரிந்தாலும் நாங்கள் மூவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. 

உள்ளே சென்ற அனைவரும் திரும்பி வந்தனர். அந்தக் குழந்தையின் அடிபட்ட கன்னமும் அழுத கண்களும் சிவந்துபோயிருந்தன. "பார்த்தீங்களா...இவளால எவ்வளவு பெரிய அவமானமாப் போச்சு" என்று திரும்பத் திரும்ப எங்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார் அந்த நண்பரின் மனைவி. நாங்கள் யாரும் பதில் சொல்லவில்லை. "சரி சரி விடு... நாம சாப்பிடப்போகலாம்" என்றார் அவர் கணவர். "இல்லையில்லை... இன்னொருநாள் பார்த்துக்கொள்ளலாம் என்று நாங்கள் மூன்று பெண்களும் கோரஸாகச் சொல்லிவிட்டு தனித்தனியாக அவரவர் வீட்டிற்குப் புறப்பட்டோம். 

குழந்தைகளுக்கு எதுவும் தெரிந்துவிடவேண்டாம் என்ற எண்ணத்தில் வீடு செல்லும்வரை நான் எதுவுமே பேசவில்லை. என் கணவரிடம் தனியாக விஷயத்தைச் சொன்னபோது, "அடப் பாவமே... நாங்க போனபிறகும் அந்தக் குழந்தைக்கு நாலைந்து அடி விழுந்ததே..." என்றார் அவர். ஒரு பாவமும் அறியாத அந்தக் குழந்தைக்கு மட்டும் விஷயம் புரிந்தால் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என்ற நினைவு நீண்ட நேரம் மனசைவிட்டு நீங்கவில்லை. 

4 comments:

 1. படிக்கச் சங்கடமாகத் தான் இருக்கிறது
  நிச்சயம் அவர்களுக்கும் மனச்சாட்சி உறுத்தும்..
  சொல்லிச் சென்றவிதம் உணர்ந்து படிக்கும்படியாக
  அருமையாக இருக்கிறது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் ஐயா!

   Delete
 2. Replies
  1. நன்றிகள் தனபாலன் சார்!

   Delete

LinkWithin

Related Posts with Thumbnails