Tuesday, December 1, 2015

எப்போது மாறுவீர்கள் இளைஞர்களே!?

பத்து வருடத்திற்கு முன்னாலிருந்த தமிழகத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் இப்போதிருக்கிற வாழ்க்கைநிலையையும் வருடத்திற்கொருமுறை வந்து பார்க்கிற ஒரு விருந்தாளியின் பார்வையில் பார்க்கையில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கிறதாகத்தான் தோன்றும் எனக்கு. கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியும் கணினி மற்றும் இணையப் பயன்பாடும் நிறைய மாற்றங்களை மக்களிடையே உண்டுபண்ணியிருப்பதாகத்தான் தெரிகிறது.

பத்துப் பதினைந்து வருடங்களுக்குமுன் பத்துப் பைசாவுக்கு இருந்த மதிப்புத்தான் இப்போது பத்து ரூபாய்க்கு என்று உறவினர் ஒருவர் சொன்னது உண்மையென்றே தோன்றியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்கு தற்போது அதிகமென்றும் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் லட்சங்களில் சம்பாதிக்கிறதெல்லாம் நிறையப்பேர் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது. அத்தோடு பொருத்தமான பெண் கிடைப்பதற்கு எத்தனை சிரமப்பட்டோமென்று சில மாப்பிள்ளை வீட்டார் சொல்லி அங்கலாய்த்ததையும் கேட்க முடிந்தது.  

 முன்பெல்லாம் பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொல்லிப் போகிற பிள்ளை வீட்டாரைப் போல, இப்போது மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று நிராகரிக்கும் பெண்களைப் பற்றியும் கேள்விப்பட்டபோது, பெண்களின் கருத்தையும் கேட்டு நடக்கிற காலம் வந்துவிட்டதே என்று சந்தோஷமாகத்தான் இருந்தது.

ஆனால், சமீபத்தில் கேள்விப்பட்ட சில விஷயங்கள் இத்தனை மாற்றம் வந்தும் இவர்கள் இன்னும் மாறவில்லையா என்ற சலிப்பைத்தான் தந்தது. சென்னையில் சாஃப்ட்வேர் இஞ்சினீயராகப் பணிபுரியும் தோழியொருவரின் மகளுக்கு வந்த மாப்பிள்ளை வீட்டார், பெண்ணை எங்கள் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது என்று சொல்லி, மாப்பிள்ளை சிறிது நேரம் அந்தப் பெண்ணுடன் பேச விருப்பப்படுவதாகவும் கூறியிருக்கிறார்கள். சம்மதித்த பெண்ணின் வீட்டார் இருவரையும் பேச அனுமதிக்க, அந்தப் பையன் கேட்ட ஒரே கேள்வியில் அந்தப் பெண் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று மறுத்து விட்டாள்.

அப்படியென்ன கேட்டார் அந்த மாப்பிள்ளை? நாகரீக மயக்கத்தில் எசகுபிசகாக ஏதேனும் கேள்வி கேட்டுவிட்டாரோ என்று நான் நினைக்கையில், திருமணம் ஆனதும் சம்பளப் பணம் முழுவதையும் (ஐம்பதாயிரம்) அப்படியே தன்னிடம் கொடுக்கமுடியுமா என்று கேட்டிருக்கிறார் அந்த புத்திசாலி. இந்தப் பெண் சுதாரித்துக் கொண்டவளாய் நான் வங்கியில் வாங்கிய லோனுக்குப் பிடிப்பது போக நான் பாதி சம்பளம்தான் கையில் வாங்குகிறேன் என்று பதில் சொல்லியிருக்கிறாள். போனவர்கள் ஒரேயடியாய்ப் போய்விட்டார்கள். மாதம் ஐம்பதாயிரம் பெண்ணிடமிருந்து கையில் வரவேண்டுமென்ற எதிர்பார்ப்புடனேயே வந்திருக்கிறார்கள் அந்தப் பெருமக்கள்.

இன்னொரு இடம் இன்னும் விசேஷம்... பையனைப் படிக்கவைத்ததற்கும் படிப்பிற்குப் பட்ட கடனுக்கும்கூடப் பெண்ணின் வீட்டில் வசூலிக்க நினைத்த பிள்ளையைப் பெற்றவர்கள். பிற்காலத்தில் என் பிள்ளையின் சம்பாத்தியம் முழுவதையும் உங்கள் பெண்தானே அனுபவிக்கப்போகிறாள் என்ற பெருந்தன்மைப் பேச்சு வேறு...

மூன்றாவது இடம்  இருபது பவுன் நகையில் இல்லாமல் போன ஒன்று. கைநிறைய சம்பாதிக்கிற பெண்ணுக்கு முப்பது பவுன் நகை போட நினைத்திருக்கிறார்கள் பெற்றவர்கள். வந்த பிள்ளை வீட்டார், பெண்ணைப் பிடித்திருக்கிறதென்று சொல்லிவிட்டு சம்பிரதாயப் பேச்சுக்கு வர, இருபது பவுன் வித்தியாசத்தில் இடம்மாறிப் போய்விட்டது அந்த சம்பந்தம். தங்கம் போலக் குணமுடைய ஒரு பெண்ணை இருபது பவுன் தங்கத்துக்காக வேண்டாமென்று சொன்னால் நஷ்டம் யாருக்கு? நகை மோகம் யாருக்கென்று இப்போது புரிகிறதா?  

வந்ததிலிருந்து அவள் கொண்டுவந்ததைக் கொள்ளையடிக்கவென்றே காத்திருக்கிற இந்த மக்கள் எப்போது திருந்துவார்கள்? பெண்ணைக் கட்டிக்கொடுத்துவிட்டால் பெண்ணோடு அவள் சம்பாத்தியம், சொத்துக்கள் எல்லாம் தனக்கென்று உரிமைகொண்டாடுகிற இந்தக் குணம் என்று மாறும் இந்த மக்களுக்கு? தன் கணவன் தன் குடும்பமென்று வருகையில் அவளாகவே கொடுக்கமுன்வந்தால் அது அழகு. அதை விட்டு அழவைத்துப் பிடுங்கினால்? 

திருமணத்திற்குப் பின் மனமொத்து வாழ்ந்து, இருவருமாக முடிவெடுத்து தங்களுக்கான எதிர்காலத்தை இருவரின் வருமானத்திலும் திட்டமிட்டால் அது சிறப்பு. எல்லாவற்றையும் என்கையில் கொடுத்துவிட்டு உன்னுடைய செலவுக்குக் கூட என்னிடத்தில் நீ கையேந்தவேண்டுமென்று நினைப்பது அதிகாரத்தின் உச்ச கட்டம். என்றைக்கு மாறும் இந்த மனநிலை?அவளுக்கென்று ஒரு மனசு, அதிலும் சில ஆசைகள், தேவைகள் இதெல்லாம் இருக்கக்கூடாதா? அவளுக்கானதை வாங்கிக்கொள்ளும் சுதந்திரம் அவசியம் இல்லையா? 

மதங்களைப் பொறுத்தமட்டிலும் மற்ற சில விஷயங்களிலும் இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் மனமுதிர்ச்சி நிச்சயமாகப் பாராட்டப்படவேண்டியது. ஆனால், கல்யாணம் என்று வரும்போது மட்டும் இவர்கள் பெற்றோருக்குப் பின்னால் பதுங்கிக்கொள்ளுதல் எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை. 

இங்கே, கேட்பது பையனின் அம்மாதானே? அதாவது ஒரு பெண்தானே? பையனோ அவனது தந்தையோ இல்லையே என்ற நழுவல் பதில் வரலாம். ஆனால், அந்தக் காலத்து அம்மாவுக்குக் கணினியிலும் கைபேசியிலும் புரியாதவற்றைக் கற்றுக்கொடுத்துப் புரியவைக்கிறீர்கள். மதங்கள் ஜாதிகளைப் பற்றிப் பேசினால் அதெல்லாம் போனகதை என்றுசொல்லிப் புத்திசொல்லுகிறீர்கள். ஆனால், பெண்ணிடமிருந்து பொருளீட்ட நினைக்கும் குணத்துக்கு மட்டும் முட்டுக்கட்டை போட ஏன் முன்வரமாட்டேனென்கிறீர்கள்? எல்லாம் உனக்காகத்தானே என்கிற அன்னையிடம், என்னை ஏன் விலைபேசுகிறாய் அம்மா என்றுஏன் எதிர்க்கேள்வி கேட்கமாட்டேனென்கிறீர்கள்?

முயற்சி செய்யுங்கள் இளைஞர்களே...ஒரு புதிய மனமாற்றத்தைக் கொண்டு வாருங்கள். அது உங்களுக்கான மதிப்பை நிச்சயம் அதிகப்படுத்தும்.


6 comments:

 1. ஆழமான தேவையான அருமையான அலசல்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் ரமணி ஐயா!

   Delete
 2. உண்மைச் சொல்லியுள்ளீர், நழுவல் வேண்டாம்,,,,,,, அருமை அருமை தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு மிக்க நன்றி மகேஸ்வரி!

   Delete
 3. வணக்கம்.

  இதற்கு மறுதலையான ஒரு சம்பவம் நான் பணியாற்றும் வட்டத்தில் நடந்தது.
  என்னுடன் பணியாற்றுபவர் ஒருவர் பெண்பார்த்து நிச்சயதார்த்தத்தின்போது, அப்பெண் தான் வாங்கும் சம்பளத்தைத் தன் பெற்றோருக்குக் கொடுத்துவிடுவேன் என்று கூறியிருக்கிறாள்.

  அதற்கு என்னுடன் பணியாற்றுபவர் மறுக்கவே, அந்தத் திருமணம் நின்று போயி்ற்று.

  இன்று அப்பெண், இவரை விட படிப்பிலும் பணியிலும் பொருளாதார நிலையிலும் பண்பிலும் மேம்பட்ட இன்னொருவருடன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரையும் நான் அறிவேன்.

  மறுத்தவருக்கு 42 வயதாயிற்று. இன்னும் பெண் கிடைத்தபாடில்லை.

  பெண்களுக்கு இத்தகு துணிச்சலும் நேர்படப் பேசும் மனோபாவமும் வேண்டும் என்பது என் கருத்து.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பாவம்தான் அந்த நண்பர்.உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி!

   Delete

LinkWithin

Related Posts with Thumbnails